தொடர்கள்

சௌந்தரசுகன்

மு. யாழினிவசந்தி

தனி மனிதர்கள் நடத்தும் சிற்றிதழ்களே அவர்களின் விடாப்பிடியான தன்மையினால் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பார் வல்லிக்கண்ணன். அவ்வகையில் குறிப்பிடவேண்டிய இதழ் 'சுந்தரசுகன்' சுந்தரசுகன் எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் இடையில் சௌந்தரசுகன் என பெயர் மாற்றப்பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது.
'இறக்கும் வரை இதழ் வரும் ' எனும் முழக்கத்துடன் 1987ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதழை ஆரம்பித்தார் சுகன். 19 ஆண்டுகளுக்கு மேலாக , இதுவரை (செப் 06) யில் 232 இதழ்கள் வெளியாகியுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் சு.சௌந்தரவதனா. நிறுவனர்: அமரர் தியாகி கே.வி.திருஞானம்.தற்போது 46 பக்கங்களில் பத்து ரூபாய் விலையில் வந்து கொண்டிருக்கிறது.

தொடக்கம் முதல் இன்றுவரை தொடர்ந்து மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது.கதை, கவிதை, கட்டுரை , நூல் ஆய்வு, நேர்காணல் , கடித இலக்கியம் , போன்ற பகுதிகள் வெளியாகிவருகின்றன. கடித இலக்கியம் பகுதியில் வெளியான கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி , தஞ்சை பிரகாஷ் , எம்.வி. வெங்கட்ராம் போன்றோரது கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை.

வல்லிக்கண்ணன் , பிரபஞ்சன் , தி.க.சி , அம்பை , கழனியூரன் , வா.மு.கோ.மு , இலக்குமிகுமாரன் , ஞானதிரவியம் , வெற்றிப்பேரொளி , உஷாராணி , சொ.பிரபாகரன் , பொன்னியின் செல்வன் , அன்பாதவன் - மதியழகன் சுப்பையா, வளவ.துரையன் , செந்தூரம் ஜெகதீஷ் , எஸ்.தங்கராஜ், இரவிச்சந்திரன் போன்ற பல படைப்பாளிகளின் படைப்புகள் இவ்விதழில் வெளிவருகின்றன.

முத்தொள்ளாயிரத்தை கதை வடிவில் இவ்விதழில் வளவதுரையன் எழுதிவருகிறார். இதே இதழில் புறநானூறை புதுக்கவிதை வடிவில் வெற்றிப்பேரோளி ஏற்கனவே எழுதியிருக்கிறார். ' தீபம்' இதழ் பற்றி வே. சபாநாயகம் இவ்விதழில் விமர்சனத்தொடர் எழுதினார். அத்தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

கரிசல் அறக்கட்டளை சார்பில் கி.ராசநாராயணன் வழங்கிய ' சிறந்த சிற்றிதழுக்கான விருது' 2002இல் சுந்தரசுகனுக்கு அளித்து சிறப்பு செய்யப்பட்டது. விக்கிரமன் 'சிறந்த சிற்றிதழுக்கு' அளித்த முதல் விருதும் இவ்விதழுக்குக் கிடைத்திருக்கிறது.

'சுந்தரசுகன்' சில முக்கிய சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. 75வது இதழ் ' வியர்வை சிறப்பிதழாகவும் ' 2002 ஜீன் இதழ் 'வன்முறை எதிர்ப்பு சிறப்பிதழாகவும் 100வது இதழ் 'சிற்றிதழ் சிறப்பிதழாகவும் ' வெளிவந்திருக்கிறது.

இதழ் பணியோடு 'சுகன் பைந்தமிழ்தடாகம்' எனும் பெயரில் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களையும், நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பற்றி

தற்போது 41 வயதாகும் சுகன் , பத்திரிக்கைப்பணியுடன் கதை , கட்டுரை , கவிதைகளையும் எழுதிவருகிறார். 1988இல் இவரது முதல் தொகுப்பான 'சுகந்த சுரங்கள்' வெளிவந்தது. பிறகு 1989இல் 'உயிரில் நடந்த உற்சவங்கள் ' காதல் லிபிகள் (1990), சாமக்கூத்து (1997) , பூஞ்சாலி (2003) ஆகிய கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. தீராத தாகத்தோடு தொடர்ந்து சுகனை நடத்திவருகிறார் சுகன்

அக்டோபர் 06, 2006.