தொடர்கள்

சோலைக்குயில்

சிற்றிதழ் அறிமுகம்- 43

மு. யாழினிவசந்தி

"உழைப்பென்னும் மாந்தர் செய்கை
உலகையே உய்யச் செய்யும்;
பிழைப்பிலே சிறப்பைச் சேர்க்கும்
பெருமையில் வாழ வைக்கும்
செழிப்புடன் குடியைக் காக்கும்
சேர்ந்தவர் துயரம் போக்கும்
எழிலுறு சொர்க்கம் தன்னை
இங்கேயே பார்க்கலாகும்"
('சோலைக்குயில்' ஜீன் 2006)
(- கவிஞர் செ.கோதண்டராமன்)

நவீனக் கவிதைக்காகவும் ஹைக்கூ கவிதைக்காகவும் தனித்தனியாகச் சிற்றிதழ்கள் வெளிவருவதைப் போல் மரபுக் கவிதைக்காகவும் பல இதழ்கள் வெளிவந்து கொண்டிருகின்றன. அத்தகைய இதழ்களில் ஒன்று, 'சோலைக்குயில்' இலக்கிய செய்தித் திங்களிதழ்.

முழுக்க முழுக்க மரபுக் கவிதைகளை மட்டுமே தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது 'சோலைக்குயில்'. இதன் ஆசிரியர், கல்லைக் கவிமுரசார். 8.8.1993 அன்று, முதல் இதழ் வெளிவந்தது. இதுவரை (ஜீன் 2006) 155 இதழ்கள் வெளிவந்துள்ளன. 8 பக்கங்களில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழின் அப்போதைய விலை 1.00 ரூபாய். தற்போது 4.00 ரூபாயில் 16 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கட்சி சார்பற்ற, அரசியல் மற்றும் சமுதாயம் பற்றிய கவிதைகள் இவ்விதழின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் புதியக் கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. தலையங்கம் முதல் அனைத்தும் மரபுக் கவிதையிலேயே வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

சாலை இளந்திரையன், சுரதா, கா.வேழவேந்தன், வண்ணப்பூங்கா வாசன், அமுதபாரதி, சக்தி போன்ற பலரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.

பழைய இலக்கியங்களையும் சங்கப் பாடல்களையும் எளிய தமிழில் வெளியிடுவது, காவியத் தொடர், தமிழிலக்கணக் குறிப்புகள், சமுதாயக் கவிதைகள் போன்றவை இவ்விதழின் உள்ளடக்கமாகும். இதழ் தொடங்கி ஓராண்டுக்குப்பிறகு ஒவ்வொரு மாதமும் அட்டையில் ஒரு கவிஞர் படம் வெளியிட்டு அவரைப் பற்றிய கவிதையும் செய்தியும் வெளியிட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் இவ்விதழின் நோக்கம் என்கிறார் ஆசிரியர் கல்லைக் கவிமுரசார்.

ஆசிரியர் பற்றி:

தற்போது 69 வயதாகும் கல்லைக் கவிமுரசாரின் இயற்பெயர், மா.கலியமூர்த்தி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். இவரது முதல் கவிதை 1960இல் பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய 'குயில்' இதழில் வெளிவந்தது. 'சூரியவெளிச்சம்' எனும் இவரது முதல் கவிதை நூல் 2005இல் வெளியானது. மொத்தம் 4 நூல்கள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதி இயக்கி நடித்திருக்கிறார்.

மரபுக் கவிதையின் மரபைப் போற்றும் இவ்விதழின் பணி மேலும் தொடர்வது தமிழுக்கு நல்லது.

ஜூலை 13, 2006