தொடர்கள்

நறுமுகை

மு. யாழினிவசந்தி

" மரபுக்கும் நவீனத்திற்குமான பாலமாக விளங்குதல், ஆற்றலுள்ள புதியவர்களுக்குக் களம் அமைத்துத் தருதல், மாற்று ஊடகமாகச் செயல்படுதல், மரபான தமிழ் பயிலுநருக்கு நவின இலக்கியத்துடன் தொடர்பு ஏற்படுத்துதல்," ஆகியனவற்றை நோக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருகிறது, 'நறுமுகை' – கலை இலக்கியக் காலாண்டிதழ், இதன் அசிரியர், ஜெ. இராதாகிருஷ்ணன். துணை ஆசிரியர், செஞ்சி தமிழினியன்.2003 ஐனவரி 15 இல் முதல் இதழ் வெளிவந்தது, இதுவரை 12 இதழ்கள் வெளிவந்துள்ளன. கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் நூல் அறிமுகம், ஆசிரியர் கடிதம், வாசகர் கடிதம், நிகழ்வுகள் குறித்த பதிவு போன்ற பகுதிகள் இவ்விதழில் வெளியாகி வருகின்றன. தொடர்களும் வெளியாகி வருகின்றன. முகமறியா கவிதை, படப்பெட்டி ஆகிய தொடர்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

புதியவர்களின் படைப்புகளும் மக்கள் மொழிக் கவிதைகளும் விரிவான விமர்சனங்களும் நறுமுகையின் சிறப்பாகும்.

மு. முருகேஷ், கெங்கை குமார், பாரதி இளவேனில், அன்பாதவன், தமிழ் மணவாளன், ஜெ. ராதாகிருஷ்ணன், வளவ.துரையன், செஞ்சி தமிழினியன், பொன் குமார், காக்கை பாடினி, செந்தில்பாலா, பொம்பூர் குமரேசன், நாணற்காடன், வ.மு.கோ.மு, மு.ஹிரிகிருஷ்ணன், விக்ரமாதித்யன், த. பழமலய், பால்நிலவன், வையவன், போன்ற பலரது படைப்புகள் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

வெகுசன ஊடகங்களின் ஒளி பாயாத ஆற்றலுள்ள படைப்பாளிகளை – மாற்று ஊடகக்கர்த்தாக்களை அடையாளப் படுத்துவதும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதும் எனத்தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது நறுமுகை. இதழ்ப் பணியுடன் நூல் வெளியீட்டுப் பணியையும் தொடங்கி இருக்கிறது நறுமுகை. அத்துடன் மாதம்தோறும் இரண்டாம் ஞாயிறுகளில் 'குறிஞ்சி வட்டம்' எனும் இலக்கியக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வுகளில் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை உரை நிகழ்த்தப் பெற்று கருத்துபரிமாற்றம் நடை பெற்று வருகிறது. அத்துடன் குறும்படங்களையும் திரையிட்டு அது தொடர்பான விவாதமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைப் பற்றிய பதிவாக 'குறிஞ்சிவட்டம் நிகழ்ச்சிப் பதிவிதழ்' எனும் சிறு வெளியிடும் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கவிதைகளும் இடம் பெற்று வருகின்றன.

'கவனம் பெற வேண்டிய மாற்று ஊடக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, பயிலரங்குகளை நடத்துவது, புதியவர்களின் நுல்கள் வெளியிடுவது போன்றவை நறுமுகையின் எதிர்காலத் திட்டம்' என்கிறார்;, ஆசிரியர் ஜெ. இராதாகிருஷ்ணன். தரமான இலக்கியத்தின் வழியாக சமுகவிழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை நோக்கி இவ்விதழ் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆசிரியர் பற்றி...

தற்போது முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்ககும் ஜெ. இராதாகிருஷ்ணன் படிக்கும் காலத்திலேயே 'தேன்துளி' எனும் கையெழத்து இதழை நடத்தியவர். சென்னைப் பல்கலைகழகத்தில் எம்.ஏ. தமிழ் படிக்கும் போது 'நறுமுகை' இதழை தொடங்கினார். மரபுக்கவிதைகள். கட்டுரைகள் எழுதியுள்ளார். ஹைக்கூ கூட்டுத் தொகுப்பான 'விடியல்' எனும் நூலை வெளியிட்டிடுக்கிறார். இலக்கியத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜூலை 07, 2006