"மௌனம் என்பது சாவுக்குச் சமம். எதுவும் பேசாவிட்டாலும் சாகப் போகிறீர்கள், பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள். எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்" என்றார் அல்ஜீரிய எழுத்தாளர் தஹார் ஜாவுத். இன்றைக்கு ஈழத்தில் வாழ்ந்தாலென்ன, புகலிடத்தில் வாழ்ந்தாலென்ன, ஈழத் தமிழர்களுக்கு தமிழ் மொழி இரண்டாவது மொழிதான். அவர்களின் தாய்மொழி மௌனம் தான். பேசியதற்கும் எழுதியதற்குமாகவே கொல்லப்பட்டவர்களின் கொலைப் பட்டியல் மிக நீளமானது.
( 'சக்தி, 'அநிச்ச', மார்ச் 2006)
"நடுநிலை இதழ்களாக உருமாறிப் போன பழைய சிறு பத்திரிகை உலகம் அரசியல் கூர்மையற்று வரலாற்று பிரக்ஞை இல்லாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது. அழைய எழுத்தாளர்களைக் கொண்டு பழைய விசயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் நிலை. சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தொட யாரும் அஞ்சுகின்றனர். தங்களுடைய இலாப நோக்கத்திற்கான / புத்தக விற்பனைக்கான சில பிரச்சினைகளை மட்டும் கவனமாக உருவாக்கி முன்னிறுத்துகின்றனர். இந்நிலையில் ஒரு சிதைவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. அத்தகைய முயற்சிக்கான ஒரு களமாக அநிச்ச செயல்படும்," என்கிற அறிவிப்புடன் நவம்பர் 2005இல் வெளிவந்தது 'அநிச்ச' இருமாத இதழ். இவ்விதழின் ஆசிரியர், நீலகண்டன். ஆசிரியர் குழு: அ.மார்க்ஸ், ம.மதிவண்ணன், கண்மணி, ஓடை.பொ.துரையரசன், தேவதாஸ்சுகன் (பிரான்ஸ்).
'அநிச்ச' என்கிற தலைப்பை புத்தரிடமிருந்து எடுத்துக் கொண்டோம். பாலி மொழியிலிருந்து தருவித்த ஒரு சொல். வாழ்வின் தன்மைகளாக 'அநிச்ச, துக்க, அனத்த' ஆகியவற்றை கௌதமர் முன் வைப்பார். அநிச்ச என்பது அநித்திய / Uncertain என்று பொருள்படும். எனும் ¦ÀÂ÷ காரணத்தை முதல் இதழ் தலையங்கத்தில் அறிய முடிகிறது.
'நிறப்பிரிகையின் இடத்தை இட்டு நிரப்பவும், பன்மைத்துவத்தை காக்கும் முயற்சிகளுடனும் அநிச்ச துவங்கப்பட்டிருக்கிறது. முதல் இதழில் ஜின்னா சாகிப் குறித்து சாதத் ஹசன்மண்ட்டோ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம், அ.மார்க்ஸின் 'நடந்தவை நடப்பவை' பத்தி (column), சுகுணா திவாகரின் 'மூன்றாம் மொழிப்போர் மோசடி' எதிர்வினை, சக்தியின் 'தமிழ்' சிறுகதை, ம.மதிவண்ணனின் 'அயோத்தி தாசர்' குறித்த விவாதக் கட்டுரை, 'தமிழக அந்தணர் வரலாறு' புத்தகம் குறித்த அ.மார்க்ஸின் விமர்சனக் கட்டுரை போன்ற படைப்பாக்கங்கள் வெளியாகியுள்ளன.
"புத்தக, தீவிரமாக எழுத வருகிறவர்களுக்கான மற்றும் இடது சாரிகளுக்கான களமாக 'அநிச்ச' திகழும். கலை இலக்கிய அரசியல் தொடர்புடையவர்களை ஒன்றிணைக்கும்," என்று செல்லும் ஆசிரியர் நீலகண்டன், "கட்டமைக்கப்படுகிற அரசியலை எதிர்த்தபடி, தமிழ் மரபின் வளர்ச்சிப் போக்கின் நல்ல அம்சங்களையும் உள்ளடக்கி அநிச்ச தொடர்ந்து வெளிவரும்" என்கிறார்.
ஆசிரியர் பற்றி...
கவிஞர், சிறுபத்திரிகையாளர், அரசியல் செயல்பாட்டாளரான இவர், சிற்றிதழ்களின் நுண்ணிய அரசியல் ஈர்ப்பால் சிற்றிதழ் பக்கம் வந்தவர். 'கருப்புப் பிரதிகள்' எனும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். 'மாற்றுக் குரல்கள்' எனும் விவாதக் களத்தையும் சென்னையில் நடத்தி வருகிறார். பெரியார் குறித்தும், கற்பு குறித்தும், பாட நூல்களில் பாசிசம் குறித்தும் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.
தமிழக எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும் இணைந்து நடத்தும் இதழ் என்பதால் தமிழக படைப்புகளும் புலம் பெயர்ந்த படைப்புகளும் ஒரு சேர வெளியாகி வருகின்றன. இதுவே 'அநிச்ச'யின் சிறப்பாக இருக்கிறது.
ஜூன்16, 2006