தொடர்கள்

வடக்குவாசல்

மு. யாழினிவசந்தி

"வடக்குவாசல் குறித்து எதையாவது பிரகடனப் படுத்தவோ அல்லது இப்படியெல்லாம் செய்வோம் என்று சொல்லிக் கொள்ளவோ இப்போதைக்கு ஒன்றும் இல்லை. பயணம் துவங்கிவிட்டது. எளிமை - தெளிவு - உறுதி என்னும் பாதைகள் நோக்கி. நோக்கங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பது மட்டும்தான் இப்போதைக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். சுபமங்களா வகுத்துக் கொடுத்த பாதையில் அனைத்துத் தரப்பினருக்கும் தளங்கள் அமைத்துக் கொடுத்து புதிய திறமைகளை இனம் கண்டு முன்வைப்பதில் எங்கள் செயல்பாடு அமையும் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்" எனும் எளிய அறிமுகத்துடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ்  வடக்குவாசல் - மாத இதழ். கோமல் சுவாமிநாதன் அட்டைப்படத்துடன் வெளிவந்த முதல் இதழ் அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதுவரை (பிப்ரவரி 2006) 6 இதழ்கள் வெளிவந்துள்ளன. டெல்லியிலிருந்து வெளிவரும் இதன் கௌரவ ஆசிரியர் 'யதார்த்தா' கி.பென்னேஸ்வரன், கௌரவ இணை ஆசிரியர் சு சுப்பிரமணியம், ஆலோசகர்கள் : பி.ஏ.கிருஷ்ணன், இரா.முகுந்தன், அறிவழகன்.

கல்கியில் வட இந்தியச் செய்திகளை 'வடக்குவாசல்' எனும் தலைப்பில் எழுதி வந்தார், பென்னேஸ்வரன். பொத்தமாக இருக்குமென்பதால் அதனையே இப்பொழுது இதழுக்குப் பெயராக வைத்திருக்கிறார். நேர்காணல், சிறுகதை, கவிதை, கட்டுரை, புத்தக மதிப்புரை, மொழி பெயர்ப்பு என வெளியாகி வருகிறது. டெல்லியில் வாழும் முக்கியமான தமிழர்களின் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன.

எஸ்.ரெகுநாதன், உ.ஸ்ரீனிவாசராகவன், எச்.பாலசுப்பிரமணியம், எஸ்.ராமாமிருதம் போன்றோரது நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.ராமகிருணன் ராஜேஸ்வரி பால சுப்ரமணியன், பாவண்ணன், அசோகமித்திரன், எஸ்.சங்கரநாராயணன், மேலாñமை பொன்னுச்சாமி, அரவிந்தன், இமையம் போன்றோரது சிறுகதைகளும் கலாப்ரியா, திலகபாமா, குட்டி ரேவதி, சல்மா, இளைய அப்துல்லா, சுகுமாரன், அம்சப்ரியா, புதியமாதவி, சுமதிசுப்ரமணியம், போன்றோரது கவிதைகளும் வெளியாகியுள்ளன.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பூர்வக்குடிகளைப் பற்றி சு.கி.ஜெயகரன் எழுதிய 'இந்தியாவின் தென் கோடியில் ஆதித்தாயின் மக்கள்', நரசய்யாவின் 'செம்புலப் பெயனீர்', ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றிய பி.ர.கிருஷ்ணனின் கட்டுரைகள், நாஞ்சில் நாடனின் 'புலம்பல் கண்ணி', தெ.கல்யாண சுந்தரம் எழுதிய 'தமிழ்க்கலைக் களஞ்சியம் - பெரியசாமித்தூரன்', திலகபாமாவின் 'வெளிப்பயணம்', இளைய அப்துல்லாஹ்வின் 'புலம் பெயர் நாடகங்களில் தலைமுறை இடைவெளி' போன்ற முக்கியமான கட்டுரைகள் வெங்கட் சாமிநாதன், சுப்ரபாரதிமணியன் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

ஆசிரியரைப் பற்றி.....

நவீன நாடக இயக்குனராக அறியப்படும் கி.பென்னேஸ்வரன், இந்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். 47 வயதாகும் இவர் தற்போது பத்திரிìகைப் பணிக்காக விருப்ப ஒய்வு பெற்றிருக்கிறார். 'ராகவன் தம்பி'எனும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். கிருஷ்ணகிரியில் பிறந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். 25 வருடகாலமாக யதார்த்தா நாடகக்குழு மூலம் நாடகங்களை இயக்கி வரும் இவர் இதுவரை 28 நாடகங்களை இயக்கியிருக்கிறார். புதுமைப்பித்தனின் 'தனியொருவனுக்கு' சிறுகதையை நாடகமாக்கம் செய்திருக்கிறார்.

"இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது திருப்தியாக இருக்கிறது. டெல்லியில் சிற்றிதழ் வாசகர்கள் அதிகமில்லை. இத்தகைய சூழலில் பொதுவான வாசகர்களிடம் நவீன இலக்கியங்களை கொண்டு செல்வது மகிழ்îசியளிக்கிறது. சிறுபத்திரிகைக் குழு அரசியலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதிலும் படைப்புகள் புரியும்படி இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார், பென்னேஸ்வரன்.

மார்ச் 17, 2006