தொடர்கள்

ஆயுத எழுத்து

சிற்றிதழ் அறிமுகம் 26

மு. யாழினிவசந்தி

"தமிழர்களின் லட்சியம் திரைப்பட நடிகர்களை முதல்வராக்குவது. மொத்தத்தில் தமிழனென்றால் சொரணையற்றவன் என திட்டமிட்டு பத்திரிகைகள் மாற்றிவரும் இச்சூழலில் அதிலிருந்து தமிழர்களையும் தமிழர்களின் வாழ்வையும் தழைக்கச் செய்யும் சிறு முயற்சியாகவே உங்கள் கைகளில் ஆயுதஎழுத்து தவழ்கிறது" என்கிற அறிமுகத்துடன் 'ஆயுதஎழுத்து' நவம்பர் 2005 முதல் இருமாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஜன (06) மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன் இணை ஆசிரியர் கோ.பாபு, பொறுப்பாசிரியர் குமார் எடைக்கல், ஆசிரியர் குழு, எழில், இங்கோ, இரா.கருணாநிதி, சாத்தனூர் அ.ராசன், கோ.கணேசன்.

சிறுகதை, கவிதை, நூல் அறிமுகம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, சர்ச்சை, விழுப்புரம் மாவட்ட தொன்னைச் சிறப்புகள் போன்ற பகுதிகள் வெளியாகி வருகின்றன. படைப்பிலக்கியத்துடன் அரசியல் கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் இதழின் மையச்சரடாக இருக்கிறது. தமிழ் மொழக்கும் தமிழ் இனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சிறந்த கவிதைகளும் கட்டுரைகளும் புத்தகங்களிலிருந்து மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. த.பழமலய், பா.ஜோதிநரசிம்மன், இளையநந்தன், ஜெயபாஸ்கரன், சீ.விக்கரமன், கோ.கிரு‰ணமூர்த்தி, தடா.நல்லரசன், எ.மு.இராதா, குமார் எடைக்கல், அசாருதீன், செஞ்சி தமிழினியன், பனிமலர், எழில் இளங்கோ, ச.பொன்னியின் செல்வன், பொன்.குமார், தங்க ரமேஸ், லலித்குமார், க.பனசை சுரங்கன் போன்றோது ஆக்கங்கள் இடம் பெற்று வருகின்றன.தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்தும் அதற்கு ஆதரவாக எழுந்த குரல்களுக்கு மறுப்பாகவும் 'கற்பு கருத்துரிமை பெண்ணுரிமை' குறித்த விவாதங்களடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் ஆயுதஎழுத்து வெளியிட்டுள்ளது. இரா.முருகப்பன், அ.ராசன், சுபா போன்றோரது கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது இதழ் (ஜன-06) பொங்கல் சிறப்பிதழாக வெளிவந்தது.

'தமிழர்கள் யாரும் இந்துக்கள் அல்ல', 'தமிழ்த் தேசியப் போரில் ஆதித்தனார்' போன்ற கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. பெரியாரின் பட்த்தையும் 'கொலை வாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே' எனும் பாரதிதாசனின் வரியையும் ஆயுதஎழுத்து அட்டைப்பட முகப்பில் தாங்கி வருகிறது.

"இளம் கவிஞர்களை ஊக்கப் படுத்துவதற்காகவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்குவதற்காகவும் இவ்விதழைத் தொடங்கினோம்" என்கிறார், ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன். இவர் பழநெடுமாறனின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவருடன் சேர்ந்து இவ்விதழை நடத்திவரும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களனைவரும் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடும் நம்பிக்கையும் உடையவர்கள். இவ்விதழும் அதை நோக்கிய பயணப்பட்டு வருகிறது.

மார்ச் 03, 2006