தொடர்கள்

காலச்சுவடு

மு. யாழினிவசந்தி

"தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்"

- சுந்தர ராமசாமி
காலச் சுவடு, ஆண்டுமலர்`91

நவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.

" காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்" என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

அதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.

1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.

எஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழினின், மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.

2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் "அற்றைத் திங்கள்" எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.

காலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

தலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.

காலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி

தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.

எதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.

பிப்ரவரி 17, 2006