தொடர்கள்

நவீன விருட்சம்

சிற்றிதழ் அறிமுகம் - 2

மு. யாழினிவசந்தி

சோறு ஊட்டிய போதெல்லாம்
வேண்டாமென மறுத்தது குழந்தை
எதை காட்டியும் பலனில்லை
எல்லோருக்கும் பயம்
பசிதாங்காது குழந்தையென
வலுக்கட்டாயமாக ஊட்டினார்கள்
அப்படி திணித்த சோற்றை துப்பியது குழந்தை
கோபம், ஆச்சர்யம், பயம் சூழ்ந்து கொண்டதும்
அவர்கள்
என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தபோது
நான் சொன்னேன்
குழந்தையை மண்ணில் விளையாட விடுங்களென்று.
-சேக்கிழார்

படித்ததும் பிடித்துப் போகும் இக்கவிதை நவீன விருட்சம் 66 - 67வது இதழில் வெளியாகியுள்ளது. நவீன இலக்கியதிற்கென்று வெளிவரும் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கது நவீன விருட்சம் காலாண்டிதழ். 1988ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்விதழை தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அழகிய சிங்கர்; இதன் வெளியீட்டாளர் என்.சுப்பிரமணியன். ஆரம்பகாலத்தில் 16 பக்கத்தில் வெளிவந்தது. அப்போது விலை ரூ.2.50/-. முதல் இதழை நண்பர்கள் கோபிகிருஷ்ணன், ஆர்.சீனிவாசன், எம்.கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வந்தார். பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக நண்பர்கள் எல்லாம் விலகிவிட அழகிய சிங்கர் மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். சிற்றிதழை தனியாகத்தான் நடத்த முடியும். நண்பர்கள் சேர்ந்து நடத்துவது நீண்ட நாள் நீடிக்காது என்பது இவர் கருத்து.

“வணிக பத்திரிக்கைகளில் சிறுகதை படைப்பு வெளியிடுவது அருகி வருகின்றது. தரமான கவிதைகளும் அவற்றில் வெளி வருவதில்லை. சிறு பத்திரிக்கைகளில்தான் தரமான படைப்புகள் வெளிவருகின்றன. ஏதேனும் சாதிக்க வேண்டுமென்றால் சிறு பத்திரிக்கைகளின் மூலமாகத்தான் முடியும்” எனச் சொல்கிறார் அழகிய சிங்கர்.

பிரமிள், ஞானக்கூத்தன், இராஜகோபாலன், ஐராவதம் பாவண்ணன், பெருந்தேவி, ரிஷி, கிருஷாங்கினி, கோபிகிருஷ்ணன், எம்.கண்ணன், ஆகியோர் படைப்புகளுக்கு நவீன விருட்சம் களமாக திகழ்கிறது. நவீன விருட்சம் சார்பில் பதிப்பகமும் நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். விருட்சம் கவிதைகள் தொகுதி1, விருட்சம் கதைகள் தொகுதி1, ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுதொகுதி), வெங்கட்சாமிநாதனின் ‘உரையாடல்கள்’ போன்றவை இவர் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களாகும்.மற்றும் கவிதை தொகுப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

‘விருட்சம் இலக்கிய சந்திப்பு’ எனும் பெயரில் ஐந்தாண்டுகள் இலக்கிய கூட்டம் நடத்தி இருக்கிறார். அழகிய சிங்கர் இப்போது இந்தியன் வங்கியில் பந்தநல்லூர் கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். ‘ யாருடனும் இல்லை’ தொலையாத தூரம்’ எனும் இரண்டு கவிதை தொகுப்புகளையும், ‘சில கதைகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் இவரது படைப்புகளாகும்.

பதினேழு வருடங்களாக நடத்தி வருகிறீர்களே சலிப்பு ஏற்படவில்லையா?
“இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. சிற்றிதழ் நடத்துவது அரிப்பு என்று வல்லிக்கண்ணன் சொல்லுவார். எனக்கு அப்படியில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாசகர்களது கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. படைப்புகள் வாங்குவது, அதை ஒலியச்சு செய்வது, பிழை திருத்துவது என எல்லாவற்றையும் நானே செய்கிறேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க. ஒரு சிற்றிதழை இத்தனை வருடங்களாக நடத்தி வருவது உண்மையில் ஒரு சாதனைதான்.

ஜனவரி   12 , 2006 

Also read:நிழல்