"புதுவை எழுத்தின் நுட்பங்களையும் படிமங்களையும் உத்திகளையும் இந்த யதார்த்தக் கூறிலிருந்தே எடுக்கிறேன். அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டும் போது நிலாவைக் காட்டி 'அதுக்கு ஒரு ஆப்பு' 'உனக்கு ஒரு ஆப்பு' என்று சோறூட்டுவாள். அதன் பிறகு, பக்கத்தில் இன்னொரு குழந்தை இருப்பது போல் பாவித்து 'தம்பிக்கு ஒரு ஆப்பு' 'உனக்கு ஒரு ஆப்பு' என்று அந்நிகழ்வு வளர்ச்சியடையும். இந்த யதார்த்தத்தின் அழகியலை வேறு சில பரிணாமங்களுக்கு நகர்த்திச் செல்லும் போது தானாகவே புதுவை எழுத்து உருவாகி விடுகிறது.
நான் தூங்கி எழுந்ததும் பாத்ரூம் போய்விட்டு முகம் கழுவி, மாட்டியிருக்கும் கண்ணாடியைப் பார்க்கிறேன். ஹே...என் முகத்தைக் காணவில்லை. என்ன நடந்தது? என் மகன் முந்தைய நாள் கைத் தவறுதலாக பாத்ரூம் கண்ணாடியை உடைத்துவிட்டான். அப்பா கோபித்துக் கொள்வாறே என்று அதைச் சுத்தம் செய்து கண்ணாடியில்லாத வெறும் சட்டகத்தை மட்டும் அழகாக மாட்டிவிட்டு கமுக்கமாக இருந்துவிட்டான். காலையில் நான் கண்ணாடியைப் பார்த்தால் என் முகத்தைக் காணோம்...'புதுவகை எழுத்து உருவாகிவிட்டது'"
- என 'புதுவகை எழுத்து' குறித்து தம் கருத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் 'உன்னதம்' இதழின் ஆசிரியர் கெளதம சித்தார்த்தன். நவீன இலக்கியத்தின் போக்குகளை மையப்படுத்தி ஒரு சில சிற்றிதழ்களே தமிழ்ச் சூழலில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் குறிப்பிடத்தக்கது 'உன்னதம்' இருமாத இதழ். இவ்விதழ் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. பிரமிளின் கவிதையிலிருந்து உன்னதம் என்கிற வார்த்தையை தம் இதழுக்குப் பெயர் சூட்டிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் கெளதம சித்தார்த்தன். சிற்றிதழ்களுக்கு ஏற்படும் வழக்கமான பொருளாதாரச் சிக்கலால் உன்னதமும் பத்து இதழ்கள் வரை வெளிவந்து நின்று போனது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மே- ஜூன் 2005 முதல் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை(நவ-டிச.2005) 19 இதழ்கள் வெளிவந்துள்ளன. சிற்றிதழ் என்கிற தளத்திலிருந்து இப்போது இடைநிலை இதழாக உருப்பெற்றிருக்கிறது. முதல் 10 இதழ்களில் மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டு வந்தன. போர்ஹே, மார்க்வெஸ், வில்லியம் பர்ரோஸ், லோசா, நபவக் போன்றோரது நேர்காணல்களையும் கதைகளையும் வெளியிட்டிருக்கிறது உன்னதம். ரோலன்பார்த்தின் 'ஆசிரியன் என்பவன் யார்?', மிஸல்பூக்கோவின் 'ஆசிரியனின் மரணம்' என மிக முக்கியமான பின் நவீனத்துவக் கட்டுரைகளையும் வெளியிட்டுக்கிறது உன்னதம். 11ஆவது இதழிலிருந்து தமிழ்ப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறது.
ரவிக்குமார், சிவகாமி, தேவதேவன், தொ. பரமசிவம், சண்முகராஜா ஆகியோர் உன்னதத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். 14ஆவது இதழிலிருந்து (நவ.05) 'நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை' என்கிற அடைமொழியுடன் வெளியாகிறது. இறுக்கமான நடையிலிருந்து தற்போது எளிமையை நோக்கிப் பயணிக்கிறது உன்னதம்.
உன்னதம் பதிப்பகத்தின் மூலம் சில முக்கியமான புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறார் கெளதமசித்தார்த்தன். லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த எசுனரிகவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லம்', சா. தேவதாஸ் மொழி பெயர்த்த இதாலோகால்வினோவின் 'குளிர்கால இரவில் ஒரு பயணி' ஆகிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஆசிரியரைப் பற்றி...
அடிப்ப்படையில் ஒரு கிராம விவசாயியாக இருக்கும் கெளதமசித்தார்த்தன் முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவர் இதுவரை ஐந்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். 'மூன்றாவது சிருஷ்டி' (1989), 'பச்சைப் பறவை' (2001), 'பொம்மக்கா' (2005) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் 'ஒளிச் சிற்பம்' (1991), 'வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள்' எனும் இரண்டு குறுநாவல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இனி அவருடன்....
'உன்னதம் இதழ்' ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
"இதுவரை எழுதப்பட்ட எதார்த்த எழுத்திலிருந்து மாறுபட்டு 'புதுவகை எழுத்தை' உருவாக்கும் நோக்குடன் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். என் கதைகள் புரியவில்லை என்று எந்த சிற்றிதழும் வெளியிடவில்லை. எனவே இது மாதிரியான புதுவை எழுத்துகளை வெளியிடுவதற்காக உன்னதத்தை ஆரம்பித்தேன்".
உன்னதத்தின் நோக்கம் என்ன?
"சிறு பத்திரிக்கைகளில் தற்போது புதுவகை எழுத்து, பின் நவீனத்துவ எழுத்து எனும் பெயர்களில் வரும் கதைகள் எல்லாம் 1980களில் வந்த யதார்த்த எழுத்துகளைப் போலவே இருக்கினன. பெயர்தான் மாறியிருக்கிறதே ஒழிய எழுத்துமுறை மாறவில்லை. யதார்த்த வகை எழுத்திலிருந்து புதுவை எழுத்தை உருவாக்குவது உன்னதத்தின் நோக்கமாகும். புதுவகை எழுத்து என்பது நம் மண்ணில் இருக்கிறது. அது தலித்தியத்திற்கு முற்றிலும் பொருத்தமாக அமையும். மேலை நாட்டு எழுத்து வகைகளை நான் அபடியே ஏற்றுக் கொள்வதில்லை.
உன்னதத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?
"தமிழ்க்கதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துவது என் தீவிரச் செயற்பாடாகும். அத்துடன் இளைஞர்களிடம் புதுவை எழுத்தை அறிமுகப்படுத்துவது உன்னதத்தின் எதிர்காலத் திட்டமாகும். அதை நோக்கியே நானும் உன்னதமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்".
பிப்ரவரி 03, 2006