தொடர்கள்

முற்போக்கு இலக்கியம் வட்டார இலக்கியம் - எல்லாம் உண்டா?

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-36

சா.கந்தசாமி

இல்லை. இலக்கியம் என்பதில், இலக்கியம் தவிர வேறெதும் இல்லை. இலக்கியம் என்னும் பரப்பில் கால் பதித்து முன்னே போக முடியாதவர்கள், ஆழமும் அறிவு முதிர்ச்சியும் பெற்றதில் தனக்கு இடம் இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறவர்கள். தன் எழுத்து வித்தியாசமானது என்று நம்புகிறவர்கள் இலக்கியத்தைக் கூறுபோடுகிற காரியம்.

இலக்கியத்தில் அதற்கெல்லாம் இடம் கிடையாது. ஆனால் இலக்கியத்தில் அரசியல் புகுகிற போது - இலக்கியம் கற்பிக்கப் படுகிற ஒன்றாக போன பிறகு - அது பற்றிய ஆராய்ச்சி, பிரிவு எல்லாம் ஏற்படுகிறது. பகுதி பகுதியாகப் பகுத்துப் பார்ப்பது ஆராய்ச்சி தேவையாகிறது. எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் படைக்கப்படும் எழுத்திற்கு ஒரு பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள்.

தலித் எழுத்து.

அது இல்லலே இல்லை. சுய சரித்திரம் உண்டு. இலக்கியம் கிடையாது. தலித் கவிதை என்று ஒன்று தனியாக இல்லை. அப்படித்தான் நாவல், சிறுகதை கர்நாடகத்தில் கன்னடமொழியில் எழுதப்படும் தலித் எழுதிய சிறுகதையை - நான் சேலம் தலித் மொழியில் எழுதுகிறேன் என்று ஒருவர் வருகிறார். அது எப்படி சாத்தியம். இலக்கியம் மொழியில் படைக்கப்பட்டாலும் - அது மொழிக்குள் கிடையாது. இலக்கியத்தில் தலித் மொழி என்று கிடையாது. பேச்சு மொழி மாறக்கூடியது. கல்வி பேச்சு மொழியை ஒழிக்கிறது. நாகரிகம் - பழக்க வழக்கங்கள் பேச்சு மொழியை திருத்தமடைய செய்கின்றன.

ஐரோப்பாவில் இருந்து கிறிஸ்துவ சமய பிரசாரத்திற்கும் - மத மாற்றத்திற்குமாக - வாஸ்கோடா காமா (1498) கடல் வழிகண்டு பிடித்த பின்னர் பலர் வந்தார்கள். அதில் முக்கியமானவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசியர்களுக்கு அரேபியாவில் நுழைய முடியவில்லை. முஸ்லிம் நாடுகளில் சமயபிரசாரம் செய்ய அனுமதி இல்லை. எனவே சமயபிரசாரம் செய்ய தடையில்லாத நாட்டை நோக்கி வந்தார்கள்.

இந்தியா அதற்கு வசதியான நாடாக இருந்தது. போர்ச்சுக்கல் இருந்து புறப்பட்டு கோவா வந்தார்கள். விரைவிலேயே கோவாவை பிடித்துக் கொண்டார்கள். கிறிஸ்துவ சமயத்தில் கத்தோலிக்கப் பிரிவு கோவாவில் இருந்து தென்னிந்தியாவில் வேகமாக ஊடுருவியது. செயின்ட் பிரான்சியஸ் சேவியர் (1506 - 1549) ஹென்றிக் ஹென்றிகுவிஸ் (1520 - 1600) கொச்சிக்குவந்தார்கள். பின்னர் தூத்துக்குடி சென்றார்கள். செயிýட் சேவியர் ஹென்றிக் ஹென்றிக்குவிசை தமிழ்ப் படிக்கச் சொன்னார். ஏனெனில் மதமாற்றத்திற்கும் - மத பிரசாரத்திற்கும் மொழிமுக்கியம் என்று நம்பினார்.

ஹென்றிக் ஹென்றிக்குவிஸ் பிறப்பால் யூதர். தன் சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு கோவா வந்தார். முத்துக்குளிக்கும் தூத்துக்குடியில் பாதவ மக்களிடையே சமயப்பணி ஆற்றினார். தமிழ்ப்படித்தார், ஆறு மாதத்தில் நன்கு பேசவும் - எழுதவும் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்க்கற்றார். ஆசிரியர்களிடம் கற்ற தமிழ்மொழியும், பாதவ மக்கள் பேசும் மொழியும் வித்தியாசமாக இருப்பதை கண்டுணர்ந்தார். எனவே பேச்சுத் தமிழுக்கு ஒரு அகராதி உருவாக்கினார். பின்னால் அதனை தொடுத்தமிழ் என்று சொன்னார். பேச்சு தமிழ் என்று ஒன்று இருப்பதை முதன் முதலாக உணர்ந்து எடுத்து சொன்னவர் அவர்தான்.

வாஸ்கோடா காமா - காலத்தில் தமிழ் நாட்டை மலபார் என்று அழைத்தார்கள் தமிழ்மொழியை மலபார் மொழி என்றார்கள். அது அவர்களின் அறிவின் வெளிப்பாடு.

பின்னர் ராபர்ட் டி நொபிலி (1577 - 1656) தன்னை தத்துவபோதகர் என்று அழைத்துக்கொண்டவர். திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் கிறிஸ்துவ பிரசாரத்திலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டவர். தென் மாவட்டத்தில் இருந்து நகர்ந்து மதுரைக்கு வந்தார். தன் பேச்சுத் தமிழும் - மக்கள் பேச்சுத் தமிழும் வேறாக இருப்பதைக் கண்டார். பாதவ மக்களின் தமிழ் மதுரையில் செல்லுபடியாகாதனெத் தெரிந்து கொண்டார். அதனால் தமிழ் இலக்கியம் இலக்கெணமெல்லாம் படித்தார்.

ராபர்ட் டி நொபிலி சமய பிரசாரம் செய்தது திருமலை நாயக்கர் காலம். மதுரையில் தெலுங்கு தாராளமாகப் புழங்கிக் கொண்டிருந்தது. தான் மதமாற்றம் செய்த ஆல்பட் வீட்டில் தெலுங்கு பேசுவதைக் கேட்டார். உடனே தெலுங்கு கற்று கொண்டார்.

மதுரையில் இருந்த பிராமணர்கள் சமஸ்கிருதம் படிப்பை கேட்டார். சமஸ்கிருதத்தின் பால் ஆர்வம் வந்தது. எனவே சமஸ்கிருதம் படித்தார். தன் காலத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் - என மூன்று மொழிகளை அறிந்த அறிஞராக அவர் இருந்தார். லத்தீன், கிரேக்கம், போர்த்துக்கீஸிய மொழிகளை ஏற்கனவே கற்று இருந்தார்.

அவர் தமிழில் நிறைய எழுதி உள்ளார். கிறிஸ்துவ சமயப் பிரசாரந்தான் அவரின் பிரதானமான நோக்கம். தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மொழி முக்கியம் என்று கருதினார். மொழியின் வழியாகவே கருத்தைப் பரப்ப முடியும் என்பது அவர் கொள்கையாக இருந்தது.

ஞானஸ்தானம், குரு பீடம், நற்கருணை சர்வேஸ்வரன் - என்பதெல்லாம் கிறிஸ்துவ சிந்தனைக்கு உகர்ந்த சொற்கள் என தேர்வுசெய்து எழுதினார். மிகசிறப்பாக உரைநடை எழுதியவர் என்று அவர் உரைநடையைப் படிக்கிறபோது தெரிகிறது. அவர் தமிழ் மரபை - உரைநடை மரபு இல்லாவிட்டாலுங்கூட - தமிழ் மரபை கவிதைக்குக் கொண்டு வந்தார்.

கதை எழுத ஒருவிதமான பேச்சுத் தமிழை அது எந்த வட்டாரத்திற்கும் சொந்தமானது இல்லை - பொதுவாகப் புழக்கத்தில் இருந்த பேச்சுத் தமிழைக்கொண்டு பரமார்த்த குரு கதை 1740ஆம் ஆண்டில் எழுதியவர் கான்ஸ்டாண்டியன் ஜோசப் பெங்கி - என்கிற வீரமாமுனிவர். படைப்பு இலக்கியத்தில் பேச்சுத்தமிழ் - வட்டாரத் தமிழ் என்று ஒரு தமிழ் புகுந்தது அவர் காலத்தில் தான். அதற்கு ஏற்றது மாதிரி - சமூகவிமர்சனமாக குரு - சீடர் பாரம்பரியத்தைக் கிண்டல் செய்து தன் கதையை எழுதினார். அதற்கு லத்தீன் மொழியில் தானே ஒரு மொழிபெயர்ப்பும் செய்தார்.

1740-ஆம் ஆண்டில் வீரமாமுனிவர் எழுதிய அதிவிவேக பரமார்த்த குருவின் கதையை ஒவ்வொரு தலை முறையிலும் பலர் திருப்பித் திருப்பி எழுதி உள்ளார்கள். அதில் முதலில் காணாமல் போனது அதில் உள்ள மொழிதான்.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.முப்பத்தைந்து வாரங்களாக தன் எழுத்தோவியத்தின் மூலம் அந்திமழை வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற சா.கந்தசாமி தற்போது கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அவரது பயணத்தை முன்னிட்டு சாகாவின் எழுத்தோவியம் இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. மற்றுமொரு சூழலில் அவர் அந்திமழை வாசகர்களை சந்திப்பார்.)

மே 02, 2006


<<<முந்தைய பகுதி