தொடர்கள்

ஆசிரியர் - மாணவர்

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-35

சா.கந்தசாமி

எல்லாம் காலந்தோறும் மாறுவதுபோல குரு - சீடர் என்பது உடைந்தது. ஆசிரியர் - மாணவர் என்ற நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சைவ மடங்கள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொடுத்தது. தமிழ் என்றாலும் சைவ சம்பந்தமான தமிழ் நூல்கள்தான். ஏனவே தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி எல்லாம் சைவ மடங்களில் இல்லாமல் போய்விட்டது.

பத்தொன்பதாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்த மிக முக்கியமான சைவ மடம் திருவாடுதுறை ஆதினம். ஆது தன் காலத்தில் முற்போக்கான மடம் என்றே சொல்ல வேண்டும். அதனோடு சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்ற முன்சிப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தொடர்பு கொண்டு இருந்தார். அவர்தான் 1879-ஆம் ஆண்டில் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை உரை நடையில் எழுதியவர். அதுதான் தமிழின் முதல் நாவல். அவர் ஆதினத்தோடும், ஆதினத்தில் தமிழ்கற்றுக் கொடுத்து வந்த மகாவித்வான் திரிசபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையோடும் - பழக்கம் கொண்டு இருந்தார்.

தரிசபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாணவர் தான் உ.வே.சாமிநாதையர் என்கிற (1855 - 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர். அவர் காலத்தில் ஆங்கிலப் படிப்பும் - அதன் வழியாக உத்தியோகம் - பதவி - பணம் - சமூக அந்தஸ்து எல்லாம் கூடிவிட்டது. சாமிநாதையர் தந்தைக்கு - எல்லா தந்தையும் போலவே - எல்லா காலத்திலும் தன் மகனை மேம்படுத்துவது தந்தையின் கடமையென கருதி ஆங்கிலம் படிக்க வைக்கப் பார்த்தார். அது சரிபட்டு வரவில்லை. பிறகு சங்கீதம் அக்காலத்தில் கௌரவமாக இருந்தது. அதில் நுழைக்கப் பார்த்தார். அதுவும் சரிபட்டு வரவில்லை. கடைசியாக தமிழ் படிக்க வைத்தார். தமிழை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார். அதாவது பழந்தழிழ் நூல்களை ஓலைச் சுவடியில் இருந்து திருத்தமாக அச்சிட்டு கொடுத்தார். அது ஒரு பெரிய சேவை என்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பாராட்டப் புகுந்தவர்கள், ஐயா நீங்கள் தமிழ்மொழிக்கு சேவை செய்து வருகிறீர்கள் என்பதுதான் வழக்கம். அவர் பெரியவர், தமிழ்மரபு அறிந்தவர். ஊடனே அதனை மறுத்து தமிழ்தான் எனக்கு சோறுபோடுகிறது, என்று சொல்வது வழக்கம்.

ஆசிரியர் - மாணவர் - உறவுக்கு அவர்தான் சிறந்த உதாரணம். அவர் அதனை உணர்ந்து மாதிரியே எழுதி உள்ளார். உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்கள் எப்படி மதிப்பு மிகுந்ததோ அப்படியே அவர் எழுதி உள்ள உரைநடை நூல்களும் மதிப்பு கொண்டவை. அவற்றில் காலம் என்பது துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் தான் முக்கியம் என்று கருதி பதியைப் பற்றி துல்லியமாக எழுதி உள்ளார். அதில் முக்கியமானது அவர் ஆசிரியரான திரிசபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றியது.

ஆசிரியர் - மாணவர் உறவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

திரிசபுரம் மீனாட்சி சந்தரம் பிள்ளை இடம் - மாயவரத்தில் தமிழ்ப் படிக்க சேர்ந்தது கொள்கிறார். சில நாட்களில் ஆசிரியர் மனதில் இடம் பிடித்து கொள்கிறார். அவர் உன் பெயர் என்ன என்று கேட்கிறார்.

"வெங்கட்ராமன்"

"வேறு பெயர் இல்லையா?"

"வீட்டில் சாமிநாதன் என்று கூப்பிடுவார்கள்"

"இனி அதுதான் உன் பெயர், அப்படியே இருக்கட்டும்" என்கிறார் ஆசிரியர்.

மாணவர் முதலில் தன் பெயரை இழக்கிறார்.

புதுப்பெயர் பெற்ற சாமிநாதனுக்கு இடையில் ஈடுபாடு. தன் தந்தையின் ஆலோசனை பேரில் நந்தன் சரித்திரம் பாடிய கோபாலகிரு‰ண பாரதியாரிடம் இசைப்பயில போய் வந்து கொண்டு இருக்கிறான். அது அறிந்த பிள்ளை படிப்புக்கு இசை இடைஞ்சலாக இருக்குமே என்கிறார். மறுபடியும் இன்னொரு துறப்பு. இசை பயிலுவதை துறந்துவிடுகிறான். ஒரு வருத்தம் இல்லை. இளமையில் தன் ஆசை, ஈடுபாடு எல்லாவற்றையும் துறக்க வைத்த ஆசிரியரைப்பற்றி பின்னால் உ.வே.சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற நூலை 1933-ஆம் ஆண்டில் எழுதிஉள்ளார். நூலில் ஒர் இடத்தில் கூட பிள்ளையின் பெயர் இல்லை. பெயர் இல்லாமலேயே முழு சரித்திரமும் எழுதப்பட்டுள்ளது. அவர் ஆசிரியர் - மாணவர் உறவிற்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையாவர்கள் சரித்திரமே ஒரு சான்று என்றாலும் - வேறு சான்றுகளும் உள்ளன.

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு சீவகசிந்தாமணி பதிப்பு - ஆராய்ச்சிக்காகத் தேவைப்பட்டது. பல நூலகங்களில் தேடினார். உ.வே.சாமிநாதையர் 1883 ஆம் ஆண்டில் பதிப்பித்தது. எனவே அது கிடைக்கவில்லை. பேராசிரியர் எஸ்.வையாபுரி பிள்ளையிடம் சென்று கேட்டார். அது அவரிடமும் இல்லை. ஆனால், உ.வே.சாமிநாதையரிடம் உள்ளது கேட்டுப்பாருங்கள். ஆனால் கிடைப்பது º¢ரமம் என்று சொன்னார்.

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் திருவல்லிக்கேணியில் உள்ள உ.வே.சாமிநாதையர் இல்லத்திற்குச் சென்றார். தன் தேவையைச் சொன்னார். அதற்கு ஐயர் நான் சீவகசிந்தாமணியை மறுமதிப்பு போட எற்பாடு செய்துவருகிறேன். அதற்கு பதிப்பில் குறிப்புகள் எழுதிஉள்ளேன். அது மறுபதிப்பு நூலுக்கு தேவைப்படுகிறது. மூன்று மாதத்திற்குள் புது பதிப்பு வெளிவந்துவிடும் என்றார்.

நூல் இல்லை எனபது தெளிவாகிவிட்டது. பேராசிரியர் தெ.பெ.மீனாட்சி சுந்தரம் விடை பெற்றுக் கொண்டார்.

ஐயர், "தம்பி பெயர் என்ன", என்றார்.

"மீனாட்சி சுந்தரம்"

ஐயர் நெகிழ்ந்து போனார். "என் ஆசிரியர் பெயரைக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இல்லை என்று எப்படி சொல்வது" என்று உள்ளே சென்று சீவகசிந்தாமணி முதல் பதிப்பைக் கொண்டுவந்து கொடுத்தார்.

ஆசிரியர் - மாணவர் என்ற அடிப்படையிலான உறவின் அடையாளம்.


ஏப்ரல் 26, 2006  ..