தொடர்கள்

சீடர்களும் குருவும் 

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-32

சா.கந்தசாமி

இந்திய மரபில் தமிழ்நாட்டு பழக்கத்தில் சீடர் குரு என்பது ஒன்று.குரு வழியாகவே கலைகள் - குறிப்பாக இசை , நாட்டியம், ஓவியம், சிற்பம், கல்வி - எல்லாம் வளர்ந்தன.குருவின் வழியில் - அவர் சொல்லிக் கொடுத்ததை இன்பற்றுவது மரபாக இருந்தது. எனவே குரு அதிகமாக மதிக்கப்பட்டார். அறிவு என்பது குருவின் வழியாக அடையக் கூடியது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அது ஐதீகம், மரபு என்பதைச் சார்ந்தது.

தனித்தன்மையும் , சுய முயற்சியும் கொண்டவர் ஒரு குருவை ஸ்தாபித்து விடுகிறார். அது முக்கியமானது அர்வமாக நிகழ்வது. உலகம் முழுவதும் அதற்கு எடுத்துக்காட்டு உண்டு.

உலக சிந்தனை வரலாற்றின் முக்கியமான சாக்ரடீஸை ஸ்தாத்தது அவரது சீடர் பிளாட்டோ.

சிலுவையில் ஆக அடுத்துக் கொல்லப்பட்ட யேசுநாதரை ஸ்தாபித்துக் கொடுத்தது செயின்ட் பீட்டர் இந்தியாவில் சித்தார்த்தன் என்ற பகவான் புத்தரை ஸ்தாபித்துக் கொடுத்தது ஆனந்தனும் ,அசோகருந்தான். சீடர் குரு மரபும் கடைசியாக இருந்தது விவேகானந்தர் - ராமகிருஷ்ர்.

சீடர்க்கு குரு தேவைப்படுகிறார் என்பதுதான் சரித்திரமாக உள்ளது.சீடன் அறிவு தாகம் கொண்டு அலைகிறான்.அவனுக்கு அமைதியான தன்னை அங்கீகரிக்கக் கூடிய குரு தேவைப்படுகிறார்.அவன் அலைந்து திரிந்து ஒரு குருவை கண்டுபிடித்துக்கொள்கிறான்.குருவை முதன்மைப்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான்.குரு அவனை ஏற்க வேண்டும் . அவன் சொல்வதுதான் சரியென மவுனம் காக்க வேண்டும்.சச்சரவு செய்யாத வரையில் குரு மேலே மேலே உயர்ந்து கொண்டே போகிறார்.

குரு தனி ஆளாக இருக்கிறபோது பிரச்சினைகள் இல்லை.சிக்கல் இல்லை. சீடன் குருவானவர் சரிப்படமாட்டார் என்றுபட்டால் - பறவை போல் பறந்துபோய்விடுவான். சீடனுக்கு தேவைப்படுவது அறிவு திண்மை பெற்ற குரு அல்ல.அவனால் உருவாக்கப்படும் குருதான்.இங்கு குருவின் வேலை மவுனம் தான். மகா மவுனம்.மவுனத்திற்கு அர்த்தம் கண்டு சொல்வது சீடன். சீடனால் குரு ஒவ்வொரு படியாக உயர்ந்து ஓர் உச்சத்திற்கு செல்கிறார்.அதில் முதன்மையாக இருப்பது சீடனின் அறிவுத் தேடலும் ஸ்தாபிப்பதில் இருக்கும் முனைப்பும் தான்.

கண்டு கொள்வதில் உள்ள அறிவும் அதைச் சொல்வதில் உள்ள திறமையும் குருவின் வழியாக சீடனை ஸ்தாபித்து விடுகிறது. அதாவது குருவின் வழியாக சீடன் முதல்வனாகிறான். இந்த சூட்சமத்தை சீடனின் ஆசை அபிலாசைகளை அறிந்த குரு எப்பொழுதும் உண்டு. அவர் தன்னை அறிந்தவர். சீடனின் நோக்கத்தை தெளிவாக உணர்ந்தவர். எனவே அவரின் முதல் நிராகரிப்பு சீடனை புறக்கணிப்பதுதான்.சீடர்கள் என்பவர்கள் எப்போதும் சின்ன மனிதர்கள் என்று வாய்வழியாக குரு சொல்வது இல்லை.சீடனை நிராகரிப்பது வழியாக அதை நிலைநாட்டியுள்ளனர்.

சித்தர்கள் சீடர்- குரு மரபை நிராகரித்தவர்கள். அது கொள்கை சித்தாந்தம் என்பதை பரப்புகிரது. - நிலைநாட்டுகிறது என்றாலும் - வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் மெய்யல்ல என்பது அவரின் சொல்லப்படாத கொள்கை. அதனை விளக்க உரையேதுமின்றி தெளிவாகப் புலப்படுத்தினார்.

வேங்கடராமன் சகலத்தையும் துறந்து சின்ன வயதில் திருவண்ணாமலைக்கு ஓடிவந்து சாமியாக இருந்து பின்னர் பகவான் ரமண ரிஷியானார். காவ்ய கண்ட கணபதி சாஸ்தி என்ற சமஸ்கிருத வித்வான் அவருக்கு ரமணரிஷி என்ற பெயரைக் கொடுத்தார். பழைய பெயர்கள் அழிந்து ரமணர் குருவானார்.பால் பிரண்டன் ஆங்கிலத்தில் எழுதியதும் உலகம் முழுவதும் அறிமுகமானார்.ரமணர் திருவண்ணாமலையில் நிலைகொண்டபோது அம்மா, சகோதரர்கள் வந்து சேர்கிறார்கள். மகனுக்குப் படிக்கும் என்று அம்மா பால் பாயாசம் வைத்து கொடுக்கிறார்.ரமணர் சொல்கிறார். நான் எல்லாவற்றையும் துறந்து வந்தேன். ஆனால் எல்லாம் என்னைத் தொடர்ந்து வந்துவிட்டது.

திருவண்ணாமலையில் தரிசிக்கக் கூடியவராக அண்ணாமலையார் இருந்தார். அவரைத் தேடி வந்த சீடர் குருவாகி விட்டார். ஒவ்வொரு சீடனும் குருவைத் தேடுகிறான். அந்தத் தேடுதல் முடிவில்லாதது என்பது சரித்திரம்.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

ஏப்ரல் 03, 2006

அடுத்த பகுதி>>>