தொடர்கள்

வி.இராமு

யாழினி முனுசாமி

கலைஞர்களைக் காலம் ஒரே மாதிரி வைத்திருப்பதில்லை. மாறாக, பல்வேறு திசைகளில், பரிமாணங்களில் அவர்களைப் பயணிக்கச் செய்து கொண்டேயிருக்கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கும் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்குமாக அவர்களது பயணம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இயக்குநர் வி.இராமுவின் இயக்கமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

'சென்னைக் கலைக்குழு' எனும் நாடகக் குழவில் பல ஆண்டுகளாக நடித்துவரும் இராமு, 'அன்பேசிவம்', 'ஒரு இனிய உதயம்', 'மாயாவி', 'தவமாய் தவமிருந்து' ஆகிய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் பி.லெனின் இயக்கிய 'மொட்டுக்கா', 'மதியின் மரணம்' ஆகிய குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்கள் இவரை 'மரணகானா விஜி' எனும் ஆவணப்படத்தை இயக்க உதவியுள்ளன.

'மாநகர சித்தன் மரணகானா விஜி' :

சென்னை நகர உழைக்கும் மக்களின் கிராமியப் பாடலாக இருக்கும் 'கானா' பாடல்களின் தோற்றத்தையும் கானா இசைக் கலைஞர் விஜியின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அழகாக சித்தரிக்கின்றது இந்த ஆவணப் படம்.

பேராசிரியர் வீ.அரசு, கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆகியோரது நேர்காணல்கள் இந்த ஆவணப்படத்தின் இடையிடையே பல தகவல்களைப் பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன. பின்னணிக் குரலில்லாமல் விஜியே தன் வாழ்க்கையை கானா பாடல்கள் பாடியபடி விவரித்துச் சொல்வது பார்வையாளர்களைப் படத்துடன் நெருக்கப்படுத்துகிறது. துயர்மிகு தன் வாழ்வை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார் அவர்.

"செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மரணம் நிகழ்ந்த வீடுகளில் 16 ஆம் நாள் 'கர்ண மோட்சம்' நாடகம் நடத்தும் மரபு இருக்கிறது. அதன் தொடர்சியாகத் தான் சென்னையில் மரணவீடுகளில் கானா பாடல்கள் பாடப்படுகின்றன", என்கிறார் வீ.அரசு. கானா பாடல்கள் முதலில் 'தீப கானம் ' என்று வழங்கப்பட்டதையும் பிறகு 'ஆள் கானா', 'அட்டு கானா', 'மரண கானா' என்று வகைப்படுத்தி பாடுவதையும் விளக்கிச் சொல்கிறார் விஜி. பதின்மூன்று வயதில் சாவுக்குப் பாடத் தொடங்கிய விஜி இதுவரை 3000 மரணங்களுக்குப் பாடியிருக்கிறார். அதனாலேயே அவரது பெயருக்கு முன் 'மரண கானா' விஜி எனும் அடைமொழியும் சேர்ந்து விட்டிருக்கிறது.

தாய் தந்தை யாரென்று தெரியாமல், குப்பைப் பொறுக்கும் சிறுவர்களுடன் சாலையோரங்களிலும் சுடுகாடுகளிலும் வளர்ந்த விஜி, பசியால் செத்துவிடக் கூடாது என்பதற்காக சமூக இழிவாகக் கருதப்படும் என்னென்ன வேலைகளையோ செய்திருக்கிறார். திருடுவது, பணத்திற்காக கஞ்சா கேஸ் வாங்கிக் கொண்டு ஜெயிலுக்குப் போவது, விபச்சாரப் பெண்களுக்கு ஆள் பிடித்துத் தருவது போன்ற தான் செய்த அத்தனை இழிவான செயல்களையும் ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார். இவரது பாடல்களிலும் குப்பைப் பொறுக்கி நண்பர்களைப் பற்றியும் இந்த வாழ்க்கைப் பற்றியும் ஒரு சித்தனின் மனநிலையிலிருந்து அபத்தங்கள் நிறைந்த இந்த வாழ்வை பாடிக் காட்டுகிறார். வாழ்வின் போக்கில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த விஜி, தன் ஒரே உறவான தாயையும் நோய்க்கு பலி கொடுத்துவிட்டு அநாதையாக நின்ற ஒரு சேட்டுப் பெண்ணைக் கைப்பிடித்து 3 குழந்தைகளுக்கு அப்பாவாகியிருக்கிறார். தான் இறந்தால் அழுவதற்கு தனக்கும் ஒரு குடும்பம் இருப்பதை நெகிழ்வுடன் கூறுகிறார்.

'மரணகானா' விஜியின் மொழியையும் அவரது சிந்தனையையும் ஒழுங்குபடுத்தி வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களாக 'பானியன்' அமைப்பினர், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, த.மு.எ.ச. தோழர்கள் ஆகியோரை நெகிழ்வுடன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார் விஜி. சாவுப் பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்த இவர் இன்று தாமிரபரணி தண்ணீர் கோக்கோ கோலா நிறுவனத்திற்கு விற்பது குறித்தும், போபாலில் விசவாயுவால் இறந்தவர்களைக் குறித்தும் தன் கம்பீர மான குரலில் பாடிவருகிறார். 'கானா'விலும் ஒரு சமூகக் கலைஞராக உருமாரியிருக்கிறார் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

இரண்டு கால்களும் போலியோவில் பாதிக்கப்பட்டுள்ள இவரது ஊனத்தை முக்கியப்படுத்தாமல் அவரது தன்னம்பிக்கையை முக்கியப் படுத்தியுள்ளது இந்த ஆவணப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. பெற்றோர் யாரெனத் தெரியாததாலும் வீடுவாசல் இல்லாததாலும் ரேசன் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றைத் தர அரசு அலுவலர்கள் மறுப்பதையும் கிராமியக் கலைஞர்களுக்கான உதவித் தொகை கூட தனக்குக் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் பதிவு செய்தவிட்டு இனி அரசை நம்பப் போவதில்லை என் பாட்டை நம்பப் போகிறேன் என்று சொல்லியபடி அந்தக் கலைஞன் ஊன்று கோலின் துணையுடன் நடந்து செல்வதுடன் முடிவடைகிறது இந்த ஆவணப்படம்.

'அகல குஜல மசாலா கம்பெனி'
என்று பாடிய விஜி இன்று -
'ஊரெங்கும் தேடியும்
தண்ணியே இல்ல
அந்தத் தண்ணிய விற்கும்
கூட்டத்திற்கு வெட்கமே இல்ல'

என சமூகச்சிந்தனையுடன் பாடுகிறார். இந்தச் சிந்தனை மாற்றத்தையும் அவரது வளர்சியையும் அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் வி.இராமு.

சிறுவயது முதலே மாணவ இயக்கங்கள் மற்றும் வீதி நாடகங்களில் பங்குபெற்று தற்போது இயக்குனராகியுள்ள வி.இராமுடன் நேர்காணல்:

•கானா கலைஞரை வைத்து ஆவணப்படம் இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

"நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான 16 கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஷநாட்டுபுறக் கலைஞர்களின் கோரிக்கை சங்கமம்  ஒன்றை அமைத்து கோட்டை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. அந்த நிகழ்சியில் விஜியைச் சந்தித்தேன். அவருடன் உரையாடிய போது அவரைப் பற்றிக் கிடைத்த பல தகவல்கள் என்னை அதிர்ச்சியுற வைத்தன. ரேசன் கார்டு கூட வாங்க முடியாத அவலத்தையெல்லாம் சொன்னார். விஜி என்கிற கலைஞன் புறக்கணிக்கப்பட்டதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் தான் நான் இந்த ஆவணப்படம் எடுப்பதற்கான காரணமாக அமைந்தது எனலாம்".

• இந்த ஆவணப்படத்தின் அனுபவமும் அதற்கான வரவேற்பும் எப்படி இருந்தது?

"பிறப்பை புனிதமாகவும் இறப்பை தீட்டாகவும் கருதுகிறார்கள். 'தீட்டு'வில் அவர் செயல்படுகிறார். ஷபான் பீடாவை பயன்படுத்துவதை ஏன் பதிவு செய்தீர்கள்? என்கிறார்கள். விஜி எப்போதும் அப்படித்தான் இருக்கிறார். அது அவரது பண்பாடு. கர்நாடக சங்கீதக் கலைஞர் வெத்தலை மென்று துப்பினால் ஏற்றுக் கொள்கிறார்களே. அதனால் நான் திட்டமிட்டே தான் பதிவு செய்தேன். துப்புவதில் என்ன வேற்றுமை இருக்கு? மலேசியாவிலிருந்து சென்னை வந்திருந்த ஒரு நண்பர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஷசென்னையில் இது போன்ற கலைஞர்கள் இருப்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிஞ்சது  என்று சொல்லி ஐந்து சி.டி.களை வாங்கிக் கொண்டு போனார். தொடர்ந்து பல இடங்களில் திரையிட அழைக்கிறார்கள். இந்த வரவேற்பு என்னை அடுத்த படத்தை இயக்க ஊக்கப்படுத்துகிறது.

இந்த படத்தில் வரும் ஜெயில் காட்சிகளும், சுடுகாட்டுக் காட்சிகளும் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. பிறகு வேறுமாதிரியான முறையில்தான் அதைக் காட்சிப்படுத்தினோம். பிறகுதான் கவின் கலைக் கல்லூரியில் காட்சிப்படுத்தினோம்."

• உளவியல் ரீதியாக கானா பாடல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

"இப்போது எல்லா தளங்களிலும் கேள்வியே கேட்காத ஒரு நிலை நிலவுகிறது. சித்தர் பாடல்களில் ஒரு எதிர்க்குரல் இருக்கும். அந்தக் கூறுகள் கானாப் பாடல்களிலும் இருக்கின்றன. விஜியின் பாடல்களிலும் அத்தகைய எதிர்க்குரல் இருக்கிறது. அந்தக் குரல்தான் என்னை பாதித்தது.
பொதுவாகவே மரணம் குறித்து நமக்கு ஒரு பணம் இருக்கு. பாடதிட்டத்தில் கூட மரணம் பற்றி எதுவும் கிடையாது. ஆனால் வெளிநாடுகளில் மரணத்தை எதார்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த கானா பாடல்கள் மன பாரத்தைக் குறைக்கும் தன்மை உடையது. அதனால் தான் மரணவீடுகளில் அதிகம் பாடப்படுகிறது. சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகின்றன."

- யாழினி முனுசாமி

சனிக்கிழமை 03, 2007

அடுத்து>>>