தொடர்கள்

கனா மீது வருபவன் - 34

அய்யப்பன் மகாராஜன்

ஒரு துவர்த்து போலத் துவண்டுக் கிடந்தான் அப்பு . தகவலுக்கு அஞ்சிய உடற்பயிற்சி ஆசிரியர் ஓடிவந்து அவனை எழுப்ப முயற்சித்தார். அனுபவம் பலவாறாக சிந்திக்கச் செய்யும்படியான அளவுக்கு அவன் அவரை வேலை வாங்கினான். வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரம் என்பதால் அது ஒரு கூடுதல் சுமையாகவும் அசம்பாவிதம் ஏதேனும் சம்பவிக்க நேர்ந்தால் வகுப்பினை விட்டுவிட்டுச் சென்றதற்காகக் கிடைக்கும் பலனை நினைக்கையில் கசப்புக் கொள்ளச் செய்வதாகவும் அவருக்கு இருந்தது. தண்ணீர் கொண்டு வரச்செய்து தெளிக்கச் சொல்லிக் காத்திருந்தார். அப்பு ஒரு சிறிய அசைவினை வெளிப்படுத்தினான். அவனால் அவ்வாறுதான் முடிந்தது. அவர் அதனைப் பற்றிக் கொள்ள நினைத்து உணர்வெழுப்பிவிட முடிந்த அளவில் முயற்சி செய்தார்.

அப்பு அவரை பயத்திலிருந்து விடுவித்தான். உணர்வு வந்த போதிலும் உடல் அவனைக் குறுக்கி வைத்திருந்தது போல அழுத்தியது. ராசாவைப் பார்க்கையில்  அவன் ‘’ ஜ்ஜெண்டக் ‘’ என்று தன்னை அறிவித்தது வலியாக இருந்தது. வலதுகை நோயுற்றது போலத் தவித்தது. மணி அடித்து நேரமாயிற்று. கூட்டத்தைத் தவிர்த்து பள்ளிக்கூடம் விட்டு வெளியேறினான். ‘’ ஜெயக்குமாரி ‘’ இறக்கத்தில் டாமி ஓடி வந்தது. தற்காலிகமாக சற்று அமைதியைப் பேணிவிட்டு பிறகு அவனோடு உரசி உறவாட முயன்றது. அவனது காலடிப்போக்கின் நடுக்கம் அந்த முயற்சியைத் தடுக்க, பாதுகாப்புக் கருதி ‘’ டாமி ’’த் திரும்பிப் பார்த்தது.

அப்புவின் பின்னே சற்றுத்தள்ளி தனது மனஉலக இருளினைச் சுமந்தவாறு ராசா வந்து கொண்டிருந்தான்.

‘’ என்னலே நடந்துது? ‘’

‘’ சண்ட சார்.. ‘’

‘’ சண்டையா...?...யாருக் கூடலே....? ‘’ அவர்கள் ராசாவைக் காட்டினார்கள். உடற்பயிற்சி ஆசிரியரின் வெறுப்பு ராசா மீதுத் திரும்பியது.

‘’ ஏம்புலே சண்ட ? ‘’

‘’ அவனும் அடிச்சான் நானும் அடிச்சேன்.... ’’

‘’ நீ ஏம்புலே அடிச்சே.....? ‘’

‘’ அவனும் அடிச்சான் நானும் அடிச்சேன்... ’’

‘’ அவன் அடிச்சா நீயும் அடிச்சிருவியா...? ‘’

ராசா தலைத் திருப்பிக் கொண்டான்.

‘’ சொல்லாம்லே ‘’ பட்டென அவன் செவுளில் கை வைத்தார். செவியைப் பிடித்து முடிந்த மட்டிலும் ரப்பர் போல இழுத்தார்.

‘’ வலிச்சிது அடிச்சே....ன் ‘’ அவன் வலியின் காரணமாக சத்தமாகச் சொன்னான்.

காதைப் பிடித்து வைத்துக் கொண்டே மற்றவர்களிடம் அவர் விசாரித்தார். ‘’பேனா‘’ விவரம் தெரிய வந்தது.

‘’ பெரிய சட்டம்பி ....செத்துத் தொலச்சிருந்தாம்னா .......? ‘’

அப்போதுதான் அப்பு நிமிர்ந்து அவனைப் பார்த்தான். அவன் ‘’ ஜ்ஜெண்டக் ‘’ என்று அழைத்தது காதினுள் கேட்டது. ஆசிரியர் தொப்புள் பகுதியைப் பிடித்து பலம் கொண்டுத் திருகினார். நாயுருவி ஒன்றினைப் பறித்து வரச் சொல்லி அதன் கீழ் முனையைப் பிடிக்க வைத்து உருவினார். சிறா ஒவ்வொன்றும் விரலினைத் துளைத்துக் கொண்டு நின்றன. ராசா வலியைப் பொறுத்துக்கொள்ள வேண்டி வயிற்றைப் பிடித்துக் கொண்டு குனிந்தான். மணிச் சத்தம் தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

‘’ டாமி ‘’ ராசாவைக் கண்டுகொண்டு அவனிடம் வந்தது. ராசா கவனத்தை அப்புமீது பொருதிக் கொண்டு நடந்தான். சில நேரம் ‘’ டாமி ‘’ இருவருக்கும் இடையேயும் போய் வந்தது.

ராசாவின் பின்புறத்தில் வேலப்பன் வந்து கொண்டிருந்தான். ஒருவகையில் அவன் மிகவும் குழம்பிப் போயிருந்தான். பெரும் யுத்தம் ஒன்றை எதிர்பார்த்து அது நடைபெறாத ஏமாற்றம் அவனிடத்தில் மிஞ்சியிருந்தது. அப்புவிற்காக நடுக்காட்டு இசக்கிக்கு ‘’ டால்டா ‘’ கொடுத்த வண்டிக்காரனும் ராசாவின் துணைக்காக செக்கடிமாடனும் வந்து நிற்பார்கள் என்று நம்பினான். ஏதாவது ஒரு உருவத்திலாவது . வரவே இல்லை. பிறகு ஆபத்துக்குக் கூட வராத இந்த சாமிகளுக்கு ஏன் நான் பயப்பட வேண்டும்? என்று துணிந்தாலும் இந்த சாமிகளை நினைத்தால் ஸ்டிக்கர் போல பயம் ஒட்டிக்கொள்வது ஏன் ? குழப்பங்களை சொறிந்துகொள்வதைத் தவிர வேறு எந்த வழிகளும் கிடைக்கவில்லை அவனுக்கு.

ஜெயக்குமாரிஸ்டோர்  இறக்கத்தையெல்லாம் கடந்து  காலேஜ்ரோடு  சந்திப்பிற்கு வந்தபோது அப்பு யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டது ராசாவுக்கு . அவன் நடந்தபடியே மறுபுறத்திற்கு வந்து பார்த்தான். அது பயில்வான்சபா. அப்புவின் ஒரு அண்ணன். ராசா நிலைக்குத்தி நின்றான். பின்புறத்தில் வந்து கொண்டிருந்த வேலப்பன் அடுத்து நிகழப் போகும் கணத்தில் கவனம் வைத்தான்.

அப்புத் திரும்பி ராசாவைப் பார்த்தான். அதற்குள் ராசா வலதுபுற முடுக்கினுள் நுழைந்து விட்டிருந்தான். வேலப்பனுக்கு நேர்பார்வையாக அப்பு நின்று கொண்டிருக்க நாடி ஸ்தம்பித்துவிட்டது வேலப்பனுக்கு . அவன் ராசாவைத் திட்டிக் குட்டையில் வாரினான் மனதிற்குள். சபாவும் திரும்பிப் பார்க்க தலை தப்பிப்பது தம்பிரான் புண்ணியம் என்று வேலப்பனும் வலது புறத்திற்கு சாடினான். ஆனால் ராசாவை அங்குக் காணவில்லை. தஞ்சம் கொண்டிருக்கிறானாவென்று ஒரு வீட்டின் வெளிக்கதவின் உள்ளே எட்டிப் பார்த்தான்.

‘’ யாருலே அது ? ‘’ ஒரு பஞ்சட்டைக் கிழவியின் சத்தம் ஓங்கிக் கேட்டது. தலையை வெளியே இழுத்துக் கொண்டான். கிழவியின் செவிக்கூர்மை அவனுக்கு ஆச்சர்யம் தந்தது.

‘’ யாரு ஆச்சி? ‘’

‘’ எவனோ ஒருக் கள்ளப்பயலாக்கும்... அடமாங்காயக் கண்ணு வக்காம்னு  நெனக்கேன்....! ‘’

‘’ பாக்கட்டும் ‘’ என்று ஒரு சிறுமி வெளியே வந்தாள்.

அவளைக் கண்டதும் வேலப்பன் முட்டைக் கண் கொண்டு உருள விழித்தான். ‘’ அடைமாங்காய் ‘’ சொல் கேட்டதும் எச்சில் ஊறியது.

‘’ களவாங்கவாலே வந்தே...?’’ நனைந்தக் குரலில் கேட்டால் அந்த சிறுமி.

அவன் ‘’ ஆமா ’’ எனத் தலையாட்டினான்.

‘’ எங்க எடுலேப் பாப்போம் ‘’

அவன் அதைப் பார்த்தான். பார்த்ததும் கொதி உண்டானது.

‘’ எடுத்தா என்ன செய்வே...தலைய வெட்டிருவியோ..? ‘’

‘’ வெட்டுவம்லே....’’

‘’ வெட்டுட்டீப் பாப்போம்....’’ என்றுத் தலையை நீட்டியவாறே அவளைத் தள்ளிவிட்டுவிட்டு ஓரிருத் துண்டுகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.

அவள் திணறிப் போய் விட்டாள்.

‘’ மூக்காலயாப் பேசுதே...மூக்குரைச்சீ..... இந்தா வெட்டு...’’ தலையைத் தலையை ஆட்ட அவள் ‘’ ஆச்சி.....’’ எனக் கத்தினாள். அதற்குள் கிழவி கழியைத் தூக்கிக் கொண்டு கெட்டவார்த்தையுடன் வர அவன் இரும்புக் கதவை வெளியேக் கொண்டி வைத்துவிட்டு மறைந்தான். வேலப்பனின் முண்டக்கண் முகமும் தலையை நீட்டிச் சுழித்துப் பேசிய விதமும் விருப்பமில்லாமலேயே அந்தப் பெண்ணின் மனதிற்குள் பதிந்தது.

‘’ ராசா இல்லியாக்கா...? ‘’

‘’ இல்லியே ஏமக்கா...?’’

‘’ பள்ளிக்கூடம் விட்டே வரலியா...? ‘’

‘’ வந்துட்டு... பைய எறிஞ்சுட்டு வெளியப் போயிட்டானே....களத்துல எங்கியாவது நிப்பானா இருக்கும்...... ஏம்லே..? ‘’

‘’ சும்மப் பாக்கத்தான்.... ’’

வேலப்பன் களத்திற்கு வந்தபோது ராசா செக்கின் மண்டையில் உட்கார்ந்திருந்தான். வேலப்பனுக்கு சற்று சிரமமாக இருந்தது ஏறுவதற்கு. முக்கும்போது பின்புறத்தில் நிக்கர் கிழிந்துவிடுமோ எனப் பின்புறக் கவனத்தோடுத் திட்டிக் கொண்டே ஏறினான்.

‘’ மல ஏறது மாதிரி இருக்கு ன்னா...?’’

ராசாப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டான்.

‘’ மீன்குஞ்செல்லாம் என்னாச்சி....இருக்குதா இல்லியா...? ‘’

ராசா பேசாதே இருந்தான்.

‘’ யாம்லே...பேசமாட்டியா...? ‘’

ராசா அவனைப் பார்த்து முறைத்தான்.

‘’ எங்கூட சண்டையாடே...அப்புப்பய அப்பிடிச் செய்வாம்னு நாக் கண்டனா...? ‘’

‘’ எத்துனம்னா...உள்ளப் போயிருவே.....’’ என்றான் ராசா.

‘’ சரிடே  ஒரு சங்கடத்துல ஒன்னயக் கள்ளன்னு சொல்லிட்டேன்..நீயும் ஒரு சங்கடத்துல என்னய அதுமாதிரி ஏசிரு.... அழிச்சாம்புழிச்சாம்....சரியாப் போயிரும்....’’

‘’ போலேத் தொட்டிப் பயலே.... ‘’

‘’ செரி ஏசிட்டேல்லா...உடு.... ‘’  என்று ஒரு அடைமாங்காய்த் துண்டை நீட்டினான்.

அன்றைய இரவு சுகமானதாக இருக்கவில்லை. மிகவும் துக்ககரமானதாகவேக் கழித்தான் ராசா. அவனது துயரத்திற்கானக் காரணம் மறுநாள் காலை தெரிந்தது. கமலம் தன் பிள்ளைகளுடன் வந்து நின்று கூவினாள்.

‘’ வீட்ட மாத்தச் சொல்லி எளக்கிக் குடுத்தியே.... ஒம்மவன் அடியடின்னு அடிச்ச அடியில எம்புள்ள மூச்சு வாங்குதான் பாரு....இப்ப என்ன சொல்லுதே.....’’

‘’ ஒங்க மவனக் கூப்புடுங்கோ என்னன்னுக் கேப்போம்.....’’  பயில்வான் சபா கூறினான். கோசலைக்கு நிலைமையை சமாளிக்கப் பிடிக் கிடைக்கவில்லை. அந்நேரம் பார்த்து ராசாவின் அப்பா சண்முகம் ‘’ கைவண்டி ‘’யை  இழுத்துக் கொண்டு தெருவிற்குள் நுழைந்தார் காலைக் கஞ்சியினைக் குடிப்பதற்காக. கோசலைப் பதற்றமானாள். ராசாவின் உடம்புக் கொதித்தது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)