தொடர்கள்

கனா மீது வருபவன் - 32

அய்யப்பன் மகாராஜன்

மணிக்கூர் கணக்கு போல நீண்டு போய்க்கொண்டிருந்த ‘’ ஐந்து நிமிடம் ‘’ முடிவிற்கு வந்தது. தங்கப்பன் ஆசிரியர் ராசாவை அனுப்பினார். செய்யது அலியை கைக்காட்டி அழைத்தார். அலி ஓடி வந்தான். அவர் அவன் காதில் எதையோ ரகசியமாகக் கட்டளையிட்டது போல கூறினார். தலையைத் தலையை ஆட்டிய அலி கடைசியில் வகுப்பை விட்டு வெளியே ஓடினான்.

அவிழாப்புதிரின் நடுவே மாணவர்கள் திருடனை அறிவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் அந்த வகுப்பு முழுதும் பாடம் நடக்காமல் போகும்படி பிரார்த்தனையும் செய்து கொண்டார்கள். ராசா தன்னை சிலர் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கண்டு கூசுவது போல உணர்ந்தான். அவனால் மேற்கொண்டு யாரிடமும் பேச இயலவில்லை. அருகில் வேலப்பன் பக்கம் திரும்புவதைத் தவிர்க்க விரும்பி உடலை மறுபக்கமாக சற்றுத் திருப்பி வைத்துக் கொண்டான்.

தங்கப்பன் ஆசிரியர் எழுந்தார். சாக்பீஸை எடுத்துக் கரும்பலகையில் சில கோடுகளைக் குறுக்காகவும், வளைத்தும் போட்டார். அது ஒரு பொம்மையாக உருவெடுத்தது. அடுத்து அதற்கு கலர் சாக்பீஸ்களைக் கொண்டு வண்ணம் தீட்டினார். ஒரு பெண்ணின் சாயலில் அந்த பொம்மை காட்சியளித்தது. அதனுடைய இரண்டு கைகளும் மேலே தூக்கியபடி காணப்பட்டன. படத்திற்கு நேர்க் கீழே ‘’ மாடத்தி ‘’ என்ற பெயரை அவர் எழுதினார். வகுப்பில் சலசலப்பு  எட்டிப் பார்த்தது. இந்த நேரம் பள்ளிக்கூட கழிப்பறைக்குச் சென்றால் அசிங்கமாகக் கிடக்குமே என்ற கவலை வரும் அளவுக்கு வேலப்பனுக்கு வயிற்றைக் கலக்கியது.

ஆசிரியர் மேற்கொண்டு மாடத்தியின் கால்களுக்கு தண்டைகளைப் பூட்டினார். வாயில் கொம்புபோல பற்களை வளரச் செய்தார். கழுத்திற்கு ஆரத்தைச் சூட்டிக் கொண்டிருக்கையில் அலி மூச்சு வாங்க வந்து நின்றான். அவன் கையில் நிறைய தென்னை ஈர்க்குச்சிகள் இருந்தன. வாரியலிலிருந்து உருவிக்கொண்டு வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டார்கள். அத்துடன் ஆசிரியரின் தனி அறையில் இருந்து எடுத்து வந்திருந்த பசைக்குப்பியையும் சேர்த்து மேஜை மீது வைத்தான். அவனைச் செல்லும்படி அவர் கைக்காட்டினார். அவன் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டான். மாணவர்களுக்கு திகைப்பாக இருந்தது. ஆசிரியர் மாடத்தியின் முன்னே “ஹீரோ” பேனாவை வரைந்து வைத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். சற்றுத் தடித்த ஒரு ஈர்க்குச்சியை எடுத்து தும்பைப் பிய்த்து எறிந்துவிட்டு அதனை இரண்டுக் குச்சிகளாக உடைத்து வைத்துக் கொண்டார். அடுத்து மாணவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக சிறிய குச்சிகளை உடைத்து அவற்றை மேஜையின் மீது போட்டார். பிறகு சுற்றிலும் பார்வையை சுழற்றியவர் அப்புவைக் கண்டதும் அழைத்து அவன் கையை விரிக்கச் செய்து சிறிய குச்சியில் ஒன்றினை வைத்துப் பார்த்தார். குச்சி உள்ளங்கைக்குள் அடங்கும் அளவில் இருந்தது. அவனையும் அனுப்பினார்.

பெரிய குச்சிகளைகே கையில் எடுத்துக் கொண்டார். இரண்டையும் குப்பியிருந்த பசையினில் முக்கி அதன் தேகம் முழுவதும் படும் விதமாகத் தடவிக்கொண்டு அதன் மீது காற்றுப்படும்படி சில முறை வாயால் ஊதினார். அவற்றினை மாடத்தியின் தூக்கியிருந்த இரண்டு கைகளிலும் பொருத்தி வைக்க அவை ஒட்டிக்கொண்டன. மீண்டும் அக்குச்சிகளுக்கு அவர் வண்ணம் தீட்ட அவை மாடத்தியின் ஆயுதங்களைப் போல உருமாறிக் கொண்டன.

“ மேலாங்கோட்டு, கீழாங்கோட்டு எசக்கியத் தெரியுமாலே ஒங்களுக்கு? ”

அவர் திரும்பி அவர்களைப் பார்த்துக் கேட்டார். சில பேர் தலையாட்டினார்கள். சிலபேர் மவுனமாக இருக்க விரும்பினார்கள். வேலப்பனுக்குப் பிடரியைப் பிடித்து யாரோ உலுக்குவது போலவும் இருந்தது. கண்சொருகி  மயக்கம் வருவது போலவும் இருந்தது.

“ அவளுவளுக்க அக்கா மாதிரியாக்கும் இந்த மாடத்தி. இப்போ இவள வச்சித் தான் கள்ளனைக் கண்டுபிடிக்கப் போறேன் நா ” என்றார்.

அந்த வார்த்தையின் முடிவிலிருந்து திகில் பரவியது. மாணவர்கள் அதற்குள் ஆட்பட்டுக் கிடந்தார்கள். நேரம் செல்லச்செல்ல எதிர்பார்ப்பு கலக்கத்தை உண்டு பண்ணியது. சினேகத்தின் தூதுவராக உணரப்பட்ட ஆசிரியர் ஒரு மந்திரவாதியாக தோற்றம் மாறியிருந்தது அவர்களை வெகுவாகவே பாதித்தது.

சிறிய குச்சிகள் அனைத்தையும் தனது கைகளுக்குள் பொதிந்து கொள்வதைப் போல வைத்துக் கொண்டு மாடத்தியிடம் நீட்டி,

“ மாடத்தீ....நீதான் கள்ளனக் கண்டுபுடிச்சித் தரனும் கேட்டியா...?

ஞ ஞா ஞி ஞீ ஞு ....    ஞூ ஞெ ஞே ஞை ஞொ....     ஞௌ ஞ் ஞ் ஞ் ஞ்............... ” என்று மந்திரம் கூறுவது போலக் கூறினார்.

அடுத்தக்கணமே மாடத்தியின் ஒரு கையிலிருந்த ஈர்க்குச்சித் தானாகவே இளகி அவரது கையினில் வந்து விழுந்தது. அவர் அதனைப் பிடித்துக் கொண்டு மாணவர்களின் முன்பாக வந்து நின்று கொண்டார். அறைக்குள் இறுக்கம் நின்று கொண்டிருந்தது. சிறிய குச்சிகளைத் தனது இடது கைக்குள் அடக்கிக் கொண்டு வலது கையில் பிடித்திருந்த பெரிய குச்சியால் இடது கை மீது வட்டமிடுவது போல மூன்று முறைச் சுற்றினார்.

ராசாவின் கண்களில் நீர்பாத்திக் கட்டிக்கொண்டு நின்றது. அப்பு இடது கையின் விரல்களை முறுக்கிக்கொண்டு சத்தம் எழாதவாறு டெஸ்க்கின் மீது தாளம் தட்டிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் பூத்திருந்த புன்னகைக்கு நீளம் சற்றுக் கூடியிருந்தது. வேலப்பனுக்கோ உடம்பு உதறியதைத் தடுக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டிருந்தான். அடிக்கடி பார்வையை உயர்த்தி ஆசிரியரை மட்டும் பார்த்துக் கொண்டான்.

“ கிளாசு எப்ப முடியும்? ” தனக்குள் நூறாவது முறையாக இதையே அவனால் கேட்டுக்கொண்டிருக்க முடிந்தது.

ஆசிரியர் குச்சிகளை விரித்து மேஜையின் மீது போட்டார்.

“ ம்...வரிசையா வந்து ஆளுக்கொண்ணு எடுத்துக்கிடுங்கலே.. ” என்றார்.

வரிசை ஒவ்வொரு டெஸ்க்கிலும் இருந்து புறப்பட்டு வந்து ஆளுக்கொரு குச்சியினை எடுத்துக் கொண்டு சென்றது. ஆசிரியர் அந்த இடைவெளியில் மாடத்தியிடம் சென்று அவள் விழிகளை உருட்டுவதில் கவனத்தைக் கொண்டிருந்தார்.

“ என்னலே எடுத்தாச்சா...? ” ஆடை நுனியை அலங்காரம் செய்தபடி அவர் கேட்கவும் , மாணவர்கள் ஒன்றாகத் தலையாட்டினார்கள். அப்பு சத்தமாகவே பதில் சொன்னான்.

“ செரி இப்போ ஒங்க கையிலே ஆளுக்கு ஒரு குச்சி இருக்கும். இருக்கா? ”

“ ஆமா சார் ”

“ அத அடுத்தவனுக்குக் காட்டாம நல்லா உத்துப் பாருங்க ” அனைவரும் உற்றுப் பார்க்க,

“ பாத்தது போதும் கைய மூடு. இனிமே தொறக்கவே கூடாது. ...ன்னா? ”

“ செரி சார் ”

அனைவரும் தங்கள் உள்ளங்கைக்குள் பதுக்கிக் கொண்டார்கள்.

“ நல்லாக் கேட்டுக்கிடுங்க. உங்க கையில இருக்க எல்லாக் குச்சியுமே ஒரே அளவு தான் ”

அனைத்து மண்டைகளும் ஆமோதித்தன.

“ கண்ண மூடுங்க ”

அனைத்து கண்களும் மூடிக்கொண்டன.

“ இப்ப நா இன்னொரு மந்திரத்த போடப்போறேன் அதப் போட்டதுமே  உங்கக் கைகள்ல இருக்க குச்சிக எல்லாமே அப்படியேத் தான் இருக்கும். ஆனா எவன் பேனாவக் களவான்டானோ அவங் கையில உள்ள குச்சியில மட்டும் மந்திரம் வேலைச் செய்து குச்சி வளர்ந்துரும் ”

அனைவருமே ஒருகணம் திடுக்கிட்டு போனார்கள். தவறாக வேலை செய்துவிடுமோ என்று.

“ அவசரப்பட்டு யாரும் கையைத்  தொறக்கவோ அடுத்தவன் குச்சியைப் பார்க்க நெனைக்கவோக் கூடாது. அப்படிப் பார்க்க முயற்சி செஞ்சா அவன் குச்சியும் வளந்துரும் ”

அனைத்துக் கண்களுக்குள்ளும் அமைதி இறங்கி அப்படியே வகுப்பறை முழுமைக்குமாக வியாபித்து நிரம்பியது. இதன் காரணமாக அடுத்த வகுப்பில் எழும்பிய சத்தங்கள் தெளிவாகக் கேட்டு அமைதியை துன்புறச் செய்தன.

உண்மையாக யாருக்குமே அந்த அமைதிப் பிடிக்கவில்லை. எனினும் கேட்டறியாத ஒரு மர்மக் கதை தங்கள் முன்னே நிகழும் ஆவலிலும் அக்கதையின் உள்ளில் கதைமாந்தர்களாக தாங்கள் இருப்பதினாலும் அவ்வமைதியோடு ஒத்துப்போனார்கள் அவர்கள்.

ஆசிரியர்கள் பாடம் நடத்திய சமயங்களில் வாய்பார்த்து தவறவிட்ட நடத்தும் தொனியினை தற்போது தூரத்திலிருந்து கேட்கும் அவர்களின் குரல்களை வைத்து கிரகித்துக் கொள்ள முடிந்தது. பள்ளிக்கூடத்தின் பின்பகுதி சாலையில் யாரோ தங்கள் ‘ராஜ்தூத்’ பைக்கை ‘ஸ்டார்ட்’ செய்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் போல. ராஜ்தூத்தின் சத்தம் வெகு நேரத்திற்கு ஒரே இடத்திலிருந்து நகராமல் கேட்டுக்கொண்டிருந்தது.

பின்வரிசையில் சிலருக்கு தூக்கம் வந்தது. கொட்டாவிகள் வரிசையாகச் சென்றன. ஒருவனுக்கு சலைவா வந்து வடிந்தது. துடைக்க கைத்தூக்க பயந்து வாய் ஓரமாக மெதுவாக அதனை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தான். சில தலைகள் தொங்கி அடுத்த தோள்களின் மீது சாய்ந்ததன. வேலப்பன் பயத்தை அடக்க முடியாமல் கால்களை வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான். அது வேறுவிதமான துன்புறுத்தலாக ராசாவுக்கு அமைந்தது.

“ கண்ணத் தொறங்களே... ”

கல்லெடுத்து எறிந்தது போல ஆசிரியரின் குரல் திடுக்கிடச் செய்ய அனைவரும் உணர்வுக்கு வந்து கண்களைத் திறந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ ஒவ்வொருத்தனா குச்சிய எங்கிட்ட கொண்டு வந்து தந்துட்டுப் போவணும்...”

குச்சிகளைக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். ஒரு ஈர்க்குச்சிக்கு இத்தனை பயந்தது இது தான் முதன்முறையாக இருக்க முடியும்,. ஆசிரியர் குச்சிகளை அடுக்கிக் கொண்டே அவர்களின் பெயர்களை விசாரித்துக் கொண்டார். அப்புவின் குச்சியை வாங்கியவர் ஏதோ யோசனையுடன் அவனை ஒருதடவை மேலிருந்துக் கீழாகப் பார்த்துக் கொண்டார்.

ராசாவின் முறை வந்தபோது அவனது குச்சியினை பலதடவை சோதித்துப் பார்த்துக் கொண்டு அனுப்பினார்.

“ குச்சிய நோண்டினியாலே...? ”

வேலப்பனிடம் வெடுக்கென்று கேட்டதும் அவன் பயந்து விட்டான். சட்டென்று குனிந்து சட்டைக்குள் துப்பி “யப்பா” என்றான்.

“ சொல்லுலே ”

“ இல்ல சார் ”

“ அப்ப ஏன் பேழப் போற மாதிரி இந்த முழி முழிக்கே? ”

“ அப்படில்லாம் இல்ல சார் ”

என்று முட்டைக்கண்ணை சாதரணமாக வைத்துக் கொள்வது போல இமைகளை அடித்துப் பார்த்தான்.

“ பலிக்கல..போ ”

குச்சிகளின் வரிசையில் ஒரு குச்சி இடித்தது. சட்டென அதனை உற்று நோக்கினார்.

மற்றக் குச்சிகளின் அளவில் இருந்து அது சற்றுக் குறைந்திருந்தது. அவர் எதிர்ப்பார்த்திருந்ததும் அதுதான். அவர் அவனைக் கூர்ந்து பார்த்தார்.

“ பேரு என்னலே? ”

“ இளங்கோ ” என்றான் அவன்.

பிறகு குச்சிகளைப் போட்டுவிட்டு புத்தகத்தினை விரித்து பாடத்தினை நடத்த ஆரம்பித்தார். மாணவர்களுக்கு பாடம் ஓடவில்லை. பெரும் குழப்பமாக இருந்தது அவர்களுக்கு. பாடத்தினைப் பின்தொடர்வது மிகவும் கடினமாக இருந்தது. பேனாவைத் திடருடியது பார் என்பதை அறிந்து கொள்வதே அப்போது அவர்களுக்கு முக்கியமாகப்பட்டது. வகுப்பும் முடிந்தது. மாணவர்கள் எழுந்தார்கள். ஆசிரியர் கிளம்பினார். செய்யது அலி தான் தயங்கியபடி கேட்டான்.

“ சார்..? ”

“ என்னலே...? ”

“பென்னக் களவாண்டவனைக் கண்டுபிடிச்சிடீங்களா சார்? ”

அவர் அனைவரையுமே ஒருதடவை பார்த்தார்.

“ கண்டுபிடிச்சாச்சு...

 நீ என்கூட வா... ”

என்று அலியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். அவர் அறிவிக்காத மர்மம் தொடர்ந்தது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)