தொடர்கள்

கனா மீது வருபவன் - 27

அய்யப்பன் மகாராஜன்

அன்றைய இரவு துலங்கியபோதும் உதுமான் வீடு வரவில்லை. அவரது வருகைக்காக ஆயிஷா காத்திருக்கத் துவங்கினாள். இரவின் நெருக்கத்தோடு தனது முன்னறிவிப்பைத் தெரிவித்துக் கொண்டே இருந்த மழை, பின்னிரவிற்குப் பிறகு கட்டவிழ்த்துவிட்டதைப் போலப் பாய்ந்து கொண்டு பெய்தது. குமிழ்களின் வழியாக அதன் நீர்த்துளைப்புகள் தரையை ஊடுருவித் தெறித்தபடியிருந்தன. கண நேரத்திற்குள் இருபுறங்களிலும் மடைகள் நிறைந்துவிட தெருவிற்குள் தேங்கிய நீர் சாலை தேடிப்பாய்ந்தது.

மழையின் இந்த வரவும், உதுமான் இல்லாது போன இரவுமாக ஆயிஷாவிற்கு பெருங்கஷ்டமாக அமைந்தது. அது எதிர்பாராத தனிமையை அவளுக்கு உணர்த்துவதாக இருந்தது. சண்டைப் போட்டக் காலங்களில் கூட உதுமான் வீட்டிலிருக்கிறார் என்கிற பாதுகாப்பு உணர்வே அவளை அடுத்த வீடுகளில் தங்கும்படிக்கு தைரியம் தந்தது. இரவுக்குள் உதுமான் எப்படியும் வந்துவிடுவார் என்ற நினைப்பை தக்க வைத்தபடி அவள் தன் தைரியத்தை மேம்படுத்திக் கொண்டாள். அதன்பிறகு அவளது பதற்றம் மழையிடம் தோற்று சற்றுத் தணியவும் செய்தது. எனினும் இரவு முழுக்க விழித்திருந்தும் கூட உதுமான் வந்து சேரவில்லை.

மறுநாள் பொழுதும் மழையோடு சேர்ந்து விடிந்ததில் சிறுவர்கள் தங்கள் பள்ளிக்கூடங்களை துறந்தார்கள். அனைவரும் பாப்பத்தையின் வீட்டுக் களத்திற்குள் புகுந்து குட்டை போல தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்தார்கள். மற்றவர்களைத் தள்ளிவிட்டு ரசித்தார்கள். விழுந்தவர்கள் கொண்டாடி குதூகலித்தார்கள்.

“இந்தப் பயக்களப் பாரு.., ஏலே நனையாதீங்கலே.....தடுமப்புடிச்சி கொண்டாடிரும்..”

பாப்பத்தை வந்து சத்தம் போட்டுப் பார்த்தாள். சத்தம் மழையோடு கரைந்ததேயொழிய யார் காதுக்கும் சரியாக எட்டவில்லை. கேட்ட சிலரும் கூட பெரிதாகக் கண்டு கொள்ளவுமில்லை. மும்முரமாக விளையாட்டுகள் தொடர, மழை விடாப்படியாக பெய்து கொண்டிருந்தது.

பாப்பத்தை சத்தம் போட்டுவிட்டு வந்தாலும் கூட அவளுக்கும் மழை பிடித்திருந்தது. பிள்ளைகள் விளையாடுவதும் கூடப் பிடித்திருந்தது. அவர்கள் அடங்காது குதிப்பதை ஜன்னல் வழியாக கண்டு ரசித்து அதிலிருந்து தனது பிராயக் கால நினைவுகளை மீண்டுக் கொள்ளத் துவங்கினாள். அதற்கு உணவிடுவதைப் போல மழைக் கிளறிவிட்ட மண்வாசனை வீட்டிற்குள் அடைத்துக் கொண்டு வந்தது. பலகாரங்களைச் செய்யும் அடுக்களைகளின் வாசனைகளை மழைக்காற்றுக் கடத்திச் சென்றது. காற்று பலத்ததும் மழை சற்று அடங்குவது போல் இருந்தது. அதேநேரம் தண்ணீரில் விளையாடும் கூட்டம் போகப் போக அதிகரித்தது. பெண்பிள்ளைகளும் ஓடிவந்து ஒருபுறமாக நின்று தண்ணீரை கலக்கி எடுத்தார்கள். வழுக்கு மரம் ஏறுவது போல மரம் மீது ஏறி வழுக்கித் தண்ணீரில் விழுந்தார்கள். தாஜ் தன் பங்கிற்கு இக்கரைக்கும் அக்கரைக்கும் நின்று குதித்தாள். மரக்கிளையின் நடுப்பகுதியில் ஒரு சைக்கிள் டயரைத் தொங்க விடச் செய்து அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே ஆடியபடி தண்ணீரில் விழுந்தாள். மழை விட்டும் கூட விளையாட்டு நிற்கவில்லை. தாய்மார்கள் தேடிவரும்போது அவர்களது பிள்ளைகள் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டனர். விளையாட்டை விட்டுச் செல்லும் மனம் யாருக்கும் இருக்கவில்லை. ஒரு விளையாட்டு சலிப்புத் தட்டத் தொடங்கினால் உடனே வேறு விளையாட்டை துவக்கினார்கள்.

கள்ளன் போலிஸ் விளையாடும்போது தாஜ் ஒளிந்து கொள்ள இடம் கிடைக்காமல் பாப்பத்தையின் வீட்டின் பின்புறமாக செக்கடிமாடன் இருக்கும் திசைக்கு ஓடினாள். நனைந்த சருகளின் மீது ஓடுவது அவளுக்குப் புதிய அனுபவமாகவும் சிலிர்ப்பூட்டுவதாகவும் இருந்தது. அதன் வாசனையும் அடர்ந்துக் கிடந்த இடத்தின் பாழடைந்த தன்மையும் அவளுக்கு ஒளிந்து கொள்ளத் தோதுவான இடமாகத் தோன்றியது. ஒரு இடத்தில் ஒளிந்துகொள்வதும் வேறு இடத்தைக் கண்டதும் அங்கு போய் மறைந்து கொள்வதும் என அந்தப் பகுதி முழுக்கவும் அவள் தன்வசமாக்க எண்ணினாள். பிறகு கொஞ்சங்கொஞ்சமாக நகர்ந்து செக்கடிமாடன் இருக்கும் திசைக்கு அருகிலேயே அவள் வந்து சேர்ந்துவிட்டாள்.

நிறங்களைக் கொண்டு இயற்கை வசியப்படுத்தும் அழகேத் தன்னை அவ்விடத்திற்கு ஈர்த்துக் கொண்டு வந்திருப்பதாக நம்பிய அவள், அவ்வழகு புதையலாக ஒளிந்து கொண்டிருக்கும் ஓர் இடத்தினைத் தான் கண்டடைந்து விட்டிருப்பதாகவும் எண்ணிக் கொண்டாள். தான் எழுத உந்தப்படும் நேரங்களில் தனக்குள் சாட்சியாக விரியும் தான் அறிந்திராத பல்வேறு தலங்களில் ஒன்றினை இந்த இடம் நினைவூட்டுவதை நினைத்து அதிசயிக்கவும் செய்தாள். உடலின் ஈரத்தைத் துவட்ட மறந்து உள்நோக்கிய வசீகர ஈர்ப்பின் பின்னால் அவள் நகருகையில் பூச்சிகளின் அழைப்புச் சத்தங்கள் அவளுக்கு மேலும் உற்சாகமாகக் கிடைத்தன.

வழியில் ஒரு பெரிய மஞ்ஞாடி மரம் நின்று கொண்டிருக்க அதன் அருகில் போன அவள் அதனைச் சுற்றிச்சுற்றி வந்தாள். அதன் வேர்ப்பகுதி முழுவதிலும் மஞ்ஞாடி முத்துக்கள் குறுகுறுவென சிதறிக் கிடந்தன. தன் காலால் மெதுவாக அவற்றை ஒதுக்கிப் பார்த்தாள். வாரி வைத்தால் எத்தனை வருடங்கள் விளையாடலாம் என ஆசை வந்தது. ஒரு சில முத்துகளை எடுத்துத் தனது உள்ளங்கையில் வைத்து மூடித் திறந்தாள். தணுத்தத் தன் வெள்ளைக் கையின் மத்தியில் வந்து நின்ற முத்துகளைப் பார்க்கையில் அவளது ஆசைப் பெருகியது. தனது சட்டையின் தும்பைப் பிடித்து முத்துகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி அதனுள் போட்டாள். கால்கள் ஒருதிசையில் என்று நில்லாமல் நகர்ந்து கொண்டே இருந்ததன. போதும் என்று தோன்றும் வரையில் பொறுக்குவதாக இருந்தவள் ஏதோ ஒரு கணத்தில் மனம் இடற சட்டென்று திரும்பிப் பார்த்தாள். உடலை வெட்டியபடி மின்னல் போன்றதொரு அதிர்ச்சி பாய்ந்தது. உடனே அவள் எழுந்துகொண்டாள். சற்று தூரமாக ஒரு மரத்தின் மறைவில் நின்று பீடியைப் புகைத்து ஊதியபடி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. அவள் கண்டுகொண்டதும் தனது தலையை ஸ்டைலாக ஆட்ட நினைத்து சிரித்தான். அவன் கண்களில் அவளைப் பருகிக் கொண்டிருந்த போதையின் தாகம் மிச்சமிருந்தது. அவன் பார்வையைப் பொறுத்துக் கொள்ள விரும்பாத அவள் உடனே போக யத்தனித்தாள். அவன் குறுக்கே வந்தான்.

“ஏம்ட்டி ஓடுதே..?”

“வழிய உடு..”

“உடாட்டா..?”

“வசக்கேடா ஆயிரும். உடு”

“செரி உடுதேன். அதுக்கு முந்தி நா ஒண்ணுக் கேப்பேன்”

“நீ ஒண்ணும் கேக்காண்டாம். மொதல்ல வழிய விடு”

அவன் ரஜினியை நினைத்துக் கொண்டு தலையை சிலுப்பிச் சிரித்துவிட்டு பார்வையை இறக்கினான். தொண்டையின் குழியில் ஒட்டியிருந்த பெரிய மச்சம் ஒன்று அவள் விழுங்கும்போது ஏறி இறங்கியதில் அவனை ஆட்சேபித்தது. அவன் அவளை நெருங்கினான்.

“லேய் என்னா? கிட்ட வாரே? அங்ஙனேயே நில்லு”

அவன் மேலும் நெருங்கி வந்தான்.

“இப்ப வழிய உடப்போறியா இல்லியா?”

“உடுதேம்ட்டி..அதுக்கு முன்ன..”

“என்னலே வேணும் ஒனக்கு?”

அவளும் எதிர்த்து வருவது போல நேராக வந்தாள். அவன் அவளது கழுத்திற்குக் கீழே பார்த்தான். அவள் சட்டென மஞ்ஞாடி முத்துக்களை சேர்த்துப் பிடித்து வைத்திருந்த சட்டையின் அடிப்பகுதியிலிருந்து கையை எடுத்தாள். லேசாகத் தெரிந்திருந்த இடுப்புப் பகுதி மறைந்தது. முத்துக்கள் கீழே சரிந்து விழுந்தன. சட்டையை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள். அவன் பார்வை அச்சமூட்டுவதைவிடவும் விரும்பத் தகாததாகவும் இருந்தது அவளுக்கு.

சற்று வேகமாகக் கையை நீட்டி அவளை எட்டிப் பிடிக்க முனைந்தான். விலகிய அவளது வெள்ளை முகத்தில் மஞ்ஞணையைப் போல ரத்தம் சிவப்புப் பூத்து வந்தது.

“இது என்னது?”

அவன் கேட்டப் பகுதியை உணர்ந்த தாஜ் கடுங்கோபத்துடன்,

‘’போலே’’ என்றாள். அவனும் விடாமல்,

‘’கேக்கம்லா சொல்லு’’ என்றான்.

“தெரிஞ்சுக்கிட்டுத் தான் உடுவியா?” என்று அவள் கேட்க அவன், 

“ஆமா” என்றான் அவன்.

“ஒங்கம்மக்கிட்டக் கேட்டா என்னா?’’

அவன் சிரித்தான்.

“பொண்டாட்டிக்கிட்ட கேக்கக் வேண்டியதப் போயி அம்மக்கிட்ட யாராவது கேப்பாவளா? ஒரு தடவ தொட்டுப் பாத்துகிடுதேன்”

அவன் அவளைத் தொட வந்தான்.

“கொன்னே போட்டுருவேன்” எச்சரித்தாள்.

“ஒரு தடவ.. ஒரே ஒரு தடவட்டீ” அவன் கெஞ்சுவதைப் போல நெருங்கிவந்தான். கபடி விளையாடும்போது பாடி வருபவனைப் பிடிக்கத் தயாராவது போல அவள் கால்களை சற்று அகட்டித் தலையை குனிந்து கொண்டு அவனைப் கவனித்தபடியே பின்னே நகர்ந்தாள். அவன் ஏதேதோ பேசிக்கொண்டே அவளை மிக நெருங்கி அவளைத் தொடவும், அதே நேரத்தில் அசுர வேகத்தில் தன் தலையைக் கொண்டு நேராக அவன் நடுநெஞ்சினில்  மோதினாள். சற்றும் எதிர்பாராத தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரவி கால்கள் இடறிவிட்டதில் பின்னோக்கிக் கீழே விழுந்தான். அவள் தாவி முன்னே வந்து நின்றாள்.

“ஒங்கம்மை இல்லன்னா என்னலே அந்தா அங்கப்பாரு....” அவன் அவள் கைகாட்டிய திசையைப் பார்க்க முடியாமல் தவித்தான்.

“செக்கடி மாடனுக்குக் கீழே பொம்பள சாமி ஒருத்தி இருக்காப் பாரு..”

அவன் பார்வையில் நின்றிருந்தன கல்லாய் முனைக் கூம்பியிருந்த பேச்சியின் பருத்த முலைகள்.

“தைரியம் இருக்காலே? போயிக் கேளுலே பாப்போம்! சவுட்டியே கொன்னுருவேன்”

என்று காலைத் தூக்கினாள். அதைத் தட்டிவிட்டு தாக்கும் வலிமையுடன் எழுந்த ரவியின் கால்களை மேலும் தள்ளிவிட்டாள் தாஜ். எழுந்த இடுப்பு ஊன்றியக் கை வழுக்கி விட்டதில் மீண்டும் கீழே விழ, நேராக கிடந்தக் கல்லில் பின்னந்தலை அடித்தது. நெற்றியை யாரோ பிளப்பது போல வலி ஊடறுக்க அவன் கண்கள் மூடிக் கொண்டன.  அப்படியே திறந்தவாயுடன் அசைவற்றும் போனான் அவன். அவளுக்குள் பயம் வேகமாக எழுந்தது. திரும்பிப் பார்த்தாள். எதிர்புறத்தை கூராகப் பார்ததபடி தோரணையுடன் நின்று கொண்டிருந்தார் செக்கடி மாடன். மழை வந்ததில் முகத்தில் பூசப்பட்டிருந்த மஞ்ஞணையின் ஈரம் எண்ணெய் போல மினுமினுத்தது.

விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் போடும் சத்தங்கள் தூரத்திலிருந்து சன்னமாகக் கேட்டதை அப்போதுதான் அவளால் உணர முடிந்தது. தூண்டிவிடப்பட்ட விளக்கிலிருந்து விரியும் வெளிச்சம் போல பகலும் அப்போது பார்த்துதான் விரியத் துவங்கியது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)