தொடர்கள்

கண்டேன் கடவுளை

நெஞ்சம் மறப்பதில்லை- 6

சுமதிஸ்ரீ

சுப்பிரமணிய ஆசாரியைத் தெரியுமா உங்களுக்கு ?

பெயரைச் சொன்னதும் பட்டென்று தெரிய அவர் பவர் ஸ்டாரும் இல்லை .சட்டென்று தெரிய சாம் ஆண்டர்சனும் இல்லை.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தை மறக்க முடியுமா ?

கன்னித் தமிழும் , கன்றின் குரலும் சொல்லும் வார்த்தை அம்மா...அம்மா.... கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா....அம்மா....அந்த அம்மா ,அம்மா என்ற வார்த்தையை அலறிக் கொண்டே கருகிச் செத்தார்களே ....இந்தியாவின் வருங்காலத் தூண்கள் . எல்லோரையும் செத்த பிறகு எரிப்பார்கள்.கும்பகோணக் குழந்தைகளோடு.... எரிந்த பிறகு தான் செத்தார்கள் .

ஏ.....நெருப்பு......
எல்லா இடங்களிலும் 
நீ கொழுந்து விட்டுத்தானே
எரிவாய் ....
கும்பகோணத்தில் மட்டும் 
ஏன் கொழுந்துகளை 
விடாமல் எரித்தாய்?  என்ற கவிதையை நினைக்கும் போதெல்லாம் ,தண்ணீரில் நனைந்த துணியாய் மனம் கனத்துப் போகிறது .

"காய்ச்சலா இருக்கு" ஸ்கூலுக்குப் போகலன்னு சொன்னான்.பொய்யா சொல்றன்னு அடிச்சு ஸ்கூலுக்கு அனுப்பினேன் .நானே என் குழந்தையைக் கொன்னுட்டேனே என தலையிலடித்துக் கொண்டு அழும் தகப்பன் .....

வெயில் சூட்டைக் கூட உன்னால தாங்க முடியாதுன்னு எங்க போனாலும் உன்னைத் தூக்கிட்டுத் தானே போவேன் .உன் உடம்பு நெருப்புல எரிஞ்சப்ப, எப்படியெல்லாம் துடிச்சியோ என்று அழுது கொண்டே ,மகளின். புகைப்படத்தின் முன் எரியும் விளக்கிலுள்ள நெருப்பைப் பார்த்து ,எம் புள்ள கிட்ட நெருப்ப வைக்காதீங்க.....எம் புள்ள கிட்ட நெருப்ப வைக்காதீங்க ....என்று நெஞ்சிலடித்துக் கொண்டு கதறும் தாய்.....

உன்கிட்ட சண்டை போட்டதுக்கு ஸாரிண்ணே... இனிமேல் உன்கிட்ட சண்டையே போட மாட்டேன்.என்கிட்ட பேசுண்ணே........ என்று செத்துப் போன அண்ணனிடம் பழம் விட்டு அழும் நான்கு வயது தம்பி.....

மறக்க முடியுமா நம்மால் ?

இந்தக் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றியவர் தான் சுப்பிரமணிய ஆசாரி . அவர் உடம்பில் நெருப்புப் பற்றியதும் ,அவர் மீது தண்ணீர் ஊற்றியவர்களிடம் "இந்த தண்ணிய குழந்தைங்க மேல ஊத்தி ,அவங்களைக் காப்பாத்துங்க..." என்று சொல்லி விட்டு இறந்து போனவர் .

எவ்வளவு பெரிய தியாகம் இது? தன் உடல் பற்றி எரிகிற நேரத்திலும் ,"என் மேல ஊத்துற தண்ணிய குழந்தைங்க மேல ஊத்தி அவங்களைக் காப்பாத்துங்க" என்று சொல்கிற மனம் ஆலயங்களை விடவும் புனிதமானது .சாகப்போகும் நிலையிலும் "இறைவா. .இன்னும் ஒரு ஐந்து நிமிடம் என்னை உயிரோடு வைத்திருந்தால் ,ஒரு இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றி இருப்பேனே" என்று சொல்கிற மனம் கோபுரங்களை விட உயர்ந்தது .

இன்றும் ,எங்கோ ,யாரோ ஒருவரால் சுப்பிரமணிய ஆசாரி நினைக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார் .சக மனிதர்கள் மீதான நேசிப்பை முழுவதுமாய் தந்து விடுபவர்களை ,காலத்தால் மறக்கடிக்க முடியாது .நீரைத் தனக்குள் பதுக்கி வைக்காத ,நீர்க்குமிழியை நீர்த்துப்போகச் செய்ய முடியுமா என்ன ?

எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த இஸ்லாமிய சகோதரி ஒருவர் சொன்ன கதை இது.

அகமதுவும் முகமதுவும் அண்ணன் தம்பிகள்.இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பாட்டியின் பாம்பட காதென, முகத்தைக் தொங்கப் போட்டுக்கொண்டு இருந்தனர் .அவர்களின் அம்மா இருவரையும் அழைத்து ,உங்களில் யார் சண்டையை மறந்து ,சமாதானமாகப் பேசுகிறீர்களோ.....அவர்கள் அல்லாவுக்குப் பிடித்த பிள்ளையாக இருப்பீர்கள் .அவர்களுக்கு கடவுளின் அருள் நிறைய கிடைக்கும் என்றார் .ஆனால் அகமதுவும் முகமதுவும் அன்று இரவு வரை பேசிக் கொள்ளவில்லை .மீண்டும் மகன்களை அழைத்த தாய்,"அல்லாவுக்குப் பிடித்த பிள்ளைகளாவீர்கள் என்று நான் சொன்னதற்குப் பிறகும் ,நீங்கள் இப்படிப் பேசாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது "என்றார் .அகமது சொன்னான்-"அம்மா.... தம்பி முதலில் பேசினால் ,அவன் கடவுளுக்குப் பிடித்த பிள்ளையாவான் .என்னை விட கடவுளின் அருள் தம்பிக்கு அதிகம் கிடைக்கட்டும் என்பதால் தான் நான் பேசாமல் இருந்தேனே தவிர, கோபத்தில் இல்லை"....

முகமது சொன்னான் -ஆமாம் அம்மா...நானும் அதனால் தான் பேசாமல் இருந்தேன் .தாய் இருவரையும் கட்டியணைத்துச் சொன்னாள்..."நீங்கள் இருவருமே அல்லாவுக்குப் பிடித்த பிள்ளைகளாகி விட்டீர்கள் ".இப்படி விட்டுக்கொடுக்க பாசத்தால் மட்டுமே முடியும் .மனம் முழுக்க பாசம் என்னும் ஈரம் இருப்பவர்கள் ,தங்கள் வலியைக் கூட வெளிக்காட்டுவதில்லை.பச்சையம் இழந்த இலை தானே கசக்கப்படும் போது கத்துகிறது.

நான் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் அவரைப் பார்த்தேன் .யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்ட சகோதரர் அவர்.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு ,நாங்கள் பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் தினமும் வருவார் .அவரின் பருத்த கால்களைப் பார்க்கும்போது ,கிளைகளற்ற மரம் ஒன்று நடந்து வருவதைப் போல இருக்கும் .எல்லோரும் அவரை பரிதாபமாகப் பார்ப்போம் .நாம் எல்லோருமே ஏதோ ஒரு குறையோடு தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.எல்லோருக்கும் எல்லாமும் வாய்த்து விடுகிறதா என்ன? பூக்கும் பாக்கியம் புல்லுக்கு இல்லையே.....

ஒருநாள் ,என் அருகில் நின்றிருந்த மூன்றாமாண்டு சீனியர் அக்கா,நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போதிருந்து ,இவரைப் பார்க்குறேன் .தினமும் கோவிலுக்கு வர்றார் என்றார் .

நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ,வழமையாக கோவிலுக்கு வந்தவரை ,"அண்ணா "என அழைத்தேன் .அந்த வார்த்தை அவரை நெகிழ்த்தியிருக்கிறது என்பதை அவரின் முக குறிப்பு உணர்த்தியது.

அண்ணா.....

என்னம்மா ......

ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே....

கோவிச்சுக்குற மாதிரி எதுவும் கேட்க மாட்டியே .....மென்மையாக சிரித்தார் .

எனக்குத் தெரிஞ்சு ஆறு வருஷமா இந்தக் கோவிலுக்கு வர்றீங்க.இன்னும் உங்க கால் சரியாகல .உங்களுக்கு வருத்தமா இல்லையா ?.....

நான் ஆறு வருஷமா இந்தக் கோவிலுக்கு வர்றது உண்மை தான் .ஆனா,அது என் யானைக்கால் வியாதி குணமாகன்னு உனக்கு யார் சொன்னா....

யானைக்கால் வியாதியை விட இவருக்கு வேறு என்ன பெரிய துயரம் இருக்கப் போகிறது ? யானைக்கால் வியாதி குணமாக வேண்டும் என்பதை விட வேறு என்ன பிரார்த்தனை இருக்க முடியும் இவரிடம் ?

குழப்பத்தோடு அவரைப் பார்த்தேன் .

நான் தினமும் இந்த ஆனைமுகத்தான் கோவிலுக்கு வர்றது என் யானைக்கால் வியாதி குணமாகனும்னு வேண்டிக்க இல்ல.எனக்கு கொடுத்த வியாதியை வேற யாருக்கும் கொடுத்துடாதன்னு வேண்டிக்கத்தான்.....

ஏன் என்னை இப்படி சோதிக்குற என கடவுளிடம் சண்டை போட நியாயமான காரணம் இருந்தும்,அது குறித்த புகாரோ ,புலம்பலோ இன்றி ,எனக்குக் கொடுத்த கஷ்டத்தை வேற யாருக்கும் கொடுத்துடாத என்று நாள் தவறாமல் பிரார்த்திக்கும் அவர், வேழத்தை விட பிரம்மாண்டமாய் விசுவரூபம் எடுத்து நின்றார் .

சுப்பிரமணிய ஆசாரியைப் போல...... அகமது முகமதுவைப் போல .....யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்ட சகோதரனைப் போல .... நீங்களும் உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் ,அடுத்தவர் நலன் குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? ஒருமுறையேனும் அடுத்தவர் துயருக்காக வருந்தியிருக்கிறீர்களா....ஒரு முறையேனும் உங்கள் பாதையில் இரை சுமந்து சென்ற எறும்பின் மீது பாதம் பதிக்காமல், பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா.....ஒரு முறையேனும் உங்கள் வாகனத்தின் முன் ,சாலையைக் கடக்கும் ஆட்டு மந்தையை ஹார்ட் துப்பாக்கியால் சிதறி ஓடச் செய்யாமல் ,அவை சாலையைக் கடக்கும் வரை காத்திருந்திருக்குறீர்களா......ஒருமுறையேனும் எலிகளுக்கு விஷம் வைக்காமல் இருந்திருக்கிறீர்களா......ஒருமுறையேனும் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பணத்தில் ,அன்னதானம் செய்திருக்கிறீர்களா.....ஒருமுறையேனும் அடுத்தவர்களுக்காக அழுதிருக்கிறீர்களா....... ஒருமுறையேனும் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா..... ஆம் எனில்......கும்பிடுகிறேன் உங்களை. நீங்களும் கடவுள் தான்.இல்லை.....இல்லை.......நீங்கள் தான் கடவுள்.

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )

கடந்த மாதத்தில் ஒரு நாள்.. - நெஞ்சம் மறப்பதில்லை-1 

கடக்க முடியாத ஞாயிற்றுக்கிழமைகள்! - நெஞ்சம் மறப்பதில்லை-2 

அன்பிற் சிறந்த தவமில்லை! - நெஞ்சம் மறப்பதில்லை-3

ஹேப்பி பர்த்டே டூ யூ ! - நெஞ்சம் மறப்பதில்லை-4

அயல்நாட்டு அகதிகள்! - நெஞ்சம் மறப்பதில்லை- 5