இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது.(இப்போது அந்த படத்தில் நான் பாடல் எழுதவில்லை ).கதாநாயகன்,கதாநாயகி இருவருக்குமே கண் தெரியாது .அவர்கள் இருவரும் டூயட் பாடுவது தான் பாடலுக்கான சூழல்."இரு கழித்தல் குறிகள் சேர்ந்து ஒரு கூட்டல் குறியாய் மாறிடுதே " என பல்லவியில் ஒரு வரி எழுதியிருந்தேன்.
அந்த வரிகளாய் வாழ்பவர்கள் தான் முருகனும் கலாவும்.ஒருமுறை அண்ணனூரிலிருந்து சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் பயணிக்கும் போது தான் அவர்களை பார்த்தேன்.இருவருமே கண் பார்வையற்றவர்கள்.அவர்களிடம் பேச வேண்டும் என முன் மொழிந்த என்னை கூட்டமற்ற ரயில் பெட்டி வழி மொழிந்தது.
சார்....
அவரைத் தான் அழைக்கிறேன் என அவருக்கு தெரியவில்லை .அவர் கைகளைத் தொட்டு "சார்" என்றேன். ம்....சொல்.....லு ......ங் ......என்றார் பதறியபடி.
இப்ப நீங்க பாடின பாட்டு நல்லா இருந்துச்சு....
நன்றிங்... கூச்சத்தோடு சொன்னார்.
அவர் பெயர் முருகன்.பக்கத்தில் இருக்கும் அவரின் மனைவி பெயர்கலா.இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.ரயிலில் செல்போன் கவர்,ரேஷன் கார்டு கவர் விற்பது தொழில். பாட்டுப் பாடி சன்மானம் பெறுவது உப தொழில் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின், விலக்கப் பட்ட கனியை உண்ட ஏவாளின் நீட்சியாக, நாகரீகமற்ற அந்த கேள்வியைக் கேட்டேன் குழந்தைகள் ?".....இல்லீங் ......இனிமேல்தானுங் ..... என்றவர் அதன் பிறகு என்னிடம் எதுவும் பேசவில்லை.எனக்கும் எதுவும் பேச தோன்றவில்லை.உரையாடலின் போது முருகன் ஒருமுறை கூட கலாவை "இவ" என்று விளிக்கவே இல்லை.இவங்க என்றே சொன்னதை ரசித்தேன்.
பேசின் பிரிட்ஜ்-ல் இருவரும் இறங்கினார்கள்.கைத்தடியை தட்டி தட்டி வழி கேட்கும் முருகனின் கைகளைப் பற்றி கலா பின் தொடர்ந்த காட்சி கல்லோவியம் போல் நெஞ்சில் பதிந்துள்ளது.திருமணத்தின்போது மணமக்கள் அக்னியை வலம் வரும் போது, இருவரும் தங்கள் சுண்டு விரலை இணைத்துக் கொண்டு வலம் வருவதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?ஐந்து விரல்களில் எந்த சிறப்பும் இல்லாத குறையுடைய விரல் சுண்டு விரல் தான்.கட்டைவிரல் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது.ஆட்காட்டி விரல் சுட்டிக்காட்ட பயன்படுகிறது.பெரிய விரல் என்னும் பெருமையோடு நடுவிரல் நிமிர்ந்து நிற்கிறது.மோதிரம் அணிந்தாலும். மோதிர விரல் தான்,மோதிரம் இல்லையென்றாலும் அது மோதிர விரல் தான்.எந்த பெருமையும் இல்லாமல்,உருவத்திலும் குள்ளமாகவும் மெலிந்தும் குறையோடு இருப்பது சுண்டு விரல் தான்.என் குறையை நீயும் உன் குறையை நானும் மனதார ஏற்றுக் கொண்டு ஒரு நிறைவான வாழ்வை வாழ்வோம் என்ற உறுதிமொழியாகத்தான் திருமணத்தில் மணமக்கள் சுண்டு விரலை இணைத்துக் கொண்டு வலம் வருகிறார்கள்.திருமணத்தில் எடுத்த உறுதிமொழியை முருகன் காப்பாற்றி வருவதை அவர் கையிலிருக்கும் கைத்தடி தரையில் தப்பட்டம அடித்து ஊருக்கு பறை சாற்றியது.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை சேவையாக செய்து வந்த எலிசபெத் சிஸ்டரிடம் நானும் என் தோழி பௌலினும் அந்த வயதில் எங்களுக்கு இருந்த கவலைகளை ஒப்பாரி வைக்க சென்றோம்.மேரி மாதாவுக்கும்,சூசையப்பருக்கும் நடுவே குழந்தை யேசு நின்றுகொண்டிருந்த புகைப்படத்தின் கீழே அமர்ந்திருந்த எலிசபெத் சிஸ்டரின் டேபிளிலும் அதே புகைப்படம் இருந்தது.மிக ஆறுதலாக எங்களிடம் பேசிய பின்,"துயருறுவோர் பேறு பெற்றோர்.ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.கவலை படுவோர் பேறுபெற்றோர்.ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர் என்பது போன்ற வசனங்களை பைபிளில் இருந்து வாசித்துக் காட்டினார்.
நாங்கள் விடை பெற்ற போது,நானும் வருகிறேன் என அவர் எழுந்து சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை கைகளால் தாங்கிக் கொண்டு நின்ற போது தான் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதே தெரிந்தது.ஹாஸ்டல்ல சாப்பாடே சரி இல்ல ....என் ஃபிரண்ட் நாலு நாளா என்ட்ட பேசவே இல்ல ....ஏன் கடவுள் எங்களை இப்படி சோதிக்கிறார் என வாழ்க்கை குறித்து அவரிடம் சலித்துக் கொண்ட நாங்கள் ,ஊன்றுகோல்களை தாங்கிய படி,ம்.... சீக்கிரம் நடங்க...என்று சிரித்தவர் முன் கூனி குறுகி நின்றோம்.தன் குறையை நினைத்து வருந்தாமல் கவலை காந்தலில் கருகிய மனங்களுக்கு கனிவான வார்த்தைகளால் களிம்பிடுவதை சேவையாகவே செய்து வரும் எலிசபெத் அக்காவை வியப்போடு பார்த்தேன்.
நான் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் இருந்தான்.விடுதியிலிருந்து வகுப்பிற்கு அவனை அவனுடைய நண்பன் உப்பு மூட்டை சும ப்பது போல சுமந்து வருவான்.பார்ககவே நெகிழ்ச்சியாக இருக்கும்.கல்லூரி கடைசி நாள் வரை நடக்க முடியாத நண்பனை முதுகில் சுமந்த கங்காரு மனிதன்.தன் நண்பனை சுமந்து திரியும் மாணவனை பார்க்கும் போது குழந்தையை வயிற்றுக்கு வெளியே சுமந்து திரியும் நிறைமாத பிள்ளைதாய்ச்சியை பார்ப்பது போல இருக்கும்.என் வாழ்வில் நான் பார்த்த ஆகச் சிறந்த நட்பு அதுதான் .என் நட்பு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் யாரும் இல்லை.
அந்த நட்பை காப்பதற்கான மனோதிடம் என்னிடம் இருப்பதாக தெரியவில்லை.ஏதேனும் ஒரு இடத்தில் அவர்கள் மீதான பச்சாதாபத்தையும் பரிவிரக்கத்தையும் வெளிப்படுத்தி விடக்கூடும்.அப்படி வெளிப்படுத்தியும் இருக்கிறேன் ....உடல் முழுக்க வெண்புள்ளிகள் இருக்கும் தோழியிடம் ,கஷ்டமா இல்லையாடி என்று கேட்ட பாவத்தை பண்ணியிருக்கிறேன்...முகத்தில் ஒரேயொரு பரு வந்ததற்கே மூன்று நாள் சாப்பிடாமல் அழுத நான் அந்த கேள்வியை கேட்டதில் ஆச்சர்யமில்லை தான். எதுக்கு கஷ்ட படணும்? உனக்கெல்லாம் ஒரேயொரு கலர் தான் இருக்கு.எனக்கு பார்த்தியா ரெண்டு கலர்....என்று சிரித்தாள்.ஒருவேளை அவள் மனதுக்குள் அழுது கொண்டிருக்கலாம்.ஆனால் வலிமையான வார்த்தைகளால் தன் கவலைகளை கட்டுடைத்தவள் தான், ஆலகாலத்தையும் அமுதென பார்க்கும் ரசவாதத்தை எனக்கு கற்றுக் கொடுத்தவள் .
என்ன தான் இயல்பாய் இருந்தாலும் திருமண வயது வருகிற போது மாற்றுத்திறனாளிகளுக்கு மண வாழ்க்கை குறித்து கவலை வரும் தானே...கால்களில் பாதிப்பு இருந்த செல்வராணி அக்காவிடம், உன்னை யாரு கட்டிக்குவா ......நேரா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிடலாம் என அவரின் அம்மா அப்பா சொன்னதை என் அம்மாவிடம் எப்படி சிரித்தபடியே சொல்ல முடிந்தது அவரால் ?
அரும்பு இதழ் நடத்திய கவிதை போட்டியில் பரிசு பெற சென்ற போதுதான் ஜனார்த்தன் என்ற சிறுவனை சந்தித்தேன் .மின்சார ரயில் மோதியதில் இரண்டு கைகளையும் இழந்தவன் .வாயில் பேனா பிடித்து எழுதி தேர்வில் முதல் பரிசு பெற்றதற்காக அந்த நிகழ்ச்சியில் ஜனார்த்தனுக்கு ஒரு விருது கொடுத்தார்கள்.திடீரென கைகளை இழந்த கழிவிரக்கத்தின் சாயம் சிறிதுமின்றி அவன் நெய்த ஏற்புரை, சேர்ந்தாற் போல் நான்கு தலைமுடி உதிர்ந்தாலே சோர்ந்து போகும் எனக்கு தன்னம்பிக்கை தந்த ஊட்டச்சத்து.
கோபால் தாத்தாவை நான் பார்த்ததில்லை.செவிவழி செய்தியாகவே அவர் எனக்கு அறிமுகமாகியிருக்கிறார். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பட்டாளத்தார்.ஆனால் அந்த மிடுக்கின்றி எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்.துப்பாக்கி கைகளுக்குள் தும்பை பூ மனசு.தீவிர சிவ பக்தரான அவருக்கு நாட்டுப்பற்று அதிகம்.சர்க்கரை வியாதியால் அவருடைய இரண்டு கால்களையும் எடுத்த பின்,ஒருவர் கேட்டாராம்.... நல்லா ஓடி ஆடுன மனுஷன் ....இப்படி படுக்கையில கிடக்குறீங்களே.....கடவுள் இப்படி பண்ணிட்டானேன்னு கோபமா ....நடக்க முடியல....பேரப் புள்ளைகளோட ஓடியாட முடியலை....மாடி ஏற முடியலையே ன்னு கடவுள் மேல உங்களுக்கு கோபமா என கேட்டாராம் ....அதற்கு கோபால் தாத்தா சொன்னாராம் ...."ஆமா...அந்த கடவுள் மேல எனக்கு கோபம் தான்.ஆனா...நடக்க முடியலையேன்றதுக்காகவோ....பேரப் பிள்ளைகளோட ஓடியாட முடியவில்லையே என்பதற்காகவோ ....மாடி ஏற முடியவில்லையேன்றதுக்காகவோ எனக்கு கடவுள் மேல கோபம் வரலய்யா .....நம்ம இந்திய நாட்டோட தேசியகீதம் பாடும் போது எந்திருச்சு நிக்க முடியலையே ன்னு நினைக்கும் போது தான் கடவுள் மேல கோபம் வருதுய்யா ....."
திருமண பந்தத்தின் உன்னத்த்தை முருகனும் கலாவும், சேவை மனப்பான்மையை எலிசபெத் சிஸ்டரும்,எதற்கும் கவலைப்படாத மனதை உடல் முழுக்க வெண்புள்ளிகள் இருக்கும் தோழியும்,இடுக்கண் வருங்கால் நகுவதை செல்வராணி அக்காவும்,தன்னம்பிக்கையை ஜனார்த்தனும்,நம் மனதில் நாட்டுப்பற்றை நடவு செய்த கோபால் தாத்தாவும் என.....உடம்பில் குறை உள்ளவர்களே விழுமியங்கள் நிறைந்த நிறைவான வாழ்வை வாழ கற்றுக் கொடுக்கிறார்கள்....
நிறை வாழ்வை நோக்கிய என் பயணத்தில் குறைகளின் குறியீடான சுண்டுவிரலும்,முன்னே செல்லும் முருகனின் கைத்தடியுமே வழித்துணை ....நடக்க ஆரம்பிக்கிறேன் நான்......
(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )