தொடர்கள்

இவ்வளவு பேர் உயர்கல்விக்குச் செல்வது சரிதானா?

இரா.பிரபாகர்

கல்லூரிகளில் பணி செய்பவர்-களுக்கு மே, ஜூன் மாதங்-களில் கொஞ்சம் மவுசு கூடிவிடும். வேறென்ன? தெரிந்தவர். தெரிந்த-வருக்குத் தெரிந்தவர், உறவினர். உறவினரின் ஒன்றுவிட்ட உறவினர். நண்பர்கள். இருபது ஆண்டுகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்துவிட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் தொலைபேசியில்

‘ஹலோ நா தான்... யாருன்னு கண்டுபிடி பாப்போம்...‘ என்பர்.

தலையும் வாலும் தெரியாமல் நாம் விழித்துக்கொண்டிருக்க,

‘எங்களையெல்லாம் மறந்துட்டியே...'

‘கேட்ட குரலாயிருக்கு ..யாருன்னு...' நாம் கொஞ்சம் இழுக்க

‘காலேஜ்ல நீங்க எக்கனாமிக்ஸ்.. நான் ஜுவாலஜி.. '

ஒருவரை இருபது ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்பதற்கு பிரத்தியேகமான காரணங்கள் வேண்டாமா?‘

‘ஆமாமா நீங்களா.. சொல்லுங்க. நல்லா இருக்கீங்களா?‘ என்ற சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு விஷயத்திற்கு வருவார்.

‘உங்க காலேஜ்ல ஒரு அட்மிசன் வேணும். காமர்ஸ். ரொம்ப வேண்டிய பையன்.'

‘என்ன மார்க்?'

‘டோட்டல் கொறவுதான்... எப்டியாவது கொஞ்சம் பாருங்க'

‘இவ்வளவு குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் இந்த பையன் எப்படி வணிகவியலை படிப்பான்? நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்து சீட் வாங்கிக் கொடுத்தாலும் அவனால் இந்தப்பாடத்தைச் சரியாகப் படிக்க முடியாதே. பட்டப்படிப்பிலும் இதேபோல் பார்டரில் பாஸ்பண்ணினால், அவனுக்கு என்ன பிரயோஜனம்? அதனால் அவனுக்குப் பிடித்த, அவனால் படிக்கமுடியும் பாடங்களில் சேர்ப்பதுதானே சரியாக இருக்கும். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்,' என்றேன். அவரும் புரிந்தமாதிரி விடைபெற்றார்.

இப்படி கல்லூரியில் இடம்வேண்டி வரும் அத்தனை பெற்றோரும் சொல்லி வைத்தமாதிரி சொல்வது ‘நல்லா படிக்கக் கூடியவன்தான். பரீட்சை நேரத்தில் உடல்நலம் இல்லாமல் போய்விட்டது' என்பதைத்தான். பெற்றோரின் தர்மசங்கடம் நமக்கும் புரியக்கூடியதுதான்.

மொத்தத்தில் கல்வி நிறுவனங்களில் சமாளிக்கமுடியாத அளவுக்கு நெருக்கடி. என்னதான் நடக்கிறது? இவ்வளவு எண்ணிக்கையில் உயர்கல்விக்குச் செல்வது சரிதானா? உயர்கல்வி கற்றவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைகளை வழங்க முடியுமா? உயர்கல்வியை இவ்வளவு எளிமையாக மற்ற நாடுகளில் பெற இயலுமா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய நேரம் இது. ஒருவகையில் உலகில் எந்த மூலையிலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் குழந்தைகள் மனநெருக்கடிக்குள்ளாவது இந்தியாவில் என்றால் அது மிகையாகாது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் இருப்பதை கவனிக்கும்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தைவிட இந்திய அரங்கில் தமிழகத்தை முன்னணியில் நிறுத்தவேண்டும் என்ற முனைப்பு அரசுக்கு அதிகமிருப்பது வெளிப்படையான உண்மையாகும். விளைவு, தாய்மொழியில்கூட எழுதத் தெரியாத மாணவர்கள் பள்ளிப்படிப்பில் தேர்ச்சிபெற்று கல்லூரிகளுக்குள் நுழையக் காத்திருக்கிறார்கள். பனிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் பயின்ற மாணவனுக்குத் தாய்மொழியை எழுத் தெரியாதென்பதற்கு யார் பொறுப்பேற்பது?

ஆசிரியர்களைக் கேட்டால், வகுப்பறையில் கற்பிப்பது தவிர்த்து பல பணிகள். மாணவர்களைத் திட்டவோ, கண்டிக்கவோ கூடாது, மாணவர் இடைநிற்றல் நிகழக்கூடாது. எப்படியாவது அவர்களை அழைத்துவந்தே தீரவேண்டும். அழைத்துவந்தால் மட்டும் போதாது. தேர்ச்சி விகிதமும் குறைந்துவிடக்கூடாது. மிகுந்த வேலை அழுத்தங்களுக்கிடையேதான் எங்கள் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது என்று கைகளைக் கழுவுகிறார்கள்.

ஆக பள்ளிக்கல்வியையும் ஒழுங்காக கற்காமல், சமூக நடத்தைகளையும் தெரிந்து கொள்ளாமல் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் எந்தப் புரிதலுமின்றி பாடங்களைத் தேர்வுசெய்து காலத்தை ஓட்டத் தொடங்குகின்றனர். கல்லூரிகளும் இந்த புதிய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு புதுப்புது பாடப்பிரிவுகளைத் தொடங்கி, தகுதி குறைந்த ஆசிரியர்களை மலிவான ஊதியத்திற்கு அமர்த்தி விடுகின்றனர். அரைவேக்காட்டு ஆசிரியர்களும் இணையத்திலிருந்து இறக்குமதி செய்தவற்றை மாணவர்களின் ‘வாட்ஸ் அப்' குழுக்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். தேர்ச்சி பெறாத பாடங்களை திரும்பத் திரும்ப எழுதிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இப்போது கல்லூரிக்குள் நுழைந்த ஒருவர் பட்டம்பெறாமல் வெளிவரமுடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இப்படி வெளிவரும் பட்டதாரிகள் எத்தகைய வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள்?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மாடசாமி என்றொரு மாணவர் என் வகுப்பறையில் இருந்தார். காலை எட்டு மணி வகுப்பிலேயே அரைத்தூக்கத்தில் இருப்பார். சில சயங்களில் கோபமாகவும் சில சமயங்களில் கிண்டலாகவும் வினையாற்றி ஓய்ந்து விட்டேன். மிக அமைதியானவர். ஒருநாள் காலை நான்கு மணி. புலராத காலை. வெளியூர் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து செல்கையில் ஒரு திருப்பத்தில் ஒரு சைக்கிளில் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பி, பாத்து வரக்கூடாதா? என்று குரலை உயர்த்த யோசிக்கையில்... அட.. நம்ம மாணவர் மாடசாமி. தர்மசங்கடமாக விழித்தார். அவருடைய சைக்கிளின் காரியரில் பெரிய பால் கேன். விசாரித்தபோது சொன்னார். மூன்று ஆண்டுகளாக காலை நான்கு மணிக்கு எழுந்து பக்கத்து ஊரிலிருந்து பால்கேனை ஏற்றிக்கொண்டு ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை வீடுகளுக்கு விநியோகித்துவிட்டு வீட்டுக்குப் போய் அவசரமாகக் கிளம்பி எட்டு மணிக்கு கல்லூரிக்கு வருவாராம். மாடசாமியின் வகுப்பறைத்தூக்கத்தின் நியாயம் தெரிந்தபோது சங்கடமாக இருந்தது. படிப்பில் வெகுசுமாராக இருந்தவர், மாலை நேரங்களில் மைதானத்தில் வெறும்காலில் ஓடிக்கொண்டிருப்பார். மூன்றாம் வருடம் வெறுங்காலிலேயே மாரத்தானில் முதலாவதாகவும் வந்தார். ஒரு நாள் ராணுவத்துக்கு தேர்வான நல்ல செய்தியோடு வந்தார். ஆனால் சேருவதில் பெரும் சிக்கலொன்று இருந்தது. காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த அவருக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவது பெரும்பாடாக இருந்தது. எந்த பின்புலமும் இல்லாத அவர் பெரும்போராட்டத்துக்குப்பின் சான்றிதழ் பெற்று ராணுவவீரராக எல்லையோரங்களில் வாழ்ந்தார். காஷ்மீர், மேற்கு வங்கம் எங்கிருந்தாவது அகால நேரங்களில் எப்போதாவது பேசுவார். இதல்லாம் நடந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று என்முன் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் அவர் மகளும், +2 முடித்த அவர் மகனும் அதே அப்பாவி முகபாவத்தோடு நம் மாடசாமியும். அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கான ஆலோசனைக்காக. வானத்தில் பறப்பது அல்லது கடலில் மிதப்பது என்ற தீர்மானத்தில் பையன். 10 - 25 லட்சம்வரை கட்டணத்திற்குத் தூண்டில் போடும் படிப்புகள். எதற்கும் தயாராகவே இருந்தார் தந்தை. பையனிடம் பேசியதில் ஒருவழியாக பி.எஸ்.சி., இயற்பியல் படிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவராகத் தெரிந்தார். வெறும் காலில் ஓடிய மாடசாமியின் புதல்வர் பி.எஸ்.சி. முடித்துவிட்டு ஏரோநாட்டிக் படிக்கும் உத்தேசத்தில் இருக்கிறார். அதை விட பெரிதான கனவுகளையும் அவரால் காணமுடியும். மனதுக்கு நிறைவாக இருந்தது. இந்திய சமூகத்தில் கல்வி மட்டுமே இத்தகைய மந்திரத்தை நிகழ்த்த முடியும்.

இதில் முக்கியமான விஷயம். மாடசாமிக்கு இந்தக் கல்லூரிப் பட்டமோ, படித்த பாடங்களோ நேரடியாக அவர் வாழ்க்கைக்கு உதவவில்லை. அவர் கல்லூரியில் செய்ததெல்லாம் விளையாட்டுகளில் ஈடுபாடுகாட்டி உடலை மேம்படுத்தியதுதான்.

மாடசாமி மட்டுமல்ல. நல்லதம்பி என்றொரு மாணவர். தற்செயலாகச் சந்தித்த போது கென்யாவின் தலைநகர் நைரோபியில் தொழில் செய்வதாகச் சொன்னார். நம்மிடம் தமிழ்படித்த ஒருவர் எப்படி வெற்றிகரமாகத் தொழில் செய்து வாழமுடியும்? என்று மனதிற்குள் நான் நினைத்ததை கண்டுகொண்டாற்போல ‘ எல்லாம் நம்ம கல்லூரியில் கற்றுக்கொண்டதுதான் சார்' என்று சொன்னார். கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் படிப்பிற்கேற்ற அல்லது பட்டத்தின் தகுதியில் வேலை பெற்றவர்கள் தவிர, வெவ்வேறு வாழ்வாதாரங்களைக் கொண்டுள்ள பலரும் வாழ்க்கைக்குத் தேவையான எதோ சிலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். கல்லூரிப் படிப்பிற்காக செலவிட்ட இந்த மூன்று ஆண்டுகள் வீணானவை என்று யாரும் சொல்லி நான் கேட்கவில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன், வகுப்பறைகளில் மாடசாமியின் சமூக பொருளாதார நிலையில் இருந்த மாணவர்கள் ஓரிருவர் மட்டுமே. தங்கள் படிப்புக்குச் சம்பந்தம் இல்லாத பல்வேறு வேலைகளில் இருந்தாலும் ‘ படிக்கும்போது கிடைச்ச அனுபவங்கள், தொடர்புகள் என் வாழ்க்கைக்கு உதவுது' என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி  சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது அரசுக்கு அப்படியொரு நிர்ப்பந்தம் இருக்கிறது. சமீப காலங்களில் உழைக்கும் வர்க்கத்தினர் கல்லூரிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்திருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அதன் பொற்காலத்தில் இருக்கின்றன. வசூலில்தான். அரசு கல்லூரிகளில் 500 ரூபாய் கட்டணம் என்றால் தனியார் கல்லூரிகளில் 2500, 3000, 4000, 10000 என தங்கள் விருப்பம் போல் வசூலிக்கத் தொடங்கிவிட்டன. அது பெரிய விசயமல்ல. இன்று வகுப்பறைகளில் பெரும்பான்மையும் முதல் தலைமுறை படிப்பாளிகள். வகுப்பறைகளில் 60 முதல் 80 மாணவர்கள். மாணவர்களோடு நெருக்கமாக உரையாடி அவர்களை நெறிப்படுத்த வாய்ப்பற்ற சூழல். முற்பகல் வகுப்புகளுக்கு வருபவர்கள் பிற்பகல் கல்லூரி வளாகத்தில் இருக்க பல கல்லூரிகளில் அனுமதிக்கப் படுவதில்லை.

அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட ண்டடிஞூt ண்தூண்tஞுட் கல்லூரி கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது. வகுப்பறையில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வளாகத்தில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வெறும் பட்டத்தோடு லட்சக்கணக்கில் முதல்தலைமுறை அப்பாவிகள் வெளியேறியவண்ணமிருக்கின்றனர். அரசுக்கு மாதிரியே கல்லூரிகளுக்கும் தேர்ச்சி சதவீதத்தைக் அதிகரித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடுத்தரவர்க்க மாணவர்கள், குடும்பத்தினரின் கவனிப்பு ஆலோசனைகளில் அவர்களுக்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறார்கள். மாட்டிக் கொண்டவர்கள் அடித்தட்டு மாணவர்கள். கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, கட்டணம், அவர்களுக்கான வசதிகள், போதிக்கப்படும் கல்வி, அவர்கள் பெற்ற திறன்கள் பற்றி கேள்வி கேட்க, முறைப்படுத்த எந்த வழிமுறைகளும் இல்லை. மிகவும் அபாயகரமான நிலையில் இந்திய உயர்கல்வி இருப்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் இல்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அதிதீவிரப் பிரச்சனை படித்தவர்களின் வேலையின்மை. எழுபதுகளின் நிலையைவிட பன்மடங்கு கூடுதலாக இருக்கப்போகிறது. பெருமளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. என்ன படிப்பது? எங்கு படிப்பது? என புரியாமல் சீட்டுகளுக்காக கல்லூரிகளின் வாசல்களில் மக்கள் அலைமோதுகிறார்கள்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் அல்லது உலக அளவில் வேலைவாய்ப்புச் சந்தை என்னவாக இருக்கப்போகிறது. என்னென்ன துறைகள் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றன? நம் கலை அறிவியல் படிப்புகள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன? என்பதை சிந்திக்கக் கூடியவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இப்போது நிலைமை முற்றிலும் வேறாக மாறியுள்ளது. இன்று மாலை ஒரு கார்ப்பரேட் குழுமத்தின் ஆயத்த ஆடை விற்பனையகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே என்னிடம் முதுகலை பயிலும் மாணவரை விற்பனையாளராகச் சந்தித்தேன். பகுதி நேர வேலை பார்ப்பதாகச் சொன்னார். மாதம் 8 முதல் 10ஆயிரம் சம்பாதிப்பதாகச் சொன்னார். இவரைப் போல் ஸ்விகியில், உணவு விடுதிகளில், காய்கறி அங்காடிகளில் பகுதிநேர வேலை பார்க்கும் மாணவர்கள் பலரை நான் அறிவேன். ஆனால் இவர்களின் பகுதி நேர வேலை நாளடைவில் பகுதிநேரப் படிப்பாக மாறிவிடுவதைக் காண்கிறேன். முதல் தலைமுறை படிப்பாளிகளான இவர்கள் பெயரளவுக்கு ஒரு பட்டத்தை வாங்கிக் கொண்டு, இதுபோன்ற தற்காலிக உதிரிவேலைகளிலேயே காலத்தை கடத்தவேண்டியிருக்கும் என்று  யோசிக்கும்போது வருத்தம் மேலிடுகிறது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பார்த்தால், ஒரு குடும்பத்தில் படித்து அரசு வேலையோ அல்லது அதற்கிணையான மாதச் சம்பளவேலையோ பெற்றுவிட்ட ஒருவனின் தலைமுறையே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட வழிசொல்லும் மந்திரச் சொல்லாக படிப்பும் பட்டங்களும் இருந்தன. இன்று பட்டங்கள் அரசின் புள்ளிவிபரங்களில் ஒரு கூடுதல் சேர்க்கை மட்டுமே.

கல்வி அவர்கள் வாழ்க்கையில் எந்த அதிசயத்தையும் நிகழ்த்தப் போவதில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆக கலை அறிவியல் கல்லூரிப் படிப்புகளால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்று அச்சுறுத்துவதல்ல நம் நோக்கம். 10 -15% மாணவர்கள், இயல்பாகவே படித்துவிடக் கூடியவர்கள், குடும்பப் பின்புலம் உடையவர்கள். அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் எந்தக் குழப்பங்களும் இல்லை. நம் கவலை பெரும்பான்மையான முதல்தலைமுறை படிப்பாளிகளைப் பற்றித்தான். இந்த முதல்தலைமுறையினர் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஒன்று தரமற்ற, எந்த வேலைக்கேற்ற திறனையும் தராத பட்டப்படிப்பு. இரண்டாவது ஒன்றுமறியாத படிப்பறிவில்லாத அடித்தட்டு வர்க்கங்களைச் சார்ந்த பெற்றோர்கள். படித்த, கீழ் நடுத்தரவர்க்க போதிய பக்குவமற்ற பெற்றோர்கள் இன்னொரு வகையினர். அதாவது, எல்லாக் குழந்தைகளும் ஒரே தரமும், திறமும் கொண்டவரல்லர். கணிதம், அறிவியல் போன்றவற்றை எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய மூளையமைப்பு கொண்டவர்களாகவோ அல்லது இலக்கியம், கலைகளை எளிதாகப் பற்றிக்கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளாதவர்கள். அவர்களுக்குப் புரிந்ததெல்லாம், பக்கத்துவீட்டுப் பையன் மென்பொருள் பொறியியலாளர். ஒன்றுவிட்ட சித்தப்பா மகள் மருத்துவர் என்பதுதான். ஒரு வகையில் அரசாலும், கல்வி நிறுவனங்களாலும், பெற்றோர்களாலும் ஒருசேர வஞ்சிக்கப்பட்ட தலைமுறை 21ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறைதான்.

ஜூன், 2023