தொடர்கள்

இலக்கற்ற பயணங்கள் 4

திசையாற்றுப்படை – 9

இரா.பிரபாகர்

சிங்கப்பூரிலிருந்து மூன்று மணிநேர விமானப்பயணத்தில் பாலி தீவைச் சென்று சேரலாம். இந்தோனேசியாவின் 18,100 தீவுகளில் பாலியும் ஒன்று. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளில் 6000 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்களாம். வழக்கமான கடற்கரைகளிலிருந்து மலைகளும் கடல்களும் இணைந்த நிலப்பரப்புகளைக் கொண்டது பாலி. அதுவே பாலியின் முதன்மையான கவர்ச்சி. மலைகளில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பதும் கடல் நடுவில் துருத்திக்கொண்டிருக்கும் மனித சஞ்சாரமில்லாத பெரும் பாறைத்திட்டுகளைப் பார்ப்பதும் பெரும் பரவசம் தரும் அனுபவங்கள். பாலி முழுக்க சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் என்று சொல்லலாம்.

பாலியை கடவுள்களின் தீவு என்றழைக்கிறார்கள். எங்குபார்த்தாலும் இந்துக் கோயில்கள். பௌத்தத்துடனான இணைவைப் பார்க்கலாம். இந்திய சீன கலாச்சாரக் கூறுகளையும் பார்க்கமுடியும். 80 விழுக்காடு இந்துக்களும் 12 விழுக்காடு இஸ்லாமியர்களும் 5 விழுக்காடு கிறித்தவர்களும் 5 விழுக்காடு பௌத்தமதத்தினரும் வாழ்கிறார்கள். மிகத்தொன்மையான மனித இனங்கள் பாலியில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்க பெற்றுள்ளன. வாணிபத்திற்காக இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்த வணிகர்கள் பாலியின் பண்பாட்டு வரலாற்றில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதுபோலவே சீனத் தொடர்பு பௌத்தத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பாலி என்ற வார்த்தைக்கு ‘நேர்ச்சை / நேர்த்திக்கடன் அல்லது படையல்' என்று பொருள். பாலி மக்கள் இன்றைக்கும் சடங்குகள், வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள். பாலியின் புவியியல் இருப்பு தொடர்ந்து பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து ஆட்சி மாற்றங்களுக்கும் ஆளானது.

விமான நிலையத்திலிருந்து இறங்கும்போதே தென்படும் உயரமான கருட விஷ்ணு சிலை 2018 இல் திறக்கப்பட்டது. இந்தியாவின் சர்தார் படேல், சீனாவின் புத்தருக்கு அடுத்தபடியாக 112 மீட்டர் உயரமுள்ள கருட விஷ்ணு உலகின் மூன்றாவது உயரமான சிலை சிலை என்கிறார்கள். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய்படேல் சிலை இன்றைய தேதிக்கு உலகின் உயரமான சிலையாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உயரமான கட்டடங்கள், சிலைகள் நிர்மாணிப்பதென்பது சுற்றுலா கவர்ச்சி மற்றும் பெருமைக்காக என்பதொருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் அதை ஒரு வருமானத்திற்கான வழியாகவும் வைத்திருக்கிறார்கள். கருடவிஷ்ணுவின் தலைமேல் நின்று பார்க்கலாம், கட்டணம் செலுத்தினால்.  இந்தோனேசியா செல்வதில் ஒரு கூடுதல் அநுகூலம் நாம் அங்கு இருக்கும் வரை ஒரு ‘மில்லியனராக' இருக்கலாம். இந்தோனேசிய ருப்பியாவின் (இந்தோனேசிய பணம் ருப்பியா என்று அழைக்கப்படுகிறது) மகிமை அப்படி. ஒரு சிங்கப்பூர் டா‘‘ன் மதிப்பு இந்திய ரூபாயில் இப்போதைக்கு 62 ரூபாய்கள். இந்தோனேசிய மதிப்பில் ஒரு சிங்கப்பூர் டாலர் பத்தாயிரம் ருப்பியா. ஆக ஒரு தண்ணீர் போத்தலை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ருப்பியா கொடுத்து வாங்க வேண்டும். ஒரு கேப்பசீனோ காபி அதிகமில்லை 15 ஆயிரம் ருப்பியாதான். இளநீர் 40 ஆயிரம் ருப்பியா. ஒரு குடும்பமே குடிக்கும் அளவுக்கு மெகா சைஸ்  இளநீர்தான். ஆனால் 40 ஆயிரம் ருப்பியா என்பது இந்திய மதிப்பில் 250 ரூபாய்க்கு மேல். எப்படியிருந்தாலும் இந்திய ரூபாயில் மலிவாக இருக்கப்போவதில்லை.

பாலியில் தவிர்க்கமுடியாத ஒரு சுற்றுலா கவர்ச்சி பெனிடா தீவு. சில மணிநேர கார்பயணத்தில்  சென்று சேரக்கூடிய இடம். பெரும்பாலும் ஒடுக்கமான மலைப் பாதையில் அவ்வப்போது பாதாளத்தில் தென்படும் கடலைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம்.பெனிடா தீவின் உச்சிக்குச் சென்றால் அங்கிருந்து நீலக் கடலையும் துருத்திக்கொண்டிருக்கும் பெரும் பாறைகளையும் பார்க்கலாம். அந்த மலைவிளிம்பில் நடந்து செல்லலாம். அவ்வளவுதான். அதற்காக நாம் மேற்கொண்ட பயணம், வெயில், நடை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது பரவசமடையவும் ஏமாற்றமடையவும் சம வாய்ப்பு உண்டு.

பாலியின் பிரதான வாழ்வாதாரம் சுற்றுலா சார்ந்தது. வாடகைக் கார்கள், கார் ஓட்டுநர்கள், வழிகாட்டிகள் எனப் பெரும் எண்ணிக்கையில் உள்ளூர்வாசிகள் சுற்றுலாசார்ந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள். எங்களோடு காரில் வந்த வழிகாட்டி இளைஞர் சுமாரான ஆங்கிலத்தில் மிகுந்த நட்புறவோடு உரையாடிக்கொண்டு வந்தார். பெரும்பாலான இளைஞர்கள் கிராமங்களிலிருந்து வந்து தங்கி வேலை பார்ப்பவர்களாம்.

சுற்றுலாவாசிகளை கையாளுவதற்கான சில பயிற்சிகளை முடித்தவர்கள். இவர்களின் ஊதியத்தை நம்பி வாழும் குடும்பங்கள் கிராமங்களில். விவசாயக் குடும்பங்கள். ஆண்களுக்கான வேலைகளைப்போலவே பெண்களும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், மதுக்கூடங்களில் உபசரிப்பாளர்களாகவும் பரிசாரர்களாகவும் பணியாற்றிவருகின்றனர். இதே அளவுக்கு மசாஜ் நிலையங்களில் பணியாற்றுபவர்களும் இருக்கின்றனர்.

இரண்டு வகையான பயணிகள் பாலி போன்ற தீவுகளுக்கு வருகின்றனர். திருமணமான ஜோரில் தேனிலவுக்காக வருபவர்கள். அல்லது இளம் மனைவிகளோடு அல்லது காதலிகளோடு (நல்ல / கள்ள) வந்து கடலோரத்தில் நல்லதொரு நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்தில் மிதந்துகொண்டு சூழலின் அமைதியையும் ஏகாந்தத்தையும் அனுபவித்துவிட்டு போகக் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள்தான் உண்மையில் பாலியை, அதன் ஏகாந்தத்தை அனுபவிப்பவர்கள். இன்னொரு பிரிவினர் நம்மைப் போன்ற பட்ஜெட் பயணிகள். சுற்றுலா கையேடுகள் குறிப்பிடுகின்ற அனைத்தையும் வேர்க்க விறுவிறுக்க வரிசைகளில் நின்று பார்த்து தவறாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்புகிறவர்கள். என்னைப் பொறுத்தவரையில் பாலி முதல்வகையினருக்கான இடம் என்றுதான் சொல்வேன்.

பாலியில் விருந்தினர் விடுதிகளுக்கு அடுத்தபடியாக வீதிக்கு வீதி மசாஜ் பார்லர்கள். இரவிலும் கூட பார்லரைத் திறந்து வைத்துக்கொண்டு கடையின் முன் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். இந்தோனேசியா பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக அனுமதிக்கவில்லை. மசாஜ் என்பது ஒரு நாகரீகமான தொழில் என்று கூறப்பட்டாலும் ஒரு எளிய இந்திய மனம் பலவாறான சஞ்சலங்களுக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியவில்லை. தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு பாலியல் சார்ந்த தேவைகளுக்காகவே உலகெங்கிலுமிருந்து பயணிகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்கள், மதுக்கூடங்களில் செய்யத்தக்க பணிகளுக்கு இந்திய பெண்கள் விரும்பப்படுவதில்லையாம். காரணம் மங்கலான அவர்களின் தோலின் நிறம். தெற்காசியப் பெண்களின் மஞ்சள் நிறம் அவர்களின் வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. குறிப்பாக தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வெளிப்படையாகவும் கண்டும் காணாமலும் பாலியல் மற்றும் அது சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கின்றன.இதற்கு சில நாடுகளில் அரசுகளும் ராணுவமும் அந்தந்தநாட்டு மாஃபியாக்களும் உடந்தையாக இருக்கின்றன. வறுமையின் காரணமாகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் கிராமங்களிலிருந்து ஒன்றுமறியாத சிறுமிகளும் இளம்பெண்களும் அழைத்தும் கடத்தியும் வரப்படுகிறார்கள். அவர்களுக்கான புகலிடமாக இருப்பது சுற்றுலாவை நம்பிய இத்தகைய தொழில்கள்தான்.

லிடியா காச்சோ (Lydia Cacho) எனும் பெண்மணி மெக்சிகோ நாட்டு பத்திரிகையாளராகவும், பெண்ணிய - மனித உரிமைப் போராளியாகவும் செயல்பட்டு வருபவர். உலகத்தின் பல நாடுகளுக்குப் பயணித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல், பாலியல் சுரண்டல், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை பற்றிய செய்திகளைச் சேகரித்து, ஆய்வு செய்து " The Untold Story of International Sex Trafficking'என்றொரு நூல் எழுதியிருக்கிறார். தமிழில் ‘பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள் குழந்தைகள்' எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பாலியின் மசாஜ் பார்லர்களில் இரவுவரை உதட்டுச்சாயம் கலையாமல் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் பெண்களைப் பார்த்தபோது இந்த நூல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. உலகம் முழுமையும் சில நாடுகளில் பெரிய அளவிலும் சுற்றுலாவை மையமிட்டு வளர்ந்து வரும் பாலியல் சார்ந்த தொழில்கள் நவீன காலத்தில் படிப்படியாக சமூக அங்கீகாரம் பெற்ற தொழில்களாக வளர்ந்துவருவதைக் காணமுடிகிறது. பத்திரிகையாளர் லிடியா கம்போடியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண்ணிடம் உரையாடியபோது அவள் விவரித்த கற்பனை செய்ய இயலாத ஒரு சம்பவத்தை தன் நூலில் பதிவு செய்திருக்கிறார். எங்களோடு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருத்தி தப்பி ஓடிவிட்டாள். அவள் பொம்மைபோல் அழகானவள். அதனாலேயே அவள்மீது எங்கள் எஜமானிக்குத் தனிக்கவனம் இருந்தது. வந்ததிலிருந்து தப்பிவிட எண்ணம் கொண்டிருந்தவள் ஒரு நாள் எப்படியோ தப்பிவிட்டாள். அந்த கோபத்தில் எங்கள் எஜமானி எங்களுக்கு இரண்டு நாட்களாக உணவு ஏதும் தராமல் பட்டினி போட்டாள். வாடிக்கையாளர்களிடமும் எங்களை அனுப்பவில்லை. மூன்றாம்நாள் எங்களை உணவருந்த அழைத்தாள். ஓடிப்போனவள் செய்தது தவறு என்றாள். எங்களைச் சாப்பிடச்சொன்னபோது பெரும்பசியில் அங்கிருந்த அசைவ உணவைப் பாய்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். எங்கள் எஜமானியுடன் புதிதாக வந்திருந்த இரண்டு ஆண்களும் நாங்கள்  சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்கள் சாப்பிட்டு முடித்து நிமிர்ந்தவுடன் எங்கள் எஜமானி எங்களைப் பார்த்துச் சொன்னாள்.

நீங்கள் சாப்பிட்ட மாமிசம் ஓடிப்போனாளே, அவளுடைய உடல்தான். இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் இப்படித்தான் துண்டு துண்டாக உங்களையும் வெட்டி சமைத்து பறிமாறிவிடுவேன் என்று சொன்னாள். அன்று இரவு எங்கள் மூவருக்கும் காய்ச்சல் கண்டு இரவு முழுவதும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தோம். இது ஒரு சின்னத் துளிதான். உலகம் முழுமையும் எளிய பின்புலம் கொண்ட பெண்களும் குழந்தைகளும் ஆடுமாடுகளைப் போல் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் சுரண்டப்படுவதுமான நூற்றுக்கணக்கான கதைகளைப் பேசுகிறது இந்த நூல். இந்த நூல் சுற்றுலாவைப் பற்றிய வேறொரு பார்வையை முன்வைக்கிறது. சுற்றுலா எனும் புதுவகையான வர்த்தகம் பெண்களையும் குழந்தைகளையும் மலிவான பண்டங்களாக மாற்றியுள்ள யதார்த்தத்தை மறைமுகமாக உணர்த்துகிறது.

ஒருகாலத்தில் பயணிகள் என்றொரு வகையினர் இருந்தார்கள். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர். உல்லாசப் பயணம் சென்றவர்களுமல்லர். அவர்கள் கொந்தளிக்கும் கடல்களிலும், காடுகள் மற்றும் மலைகளினூடாக  நடந்தும், கழுதைகளில் பயணம் செய்தும் எழுதிய குறிப்புகளால் இந்த உலகத்தை இணைத்தனர். வரலாற்றை  இணைத்துப் புரிந்துகொள்ள உதவினர். ஆனால் இன்றைய பயணிகள் எதற்காகப் பயணப் படுகின்றனர்? தங்களிடம் உபரியாக இருக்கும் செல்வத்தைக் கொண்டு உலகின் இன்னொரு பகுதியில் வாழும் எளியவர்களின் சுயமரியாதையை அவமதிப்பதற்கா? தரவு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் வளர்ச்சியில் பல்வேறு துறைகளில் நிகழப்போகும் வேலையிழப்புகளைப் பற்றிப் பேசும் ஆய்வாளர்கள் வரும் ஆண்டுகளில் பெருவளர்ச்சி பெறப்போகும் துறைகளில் சுற்றுலாத் துறையையும் குறிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிப்பதில் சுற்றுலாவுக்கு இருக்கும் அளப்பறிய பங்கைப் போலவே, மனித மாண்புகளை இழிவு படுத்துவதையும் சுற்றுலா தொடர்ந்து செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாதுதானே!