தொடர்கள்

இலக்கற்ற பயணங்கள் – 3

திசையாற்றுப்படை - 8

இரா.பிரபாகர்

உலகின் வேறெந்த நகரைக்காட்டிலும் மாஸ்கோவும், பீட்டர்ஸ்பர்க்கும் நமக்கு (எனக்கு) ஒரு வகையில் நெருக்கமானவை. இந்தியாவைத் தவிர்த்து எனக்குப் பரிச்சயமான ஒரு நாடு எனில் அது ருஷ்யாதான். உடனே மாஸ்கோவில் என் மாமா ஒருவர் மருத்துவராக இருந்தார். ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் அங்கு சென்றுவிடுவேன் என்பது போன்ற கதைகளைக் கற்பனை செய்யவேண்டாம். எல்லாம் புத்தகங்களின் வாயிலான பரிச்சயம்தான்.

பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களிலும், சைபீரிய பனிவெளிகளிலும் கற்பனையில் உலவமுடியும்தானே! நேரில் பார்க்கும்போது ஏற்கனவே இலக்கியங்களில் வாசித்துக் கற்பனையில் பார்த்தவைகளிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றே சொல்வேன். இலக்கியத்தின் மகிமைபாதியும் மனித மனத்தின் கற்பனை மீதியுமாகத் தொழிற்படும் மாயம் அது.

உலக நாடுகளின் தலைநகரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது மாஸ்கோ. 'Sky scrapers' என்று சொல்லப்படும் அடுக்குமாடிகளின் உயரமும் எண்ணிக்கையுமே பெருநகரங்களின் முகமாகவும் பெருமையாகவும் மாறிவிட்ட சூழலில் மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரங்களின் மையப்பகுதி முழுக்க செவ்வியல் தன்மை பொருந்திய உயரம் அதிகமில்லாத கட்டடங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலத்துக்குள் உலவும் கனவுத்தன்மையை உண்டாக்குகின்றன. புதுப்பிக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டவை. மேலோட்டமாக ஒன்றுபோல் தோன்றினாலும் நுணுக்கமான வேறுபாடுகள் கொண்டவை. ஆனால் முழுக்கவும் நேர்கோடுகளால் சதுரமாகவும் செவ்வகமாகவும் வடிவமைக்கப்பட்டவை. வளைவுகளும் நளினங்களும் தவிர்க்கப்பட்டவை. அவைகளின் கம்பீரமும் அமைப்பும் ஒரு வகையான ராணுவ ஒழுங்கை ஒத்தவை.

மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மேற்பரப்பில் மிகவும் சுதந்திரமானவையாகத்தான் தென்படுகின்றன. சுத்தம், நேர்த்தி , சாலைவிதிகளைப் பின்பற்றுவதில் இன்னொரு மேற்கத்திய நகரம்தான். நான் சென்றிருந்தபோது நீண்ட பகல். இருட்டு வந்துசேர இரவு 11 மணி ஆகிவிடுகிறது. சாலைகளில் முழுக்க அமெரிக்க, ஜெர்மன் , கொரிய கார்கள். மாலை நேரமாகிவிட்டால் அதிவேக ஸ்போட்ஸ் கார்கள் எந்த நாட்டு நகரங்களும் அனுமதிக்காத வேகத்தில் கவனத்தை ஈர்க்கின்றன. சைக்கிள்களிலும் க்ரூசர் பைக்குகளிலும் ஸ்பீக்கர்களைப் பொருத்திக்கொண்டு உரத்த ஒலியில் பாடல்களை ஒலிக்கவிட்டுக்கொண்டு போவது சகஜமான காட்சியாக இருக்கிறது.

கம்யூனிச ருஷ்யாவில் மதங்கள் ஒடுக்கப்பட்டதான செய்திகள் உண்டு. குறிப்பாக கிறித்தவர்கள் ஒடுக்கப் பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும் கம்யூனிசம் உச்சத்திலிருந்தபோது கிறித்தவர்கள் ரகசியமாக வழிபட்டது உள்ளிட்ட பல கதைகள். ஆனால் ருஷ்யாவின் கடவுள் மறுப்பாளர்கள் 13% பேர்தான். 40% பேர் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவம் சார்ந்தவர்கள். இதரகிறித்தவர்கள் 10% க்கும் குறைவானவர்கள். ஆன்மிக விருப்புடையோர் ஆனால் மதங்களைச் சாராதோர் என்ற வகையினர் 25%. எது எப்படியிருந்தாலும் ருஷ்யா முழுக்க எங்கு நோக்கினும் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவம் சார்ந்த ஆலயங்கள். ‘தங்க வளையப் பாதை' என்று அழைக்கப்படுகிற ஒரு சுற்றுலாப் பாதை பிரபலமாக இருக்கிறது. அது மாஸ்கோவிலிருந்து சாலை வழியாக 9 பழமையான சிறு நகரங்களை இணைக்கும் வட்டப்பாதை. குறிப்பாக அங்கு அமைந்திருக்கும் 12ஆம் நூற்றாண்டு தொடங்கி கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற ஆலயங்களைப் பார்த்துவருவதற்கான வட்டப்பாதையே அது. மிகப் பழமையான ஆலயங்களும், மடாலயங்களும் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

இந்த ஆலயங்கள் அமைப்பிலும் வழிபாட்டு முறையிலும் முற்றிலும் வேறுபட்டவை. ஆலயங்களின் வெளிப்புற கோபுரங்கள் போர்ச்சுகீசிய, இத்தாலிய, பிரித்தானிய ஆலய கட்டட பாணிகளிலிருந்து வேறுபட்ட தனித்துவமான வெங்காய வடிவ கோபுரங்களுடையவை. 5,10,15 என்பதாக கோபுரங்களின் எண்ணிக்கைகள். கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் கட்டட மரபுக் கூறுகளுடையவை. ஆலயங்களில் உள்ளே பெரிய அழகிய சாண்டிலியர் விளக்குகள். முன்பு மெழுகுவர்த்திகள் இருந்த இடங்களில் அதே வடிவிலான மின் விளக்குகள். பக்கவாட்டுச் சுவர், மேற்கூரை முழுக்க அற்புதமான ஓவியங்கள். பிரதானமாய் சில குறிப்பிட்ட வண்ணக்கலவைகளில் அந்த அற்புதமான மங்கலான ஒளியமைப்பில் ஆலயத்தின் எந்த மூலையிலிருந்தும் கடவுள் தோன்றிவிடுவாரோ... என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அமர்ந்து நீண்ட வழிபாட்டு முறைமைகளை மேற்கொள்ளும் வழிபாட்டு முறை இருப்பதுபோல் தெரியவில்லை. வழக்கமான ஆலயங்களில் பக்தர்களுக்கான இருக்கைகளே இல்லை. நின்று கொண்டே வழிபடவேண்டும். பெண்கள் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும். டவுசர் பாண்டிகளுக்கு அனுமதி இல்லை. எல்லாவற்றோடும் அங்கு பூசையில் ஒலிக்கும் ‘கிரிகோரியன் சாண்ட்களை' ஒத்த மந்திரங்கள் ஒலிக்கும் போது உண்டாகும் அற்புத உணர்வலைகளுக்கும் இறை நம்பிக்கைக்கும் தொடர்பிருக்க வேண்டியதில்லை. ஆங்கிலமில்லாமல் நவீன அறிவியல் தொழில்நுட்பம் இல்லை என்பதான பொய்மை ருஷ்யாவின்  சாதனைகளைப் பார்த்தபோது மீண்டும் நிரூபணம் ஆகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்திலிருக்கும் ஜெர்மனி, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் போன்றே ருஷ்யாவிலும் ஆங்கில வழி கல்வி ஆங்கிலப் புழக்கம் இல்லை. விமான நிலைய குடிவரவு அலுவலகம் தவிர்த்து ஆங்கிலம் எங்கும் இல்லை. மெட்ரோ நிலையங்கள், தெருப்பெயர்கள் எதிலும் ஆங்கிலத்தைக் காண இயலாது. இந்த ‘ஆங்கில விலக்கம்' அரசால் திட்டமிடப்பட்டது போன்றே தெரிகிறது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு பண்பாடு என்பதான புரிதல் ருஷ்ய அரசுக்கு இருக்கும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

சுற்றுலாவை ருஷ்யா பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. தாய்லாந்தைப் போன்ற சில நாடுகளைப் போல் சுற்றுலாப் பயணிகளுக்கு வலைவிரிக்கும் நாடுகள் ஒரு புறம். சுற்றுலாவிற்கு விண்ணப்பிப்பவர்களிடம் மானக்கேடான கேள்விகளைக் கேட்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இன்னொருபுறம். இவர்களுக்கிடையே ருஷ்யா நடுவாந்திரமாக ‘வந்தா வா.. வராட்டி போ' மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விண்ணப்பிக்கும் போதே, எத்தனைநாள் தங்கும் விடுதி முன்பதிவு செய்திருக்கிறோமோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே ‘விசா' வழங்கப்படுகிறது. அமெரிக்க, கனடா தூதரக அதிகாரிகளுக்கு ‘நம்பகத்தன்மை' வந்துவிட்டால் 9 ஆண்டுகள் 10 ஆண்டுகளுக்கு விசாவை எறிந்துவிடுவார்கள். ருஷ்யாவில் இப்படியொரு விசித்திரமான விதி. அரசு எப்படியோ ருஷ்ய மக்களும் அப்படியே. புன்னகையோ வெறுப்போ அற்ற முகபாவத்தோடு கடந்து போகிறார்கள். அமெரிக்கா மற்றுமான ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் செயற்கையான சிநேகபாவம்கூட இல்லை. சீனாவிலிருந்து வந்திருந்த வயோதிகப் பயணிகள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

சுற்றுலா நிறுவனங்களின் பேக்கேஜ் பயணங்கள் தவிர்த்து ருஷ்யாவில் தன்னிச்சையாக சுற்ற நினைப்பவர்கள் மூன்று விசயங்களைக் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். இல்லை, அத்தியாவசியம். 1.கூகுள் மொழிபெயர்ப்பியை நம் செல்பேசியில் வைத்துக்கொள்வது அவசியம். ருஷ்ய மொழியில் பேசுவதைப் பதிவு செய்து மாற்றினால் ஆங்கிலத்தில் தெளிவாக வந்துவிடும். அது போலவே நாம் பேசும் ஆங்கிலத்தையும் மாற்றித்தரும். அது போலவே ருஷ்ய எழுத்துப்பதிவுகளை புகைப்படம் எடுத்து / ஸ்கேன் செய்து ஆங்கிலத்துக்கு மாற்றிக் கொள்ளமுடியும். 2. ஊபர் எனும் பன்னாட்டு வாடகைக் கார் செயலி. 300 ரூபிளுக்கு 3000ரூபிள் கூசாமல் கேட்கும் நல்ல வாடகைக்கார் ஓட்டும் மாஜி தோழர்கள் அங்கும் உண்டு. ஆங்கிலத்தில் ஊபரில் வாடகைக்கு வாகனங்களை அழைக்கமுடியும் என்பதன் முக்கியத்துவம் இத்தகைய மொழி தெரியாத இடங்களில் மாட்டிக்கொண்டால் மட்டுமே விளங்கும். 3. கூகுள் வழிகாட்டி. பெயர்ப்பலகைகளை வாசிக்கவும் முடியாது. யாரிடமும் கேட்கவும் முடியாது எனும் இக்கட்டான நிலையில் கூகுள் வழிகாட்டி நம்மைக் கைபிடித்து அழைத்துச்  செல்லும். ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமூகம் 21ஆம் நூற்றாண்டில் வாழமுடியாது என்ற கற்பிதத்தை ருஷ்யா உடைத்தெறிந்திருக்கிறது. ருஷ்யாவில் வோட்காவும் இன்னபிற மது வகைகளும் ஆறாக ஓடுகிறது. உலகப் பிரசித்திபெற்ற  சரக்குகளும்கூட ஒப்பீட்டளவில் விலை மலிவாகக் கிடைக்கின்றன.

தேசியபானமான வோட்கா 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிராண்டுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. எல்லா பலசரக்குக் கடைகளிலும் விரிவான மதுவகைகளுக்கான பிரிவு உண்டு. ஆனால் என் பயணம் முழுவதும் தள்ளாடி நடந்த ஒருவரையும் என்னால் காண முடியவில்லை.(தள்ளாடாமல் எப்போதும் போல் நடந்து செல்வதற்கு ஏன்  குடிக்கவேண்டும் என்று தெரியவில்லை) வோட்காவை ஒரு இடதுசாரி பானமாகக் கருதி இன்றளவும்  (சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னும்) வோட்காவிற்கு விசுவாசமாக இருக்கும் நம் மதுரை நண்பர்கள் உண்டு. ஆண்டன் செக்காவ் குடித்த பானமல்லவா!. ருஷ்ய முறையில் வோட்கா பருகுவதற்கான பாரம்பரிய முறை ஒன்று உண்டாம். வோட்காவை எடுத்து அப்படியே நன்னாரி சர்பத் போல குடித்துவிடக்கூடாது. தண்ணீர் பாக்கெட்டின் முனையை பல்லால் கடித்து தண்ணீரைப் பீச்சி அடிப்பது, முக்கால் லிட்டர்  செவன் அப்பை கலப்பது போன்ற அராஜகங்களில் இறங்கக் கூடாது. சில மிடறு வோட்காவை தம்ளரில் வடித்து, ஒரு முறை ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளவேண்டும். பின் தம்ளரை மெதுவாக வாயருகே கொண்டு செல்லவேண்டும். உதட்டில் தம்ளரை பொருத்தி… மின்னல் வேகத்தில் ஒரே மடக்கில் குடித்து முடிக்கவேண்டும். இது வோட்கா பருகுவதற்கான என்னுடைய பரிந்துரை அல்ல.

ஆண்டன் செக்காவ் வோட்கா பருகும் முறை பற்றி எழுதிய குறிப்பு. வோட்கா பருகுவதற்கு தகுந்த சூழ்நிலைகளும் காரணங்களும் வேண்டுமாம். உலகம் முழுமையும் வோட்கா ‘குடிக்கப் பழகுபவர்களுக்கு' உகந்த பானமாகக் கருதப்படுகிறது. எந்த வகையான பழச்சாற்றுடனும் கலந்து பருகுவதற்கு ஏற்றதாக இருப்பதால் பெண்கள் அதிகம் விரும்பும் பானமாகவும் இருக்கிறது. புரட்சிகர பானத்தின் இன்றைய நிலை இதுதான். காலக் கொடுமை. ருஷ்யாவின் பாதாள ரயில் நிலையங்கள் புகழ்பெற்றவை. நாம் அச்சப்படும் அளவுக்கு அதள பாதாளத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையங்கள். செங்குத்தான நகரும் படிக்கட்டுகள் ஆச்சரியமூட்டக்கூடியவை. 1935 லிருந்து இயங்கிவரும் மாஸ்கோ நகரின் பாதாள ரயில் ஸ்டாலின் ஆட்சிக்காலத்திய சாதனைகளுள் ஒன்று என்கிறார்கள். மாஸ்கோவின் சுற்றுலா கவர்ச்சிகளுள் ஒன்றாக இந்த பாதாள ரயில் நிலையங்களையும் குறிப்பிடுகிறார்கள். வெவ்வேறு வகைகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள 13 ரயில் நிலையங்களும் பார்க்கத் தக்கவை. ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டிருக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டவை.

மாஸ்கோவில் பல இடங்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட மீன்கள் விற்கப்படுவதைப் பார்க்க முடிந்தது. ஒரு சந்தையில் முழுக்க இத்தகைய மீன்களை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த மீன்கள் சமீபத்தில் பிடிக்கப்பட்டவைகளாகவும் இல்லை. முற்றிலும் காய்ந்து கருவாட்டின் நிலையிலும் இல்லை. விசாரித்தபோது தெரிந்தது. அது ஒரு பாரம்பரியமான முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு என்று. குளிர்நாடுகளில் பனிக்காலங்களில் சேமித்துவைத்து உண்பதற்கான உணவுப் பொருட்கள் குறிப்பாக இறைச்சி, மீன் வகைகளைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி வருகின்றனர் அல்லவா! அத்தகைய முறைகளில் ஒன்றாக ருஷ்யர்கள் மீன்களின் உள்ளுறுப்புகளை எடுத்துச் சுத்தப்படுத்தியபின் உப்பை மட்டும் தடவி புகைமூட்டத்தில் பதப்படுத்தும் முறையாம் அது. புகையின் வெப்பத்தில் நீர்ச்சத்து முழுதும் வற்றி நீண்டநாட்கள் கெடாமல் இருக்கக்கூடிய உணவு. மாதிரிக்காக ஒரு மீனை வாங்கி தோலை உரித்துவிட்டு அப்படியே சாப்பிட முடிந்தது. அது அங்கு ஒரு விரும்பப்படும் உணவாகத் தென்பட்டது. மற்றபடி ருஷ்ய நகரங்களில் அமெரிக்காவின் கே.எஃப்.சி., மெக்டனால்ட் துரித கடைகளில் கூட்டம் அலைமோதுவதையும் காணமுடிந்தது.

மாஸ்கோவின் போல்ஸ்வோய் நாடக அரங்கம் (bolshoi theatre) 1825 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற நாடக அரங்கம். பேலட் மற்றும் ஓப்ரா வகையான நாடகங்களுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டு 1853 இல் ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட அற்புதமான அரங்கம். அதில் ஒரு நாடகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது. இத்தகைய நாடக அரங்குகள் முன்னொருகாலத்தில் அரசர்கள், பிரபுக்கள், உயர் குடியினருக்கானவை. நம்மைப் போன்றவர்கள் ருஷ்ய நாவல்களில் மட்டுமே படித்து கற்பனை செய்தவை. இந்த அரங்கங்களுக்குள் நாடகம் பார்ப்பதற்கென்று தனிப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட உடைகள் உண்டு. இப்போது அந்த முறைகளெல்லாம் இல்லையென்றாலும் திரையரங்குகளை விட உயர்வான நிலையிலேயே நாடக அரங்குகள் பேணப்படுவதைக் காணமுடிந்தது. இடைவேளைகளில் அங்கிருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் ஒயின் அருந்தலாம். தின்பண்டங்களை ருசிக்கலாம். ஆனால் அரங்கிற்குள் எதையும் எடுத்துச் செல்லமுடியாது. அக்டோபர் புரட்சி காலத்திலும் அதற்குப்பிந்தைய காலங்களிலும் இந்தப் புகழ்பெற்ற நாடக அரங்கும் அதைச் சார்ந்த நாடக செயற்பாடுகளும் தொடர்வதில் எந்த இடர்ப்பாடும் இல்லை என்பது கவனிக்கவேண்டியது.

ஜார் மன்னரின் கோடைக்கால குளிர்கால அரண்மனைகள் பிரமிப்பூட்டக்கூடியவை. மிகநீண்ட பூங்காவைக் கடந்து உள்நுழைந்தால் நம் மூச்சு நின்றுவிடக்கூடும். அரண்மணையின் வேலைப்பாடுகள், தங்க நிறத்தில் ஜொலிக்கும் அறைகள், விளக்குகள், கலைப் பொருட்கள் எல்லாம் ஒரு விசயத்தை தெளிவாக்கியது. மக்கள் பசியிலும் பஞ்சத்திலும் இருந்தபோது ஜார் மன்னன் இத்தைய அரண்மணையில் வசித்திருக்கும் பட்சத்தில் புரட்சி வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

ருஷ்ய வரலாற்றின் புகழ்பெற்ற கிரம்ளின் சதுக்கம் நமக்கு புரட்சிக்கு முந்தைய பிந்தைய பல்வேறு நிகழ்வுகளை நினைவூட்டும். அங்குள்ள ஒரு பாதாள அறையில் முழுக்க கருப்பு சலவைக்கற்களால் ஆன அரங்கில் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடலைப் பார்க்க முடிந்தது. அரங்கின் மூலைகளில் அசையாமல் நின்றிருக்கும் ராணுவவீரர்களைக் கடந்து நிசப்தமான அந்த அறையில் படுத்த நிலையில், சற்றுமுன்னர்தான் படுத்துத் தூங்குவதைப் போன்ற முகத்தைப் பார்க்கலாம். விளாடிமீர் இலீயிச் லெனின் என்ற அந்த வாய்க்குள் நுழையாத பெயர் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டதற்குக் காரணங்கள் உண்டு. நான் +2 படிக்கும்போது விருதுநகரில் பொட்டல் எனப்படும் பொதுமைதானத்தில் சிறு பந்தலில் சோவியத் புத்தகக் காட்சி நடக்கும்.

அங்கு மூன்று ரூபாய்க்குள் நான் முதன் முதலில் சொந்தப் பணத்தில் வாங்கிய புத்தகம் லெனினின் வாழ்க்கைக் கதை என்ற அந்த நூல். அதைத் தொடர்ந்து சோவியத் மாத இதழுக்குச் சந்தா கட்டி தருவிக்கும் அளவுக்கு ரஷ்ய ஆதரவாளனாகவும் மாறியிருந்தேன். மேலும் ரஷ்யப்புரட்சி. உலகை பொதுவுடமைச் சமூகமாக மாற்றப்போகும் கம்யூனிசத்தின் பால் இயல்பாக ஏற்பட்ட கல்லூரிக்கால நம்பிக்கைகள். எல்லாமும் லெனினையும் ருஷ்யாவையும் மனதுக்கு நெருக்கமானவைகளாக மாற்றிவிட்டிருந்தன. அன்று பலரைப் போல எனக்கும் ஒரு கனவு பூமியாக இருந்த ருஷ்யா இன்று என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. எது எப்படியோ இந்த இரண்டுவாரகாலத்தில் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் மற்றுமான சிறு நகரங்களில் எங்கும் ஒரு சிவப்புக் கொடியை, சிவப்பு நிறத்தை காணமுடியவில்லை. மட்டுமல்ல. அந்த புரட்சிக்குப் பிந்தைய வரலாற்றை நினைவு படுத்தும் எந்த அம்சத்தையும் காண இயலவில்லை என்பதான ஒரு வெறுமை உணர்வோடேயே எழில் மிகு மாஸ்கோவை விட்டுப் பிரிந்தேன்.

(பயணங்கள் முடியவில்லை)