பயணங்கள் 
தொடர்கள்

இலக்கற்ற பயணங்கள் - 2

திசையாற்றுப்படை -7

இரா.பிரபாகர்

சிங்கப்பூரின் வரலாறு 14ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பிக்கிறது. பிரிட்டனின் காலனி ஆனபிறகான சிங்கப்பூரின் வரலாறே நமக்கு துலக்கமாகத் தெரிவது. தெரிந்துகொள்ளவேண்டியதும் கூட. 1800களின் தொடக்கத்தில் பிரிட்டன் வணிக நோக்கத்திற்காக சிங்கப்பூர் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்வதில் ஆரம்பித்த பேச்சுவார்த்தை 1860களில் வழக்கம்போல் பிரிட்டனின் காலனியாக மாறுவதில் போய் முடிந்தது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அதன் புவியியல் இருப்பே முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் இயற்கைத் துறைமுகமாக இருப்பது இயற்கை அளித்த வரம். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்டு ஜப்பான் பின்வாங்கியபோது மீண்டும் பிரிட்டனின் வசமாகி, பிரிட்டன் சிங்கப்பூரை விட்டு 1960களில் விலகியபோது மலேசியாவுடன் இணைக்கப்பட்டது. இனப்பிரச்னைகள் மற்றுமான பொருளாதார பிரச்சனைகள் தலைதூக்கியபோது சிங்கப்பூரை மலேசியா வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. மக்களின் விருப்பத்திற்கு மாறாகத்தான் 1965இல் சிங்கப்பூர் எனும் நாடு உருவானது. அதன் பின் லீக்வான் எனும் ஒற்றை மனிதரின் தொலைநோக்குப் பார்வையும், நேர்மறையான அணுகுமுறையும், உழைப்பும் சிங்கப்பூரை ஒரு சுவர்க்கபூமியாக மாற்றியது என்பது உலகம் அறிந்த வரலாறு. சிங்கப்பூரின் புவியியல் இருப்பினால் அவர்களுக்குக் கிடைத்த இயற்கைத் துறைமுகத்தை நவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான நிர்வாகத்தால் உலகின் தலைசிறந்த துறைமுகமாக மாற்றியிருக்கிறார்கள். 125 நாடுகளிலுள்ள 600 துறைமுகங்களுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கப்பல்கள் வந்து போகின்றன. இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு கப்பல் புறப்படும் சிங்கப்பூர் துறைமுகத்தில் பணியாளர்கள் மட்டுமே 1 லட்சத்து 70ஆயிரம்பேர்.

சிங்கப்பூரில் இறங்கியவுடன் உங்களை 1300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சிங்கப்பூர் விமான நிலையம் வாயைப் பிளக்கவைக்கும். தமிழர்களைப் பயமுறுத்தும் சுத்தத்துடன் விமானநிலைய தரைத் தளமெங்கும் விரிக்கப்பட்ட கார்பெட்டில் மெத் மெத்தென நடந்துபோகும் போது அது வேறு உலகமாகத் தோன்றும். சர்வதேச அளவில் 490 விருதுகளைப் பெற்ற விமானநிலையம் என்றால் சும்மாவா! வாரத்திற்கு 6700 விமானங்கள் உலகின் 300 நகரங்களை இணைக்க, 90 வினாடிகளுக்கு ஒரு விமானம் வரிசைகட்டி விண்ணில் பாய்ந்தபடி இருக்கிறது.

ஒரு சில பக்கங்களில் அடங்கிவிடக்கூடிய சிங்கப்பூரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. மதுரை போன்ற ஒரு திறந்தவெளி அருங்காட்சியகத்தில் வாழும் நமக்கு சிங்கப்பூரின் பழமையும் பாரம்பரியமும் பெரிதாக ஈர்ப்பதில்லை. அன்றாடம் வரலாற்றின் மீதே நடந்து உலாவிக்கொண்டிருப்பவர்கள் அல்லவா நாம்? ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியும் ஒரு நவீன சமூகமாக சிங்கப்பூர் வளர்த்தெடுக்கப்பட்ட விதமும் நாம் கவனித்துப் பார்க்கத்தக்கனதான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடக்கூடியதாக இருந்தாலும் காட்சிப்படுத்தியவிதத்திலும், பராமரிப்பிலும் உலகத்தரமான அருங்காட்சியகம். சிங்கப்பூர் அரசு சிங்கப்பூரை ஒரு நாடு என்று சொல்லிக்கொள்வதைவிட சிங்கப்பூரை ஓர் ‘உலக நகரம்' (குளோபல் சிட்டி) என்றே அழைக்கவிரும்புகிறது.

ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் சுற்றுலாபயணிகளை மனதில்கொண்ட பிரமாண்டங்களை உருவாக்கியபடி இருக்கிறார்கள். இந்தமுறை புதிதாக இணைந்துள்ள பிரம்மாண்டங்களில் தவறவிடக்கூடாத இடம் ‘Gardens By the Bay, Cloud Forest, Flower Dome' ஆகிய செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கைக் காட்சியகங்கள். அதனாலேயே இயற்கையை விஞ்சும் நேர்த்தியுடனும் அழகுணர்ச்சியுடனும் இருக்கின்றன. ஒருவகையான மீ யதார்த்த (ஹைப்பர் ரியலிச) உலகம். ஒருவகையில் கேமரூனின் ‘அவதார்' திரைப்படத்தின் மிதக்கும் மலைகளில் உலவுவதை ஒத்திருக்கும். கண்ணாடியினால் மூடப்பட்ட உலகின் பிரமாண்டமான பசுமைக் குடில் ஒன்றுக்குள் தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இலட்சக்கணக்கான தாவரங்களையும் மரங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். எதிர்கால பெருநகரங்களில் இத்தகைய செயற்கையான தோட்டங்களில்தான் மனிதர்கள் உலவவேண்டியிருக்கலாம். இன்னொருபுறம் செயற்கையா? இயற்கையா? எனப் பகுக்கமுடியாத திகட்டவைக்கும் மலர்களின் சங்கமம். செல்ஃபி பிரியர்களுக்கான இடம். இப்போதெல்லாம் மனிதர்கள் ஒரு விசயத்தைப் பார்த்து ரசிப்பதைவிட புகைப்படமாக்கிப் பார்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்தத் தொடங்கிவிட்டனர் அல்லவா?

சிங்கப்பூர் அரசு சிங்கப்பூரை பசுமை சூழ்ந்த நகராக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்துவிட்டதாகவே சொல்லவேண்டும். சாலைகளின் இருமருங்கிலும் மரங்கள், புல்தரைகள் என எங்கும் பசுமை தென்படும் நகரில் பறவைகளைக் காண்பது அரிதாக இருந்தது. பறவைகளைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூரின் பொதுவெளிகளில் பெரும்பாலும் பூக்காத, காய்க்காத மரங்களே நடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர்வாசி ஒருவர் தெரிவித்தார். பறவைகள் எச்சமிட்டு கார்களையும் கட்டிடங்களையும் நாசம் செய்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு என்பது முழு உண்மையா என்று தெரியவில்லை. முஸ்தபா அங்காடியின் கூரையில் ஒரு காகத்தைப் பார்க்கநேர்ந்தது. மற்றபடி அங்கிருக்கும் மரங்களின் அளவுக்கான பறவைகளைக் காணமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இயற்கையில் நமக்குப் பிடித்தமான, தேவையான உயிர்களை மட்டும் அனுமதிக்கும் உரிமை மனிதர்களுக்கு இருக்கிறதா? 21ஆம் நூற்றாண்டின் ‘செயற்கை நுண்ணறிவு' யுகத்திற்குள் நுழைந்துவிட்ட பிறகு இத்தகைய தார்மீகக் கேள்விகளுக்கு இடமிருக்கிறதா?

எந்த நகரத்திற்கு அல்லது நாட்டுக்குச் சென்றாலும் அங்கு நிகழும் கலை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். இணையத்தில் தேடியதில் அன்று இரவு நிகழ இருக்கும் ஜாஸ் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. கட்டணம் ஏதுமில்லை ஆனால் முன்பதிவு அவசியம் என்று அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் வாடகைக் கார் ஓட்டுநர்கள் போல் வேறெங்கும் பார்க்க முடியாது. எவ்வளவு குழப்பம் என்றாலும் முகத்தில் துளி அசௌகரியத்தைக் காட்டாதவர்கள். நான் காட்டிய முகவரி ஒரு சந்தில் போய்முடிந்தது. நான் எதிர்பார்த்தது ஒரு அரங்கம். அந்த இடத்தில் அப்படியான ஒரு அரங்கு இருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இறங்கி அந்த பெயரைச் சொன்னபோது அந்த சந்துக்குள்தான் இருப்பதாகச் சொன்னார்கள். சந்துக்குள் நுழைந்த பிறகுதான் தெரிந்தது அது இருமருங்கும் மதுச்சாலைகள் நிறைந்த ஒரு சந்து. தயக்கத்துடன் அந்த முகவரியை அடைந்தபோது அதுவும் ஒரு மதுக்கூடம்தான் என்று தெரிந்தது. அந்த மதுக்கூடத்தின் மேல் மாடியில் அந்த சிறிய அரங்கம் இருந்தது. 30பேர் நெருங்கி அமரக்கூடிய அரங்கம். சிறிய மேடையில் இசைக் கருவிகள் காத்திருந்தன. நானும் என் துணைவியார் மற்றும் மகளுடன் இன்னொரு நண்பருமாக அமர்ந்து காத்திருந்தோம். சிலர் பியர்களையும் காக்டெய்ல்களையும் அருந்திக்கொண்டிருந்தார்கள். ஏதாவது வாங்கியாக வேண்டும் என்ற நேரடியான அல்லது மறைமுகமான அழுத்தங்கள் எதுவும் இல்லை. வெகுவிரைவில் அரங்கம் நிறைந்தது. இந்த இடத்தில் ஜாஸ் இசை பற்றிச் சொல்லிவிடவேண்டும்.

ஜாஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைகளாய் பண்ணைகளில் வேலைமுடித்து களைத்து அவர்களிடமிருந்த சொற்ப இசைக் கருவிகளைக்கொண்டு மாலைநேர மதுக்கூடுகைகளில் நிகழ்த்தத் தொடங்கிய இசை. பெரிய திட்டமிடல் இல்லாமல் அதற்கான ஒரு தாளகதியில் கலைஞர்கள் இணைந்து கொள்ளமுடியும். இன்றைக்கு ஜாஸ் பல கிளைகளாக வளர்ந்த ஒரு இசை வடிவம். நிறைய பரிசோதனைகளுக்கு இடமளிக்கும் வடிவம். ஒரு பெண்மணி பியானோவில் ஆரம்பிக்க டிரம்ஸ் , கிதார் துணைக்கு ஒரு சாக்ஸபோன். அங்கு வந்திருந்தவர்கள் அந்த இசைக்கும் அங்கு இசைக்கும் கலைஞர்களுக்கும் பழக்கமானவர்களாக இருக்கவேண்டும். தகுந்த இடங்களில் கைகளைத் தட்டினார்கள்.

முதல் பாடல் முடிந்ததும் அந்த பெண்மணி கூட்டத்தினருக்கு அழைப்புவிடுத்தார். பின்புதான் தெரிந்தது அங்கு அமர்ந்திருந்தவர்களில் சிலர் கருவிகளோடு வந்திருந்தார்கள். அடுத்து யார் வருவது? என்று கேட்டதும் ஒருவர் வாத்தியத்தோடு எழுந்தபோது கைதட்டி கூட்டத்தினர் வரவேற்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு கலைஞர்கள் இணைந்துகொண்டார்கள். நமக்காக இல்லையென்றாலும் கலைஞர்களுக்காக ஒரு பியரை வாங்கிக் கொண்டு அந்த இசைச் சூழலில் இணைய முயற்சித்தேன். இதற்கிடையே டிரம்மர் தனி ஆவர்த்தனமாக உருட்டிக்கொண்டிருந்தார். என் மகள் ‘அப்பா, பானைக்குள்ள நண்டு விழுந்தமாதிரி உருட்டுறார். நீ என்ன புரியுதுன்னு ரசிக்கிற மாதிரி நடிக்கிற?' என்று காதுக்குள் சொன்னதில் இருந்த பாதி உண்மையை ஏற்றுக்கொண்டு இடத்தைக் காலி செய்தோம். ஆனால் அந்த இடமும் அங்கு குழுமியிருந்த இசைக் கலைஞர்களும் வணிக நோக்கம் பெரிதாக இல்லாத அவர்களின் கூடுகையும் அங்கிருந்த ஒரு இசைமயமான அதிர்வும் மதிக்கத்தக்கதாக இருந்தது. சிங்கப்பூர் ஒரு கலை வறட்சியான நகரமோ என்ற என் எண்ணத்தை அந்த மாலைப்பொழுது கொஞ்சம் அசைத்தது. ஆனாலும் எனக்குச் சில அடிப்படைக் கேள்விகள் உண்டு.

சிங்கப்பூர் அரசு தன் குடிமக்களை கலை ஆர்வலர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் வளர்த்தெடுப்பதில் பெரும் முனைப்புக் காட்டிவருகிறது. சிங்கப்பூரின் கலை அருங்காட்சியகம் ஒரு உதாரணம். இசை நிகழ்வுகள், நாடகங்கள், நடனவிழாக்கள், சர்வதேச தரத்திலான உள்ளரங்குகள் எதற்கும் குறைவில்லை. சிங்கப்பூரின் உள்ளரங்குகள் போல் தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை. சிங்கப்பூர் நூலகத்தை மாதிரியாகக் கொண்டதே நம் அண்ணா மற்றும் கலைஞர் நூலகங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்ட நூலகங்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆனால் சிங்கப்பூர் இயக்குநர்களால் எடுக்கப்பட்ட, பெயர் சொல்லும்படியான ஒரு திரைப்படத்தையும் இதுவரை நான் காண வாய்க்கவில்லை. எழுத்தாளர்கள், கலைஞர்களாக அறியப்படுபவர்களும் அதிகமில்லை என்பதும் ஒரு வேடிக்கையான முரண். தமிழில் இப்போது சில இளைஞர்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதல். இவ்வளவு பாதுகாப்பான, ஆதரவான சூழல் படைப்பாற்றலுக்கு உதவாதோ? 30 ஆண்டுகளாக போர்ச்சூழலில் மாட்டிக்கொண்ட இலங்கையிலிருந்து காத்திரமான இலக்கியமும் சினிமாக்களும் வந்தவண்ணமிருப்பதைக் காணும்போது, கலைஞர்களுக்கு கொஞ்சம் துயரமும், பிரச்னைகளும் வேண்டுமோ என்னவோ?

 இந்தப்பயணத்தில் எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு வான்காவின் மல்டி மீடியா ஓவியக் கண்காட்சி Immersive experience என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்த அந்த நிகழ்வுக்கு இந்திய மதிப்பில் 2000 ரூபாய்க்குமேல் கட்டணம் கேட்டார்கள். என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் சந்தோசா விலிருந்த அரங்குக்கு மாலையில் போய்ச் சேர்ந்தோம். வான்காவின் வாழ்க்கைக் குறிப்புகளோடு வான்காவின் படைப்புகளை டிஜிட்டல் முறையில் பெரிதாக்கி வைத்திருந்தார்கள். அரங்கத்தில் வான்காவைப் பற்றிய ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது. வான்காவின் ‘அறை' ஓவியம் முப்பரிமாண அரங்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டிலில் நாம் அமர்ந்து பார்க்கலாம். அடுத்ததாக கண்களில் மாட்டிக்கொள்ளக்கூடிய ஒரு சாதனத்தை அணிந்துகொண்டு வான்காவின் கோதுமை வயல்களுக்குள் நடக்கத் தொடங்கி எந்தத் திசைக்குத் திரும்பினாலும் வான்காவின் முப்பரிமாண ஓவியத்திற்குள் நுழைந்துவிடுவீர்கள். அது ஓர் அற்புதமான அனுபவம். உச்சபட்சமாக ஒரு பெரிய செவ்வக அறைக்குள் திரையை விலக்கி உள்ளே சென்றால் அங்கே நான்கு சுவர்களிலும் தரையிலுமாக வான்காவின் ஓவியங்கள் நகர்ந்தபடி இருக்கும். விதவிதமான இருக்கைகள், மெத்தைகள்.

வான்காவின் மல்டி மீடியா ஓவியக் கண்காட்சி - Immersive experience

நாம் உட்கார்ந்து கொண்டும் படுத்துக்கொண்டும் அந்த இசையுடன் உயிர் பெறும் ஓவியங்களை, சில சுருக்கமான வர்ணனைகளுடன் பார்க்கமுடியும். சிறிது காலம் வான்காவின் ஓவியங்களுக்குள்ளேயே வாழலாம். நம் மேலும் வான்காவின் தூரிகை வரைந்து செல்லும். வான்கா அவர் ஓவியங்களில் பயன்படுத்தும் வண்ணங்களின் தன்மையும், அவருடைய தனித்துவமான தூரிகைத் தீற்றல்களும் அந்த புதிய பரிசோதனைக்கு ஏதுவாக அமைந்திருந்தது.

வான்காவின் 'அறை' யில் கட்டுரையாளர்

மேற்கத்தியர்கள் எப்படி புதிய தொழில்நுட்பங்களை கலாபூர்வமாகக் கையாண்டு புதிய கலை வடிவங்களை சாத்தியமாக்கி அதை வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக விற்றுத்தீர்த்துவிடுகிறார்கள் என்பது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விசயம். இனி உலகப் புகழ்பெற்ற ஓவியர்களை இந்த வடிவத்தில் தரிசிக்கமுடியும். நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியர்களும் கணினி வரைகலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து உருவாக்கிய இந்த காட்சியின் வணிக வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் இக்காட்சி வர இருப்பதான அறிவிப்பைப் பார்க்கமுடிந்தது. அந்த பட்டியலில் சென்னையும் உண்டு.

நம் செய்தித்தாள்களில் இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். ஓர் எளிய குடிமகனாக நமக்குத் தெரிவதெல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரின் ஒரு டாலர் 30 ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு டாலர் 62 ரூபாயைத் தொட்டுவிட்டது. ஆனாலும் முதன்முதலாக ஒரு வெளிநாட்டுப் பயணத்தை முயற்சிக்கிறவர்களுக்கு சிங்கப்பூர் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

(பயணங்கள் முடியவில்லை)