தொடர்கள்

இரு பக்கமும் கூரான கத்தி - மந்திரச்சாவி -7

டாக்டர் சங்கர் குமார்

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி, திங்கட்கிழமை.

பல வருடங்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகமும் முதலீடும் செய்துவரும் அனைவருக்கும் இந்த நாள் மறக்க முடியாத நாள். இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் இது  ஒரு கருப்பு தினம். இந்தியா மட்டும்தான் என்றில்லை. உலக அளவில் அனைத்து பங்குச்சந்தைகளும் பெரிய சரிவைச் சந்தித்த நாள் அது.ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் சராசரியாக 3 முதல் 4 சதவிகிதம் சரிவை சந்தித்தபோது இந்தியப் பங்குச்சந்தைகள் 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன. அப்படி அன்று என்னதான் நிகழ்ந்தது? பொருளாதார ரீதியில் உலக அளவில் மிகப் பெரும் நாடாகக் கருதப்படும் அமெரிக்கா, பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளது என்று வெளியான செய்தியை அடுத்து பங்குச் சந்தைகளில் தீ பிடித்தது போல ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட சிக்கலை சமாளிக்க, அந்நாட்டைச் சேர்ந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்(Foreign Institutional Investors ) பல நாடுகளிலும் பங்குச்சந்தைகளில் செய்திருந்த தனது முதலீடுகளைப் பணமாக்க முயற்சித்தன. கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் தனது வசம் இருந்த பங்குகளை இந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஒரே சமயத்தில் விற்க முயற்சிக்க விலைகள் சரசரவென சரிந்தன. விலைகள் சரிவதன் காரணம் சரியாகத் தெரியாத நம்மைப் போன்ற "ச்சோட்டா" வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் பயத்திலும் பதற்றத்திலும் தம்முடைய பங்குகளையும் விற்க முயற்சிக்க, வாங்குவதற்கு ஆட்கள் யாருமில்லாத நிலையில் மேலும் களேபரமானது சந்தை. கிடைத்தது போதும் என்று வந்த விலைக்கு அனைவரும் விற்று பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். அன்றைய தினம் பிற்பகல் வர்த்தகத்தின் சில மணி நேரங்களில் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தன. சென்செக்ஸ் அன்று ஒரே நாளில் மட்டும் 2063 புள்ளிகள் வரை சரிந்து,(10.8%) கடைசி சில நிமிடங்களில் இழப்பைக் கொஞ்சம் ஈடுகட்டி 1450 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன. அதேபோல நிப்டியும் கிட்டத்தட்ட 715 புள்ளிகள் வரை குறைந்து (12.5%) பின்னர் தட்டுத் தடுமாறிக் கொஞ்சம் மேலே ஏறி  சுமார் 500 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தன.

இதைத் தொடர்ந்து அடுத்த நாளான செவ்வாய்கிழமையன்று நிலைமை இன்னும் மோசமானது. சந்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் சுமார் 2200 புள்ளிகள் குறைந்துவிட முதலீட்டாளர்களின் பதற்றத்தைப் போக்கும் வகையில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மூடப்பட்டு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2004 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து சிகரத்திற்குப் போன பங்குச்சந்தைக் குறியீடுகள் (நிப்டி நான்கே ஆண்டுகளில் 1700லிருந்து 6350 வரை போனது) இரண்டே நாட்களில் பெருமளவு சரிந்து முதலீட்டாளர்களுக்கு சுமார் 6 லட்சம் கோடிகள் (எத்தனை சைபர்கள் வரும் இதற்கு?) ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தின. நான்கு ஆண்டுகளில் பல தற்காலிக மில்லியனர்களை உருவாக்கிய பங்குச் சந்தைகள் இரண்டே நாட்களில் பலரையும் "துண்டைக் காணோம்;துணியைக் காணோம்" என்று ஓட வைத்தது. பங்குவர்த்தகம் என்பது கண்டிப்பாக சூதாட்டம்தான் என்று பலர் தீர்க்கமான முடிவுக்கு வந்தனர். நான்கே ஆண்டுகளில் பணக்காரர்களான மிதப்பில் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு, நண்பர்களின் பொறாமைக்கு ஆளான பலரும் அதே நண்பர்களால் "அன்னிக்கே சொன்னேனே, கேட்டியா?" என்று அறிவுரை சொல்லப்படும் பரிதாபமான நிலைமைக்குத் தள்ளப் பட்டனர். பலரும்  பள்ளத்தாக்கில் வீழ்ந்த  இதே இரண்டு நாட்களில்  விஷயம் தெரிந்த சிலர்  பல்லக்கில் ஏறி உட்கார்ந்த  நிகழ்வுகளும் நடந்தன. பலருக்கு புதைகுழியாக ஆகிப்போன இந்த இரண்டு நாட்களின் பங்குச்சந்தை வீழ்ச்சி சிலருக்கு புதையலாக அமைந்து போனதுதான் "ஷார்ட் செல்லிங் "(Short Selling) எனப்படும் இரண்டு வார்த்தைகளில் பொதிந்துள்ள சூட்சுமம். இந்த சூட்சுமம் தெரிந்ததால்தான் போன அத்தியாயத்தில் எனது அப்பார்ட்மெண்ட் நண்பர் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தபோதிலும் லாபம் சம்பாதித்தார். சில உதாரணங்களைக் காண்போமா?

"எஸ்ஸார் ஆயில்" என்ற நிறுவனம் ஏதோ காரணங்களுக்காக என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிறுவனம்.( எனது பெயரின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து S.R  என்று இருப்பதாலோ என்னமோ?). இது ஒரு எண்ணெய் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை 2004 ஆம் ஆண்டின் துவக்கத்தில் 17 ரூபாய் அளவில் இருந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 356 ரூபாய் வரை போனது. வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீடு, நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் ரூபாய் ஆனது. அளவுக்கு மீறி ஊதப்பட்ட பலூன் வெடித்தே ஆகவேண்டும் என்பதுதானே நியதி? இரண்டு நாட்களில் எஸ்ஸார் நிறுவனப் பங்குகளின் விலை 356லிருந்து 101 ரூபாய்க்கு குறைந்தன. சுமார் 70 சதவிகிதம். 17 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு பரவாயில்லை. 350 ரூபாய்க்கு இன்னும் உயரும் என்ற நம்பிக்கையில் வாங்கியவர்கள், அதன் பின்னர் பங்குச்சந்தைப் பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டார்கள். அந்த கருப்பு திங்கட்கிழமையன்று காலையில் 271 ரூபாய்க்கு வர்த்தகமான பங்குகள் சில மணி நேரங்களில் 171க்கு சரிந்தது. அடுத்த நாள் காலையில் 174 ரூபாய்க்கு விற்ற பங்குகள் பத்தே நிமிடங்களில் 101க்கு போனது. இந்த பாதாள சரிவில், Short Selling முறையை உபயோகித்து பாக்கெட்டை நிரப்பியவர்கள் வெகு சிலரே. Short Selling என்பது நம்மிடம் பங்குகள் இல்லாமலே யாரிடமாவது கடன் வாங்கி வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு பின்னர் நாம் வாங்கியவர்களுக்குத் திருப்பி கொடுத்து விடுவது. உதாரணத்திற்கு உங்கள் நண்பர் ரஜினியிடம் வாங்கி கமலுக்கு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். பின்னர் வேறு எவரிடமாவது வாங்கி ரஜினிக்கு கொடுக்க வேண்டும். அதுவும் அன்று சாயங்காலம் 3.30 மணிக்கு சந்தை மூடும் முன்பாக. ஆனால் எவரிடம் வாங்குகிறோம், எவருக்கு விற்கிறோம், மறுபடி எவரிடம் வாங்கி முதலில் வாங்கியவருக்குத் திருப்பித் தருகிறோம் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். அதனை நமது புரோக்கரும் வளர்ந்து விட்ட தொழில் நுட்பமும் கவனித்துக் கொள்ளும். நமக்குத் தேவையானது பங்கின் விலைகள் என்ன என்பதுதான்.

உதாரணத்திற்கு அந்த கருப்பு திங்கட்கிழமையின் காலை நேரத்தில் எஸ்ஸார் நிறுவனப் பங்குகளின் விலைகள் குறையப் போகின்றன என்பதை ஏதோ பட்சி உங்களிடத்தில் சொல்லுவதாக வைத்துக் கொள்வோம். (பட்சி சொல்லுவதை நம்பி விடாதீர்கள். இதனை கணிக்க வேறு வழிகளைப் பின்னால் பார்க்கப் போகிறோம்). காலையில் சந்தை ஆரம்பித்தவுடன் சுமார் 260 ரூபாயில் உங்களிடம் இல்லாத எஸ்ஸார் நிறுவனப் பங்குகளை நீங்கள் விற்று விட்டீர்கள். அதாவது ஷார்ட் செல்லிங் செய்து விட்டீர்கள். (ஷார்ட் செல்லிங் செய்வதற்கு பங்குகள்தாம் தேவையில்லை என்று சொன்னேன். ஆனால் உங்கள் அக்கவுண்டில் பணம் இருக்க வேண்டும்). சிலமணி நேரங்களில் விலை குறைந்து 180 ரூபாய்க்கு வந்து விட்டது. இப்போது நீங்கள் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கி சரி செய்து விடுகிறீர்கள். கிட்டத்தட்ட ஒரு பங்குக்கு 80 ரூபாய் லாபம். அதாவது முப்பது சதவிகிதம். இதையே போன அத்தியாயத்தில் பார்த்த மாதிரி மார்ஜின் பணம் உபயோகித்து 3 அல்லது 4 மடங்கு தொகைக்கு வர்த்தகம் செய்திருந்தால் ஒரே நாளில் முதலீடு இரண்டு மடங்கு ஆகியிருக்கும். இதனை நானும் அன்று உபயோகித்து சுமார் 50 சதவிகிதம் லாபம் பார்த்தேன்.

இன்னொரு உதாரணம். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த ஊழலும் அதையொட்டி திரு. ராமலிங்கராஜு கைது செய்யப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும். இது நடந்தது 2009ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி.பலருக்கும் பத்தோடு பதினொன்றாய் இது ஒரு செய்தி.கொஞ்சம் நாள் நண்பர்களுடன் விவாதிக்க கிடைத்த ஒரு விஷயம். அவ்வளவுதான். இதுவே இந்தியப் பங்கு வர்த்தகத்தில் சம்பந்தப்பட்ட பலருக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி.(பாதகமாக பலருக்கும் சாதகமாக சிலருக்கும்). சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் கைது என்ற ஒரு சிறிய செய்தி பல முதலீட்டாளர்களை "ஓட்டாண்டி"களாக ஆக்கியது. எனக்குத் தெரிந்த ஒருவர் நிஜமாகவே மாரடைப்பு மற்றும் மன நலத்திற்காக பல வாரங்கள்  மருத்துவமனையில் இருந்தார். ஆனால் அதே செய்தி  சிலரை லட்சாதிபதிகளாகவும், சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சிலரை கோடீஸ்வரர்களாகவும் ஆக்கியது. முதலீடு என்பது பத்தாயிரம் ரூபாய்தான்.கோடீஸ்வரர்கள் ஆன கதைகளைப் பின்னால் பார்ப்போம். Short Selling  செய்து லட்சம் சம்பாதிதவர்களை மட்டும் இப்போது கவனிப்போம். அந்த ஜனவரி 7ஆம் தேதி எப்போதும் போல்தான் சந்தை ஆரம்பித்தது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனப் பங்குகளின் விலை 188 ரூபாய்க்கு வர்த்தகமாகிக்கொண்டு இருந்தது. அப்போது Flash செய்திகளாக அனைத்து ஊடகங்களிலும் கைது செய்தி வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த நிறுவனப் பங்குகளின் விலை 30 ரூபாய்க்குப் போனது. சுமார்  ஒரு வருடத்திற்கு முன்னால் 550 ரூபாய்க்கு விற்பனையான பங்கு அது. அப்போது முதலீடு செய்தவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். நான் அந்த நாளில் பயணத்தில் இருந்ததால் என்னால் வர்த்தகம் செய்ய முடியவில்லை. செய்தி கிடைத்தவுடன் எனது நண்பர் ஒருவருக்கு Short Sell  செய்யச் சொல்லி அறிவுரை சொன்னேன். அவர் 150 ரூபாய்க்கு சுமார் 2000 பங்குகளை விற்றார். விலை குறைய குறைய 100 ரூபாய்க்கு 1000 பங்குகளையும், 50 ரூபாய்க்கு 1000 பங்குகளையும் வாங்கி சரி செய்துவிட்டார்.. வெறும் 30 நிமிட வேலைக்கு 150000 ரூபாய் லாபம். அதுவும் சரிந்து விழுகின்ற ஒரு நிறுவனத்தின் பங்குகள் மூலமாக.

இதையெல்லாம் பார்க்கும்போது பங்குச்சந்தை சரிந்து விழும் சமயங்களில் மட்டும்தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்பது போல தோன்றும். அது ஓரளவிற்கு உண்மைதான்.. மேட்டில் சைக்கிளில் ஏறுவதுதான் கஷ்டம். இறங்கும்போது நாம் மிதிக்காமலே சரிவில் வேகமாக இறங்கிவிடும். சந்தையும் உயருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விட சரிவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் குறைவு. ஆசையை விட பயம் என்ற உணர்வுக்கு பலம் அதிகம். அதே சமயம் இந்த Short Selling முறையில் பல அபாயங்களும் உள்ளன என்பதை சொல்லியே  ஆகவேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் 100 ரூபாய்க்கு விற்ற பங்குகள் மேலே மேலே உயர்ந்து ஒரே நாளில் 170 ரூபாய்க்கு போவதாக வைத்துக் கொள்வோம். நாளைக்கு விலை கொஞ்சம் குறைந்தவுடன் வாங்கி சரி செய்யலாம் என்பதற்கு எல்லாம் இதில் இடம் இல்லை. "கையில் பங்குகள் இல்லாமல் எதற்கு விற்றாய்? என்ன விலையானாலும் வாங்கிக் கொடு.அதுவும் இன்று சந்தை மூடும் நேரத்திற்கு முன்பாக வேண்டும்." என்பார்கள். கொடுக்க முடியவில்லை என்றால் அடுத்த நாள் பங்குகளை ஏலத்தில் வாங்கி, கூடவே கொஞ்சம் 'பெனால்டி' (Penalty) தொகையும் சேர்த்து கட்ட சொல்லி நமது அக்கவுண்டுக்கு சமாதியே கட்டி விடுவார்கள். எனவே விஷயம் தெரிந்தவர்கள் Short Selling செய்த பிறகு விலையின் போக்கு மாறி உயர ஆரம்பித்தால் உடனே வாங்கி சரி  செய்து சின்ன நஷ்டத்துடன் தப்பித்து விடுவார்கள். சுருக்கமாக சொன்னால் இந்த Short Selling என்பது இரு பக்கமும் கூரான கத்தி. சரியாகப் பயன்படுத்தினால் இரு பக்கமும் உபயோகமாக இருக்கும். இல்லையேல் அனாவசியமாக காயம்பட நேரிடும். அதுமட்டும் இல்லாமல் இதில் நஷ்டத்திற்கு எல்லை என்பது இல்லை. உதாரணமாக 100 ரூபாய்க்கு வாங்கிய பங்குகள் என்னதான் இருந்தாலும் ஜீரோ பைசாவுக்கு கீழே சரியப் போவதில்லை. எனவே நஷ்டம் என்பது அதிகபட்சம் 100 ரூபாய்தான். அதே சமயம் 100 ரூபாய்க்கு விற்ற பங்குகள் 500 ரூபாய்க்கும் உயரலாம் , 1000 ரூபாய்க்கும் உயரலாம். எந்த அளவு உயர்கிறதோ  அவ்வளவு நஷ்டம். பின்னால் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பார்க்கும்போது இது இன்னும் தெளிவாகப் புரியும்.

இந்த இரண்டு வாரங்களில் நாம் உதாரணங்களோடு பார்த்த இந்த Intraday Trading எனப்படும் தின வர்த்தகத்தின் சாராம்சத்தை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1)Intraday Trading என்பது பங்குகளை அன்றே வாங்கி அன்று மாலை சந்தை மூடுவதற்குள் விற்று சரி செய்து விடுவது. (லாபமானாலும் நஷ்டமானாலும்)

2)இதில் பங்குகளை நம் கையில் இல்லாமலே விற்றுவிட்டு பின்னர் விலை குறைந்தவுடன் வாங்கி சரிசெஇவதன் மூலமும் லாபம் பார்க்கலாம். இதற்கு Short Selling என்று பெயர்.

3)Intraday Trading செய்யும்போது நம்மிடம் இருக்கும் பணத்திற்கு மட்டும் இல்லாமல் "மார்ஜின் மணி" எனப்படும் புரோக்கர்களிடம் இருந்து கடனாகப் பெரும் தொகைக்கும் சேர்த்து வர்த்தகம் செய்யலாம். சில புரோக்கர்கள் 4 மடங்கும், இன்னும் சிலர் 10 மடங்கு வரையும்  கூட மார்ஜின் பணம் தருவதற்கும தயாராக இருப்பார்கள்.

4)மார்ஜின் பணம் உபயோகிக்கும்போது எது எப்படியிருந்தாலும் வர்த்தகத்தை சந்தை முடியும்  முன்பாக முடித்து புரோக்கர்களிடம் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும். அல்லது வாங்கிய மொத்தப் பங்குகளுக்கும் பணம் தரவேண்டும்.

5)Short Selling செய்துவிட்டு அன்று மாலைக்குள் சரி செய்யாவிடில் அடுத்த நாள் அதற்கான அபராதமாக பெரும் தொகையை கட்ட சொல்லி கட்டளை வரும். கட்டியே ஆக வேண்டும்.கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, இன்டர்நெட் ஸ்லோ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்ட முடியாது. (சொன்னேனே , இரு பக்கமும் கூரான கத்தி)

6) ஒரு நாளைக்கு ஒரு முறைதான் என்றில்லை. உங்களால் முடிந்த அளவு 10 முதல் 100 வர்த்தகங்கள் கூட செய்யலாம். இப்படி ஒரு வர்த்தகத்திற்கு 10 பைசா முதல் 50 பைசா வரை லாபம் பார்த்து 25 முதல் 30 முறை வர்த்தகம் செய்து பெரும் தொகை பார்ப்பவர்களும் உண்டு. (Scalpers). இதற்கு திட மனமும், கம்ப்யூட்டர் முன்னால் ஆணியடித்தது போல உட்கார உடல் பலமும் வேண்டும். எல்லோருக்கும் ஒத்து வராது.

இனி பொசிசனல்(Positional) ட்ரேடிங் அல்லது Delivery Based Trading என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக ஒரு புரோக்கரிடம் அக்கவுண்ட் ஒப்பன் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பது  அடுத்த வாரம் விரிவாக பேசலாம்.

மேலும் பேசலாம்....

டாக்டர் சங்கர் குமார் எழுதும் பங்குச்சந்தை தொடர்பான இத்தொடர் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று அந்திமழையில் வெளிவரும்