தொடர்கள்

ஆரம்பமான மாற்றங்கள்- கற்பதுவே கேட்பதுவே கருதுவதே- 8

சுகுமாரன்

டுத்த நாள் முதல் பத்திரிகை வெளியாகாது என்ற தகவல் யாரை உலுக்கியதோ இல்லையோ என்னைப் புரட்டிப் போட்டது. திருமணம் ஆன ஆரம்ப வருடம். வேலையில்லாத பயல் என்று மனைவியின் பார்வையில் தோற்றமளிக்க விரும்பாத மனநிலை. ஒன்பது மாதப் பத்திரிகை வேலையை சாசுவதம் என்று நம்பி வெளியுலகத் தொடர்புகளை விட்ட பச்சாத்தாப உணர்வு எல்லாம் சேர்ந்து அலைக்கழித்தன. ''நிர்வாகம் அப்படி ஒரு முடிவெடுத்து விட்டது. நாமென்ன செய்ய? வேலை இல்லேன்னு சொன்னா நாம போக வேண்டியதுதான்'' என்று ஆறுதலாகச் சொல்லிக் கலவரத்தை அதிகப் படுத்தினார் கவிஞர் அப்துல் ரகுமான். என் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பேசவும் முற்பட்டார். ஆனால் முப்பெரும் விழாப் பரபரப்பிலிருந்த நிர்வாகம் அதைக் கேட்கும் சாவதானத்தில் இல்லை. புதுமைப்பித்தன் சொன்னது சரியாப் போச்சு. எழுத்தை நம்பிப் பிழைப்பது தவறு என்று மனம் குமைந்து கொண்டிருந்தது. ஒரு வேலை இல்லாத நிலையில் அடுத்த நாளைக் கற்பனை செய்வது அபாயகரமானதாகவே இருந்தது.

பரபரப்புக்கிடையில் கிடைத்த சொற்ப நேரச் சந்திப்பில் கலாநிதி மாறனிடம் நிலைமையைச் சொன்னேன். '' உங்களை எல்லாம் நான் தூக்கலியே! நீங்கல்லாம் நாளையிலிருந்து குங்குமம் இதழுக்கு வேலை பார்க்கலாம்'' என்று ஆறுதல் அளித்தார். என் குழுவிலிருந்த இதர நண்பர்களுக்கும் குழுமத்தின் வேறு வேறு இதழ்களில் வேலை ஒதுக்கப்பட்டது.நானும் எஸ் ராமகிருஷ்ணனும் குங்குமம். தமிழ்மகன் வண்ணத் திரை. ராமலிங்கமும் நெல்லை பாரதியும் முத்தாரம் என்று இடம் அளிக்கப்  ப ட்டோம். ஆனந்த விகடன் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த அருள் செழியன் பின்னர் இந்தக் குழுவில் இணைந்தார்.

அன்று குங்குமத்தின் ஆசிரியர் பொறுப்பில் சாரதி இருந்தார். பேசும் படம் சினிமா இதழில் பத்திரிகையுலக வாழ்வைத் தொடங்கி பொம்மை - சினிமா இதழ், மங்கை – பெண்கள் இதழ்களை ஆரம்பித்து ஆசிரியராக இருந்தவர் அவர். குங்குமம் குழுமம் சார்பாகத் தொடங்கப் பட்ட சுமங்கலி இதழின் ஆசிரியராக இருந்தவருக்கு குங்குமம் இதழின் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னணியில் கலாநிதி மாறனின் திட்டம் இருந்தது. குங்குமத்தைச் சீர் படுத்தி விற்பனையை அதிகரிக்கச் செய்யும் திட்டம். பிரபல டைம் இதழின் வடிவமைப்பிலும் பாணியிலும் இதழைக் கொண்டு வரக் கற்பனை செய்திருந்தார். அதற்குத் தடையாக அவர் நினைத்த சில விஷயங்களில் ஒன்று - அதன் கட்சி சார்புத் தன்மை. ஓரளவு கணிசமாக விற்பனையாகிக் கொண்டிருந்த வார இதழ் வாரமொரு சரிவும் பொழுதொரு வீழ்ச்சியுமாகத் தள்ளாடிக் கொண்டிருந்தது. அதுவரை கொஞ்சம் இலக்கியத் தரமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் வந்து கொண்டிருந்த பத்திரிகை அன்றுவரை பொறுப்பாக இருந்த பாவை சந்திரனின் வெளியேற்றத்துக்குப் பின்னர் வேகமாகச் சரிந்து கொண்டிருந்தது.

மூத்த பத்திரிகையாளர் சாவியால் தொடங்கப்பட்ட இதழ். எனினும் அதற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்ததில் பாவையின் பங்கும் உழைப்புமே கணிசமானது. அவரது வெளியேற்றத்துக்குப் பின்னர் அதன் உருவம் கலங்கியிருந்தது. இதழியலுக்கான எந்த நோக்கும் புதுமையுமின்றி வெளிவந்து கொண்டிருந்தது. பாவை சந்திரன் வெளியேறக் காரணம் தானே என்று சுட்டிக் காட்டப்பட்டதால் கோபம் கொண்டிருந்த கலாநிதி மாறனுக்குத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தை இதழ்  ஏற்படுத்தியிருந்தது. அதுதான் ஒரு குழுவை நியமிக்கவும் புதிய வடிவில் பத்திரிகையை மாற்றவும் அவரைத் தூண்டியது. அந்த முடிவை அவர் முரசொலி மாறனும் கலைஞரும் இருந்த சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொன்னார். அந்தச் சந்தர்ப்பத்தில் சாட்சியாக இருக்க நேர்ந்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அதுதான் பின் நாளில் ஆசிரியப் பொறுப்பேற்றபோது மறைமுக விதியாக இருந்தது.

பத்திரிகையின் வீழ்ச்சியைச் சமாளிக்க கலாநிதிக்கு முன்பிருந்த நிர்வாகம் ஒரு சுலபமான வழியைக் கடைப்பிடித்திருந்தது. கலைஞரின் எழுத்துகளை அதிகம் இடம் பெறச் செய்வது. அன்று இதழில் கலைஞரின் பொன்னர் சங்கர் தொடர் கதை மீண்டும் வெளியாகிக் கொண்டிருந்தது. அவரது தன் வரலாறான நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகம் (அல்லது நான்காம் பாகம்?) வந்து கொண்டிருந்தது. வாசகர்களின் கேள்விகளுக்கு வாரா வாரம் கலைஞர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இவை எல்லாம் சேர்ந்து அனுகூலமான விளைவைத் தருவதற்குப் பதில் எதிர்மறையான பலனையே தந்து கொண்டிருந்தது. பொதுவாகப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கி வாசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் ரசனையுடன் இவை ஒட்டாமல் இருந்தன. இலக்கியவாதிகளான க.நா.சு. சா. கந்தசாமி போன்றவர்கள் எழுதும் இதழ் என்றும் ஆதிமூலம், மருது போன்ற நவீன ஓவியர்கள் பங்கு பெறும் இதழ் என்றும் இலக்கிய வாசகர்களிடம் பெற்றிருந்த நம்பிக்கையும் கரைந்து போயிருந்தது. இரண்டும் கெட்டான் நிலையில் வந்து கொண்டிருந்த இதழின் முக்கிய நட்சத்திர  எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி ஒருவரே.

இளைஞர் கலாநிதி அந்த நட்சத்திர அந்தஸ்தைக் கேள்விக்குரியதாக்கினார். பத்திரிகையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செய்ய நினைக்கும் மாற்றங்களைப் பற்றிப் பேசிய தருணத்தில் அவர் தனது திட்டத்தை விரிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா மாறனும் தாத்தா கலைஞரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இடைமறித்துக் கலைஞர் எதையோ சொன்ன போது கலாநிதி சொன்னார். '' தாத்தா, இருக்கிற எழுபத்திரண்டு பக்கத்தில நீங்களே பாதி பக்கத்தை எழுத எடுத்துகிட்டா பத்திரிகை எப்படி விற்கும்?''

அவர் சொன்னது வாஸ்தவம். அப்போது இதழில் கலைஞரின் தொடர்கதை ( மறுபிரசுரம் ) பத்து பக்கம், தன் வரலாறு பத்துப் பக்கம், கேள்வி பதில் ஆறு பக்கம் என்று வியாபித்திருந்தன. ஒரு காலத்தில் இதழின் விற்பனையை உயர்த்த உதவிய பொன்னர் சங்கர் இரண்டாம் சுற்றில் வலுவான படைப்பாக வாசகர்களுக்குத் தோன்றவில்லை. கட்சிக்காரர்கள் தவிர வேறு யாருக்கும் கலைஞரின் வரலாறு அவசியமானதாக இருக்கவில்லை. இவை பத்திரிகையைக் கீழே தள்ளுவதாகக் கலாநிதி மாறன் நினைத்தார். அதைச் சொல்லவும் செய்தார். அதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கலைஞர். அடுத்த இதழ் குங்குமத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாயின. ஒன்று - கலைஞர் கேள்வி - பதில்கள் இந்த இதழுடன் முற்றுப் பெறுகிறது. இரண்டாவது - கலைஞரின் நெஞ்சுக்கு நீதி தற்காலிகமாக முடிகிறது. உடன் முரசொலியில் தொடரும்.

(தொடரும்)