அம்பை (முனைவர் சி. எஸ். லட்சுமி) தமிழ் படைப்பாளிகளில் தனித் தன்மை கொண்டவர். பெண்களின் நிலைகளைக் கேள்விக்குள் வைத்து சமூகம் தந்துள்ள மதிப்பீடுகளை நாவல், சிறுகதை, நாடகம் எனத் தன் படைப்புகளின் வழி பதிவு செய்தவர். பயணப்படாத பாதைகள் எனும் பெண்களின் வாய்மொழிப் பதிவுகளைக் கொண்ட ஆவண நூலை எழுதியுள்ளார். இந்நூலில் ஓவியம் , நாட்டியம், நாடகம் ஆகிய துறைகளில் பெயராளுமை பெற்ற பெண்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதி சிறந்த சிறுகதை மற்றும் நாவல் ஆசிரியர் என்று அறியப்பட்ட அம்பை மிக முக்கிய நாடகப் படைப்பாளி என்பது பலரும் அறியாத பதிவு. இவரின் ஆற்றைக் கடத்தல் நாடகம் தமிழ் நவீன நாடகத்தில் முக்கியமானது. முதன்மையானது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வுகால நாடகத் தயாரிப்பாக ஆற்றைக் கடத்தல் நாடகம் 1999 ல் அரங்கம் ஏறியது. இந்நாடகம் பெண்களின் குரலாய்ச் செஞ்சுடர் விரிக்கும் . சீதை எனும் இதிகாச மகளில் தொடங்கி சம காலம் வரை நீண்டு கிடக்கும் பெண் சமுகத்தின் அவலங்களை அரங்கில் முதிரச் சொல்லியபடி ஆற்றைக் கடக்கும் புயல். பெண்டீரை முடமாக்கும் வரையரைகளை உடைத்தவாறு உள்ளார்ந்த கேள்விகளோடு இராம ராஜியம் எனும் ஆண் மையத்தைக் கூர் கிழிக்கும் பனுவலாக நாடகம் அமையும்.
இந்த நாடகத்தின் இயக்குனர் ஆழி வெங்கடேசன். முதுகலை இரண்டாம் ஆண்டு நாடகத்துறை மாணவர். இளங்கலையில் சிற்பம் படித்த இவர் வேலு சரவணனின் குழுவில் முதன்மை நடிகர். தற்போது வேலம்மாள் கல்வி குழுமத்தில் உள்ள பாலி நிறுவனத்தில் நாடக மற்றும் பாடத்திட்ட பயிற்ச்சி பொருள் வடிவமைப்பாளராகவும் பயிற்சியாளராகவும் பணி புரிந்து வருகிறார்.
ஆற்றைக் கடத்தல் நாடகத்தில் பெண் மையப்பாத்திரமாகவும் ஆண் துணைப் பாத்திரமாகவும் அமையும். முதன்மைப் பாத்திரமாக நடிக்க ஒரு பெண் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் நாடகத்துறை தோழியராகிய அனிதாவை இயக்குனர் தேர்வு செய்தார். ஒத்திகை செல்லச் செல்ல ப்ரியா என்ற விளையாட்டுத் துறை மாணவியரையும் இணைத்தார். ஒத்திகையின் போது நான் விளையாட்டாக இன்னும் ஒரு பெண் இருந்தால் நல்லா இருக்கும் எனச் சொல்ல மைதிலி என்ற வேதியியல் துறை மாணவியையும் இணைத்து விட்டார். இது மிக அழகியலாக வடிவமைப்புக்கு உதவியது.
இந்த நாடகத்தில் எனது பாத்திரப்படைப்பு கருப்பு வண்ண சட்டையும் பேண்டும் அணிந்தவனாய் ஊமை நடிப்பு நிலையில் (மைம்) அமையும். ஆணாகவும், நிழல் உருவமாகவும், அரங்கப்பொருள் நிலையிலும், ஆறு , கடல், மழையாகவும் பல்லுருவம் எடுப்போம். ஒரு வசனம் கூடப் பேசமல் முழு நாடகமும் நடித்த போது புதிய உடல் மொழியை உணர்ந்தேன். நாடகத்திற்கான அரங்கப் பொருள் தயாரிக்கும் போதும் முகமூடி ஒட்டும் போதும் காகிதப் பொம்மை உருவாக்கும் போதும் வெங்கடேசன் உடனிருந்து கற்றுக்கொள்ள முயல்வேன். இந்நாளில் பெரிதும் உதவின.
அரங்கின் மையத்தில் ஒரு பெரிய பொம்மையும் மூன்று தட்டிகளும் இருக்கும். இதில் பொம்மை நிலையாகவும் தட்டிகள் நகரும் வகையிலும் அரங்கத்தை வெங்கடேசன் வடிவமைத்திருந்தார். தட்டியின் பின்புறத்தில் நிழல் உருவாகவும், அச்சமூட்டும் ஆண் மிருகமாகவும் பாவனை செய்து நடிப்போம். தட்டியை இருவர் பிடித்தபடி நகர வேண்டும். நானும் ஜெகனும் அரங்கின் வலப்பகுதியிலும் சிரிதர், பாலா பழனி, ஆகியோர் நடு அரங்கிலும், ஆனந்த வேலு, திலிப் பிரசன்னா இடப்பக்கத்திலும் இருந்தபடி தட்டியை நகர்த்துவோம். பெரும்பான்மையாக எங்கள் நகர்வுகள் யோகா நிலையிலேயே அமையும்.
ஒத்திகைக் காலங்களில் மூன்று மகளிரையும் ஒன்றிணைப்பதில் பெரிய கடினப்பாடுகள் இருக்கும். இதற்குக் காரணம் மூவரும் மூன்று துறைகளில் படித்தமையாகும். நானும் ஜெகனும் ஒப்புக்குச் சப்பானியாக மகளிர் வரும் வரை சமாளிப்போம். கரு அழ குணசேகரன் ஐயாவின் பெண் விடுதலை சார்ந்த பாடல்கள் நாடகம் எங்கும் எடுத்தாளப்பட்டது. ஒளியமைப்பைத் தீபன் செய்தார். இந்நாடகம் மைம் நடிப்புக்கான அனுபவத்தை எனக்குக் கொடுத்தது. ஆற்றைக் கடத்தல் பனுவலுடன் மீண்டும் ஒரு நீச்சல் இருந்தது. டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகளைக் கொண்டு வெளி இரங்கராசன் ஆற்றைக் கடத்தல் நாடகத்தை இயக்கிய போது அங்கு பகுதி நேர நாடக உதவிப் பேராசிரியராக இருந்த நான் குழு ஒருங்கிணைப்பாளராக பெண்மையின் குரல்களுடன் நீந்தினேன்..
(தொடரும்)
(கார்த்திகேயன்நாடகத்துறையில்முனைவர்பட்டம்பெற்றவர். சிறந்தநவீன நாடகக்கலைஞர். பலசின்னத் திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச்சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன.)