தொடர்கள்

அரங்கேற்றம் - 6

சி.கார்த்திகேயன்

நான்கு வாழ்க்கைப் பாதைகள்  எனும் இந்த நாடகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் 1999 ல் நடந்த  புத்தாக்க அரங்க வடிவமைப்பு எனும் நாடகப் பயிற்சிப்பட்டறையின் நிறைவு விழாக்  கண்காட்சியில் நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் சி எஸ் தீபன். இவர் முதுகலை இரண்டாம் ஆண்டு நாடகத்துறை மாணவர். கேரளா திருச்சூர் நாடகப் பள்ளியில் இளங்கலை நாடகம் படித்தவர்.  இவர் மிகச் சிறந்த  நடிகர் மற்றும் அரங்க வடிவமைப்பாளர். தற்போது லண்டன் நாடக கல்லூரியில் நாடகப் பயிற்றுநராகச்  செயலாற்றி வருகிறார்.

இந்த  நாடகம் உலக நாடக தின விழாவை எதிர் நோக்கி உள்ளரங்கில் நிகழ்த்துவதற்கு ஒத்திகை பார்க்கப் பட்டிருந்தாலும்  கண்காட்சி நிகழ்விற்காக திறந்த வெளியரங்கிற்கு மாறியது. ஒத்திகையில் மாற்றங்கள் உருவானது. நாடகத் துறையினர்  மட்டுமின்றி பிரஞ்சு, ஆங்கிலத் துறையினரும் நடித்தனர். எல்லோரும் ஒன்று கூடியதும் தேநீர்க்கடைக்குச் சென்று இளஞ்சூடு மிதக்கும் புகை விரிந்த தேநீரைக் குடித்து முடித்த பின்  ஒத்திகைக்கு வருவோம்.  நாடக விளையாட்டு ஒன்றை நடத்தி நடிகர்களின் மனதை தயார் செய்ததும் ஒத்திகை தொடங்கும். கலகப்பிற்குப் பஞ்சமிருக்காது.  

இரண்டு கோமாளிகள்  நான்கு வாழ்வியல் ஊடாட்டங்களைக் கதையாகச் செல்வது போல நாடகப் பனுவல் இருந்தது.   மீனவரின் வாழ்க்கை, விவசாயின் ஏர்க்களம், வியாபாரியின் போராட்டம், குப்பை எடுப்போரின் பயணம் என நான்கு வாழ்வியல் களங்கள் நாடகத்தில் ஊடாடிச் செல்லும். இந்த நான்கு வாழ்வியல் சரடுகளையும் இணைத்திடும் கொக்கி வணக்கியாக கோமாளிகளின் பாத்திரங்கள் அமையும். நாடகம் முடியும் வரை கதைகூறிகளாகவும் கட்டியக்காரனாகவும் சூத்திரதாரியாகவும் கோமாளிகள் நாடக இணைப்புக் கயிற்றை  அரங்க வெளியெங்கும்  சுழற்றிக் கொண்டே செல்வார்கள்.  நாடகத்தின் தொடக்கமே கோமாளிகளின் வருகையோடு இருக்கும். பாடலுடன் இசை முழக்கங்களை அதிர்வித்தபடி கருவாயிலில் இருந்த நாடகங்களை ஒளிக் களத்திற்குள் ஏந்தியவாறு கோமாளிகளின் நகர்வுக்குள் அமையும். அந்த இரட்டைக் கோமாளிகளாக நானும் வெங்கடேசனும் நடித்தோம். நான்கு கதையிலும் பத்துக்கு மேற்பட்ட பாத்திரப் படைப்புகள் இருந்தது.  நான்கில் இரண்டு கதை தமிழிலும் ஒன்று மளையாளத்திலும், மற்றொன்று இந்தியிலும் உருவாக்கப் பட்டது.

இந்த நாடகத்தில் கோமாளியாய் நடிப்பதில் எனக்கு மூன்று கடினப்பாடுகள் இருந்தன. ஒன்று நடித்தவாறு மிருதங்கம் இசைப்பது. அடுத்து ஆடலுடன் பாடுவது. இந்தி நாடகப் பகுதிக்கு  சில வசனத்தை  இந்தியில் பேசுவது. இந்த  மூன்று இடர்பாடுகளையும் கடந்து நாடகத்தில் நடித்து முடித்தது எனக்குள் ஒரு பிரமிப்பைத் தந்தது.    மிருதங்கமே இசைக்கத் தெரியாத என்னை நடந்தபடி இசை வாசிக்கச் சொன்னதால் முதலில் அச்சம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டேன். வெங்கடேசன் உத்வேகமும் எம் துறையின் இசைப் பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் சாரின் முயற்சியும்  எனக்கு ஆக்கம் தர தக்கதிமி தக்கதிமி என ஒற்றைத் தட்டிசையைக் கற்றுக் கொண்டு தேர்ந்து விட்டேன். அடுத்து ஆடலுடன் பாடுவது. இதைச் சமாளிக்க ஒரு திட்டமிட்டோம். வெங்கடேசன் முன்பாட்டு எடுக்க  நான் பின்பாட்டு எடுப்பதின் மூலம் சிக்கலைச் சரி செய்து  கொண்டோம். ஆடல் எனக்குப் பிரச்சனை இல்லை. வசனத்தில் பிரச்சனை இருந்தது.

மளையாள வசனம் பேச எந்த கடினப்பாடுகளும் இல்லை. ஆனால் இந்தி வசனம் பேசுவதிலும் உச்சரிப்பதிலும் குளறுபடிகள் இருந்தது.   இந்தியில் பேசுவதை அப்படியே தமிழில் எழுதி மனனம் செய்து கொண்டேன்.   ஆனாலும் நாடகத்தில் உளறிக் கொட்டி விட்டேன். அந்தப் பெண்ணை என் மேல் செருகி விட்டார்கள் என இரட்டை வசனத்தில் உளற  இந்தி தெரிந்தோர் சிரித்து விட்டனர். பல நாட்கள் கிண்டல் மொழியாகவே  உலா வந்தது.

ஐந்து நாள் நடந்து முடிந்த மேடைக் கலை சார்ந்த  பயிற்சிப்பட்டறையின் நிறைவில் 20 அடி உயரங்கள் கொண்ட 6 நாடகத் தன்மையுடைய சிற்பங்கள் திறந்த வெளி அரங்கில் பிரமாண்டமாய் நின்றது. இதில் நான்கு சிற்பங்களைத் தேர்வு செய்து அதன் கீழாக நாடகத்தில் அமையும் நான்கு கதைகளை நிகழ்த்த  இயக்குனர் முடிவெடுத்திருந்தார். இயக்குனரும் நானும் வெங்கடேசனும் பகல் வேளை  ஒத்திகைகளில் நான்கு சிற்பங்களை இணைப்பதுக்கான நகர்வுகளை உடல் மொழிப்பாடுகளுடன் பல வடிவங்களில் செய்து பார்ப்போம். நிறைவில் முழு வடிவமும் உருக்கண்டது.  

கோமாளி வேடத்திற்கான உடையை வெங்கடேசன் உருவாக்கி தந்தார். ஆனந்த வேலு ஒளியமைப்பையும், ஜெகன் ஒப்பனையும் செய்திருந்தனர். கடல் காற்றின் மெல்லோலம் கவிதையாய்ப் பார்வையாளர்களில் அகத்துள் விசும்ப,  நாடகம் தொடங்கியது. முதலில் நான் தான் மிருதங்கத்தைத் தட்டியவாறு நுழைய வேண்டும். அடுத்து வெங்கடேசன் காற்றுக் கருவியை ஊதுவார். ஒளி வரத் தொடங்கிற்று. அரங்க பயத்தில் எனக்கு தாளம் மறந்து போச்சு. தவறாகத் தட்டவும் அச்சமாக இருந்தது.  அரங்கூட்டம் சில நிமிடங்கள் மைளனமாய்க் கரைந்தது. இதை உணர்ந்து கொண்ட வெங்கடேசன் ஊதத் தொடங்கினார். அந்த சமயத்தில் பயம் களைந்தவனாய் தட்டத் தொடங்கினேன். இசை அழகியலாய் பிறந்தது.

பின்னர் நாடகத்தில் என் பத்திரப்படைப்பும் பாராட்டைப் பெறும் அளவில் இருந்தது.

(தொடரும்)

(கார்த்திகேயன் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்தநவீன  நாடகக்கலைஞர். பல சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச் சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன.)