தொடர்கள்

அரங்கேற்றம் - 5

சி.கார்த்திகேயன்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையின்  சங்கரதாஸ் சாமிகள் சிற்றரங்கில் பல  ஆண்டுகளாய்த் தேங்கிக் கிடந்த பழைய அரங்க வடிவமைப்புப் பொருட்களையும் துணிகளையும் எடுத்துக் கொண்டு  கழிவில் இருந்து புத்தாக்க அரங்க வடிவமைப்பு எனும் நாடகப் பயிற்சிப்பட்டறை 1999 ல் ஐந்து  நாட்கள் நடத்தப்பட்டது. இதில் நாடகப் பேராசிரியர் இரா. இராசு தலைமை ஏற்க, நாடகப் பேராசிரியர் வ ஆறுமுகமும் சிற்பத்துறைப் பேராசிரியர் சிற்பி ஜெயராமனும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயலாற்றினர். ஐந்து நாள் நடந்த பயிற்சிப்பட்டறையின் நிறைவில் திறந்த வெளி அரங்கில் 20 அடி உயரங்கள் கொண்ட 6 நாடகத் தன்மையுடைய சிற்பங்கள் நாடகத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கண்காட்சியாக மூன்று நாட்கள் மூன்று நாடகத்துடன்  வைக்கப்பட்டன.

 முதல் நாள் கண்காட்சியில் எத்தனை நாள் என்ற நாடகம் தயாரித்து நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் ஆழி வெங்கடேசன். முதுகலை இரண்டாம் ஆண்டு நாடகத்துறை மாணவர். இளங்கலையில் சிற்பம் படித்த இவர் ஆழி குழந்தைகள் நாடகக் குழுவின்  நடிகர். இவருடைய தாத்தா பாரத கூத்துக் கலைஞர். மிக யதார்த்த நடையில் நாடகத்தை இயக்கும் வெங்கடேசன் தற்போது வேலம்மாள் கல்வி குழுமத்தில் உள்ள பாலி நிறுவனத்தில் நாடக மற்றும் பாடத்திட்ட பயிற்சிப் பொருள் வடிவமைப்பாளராகவும் பயிற்சியாளராகவும் பணி புரிந்து வருகிறார்.

அரங்கப் பயிற்சிப்பட்டறை தொடங்கிய நாளில் தான் நாடக ஒத்திகையும் துவங்கியது. இந்த நாடகத்தில் எங்களுடன்  விளையாட்டுத்துறை மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஓடும் கால்களை ஓரிடத்தில் நிறுத்தி ஆடும் கால்களாக மாற்ற வெங்கடேசன் சற்றுக் கடினப்பட்டர். ஆனாலும் அவர்களின் வேகம் நாடகத்திற்கு உயிரூட்டியது. பல்கலைக்கழக முன்வாயில் முன்னுள்ள டீக்கடையில் டீ குடித்தபடியே மாலை நேர ஒத்திகை தொடங்கும். வந்தானே தன்னைப் பாருங்க, கட்டியக்காரன் வாரானே தன்னைப் பாருங்க, கோணக்குல்லாவும் போட்டு, குந்திக்குந்தி நடை நடந்து, வந்தானே தன்னைப் பாருங்க, கட்டியக்காரன் வாரானே தன்னைப் பாருங்க, என்ற பாடலைப் பாடிவிட்டுத்தான் ஒத்திகையைத் தொடங்குவார்.

 பாதல் சர்க்கார் பாணியில் சமுகப் பிரச்சனையை முன்நிறுத்தி வீதி நாடகமாக எத்தனை நாள் நாடகம் வடிவமைக்கப்பட்டது. திருவிழா ஒன்றிற்காகக் கூத்துக் குழுவை அழைப்பதில், இரு சமுகத்துக்கிடையில் உருவாகும் பிரச்சனைகள் வாழ்வியலில் எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது என்பதே நாடகத்தின் மையச் சரடாகும். இந்த நாடகத்தில்  இரு பாத்திரங்களில் நான் நடித்தேன். ஒன்று கூத்துக் குழுவின் வாத்தியார். மற்றொன்று சூழ்ச்சிக்கார அரசியல்வாதி. கூத்துக் கதாப்பாத்திரம் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கதாப்பாத்திரம்  வரும். முதன்முதலாகப் பாரதக் கூத்துப் பாடலைப் பாடி ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். என் தாத்தா பாரதக் கதை சொல்லியாக இருந்தவர். பாரதக் கதை முடித்து பட்டாபிசேகம் பெற்றவர். ஆகவே கூத்துப்பாடல்கள் என்னுள் எளிமையாகவே வந்தது.  கூத்தில் வீமனாக வேடங்கட்டி ஆடுவதாக நாடகத்தில்  பாட்டும் வசனம் அமையும்.

பாரதக் கூத்தில் வரும் அரவான் தலையை ஒப்ப மிகப் பெரிய தலை உருவத்தைப் பயிற்சிப் பட்டறையில் உருவாக்கி இருந்தோம். இந்தத் தலையின் முன் பகுதியில் நாடகம் நடத்தலாம் எனத் தீர்மானித்தோம். காலையில் சிற்பக் கட்டுமானப்பணி. மாலையில் அதன் அடியில் நாடக ஒத்திகை. ஆறாம் நாள் காலையில் கண்காட்சி தொடங்கியது மாலையில்  நாடகம். ஆண் பெண் எனப் பல்கலைக்கழகமே கூடியிருந்தது. நாடகம் தொடங்கியாயிற்று.

கட்டியக்காரனும் கட்டியக்காரியும் ஆடிப்பாடிச் சென்றதும்  நாடகத்திற்குள் வரும் கூத்தானது ஆரம்பமானது. நான் (கூத்துவாத்தியார்) சூரன் வேடதாரியிடம் உட்காந்துகொள் எனக் கூற வேண்டும். நான் கொங்கு நாட்டு வட்டார வழக்கில் கோந்துக்கோ எனக் கூறி விட்டேன். அந்த வழக்கு மொழி அவருக்குப் புரியாமல் போனதால் அவர் அமரவும் இல்லை. காட்சி முடியவும் இல்லை. நானோ கோந்துக்கோ கோந்துக்கோ எனப் பல முறை கத்தி எந்தப் பயனும் இல்லை. அவர் அமராமல் வீர நடையில் அரங்கைச் சுற்றிக் கொண்டே இருக்கிறார். சூர வேடதாரியோ விளையாட்டுத் துறை மாணவர். நாடகப்போக்கு அவருக்கு விளங்கவில்லை. இந்தச் சூழலைப் புரிந்து கொண்ட இயக்குனர் உட்காந்துக்கோ என்று வெளியில் இருந்து கத்த, நானும் தவறை உணர்ந்து உட்காந்துக்கோ என்றதும் அவர் அமர்ந்து விட்டார். நாடகம் ஒருவழியாக முடிந்தது. இந்த நிகழ்ச்சி நகைச்சுவைப் புயலாக மாறி ஒருமாதம் நாடகத் துறையைச் சுற்றிச் சுழன்று வந்தது. நீண்ட ஆண்டுகள் கழிந்து சென்னையில் ஒரு நாள் சூர வேட நண்பரும் நானும் சந்தித்துக் கொண்ட போதும் அந்த நகைச்சுவை எங்களைச் சிரிக்க வைத்தது.

(தொடரும்)

(கார்த்திகேயன் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்தநவீன  நாடகக்கலைஞர். பல சின்னத் திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச் சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன).