தொடர்கள்

அரங்கேற்றம் - 10

சி.கார்த்திகேயன்

சைலண்ட் ஸ்கிரீம்ஸ் என்ற நாடகம் 1999 ல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வுகால நாடகத் தயாரிப்பாக அரங்கேற்றம் ஆனது. இதை இயக்கியவர் பிரமோத் குமார் பையனூர்.  இவர் நாடகத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு மாணவர். கேரளா திருச்சூர் நாடகக் கல்லூரியில் இளங்கலை நாடகம் படித்தவர். நாவல் மற்றும் சிறுகதைகளை நாடகமாக்க முனைபவர். தற்போது கைரளி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் செயலாற்றி வருபவர். மிகச் சிறந்த நாடக இயக்குநருக்கான கேரளா விருதைப் பெற்றவர்.

சைலண்ட் ஸ்கிரீம்ஸ் நாடகப் பனுவலானது  சமுகம் சார்ந்த ஒட்டு மொத்த அவலங்களையும் வெளிப்படையாகப் பேசிடும் பிரதியாகும். குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை இந்த நாடகம் பேசுகிறது. வாழ்வின் வசந்தத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்னொருத்திக்கு ஏற்பட்ட சிக்கலானது அவள் வாழ்வைச் சிதைக்கிறது. விலைமகளாக விற்கப்படுகிறாள். அந்த துயரக் களத்தின் எல்லைக்குள் இருந்து விடுபட நினைக்கும் ஒருத்தியின் போராட்டத்தை நிகழ்வு தந்து செல்லும்.

நாடகப் பிரதியை எழுதியவர் சுரேஷ் பாபு ஸ்ரீதர். அவர் மலையாள நாடக எழுத்தாளர். எளிமையானவர்.  கேரளத்தில் உள்ள பல இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம்  மிக்கவர். சமுகம் சார்ந்த தனித்தன்மையான பனுவலை எழுதுவதில் முதன்மையானவர். இவரின் பொருள்மொழி நாடகம் பிரமேத் பையனூர் இயக்கத்தில் டில்லி தேசிய நாடக விழாவில் பங்கு பெற்று சிறந்த பனுவலாகப் பேசப்பட்டது.

நாடகத்துறை, சுற்றுலாத்துறை, பன்னாட்டு வணிகத்துறை, ஆங்கிலத் துறை ஆகிய மாணவ மாணவியர் அடங்கிய மிகப் பெரிய பட்டாளங்களை வைத்துக் கொண்டு பிரமோத் பையனூர் நாடகத்தை இயக்கினார். இந்த நாடகத்தில் மொத்தமாக 20 நிகழ் கலைஞர்கள் பங்கு பெற்றோம். இதிலும் எனக்குப் பெண் வேடம். 12 பெண்கள் இருந்தும் என்னை ஏன் பெண் வேடம் போடச் சொல்கிறாய்? வேறு வேடம் கொடுங்கள் என இயக்குநரிடம் மன்றாடியும் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை. இதற்குக் காரணமேதும் தெரியாமலேயே நடிக்கத் தொடங்கினேன். நாடகத்தின் ஒத்திகையானது துறையின் சிற்றரங்கிலும் மரத்தடியில் இருக்கும். பெருங்கூட்டம் என்பதால் கலகலப்பிற்குப் பஞ்சம் இருக்காது. ஆடலும் பாடலும் குதூகலமாக இருக்கும். 

நான் ஏற்கும் பெண் வேடமானது ஆண்மை தன்மையுடன் மிடுக்கும் துடுக்கும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது பனுவல் வாசிப்பின் போதும் ஒத்திகைக் காலத்திலும் எனக்குப் புரிந்தது. இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். தன் உருவாக்கும் படைப்பில் உயிராடும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகனை இயக்குநர் தேர்வு செய்து வைத்துள்ள நிலையில்  நடிகன் தன் விருப்பத்தின் அடிப்படையில் பாத்திரத்தை மாற்றிக் கேட்டல் தவறு என்பதை அனுபவத்தின் வழியும் அரங்கப்படிப்பின் வழியும் தெளிவுற உணர்ந்து கொண்டேன்.

இளம் பெண்களை ஏமாற்றி மும்பைக்கு அனுப்பும் அத் தத்தை பாத்திரம் தான் என்னுடையது. மா மாமாவைப் போல.   என்னிடம் சிக்கி மும்பைக்கு அனுப்பப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்வியல் பதிவும் துயரமும் தான் நாடகம். வெற்றிலை பாக்கு போட்ட சிவந்த வாயும் மின்னலிடும் நகை அணிந்து பச்சை வண்ணச் சீலை கட்டியவளாய் எனது பத்திரப்படைப்பு அமையும். பேச்சும் நடையும் ஏமாற்றும் மாய வித்தைக்காரி போல இருக்கும்.  இந்த பாத்திரத்தின் வழியாக புதிய உடல் மொழியைப் புரிந்து கொள்ள முடிந்தது. நாடகம் நல்ல முறையில் நிறைவுற்றது.

நாடகம் முடிந்து, இரு தினங்கள் கழிந்த  ஒரு காலை நேரத்தில் பல்கலைக் கழக  மைய நூலகத்திற்குள் வேகமாக நுழைந்தேன். இங்கு கேரளத் தோழியர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். என்னை இடைமறித்து, இப்போ தொழில் எப்படி போகுதுனு கேட்டார்கள். சில வினாடிகள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு உணர்ந்து கொண்டவனாய், சைலண்ட் ஸ்கிரீம்ஸ் நாடகப் பாத்திரச்  சிரிப்போடு,  உங்கள் ஒருத்திக்குத் தான் வலை விரித்திருக்கிறேன் என்றேன். அம்மே இது ஞான் அல்ல என்றபடி கலைந்து ஓடினார்கள். நானும் விடாமல் துரத்திச் சென்று ஒருத்தியை மடக்கி நீ தான் என்றேன். எல்லோரும் ஒருசேரச் சிரித்து விட்டு டீக் கடைக்கு நடந்தோம்.

(தொடரும்)

(கார்த்திகேயன் நாடகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்தநவீன  நாடகக்கலைஞர். பல சின்னத் திரைத்தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச்சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன.)