தொடர்கள்

அந்த ரெண்டு பேரையும் நெனச்சாத்தான் பெரும்பீதியா இருக்கு - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2, தொடர்- 7

பாமரன்

இன்றைக்குக் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது நம்ம சொதப்பல்.

இரண்டு நாட்களாய் அறைக்கு தண்ணீர் கொண்டு வரும் ஈஸ்வரன் ஏனோ வரவில்லை.

சரி.. மறுபடியும் ஒரு போன் அடித்துவிடலாம் என்று அழைத்தால்..

“அப்புறம் சொல்லுங்க” என்கிறது மறுமுனை.

இதென்னடாது குரல் வேறு மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால் மறுமுனையில் நம்ம ஜெயரஞ்சன்.

வாட்டர்கேன் கொண்டு வரும் ஈஸ்வரனை அழைப்பதற்கு பதில் நம்ம பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனைக் கூப்பிட்டிருக்கிறேன்.

அய்யோ தல.. தண்ணி கேன்காரரை கூப்புடுறதுக்கு பதிலா உங்களக் கூப்புட்டுட்டேன்.. என்றேன் அசடு வழிய.

”அதனால என்ன கொண்டு வந்து போட்டுட்டாப் போச்சு” என்று சிரித்தார் ஜெயரஞ்சன்.

பொருளாதாரம் கதைக்கிற நம்ம ஜெயரஞ்சன் தண்ணீர் கேன்கூட கொண்டு வந்து போட்ருவார்.

தண்ணீர் கேன் போடுற ஈஸ்வரன் பொருளாதாரம் பத்திக்கூட பேசீருவார்..

ஆனா..

இந்த ரெண்டுமே தெரியாத மோடியையும் நிம்மியையும் நெனச்சாத்தான் பெரும் பீதியா இருக்கு.

**********

வெகுகாலம் ஆயிற்று. இப்படி ஒரு நாவல் வாசித்து.

இதை வெறுமனே ”நாவல்” என்று சொல்வதா?

வாழ்வின் சகல உணர்வுகளையும் தன்னுள்ளே சுமந்து வரும் ஒரு எதார்த்த வாழ்வியல் படைப்பு என்று உரைப்பதா?

என எழுதத் தொடங்கும் முன்னே என்னுள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

தமிழகப் பரப்பிலிருந்து வந்தாலே தாங்க முடியாது. அதிலும் யுத்தம் சுமந்த ஈழத்திலிருந்து வந்தால்?

முதலில் அதை வாசிப்பதற்கான பக்குவத்தைப் பெற்றாக வேண்டும் மனம். பிற்பாடுதான் அது குறித்துக் கதைப்பதோ எழுதுவதோ என்பதெல்லாம் சாத்தியப்படும்.

அப்படிப்பட்ட மன உளைச்சலினூடே அல்லாடி ஓய்ந்து இப்போதுதான் எழுத உட்கார்ந்திருக்கிறேன் இதை.

போரால் கிழித்தெறியப்பட்ட மக்களின் ரணங்களைச் சுமந்தபடி வந்திருக்கிற நாவல்தான் :

”போருழல் காதை.”

”குணா கவியழகன்” என்கிற போராட்டக்காரனின் இதயத்தில் இருந்து எழுந்த ஓலங்களின் எழுத்து வடிவம்.

எழுத்தே ஒரு போராட்டம்தான் என நாம் சொல்லிக் கொண்டாலும் மெய்யாலுமே போராட்டக்களத்திலும் பங்காற்றி அதன் அத்தனை உணர்வுகளையும் எழுத்திலும் வடிப்பதென்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயமாகப்படவில்லை எனக்கு.

அதுதான் குணா கவியழகனின் வரிகளை எண்ணி சிலாகிக்க வைக்கிறது என்னை.

”போருழல் காதை” சந்திரிகா இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய காலத்தில் ஈழத்தில் நடந்த யுத்த கதை.

மக்கள் கூட்டம் கூட்டமாக யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சி நோக்கி இடம் பெயர்ந்த அவலத்தை..

அந்த அகதி வாழ்விலும் அவர்களுக்குள் எழும் காதலை.. குரோதத்தை.. வன்மத்தை.. ஏக்கத்தை.. போராட்டத்தை.. என சகலத்தையும் சொல்கிறது.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞன் ஆதி கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறான்.

கொழும்பு வந்து நாட்கள் பலவாகியும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரிடம் இருந்தும் எந்தத் தகவலும் வராமல் பரிதவிக்கிறான். ஒருவேளை தான் இங்கு இருப்பதையே மறந்துவிட்டார்களோ என்கிற அச்சம் அவனைச் சூழ்கிறது.

அந்த வேளையில்தான் கொழும்பு நகரின் கடைகளில் பணியாற்றும் தமிழ் இளைஞர்களை அள்ளிக் கொண்டு போகிறது ராணுவம். அதில் ஆதியும் ஒருவன். விசாரணையில் வயிற்றில் விழும் குத்தைத் தாங்காது அலறும் அவனை “இயக்கமல்ல” என விடுவிக்கிறது ராணுவம்.

ஆனால் புலனாய்வாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி கிடையாது என்பதும்... அதனால் அவர்களது வயிற்றுப்பகுதி இறுகாது இலகுவாக இருக்கும் என்பதும் புரிபடுவதில்லை அவர்களுக்கு.

வெளியில் கூட்டிவரும் கடை முதலாளி இப்ராகிம் ஆதியை மன்னாரில் இருந்து கூட்டிவந்த சிங்களன் பியதாசவிடமே ஒப்படைக்கிறார்.

ஆதியை அழைத்துச் செல்லும் பியதாச தனது தங்கையின் தோழியான வசுந்தராவின் வீட்டில் தங்கி இருக்கச் சொல்லி விட்டுச் செல்கிறான்.

எந்த ஆடம்பரமுமற்று எளிமையே அழகு.. அழகே எளிமைதான்.. என வலம் வரும் கல்லூரி மாணவிதான் சிங்களப்பெண்ணான வசுந்தரா.

ஸ்டோரில் ஐயாயிரம் ரூபாய்க்கு வேலை செய்யும் ஆதியின் கல்வித் தகுதியைக் கேட்டபின்பு ”நீ ஏன் பார்ட் டைமில் கல்லூரிப் படிப்பைத் தொடரக் கூடாது?” என்கிறாள். மேலிடத்தில் இருந்து எந்தத் தகவலும் இன்னும் வந்து சேராத நிலையில் என்ன செய்வது?

”சரி” என்று தலையாட்டுகிறான் ஆதி.

ஓய்வு நேரத்தில் அவள் சிங்களம் கற்றுத் தர.. அவன் தமிழ் கற்றுத்தர.. தமிங்களம் ஆகின்றன பொழுதுகள்.

தான் உண்மையில் யார் எனச் சொல்லாத குற்றவுணர்ச்சி ஒருபுறம்.. வசுந்தராவின் அன்புசூழ் அக்கறையும் எளிமையும் மறுபுறம்.. என அலைபாயும் உணர்வுகள் அல்லாட வைக்கின்றன ஆதியை.

ஈழத்திலோ..

குண்டுவீச்சுகளுக்குத் தப்பி யாழ்ப்பாணத்தில் இருந்து வீடு, வயல், நிலம், தொழில் என சகலத்தையும் விட்டுவிட்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து மண்குடில்கள் கட்டி நாட்களை நகர்த்துகின்றன பல குடும்பங்கள்.

அதில் ஆதியின் பெற்றோர் ராசு - சகுந்தலாவின்  குடும்பமும் உண்டு. அதே காணியில் அகதி வாழ்வைப் பங்கிட்டுக் கொண்ட மொட்டை மோகன், நாகமணி - கிளி, அலுக்கோசு, சுவாமிப்பிள்ளை உட்பட  ஏராளமானோர் உண்டு.

இதில் மொட்டை மோகனின் மகள் செண்பகாவோ பெண்கள் புலிப்பிரிவின் ஆளுமைமிக்க போராளிகளில் ஒருவர். காணிகளில் வசிப்போரையும் அரசியல்மயப்படுத்த அவ்வப்போது வந்து போகும் போராளி சஞ்சயன். சஞ்சயனது பேச்சுக்களில் யுத்த நிலவரங்களை அறிந்து கொள்ளும் சனங்கள்.

குண்டுவீச்சுகளுக்குத் தப்பி ஒவ்வோரிடமாய் அலையும் மக்கள் ஒருபுறமென்றால்..

தலைநகர் கொழும்பிலோ.. ஆயுதத்தால்  அமைதியைக் கொண்டு வந்துவிடலாம் என நம்பும் ஆராய்ச்சிகள் மறுபுறம்.

இதற்கிடையில் புலிகள் முல்லைத்தீவைக் கைப்பற்ற திடுக்கிடுகிறது சிங்கள அரசு.

புலிகள் யாழின் தோல்வியை முல்லைத்தீவு வெற்றியால் சரிசெய்ய....

அரசோ முல்லைத்தீவின் தோல்வியை கிளிநொச்சியின் வெற்றியால் ஈடுகட்டப் பார்க்கிறது.

விளைவு..? கிளிநொச்சியில் இருந்து மன்னகுளம், கனகராசன்குளம், மாங்குளம், மல்லாவி என பல்வேறு இடங்கள் நோக்கி மீண்டும் தொடர்கிறது அகதிப்பயணம்.

குணா கவியழகனால் மன்னகுளத்தில் அறிமுகமாகும் மாதவன் அய்யாவும், மயிலும் இன்னும் மனதுக்குள்ளேயே நிழலாடுகிறார்கள்.

ஆதியின் மேல் கொண்ட காதலால் தமிழ்ப்பெண்களைப் போல மூக்குத்தி மாட்டிக்கொண்டு வந்து நிற்கிறாள் வசுந்தரா.

ஆதியோ புலனாய்வுப் பிரிவில் இருந்து அழைப்பு வர வன்னிக்காட்டுக்குப் பயணமாகிறான்.

அங்கே பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு..

”படி..

வேலைக்குப் போ..

தமிழோ சிங்களமோ கல்யாணம்கூட கட்டிக்கொள்.

ஆனால் பொருளாதார மையங்கள், துறைமுகம், மத்திய வங்கி என எல்லாவற்றையும் கண்காணி..

குறிப்பாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்கள் எது எதுவென கண்காணி.. என்கிற உத்தரவு கிடைக்கிறது ஆதிக்கு.

கொழும்பின் இரவு மாளிகை ஒன்றில் கூடும் கூட்டத்தில் அனைவரும் சூழ்ந்திருக்க அறிமுகம் ஆகின்ற ஆள்தான் : புனிதச் செல்வன்.

”பச்சைத் தமிழரான” இந்த ஆசாமிதான் ஜனாதிபதி குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர். பொதுமக்கள் எவ்வளவு பேர் செத்தாலும் அந்தச் சாவை எப்படி சர்வசுத்தமாக நியாயப்படுத்துவது என்கிற அரிய ஆலோசனைகளை அள்ளித்தரும் ஆலோசகர்.

அக்கூட்டத்தில் அரசியலில் எப்படி காய்கள் நகர்த்தப்பட வேண்டும்..

சதித்திட்டங்கள் எப்படி இருக்கவேண்டும்..

அது இலங்கை அரசியலை மட்டுமல்ல 

இந்தியாவின் அரசியலை..

சீனாவின் அரசியலை...

அமெரிக்காவின் அரசியலை..

எப்படி சமநிலைப்படுத்துவதாக இருக்க வேண்டும் என அக்குவேறு ஆணிவேறாக எடுத்து வைக்கிறார் புனிதச் செல்வன்.

இல்லையில்லை.. புனிதச் செல்வனின் ஊடாக புவிசார் அரசியல் சூழலை நமக்குப் புரிய வைக்கிறார் குணா கவியழகன்.

ஈழத்தின் இலக்கியவாதிகளில் சிலர் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் விதமாக  தமிழகத்தின் ஆரியமாயைகளில் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குணா கவியழகனோ கம்பீரமாக எழுந்து நிற்கிறார்.

எண்ணற்ற இடங்களில் அவை வெறும் வார்த்தைகளா அல்லது நம்முள் பெரும் இரசாயண மாற்றத்தையே ஏற்படுத்தவல்ல வாழ்வியல் பாடங்களா என்கிற பிரமிப்பே எழுகிறது.

சொல்ல ஏராளம் உண்டெனினும் தாராளமாகச் சொல்லலாம் சிலவற்றையாவது.

ஜனாதிபதி   மாளிகையின்    மந்திராலோசனைக்    கூட்டத்தில் “புனிதர்”  புனிதச் செல்வம் பேசும் ஒரு பேச்சு போதும் சேம்பிளுக்கு... :

புனிதச் செல்வம் :

”இந்த யுத்தத்தில் பேரழிவுகள் வரலாம். இப்போது புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர  சர்வதேச சக்திகள் துணை நிற்கக்கூடிய சூழல் இருக்கிறது.

ஆனால், பேரழிவை மீறி இந்த யுத்தத்திற்கு அந்த நாடுகள் ஆதரவளிப்பதற்கான முகாந்தரத்தை  நாம் விட்டுவைக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் சர்வதேச சக்திகளே இந்த யுத்தத்தை நியாயப்படுத்தி அரசாங்கத்தின் பின்னால் நின்று கொள்ளும்.

அவர்கள் எங்கள் பின்னால் நிற்பதற்கான நியாயம் ஒன்றை அவர்கள் கையில் கொடுத்து விட்டால்போதும்; அவர்களே யுத்தத்தை நடத்தி முடிப்பார்கள்.

இந்த உபாயங்களை மட்டுமல்ல இந்த உபாயச் செலவுகளையும் யுத்தத்திற்கான நியாய தர்மங்களையும் அவர்களே தத்தெடுத்துக் கொள்வார்கள்.

பின், இது உங்களின் கையால் நடக்கும் அவர்களின் யுத்தம். 

இதில் தோல்வி வந்தால் இது அவர்களின் தோல்வி.

அமெரிக்காவும், இந்தியாவும், பிரித்தானியாவும் யுத்தத்தில் புலிகளிடம் தோற்கச் சம்மதிப்பார்களா ?

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.”

பிற்பாடு ஆதியும் வசுந்தராவும் என்னவானார்கள்?

சிங்களப்படையையே சிதறடித்த செண்பகா பிற்பாடு எப்படி வழி நடத்தினார் ?

வாழ வழியின்றி ஊர் ஊராய் அலைந்த சனம் 

எல்லைப்படையாகவும்,

கிராமப்படையாகவும்,

மாணவர் படையாகவும்  மாறி 

இறுதியில் மக்கள் படையாக எப்படிப் பரிணாமம் பெற்றது ?

என்பதையெல்லாம் 

இங்கு வாசிப்பதை விட

“போருழல் காதை”யை

நீங்கள் வாங்கி வாசிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

நாவல் நகரும் சந்திரிகா காலத்திற்குப் பிற்பாடு

எத்தனையெத்தனை மாற்றங்கள்..

பச்சைத் துரோகங்கள்..

பேரழிவுகள்..

பெரும் பேரங்கள்..

அப்பட்டமான இனப்படுகொலை என எண்ணற்றவை நடந்தேறியாகிவிட்டது.

இனிவரும் காலங்களை எதிர்கொள்ள..

புவிசார் அரசியல் சூழலை  அவதானிக்கிற..

அதன் பாடங்களின் ஊடாய் நம்மை நகர்த்திச் செல்கிற..

இன்றில்லாவிட்டாலும் என்றாவது இறுதி இலக்கான ஈழத்தை எட்ட..

இத்தகைய போரிலக்கிய படைப்பாளிகளே இன்றைய தேவையாய் இருக்கிறார்கள். 

முன்னர் வெளிவந்த இவரது “நஞ்சுண்ட காடு” நாவலுக்கு அற்புதமானதொரு மதிப்புரையை மானுடத்தை நேசிக்கும் மகத்தான தோழர்களில் ஒருவரான க.வே. பாலகுமாரன் வழங்கியிருந்தார். அவரது அவ்வரிகளே சொல்லும் தம்பி குணா கவியழகனது படைப்புகள் போரிலக்கிய வரவுகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை.

So..

”அகல்” பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை 7550174762 என்கிற எண்ணிற்கு அழைத்து..

வாங்குவதும்..

கையில் தாங்குவதும்..

ஈழத்தை நேசிக்கும் நம் போன்றோரது கடமை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன ?

(இத்தொடரை நாம் செவ்வாய்க்கிழமைதோறும் படிக்கலாம் கிழிக்கலாம்)