தொடர்கள்

அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால்...அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் - 30

தியாகராஜன் பழனி வேலாயுதம்

கேள்வி: அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நீங்கள் யாராய் பிறக்க ஆசைப்படுவீர்கள்? கண்டிப்பாக உங்கள் சாய்ஸ் ஒருபெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.


பதில்: என் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடித்திருக்கிறீர்களா என்ன, மிகச் சரியாக ஊகித்து விட்டீர்களே?  ஆமாம்.  பெண்ணாகத்தான் பிறக்க விரும்புகிறேன்.  நேற்று மாலை உங்களுடைய கேள்வியைப் படித்து விட்டு உறங்கப் போனேனா, அதே நினைவில் ஒரு கனவு வந்தது.  அதில் நான் பெண்.  நீங்களோ நானோ நினைப்பது போல் பாரிஸில் பிறக்கவில்லை.  இப்போதைய நானும் அடுத்த ஜென்மத்து நானும் உரையாடுகிறோம்.  

ஏன் நீ பாரிஸில் பிறக்கவில்லை?

நீ நினைக்கும் பாரிஸெல்லாம் காணாமல் போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது சாரு.  இப்போதைய பாரிஸ் ஒரு அல்ஜீரிய நகரம் மாதிரியோ நம்மூர் சைதாப்பேட்டை மாதிரியோதான் இருக்கிறது.  ஒரே அகதிகள் கூட்டம்.  வன்முறை.  திருட்டு.  வறுமை.  வேலையில்லாத் திண்டாட்டம்.  வேலை நிறுத்தம்.  இத்யாதி. இத்யாதி. இன்னும் கற்பழிப்பு தான் வரவில்லை.  சரி, பாரிஸை விட்டு ஃப்ரான்ஸின் வேறு பகுதிகளுக்குப் போகலாம் என்றால் அங்கெல்லாம் வாழ்க்கை சலிப்பூட்டக் கூடியதாக இருக்கும்.  அதனால் பெல்ஜியம் அல்லது லக்ஸம்பெர்கில் பிறக்கலாம் என்று இருக்கிறேன்.

எழுத்தாளராகவா?

நிச்சயமாக.  அது பற்றிக் கொஞ்சம் திட்டம் இருக்கிறது.  இங்கே (பெல்ஜியத்திலோ லக்ஸம்பர்கிலோ) பிறந்து படிப்பை முடித்து விட்டு என் பூர்வ ஜென்ம பூமியான தமிழ்நாட்டுக்கு வந்து நீ உயிரோடு இருந்த போது சாத்தியமாக இயலாத சில புரட்சிகரமான விஷயங்களைச் செய்ய வேண்டும்.  அதற்காக முதலில் தமிழைக் கற்றுக் கொள்வேன்.  கூடவே, அறவான் எழுத்தாளர்களையெல்லாம் கண்டு பிடித்து அவர்களைக் காதலிப்பேன். இடையின ர அல்ல; வல்லினம்.  அ-ற-வா-ன்.  அறம் பேசும் எழுத்தாளன் அறவான்.  ஆனால் அந்த அறவான்களுக்குக் கல்யாணம் ஆகி, வயதும் 45க்கு மேல் இருக்க வேண்டும்.  கள்ளக் காதலியான எனக்கும் அவர்களின் மனைவிக்கும் இடையில் உயிர் ஊசலாடும் போது அவர்களின் அறத்தை முறத்தால் அடித்து விரட்ட வேண்டும்.  என்னதான் ஐரோப்பியச்சியாகப் பிறந்தாலும் என் உடம்பில் ஓடும் சங்கத் தமிழச்சியின் ரத்த பந்தம் ஒரே ஜென்மத்தில் காணாமல் போய் விடுமா என்ன?  

அப்படி ஏன் உனக்கு ஒரு sadist ஆசை?  நீ போன ஜென்மத்தில் – அதாவது எனக்கு – இப்படியெல்லாம் ஸாடிஸ்ட் விருப்பம் எதுவும் இருந்ததில்லையே?  



இதில் ஸாடிஸம் எதுவும் இல்லை சாரு.  Juste un souhait… c’est tout!  நீ ஒரு ஆணாகப் பிறந்து விட்டதால் உன்னால் அதைக் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாது.  உனக்கு இன்னும் ஒரு பத்து வருஷம், நான் வளர இருபது வருஷம் போட்டுக் கணக்கிட்டால் இன்னும் முப்பது வருஷம் இருக்கிறது.  அதற்குள் உங்கள் ஜெயமோகன் – அவர் தானே அறம் சார்ந்தவர்?

ஆமாம், இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் சிந்தனையாளர்கள்…

சிந்தனையாளர்களைப் பற்றிப் பேசாதே சாரு.  உங்கள் நாட்டில் தினசரிகளில் கட்டுரை எழுதுபவர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர்களும்தான் சிந்தனையாளர்கள் என்பது எனக்குத் தெரியும்.  நான் சொல்வது ஜெயமோகன் மாதிரியான புனைகதை எழுத்தாளர்களை…  அவருக்கு இப்போது என்ன வயது?

இப்போது என்ன, ஐம்பது இருக்கும்.  ஆனால் பார்க்க முப்பது தான் சொல்லலாம்.  இன்னும் முப்பது வருஷம் ஆனால் வயது எண்பது ஆகுமே ஒழிய பார்க்க அப்போது ஐம்பது ஐம்பத்தைந்து மாதிரிதான் இருப்பார்.  மது, மாது, புகை போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லை அல்லவா? அதனால் எல்லாமே நார்மல்.  நீ முயற்சி செய்யலாம்.  

சீச்சீ… முட்டாள் மாதிரி பேசாதே சாரு.  எண்பது வயது ஆனால் என்னைப் பொறுத்த வரை unfit.  அறுபத்தைந்து எழுபது வரை ஓக்கே.  அதுவும் தவிர அவர் அப்போது விஷ்ணுபுரத்தின் ஐம்பதாவது பாகத்தின் ஐம்பதாயிரம் பக்கங்களை தினந்தோறும் ஐம்பது பக்கங்கள் வீதம் எழுதி இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டிருப்பார்.  அந்த நேரத்தில் போய் அந்தப் பெரியவரின் தவத்தைக் கலைக்கக் கூடாது.

அடடா, என்ன ஒரு நல்ல எண்ணம்…  எழுபதுக்கும் எண்பதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ஒன்றுமில்லை.  குஷ்வந்த் சிங்குக்கு 90 வயதில் கூட காதல் கடிதம் வந்திருக்கின்றன.  ஆனால் அறம் பேசுபவர்களின் கதை வேறு.  உடம்பு ஃபிட் ஆக இருந்தாலும் மனம் ஃபிட் ஆக இருக்க வேண்டும் அல்லவா?  அந்த அறம் இருக்கிறதே, அது நாற்பதிலேயே மனதின் இளமை ஊற்றுக்களை அடைத்து விடும்.  அதையெல்லாம் காதல் என்ற வெடிமருந்தால்தான் தகர்த்து எறிய வேண்டும்.  கஷ்டமான காரியம்தான்.  ஆனால் அதில்தானே சவால் இருக்கிறது.  சரி, ஜெயமோகன் முதுமை அடைந்து விட்டால் என்ன, நீ தான் சொன்னாயே, அவரைப் போல் பல அறவான்கள் இருக்கிறார்கள் என்று.  அவர்களில் ஐம்பது வயது எய்திய ஒரு சிலரைப் பிடித்து

குறுக்கிடுவதற்கு மன்னித்து விடு…  ஒரு சிலரைப் பிடித்து எப்படிக் காதலிக்க முடியும்?  ஒருவரைத்தானே காதலிக்க முடியும்?



ஏன் சாரு, ஆணுக்கு ஒரு நியாயம்,  பெண்ணுக்கு ஒரு நியாயமா?  ஒரு ஆண் ஒரே சமயத்தில் பத்து பெண்களைக் காதலித்தால் அவனைக் காஸனோவா என்கிறீர்கள்; ஆனால் ஒரு பெண் அதைச் செய்தால் அவளை nymphomaniac என்கிறீர்கள்.  நீங்கள் செய்தால் காதல்; நாங்கள் செய்தால் mania-வா?  இந்த ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றுவதுதான் இந்த ஜென்மத்தில் நான் செய்யப் போகும் தலையாய பணி.  

சற்று புரியும்படியாகச் சொல்.

ஒரு activist-ஆகச் செயல்படப் போகிறேன்.  உனக்கு என்ன க்ளியோபாட்ரான்னு நினைப்பா என்று கேட்டால் அவள் ஒரு பேரழகி என்று அர்த்தம்.  நீ என்ன பெரிய கேஸனோவான்னு நினைப்பா என்றால் அவன் ஒரு மாபெரும் காதலன் என்று பொருள்.  காஸனோவா என்ற ஒரு ஆள் 70 பெண்களை…  70 பெண்களைத்தானே காதலித்தான்?  நீதான் அவனுடைய சுயசரிதையைப் படித்து எழுதியிருக்கிறாயே?

சரியாக ஞாபகம் இல்லை.  ஐம்பதோ அறுபதோ எழுபதோ இருக்கும்.  பெரிய தொகை தான்.  ஆனால் அவன் அந்த எல்லா பெண்களையுமே தீவிரமாகக் காதலித்தான்.  ஒரு காதல் கூடப் பொய்யில்லை.

அதாவது, ஒரு பெண் போன பிறகு இன்னொரு பெண் அல்ல.  பல பெண்களை ஒரே நேரத்தில் காதலித்தான் இல்லையா?

ஆமாம்.  ஒரே நேரத்தில் பத்து இருபது பெண்கள் கூட இருக்கும்.  

அதேதான்.  நானும் ஒரே நேரத்தில் பத்து இருபது ஆண்களை – கல்யாணமான, மத்திய வயது ஆண்களை – மிக முக்கியமான தகுதி: அறம் பேசுகின்ற எழுத்தாளனாக இருக்க வேண்டும்.  உன்னைப் போன்ற transgressive எழுத்தாளனாக இருந்தால் நிச்சயம் காதலிக்க மாட்டேன்.  அதில் த்ரில் இருக்காது.  நல்லவனைக் கெட்டவனாக மாற்றுவதில்தான் த்ரில் இருக்கிறது.   

கேட்க மறந்து போனேன்.  பெயர் என்ன?  

ஐரோப்பாவில் பிறக்கிறேன் என்பதால் நிச்சயம் கிறிஸ்தவ மதம்தான்.  வேறு மதங்கள் என் புரட்சிகர செயல்பாடுகளைத் தாங்காது.  நாடு கடத்தப்பட்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்க வேண்டும்.  தொல்லை.  அதனால் எனக்குப் பிடித்த பெயராக வைத்துக் கொள்ள வேண்டும்.  தெரஸா என்ற பெயர் எப்படி இருக்கிறது?  

காஸனோவாவைப் போல் எழுபது ஆண்களைக் காதலிக்கப் போவதாகச் சொல்கிறாய்.  அதிலும் திருமணமான ஆண்களை. அதிலும் தமிழ்நாட்டுக்கு வந்து.  இவ்வளவு அராஜகத்தையும் செய்து கொண்டு தெரஸா என்று பெயர் வைத்துக் கொண்டால் அது அந்த மதத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கும்.  நீ வேறு பெயர் தான்  தேர்ந்தெடுக்க வேண்டும்.  இன்னொரு சந்தேகம்.  உன் பெற்றோர் தானே உனக்குப் பெயர் வைப்பார்கள்?  



ஏன் மூடன் மாதிரிப் பேசுகிறாய் சாரு?  உனக்குக் கூடத்தான் அறிவழகன் என்று பெயர் வைத்தார்கள்?  அந்தப் பெயரிலா நீ எழுதுகிறாய்?  நாமே பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.  சரி, நீ சொல்கிறபடி நான் செய்யப் போகும் பாலியல் புரட்சிக்குத் தெரஸா என்ற பெயர் தோதுப்படாது என்றுதான் நினைக்கிறேன்.  மக்தலேனா என்று வைத்துக் கொள்கிறேன்.  இல்லாவிட்டால் தமிழில் நாலைந்து அவ்வையார் இருந்தது போல் கேத்தி ஆக்கர் என்று வைத்துக் கொண்டால் போயிற்று.  

தமிழ்நாட்டுக் கலாச்சாரக் காவலர்களை எப்படி நீ சமாளிப்பாய்?  

ஏய் சாரு, என்னை என்ன பெருமாள் முருகன் என்று நினைத்து விட்டாயா?  நான் ஒரு பெண்.  அதிலும் பேரழகி.  என்னைப் போன்ற அழகியை நீ இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது.  இப்படிப்பட்ட ஒரு அழகி உருகி உருகி காதல் கடிதம் எழுதினால் உன்னுடைய அறவான்களெல்லாம் என் காலில் வந்து விழ மாட்டான்களா?  பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்று உன் மொழியில் உள்ள பழமொழி சொல்கிறதுதானே?  உன் கலாச்சாரக் காவலர்கள் பேயை விடக் கொடியவர்களா என்ன?  என் முதல் தகுதி, நான் பெண்.  அடுத்த தகுதி, உலகத்திலேயே காணக் கிடைக்காத அழகி.  அதையும் தாண்டி நான் ஒரு ஐரோப்பியச்சி.  என்னை என்ன செய்ய முடியும்?  ஆர்டிஓ என்னை விசாரணைக்கு அழைத்தால் அந்த ஆர்டிஓ அலுவலகமே என் அழகைப் பார்த்து கிடுகிடுத்து விடாதா?  அப்புறம் அந்த ஆர்டிஓவைத்தான் ஆம்புலன்ஸில் போட்டு அழைத்துப் போக வேண்டியிருக்கும்.  இன்னொரு விஷயமும் இருக்கிறது.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் ஆடை எப்படி இருந்தது?  உன் இளமைக் காலத்து நாயகிகளான விஜயகுமாரி, சாவித்திரி, சரோஜாதேவி போன்றவர்கள் எப்படி ஆடை உடுத்தினார்கள்?  இப்போதைய ஹீரோயின்கள் – ஹீரோயின்களை விடு, குடும்பத்துப் பெண்களே எப்படி ஆடை உடுத்துகிறார்கள் என்று சொல்.  இது இன்னும் முப்பது ஆண்டுகளில் எப்படி மாறும் என்று கற்பனை செய்து பார்.  அதிலும் நானோ ஒரு புரட்சிப் பெண்.  என் ஆடை எப்படி இருக்கும்?  கற்பனையே செய்ய முடியவில்லை அல்லவா?  உனக்கு நான் விளக்கிச் சொல்ல முடியும்.  விளக்கக் கூட வேண்டாம்.  ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னாலே போதும். உனக்குப் புரிந்து விடும். ஆனால் எப்படியும் நீ நம்முடைய இந்த உரையாடலை நாளை அந்திமழைக்கு எழுதுவாய்.  ஆனால் ஆசிரியரால் அதைப் பிரசுரிக்க முடியாது.  இது என்ன ஃப்ரான்ஸா?  எனவே அவருக்குத் தர்மசங்கடம் கொடுக்கக் கூடாது என்று நானே சென்ஸார் செய்து விட்டேன்.  சரி, மேட்டருக்கு வருவோம்.  சுருக்கமாகச் சொன்னால், என் அழகும் அதை மறைக்காத என் ஆடையும் ஆண்கள் அத்தனை பேரையும் கொன்று விடும் சாரு… கொன்று விடும்.  உன்னுடைய தங்கர் பச்சான் பாணியில் சொன்னால் எல்லாத் தமிழனும் பைத்தியம் பிடித்துச் சாகப் போகிறான்.  ஜாக்கிரதை.  விகடன், குமுதம், குங்குமம், அந்திமழை எல்லா பத்திரிகையிலும் எல்லா வாரமும் என் அட்டைப்படம் தான்.  விதவிதமான போஸ்களில்.

அந்திமழையில் அப்படிப்பட்ட படமெல்லாம் போட மாட்டார்கள் தெரஸா.

பார்த்தாயா, உனக்கே தெரஸா என்ற பெயர் தான் மனதில் பதிந்து விட்டது.  சரி, அந்திமழையில் என் படத்தைப் போட மாட்டார்களா?  ஓ, அதன் ஆசிரியரும் அறம் பார்ட்டியா?   அப்படியானால் அவரையும் என் ஹிட் லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்.  


ஐயோ, என் பிழைப்புக்கே பங்கம் வந்து விடும் போலிருக்கிறதே? அவரை விட்டு விடு.  

என்னுடைய பாலியல் புரட்சிச் செயல்பாடுகளில் சிபாரிசுக்கே இடமில்லை.  இதெல்லாம் தவிர மேலும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

என்ன?

உலகம் பூராவும் ஆண்களுக்கென்றுதானே, ஆண்களை குஷிப்படுத்துவதற்காக விபச்சார விடுதிகள் உள்ளன?  

ஆமாம்.  அதற்கென்ன?  எங்கள் ஊர் டாஸ்மாக் ஒழிப்பைப் போல் அதையும் ஒழிக்கப் போகிறாயா?  அதெல்லாம் சாத்தியமா?

சேசே…  சாரு… உன்னைப் போன்ற ஒரு அசடைப் பார்த்ததே இல்லை.  ஆண்களுக்காக இயங்கும் அந்த விபச்சார விடுதிகளைப் போல் கிழக்காசிய நாடுகளில் பெண்களின் சந்தோஷத்துக்காக ஆண் விபச்சார விடுதிகள் அமைக்கப் பாடுபடப் போகிறேன்.  

நீ என்ன வேண்டுமானாலும் செய்.  ஆனால் இந்தியாவில் அது நடக்காது.

நான் என்ன அவ்வளவு மடச்சியா?  இந்தியா போன்ற “புனித” தேசங்களை விட்டு விடுவேன்.  தாய்லாந்து போன்ற நாடுகளைச் சொன்னேன்.  

அமெரிக்கா? ஐரோப்பா?

அங்கெல்லாம் அவை ஏற்கனவே இருக்கின்றன என்ற விபரம் கூடவா உனக்குத் தெரியாது?  இன்னொரு விஷயம்.

என்ன?

பிறந்து ஐந்து வயதிலிருந்தே கொரியன் மார்ஷல் ஆர்ட்டான தே க்வான் தோவைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்.  

உன்னுடைய பாலியல் புரட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?  அது கராத்தே மாதிரிதானே?

கராத்தேயில் கை வேலை அதிகம்.  தே க்வான் தோவில் கால் வேலை.  தமிழ்நாட்டுக்கு வருவதால் எப்படியும் நான் டெல்லிக்கெல்லாம் போக வேண்டியிருக்கும்.  அங்கேயோ எழுபது வயதுக் கிழவியையெல்லாம் ரேப் பண்ணி ரோட்டோரத்தில் போட்டு விடுவதாக நீயே எழுதியிருக்கிறாய்.  கிழவிக்கே அந்தக் கதியென்றால் நான் எல்லாம் என்ன ஆவேன்?  என்னையும் நாலைந்து பேர் ரேப் பண்ணி அப்புறம் என் பெயர் நிர்பயா என்று ஆவதற்கா?  கிட்ட வரட்டும்…  ---------யிலயே ஒதைச்சுக் காலி பண்றேன்.  ஏன் சொல்கிறேன் என்றால் நானோ ஒரு உலகப் பேரழகி.  என்னைப் பார்த்தால் நல்லவனுக்கே கெட்ட எண்ணம் வரும்.  அப்படியானால் ரேப்பிஸ்டுகளை என்ன சொல்ல?  அதனால்தான் தே க்வான் தோ.  ஒரே உதையில் விதை நசுங்கிச் சாவான்.  ஒரே சமயத்தில் ஏழெட்டு பேரை இப்படி நசுக்கலாம்.  தந்தியில் இப்படிச் செய்தி வரும்:  அழகி உதையில் இளைஞர்கள் விதை நசுங்கிச் சாவு!

(இதோடு கனவு கலைந்து விட்டது.  இந்த உரையாடலை அந்திமழை ஆசிரியருக்கு அனுப்பி வைத்து கருத்துக் கேட்ட போது, உரையாடலில் சில தர்க்கரீதியான தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.   உதாரணமாக, ’பல பெண்களைக் காதலிப்பவனை நாம் திட்டுவதில்லை;  மாறாக காஸனோவா என்கிறோம்.  ஆனால் பெண்களை மட்டும் திட்டுகிறோம்’ என்று சொல்லும் தெரஸா இன்னொரு இடத்தில் ’நல்லவனைக் கெட்டவனாக மாற்றுவதில்தான் த்ரில் இருக்கிறது’ என்கிறாள்.  இது ஒரு தர்க்க முரண் இல்லையா என்று கேட்டார்.

கனவில் தர்க்கம் பார்க்கக் கூடாது என்றேன்.)

கேள்வி: ஒரு எழுத்தாளராய் தாங்கள் எந்தத் தருணத்திலிருந்து உணரத் துவங்கினீர்கள்?  அது பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

ஆர்.எஸ். பிரபு, சென்னை 90.

 பதில்:  ஆரம்பத்தில் நான் ஒரு இசைக் கலைஞனாக ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன்.  இசையே என் இளமைக் காலம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.  நான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூர் சூழல் அப்படி.  கர்னாடக சங்கீதம் அல்ல; ஹிந்துஸ்தானி இசை.  அதன் பிறகு மேற்கத்திய சங்கீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது.  கிதார் கற்றுக் கொள்ள முயன்றேன்.  வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை.  காரைக்கால் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.  அங்கே கிறிஸ்துவர்கள் அதிகம்.  ஃப்ரெஞ்ச் காலனியாக இருந்த இடம்.  முழுக்கவே ஃப்ரெஞ்சும் தமிழும் கலந்த கலாச்சாரம்.  ஆனால் காரைக்கால் போய் வர பஸ் டிக்கட்டுக்கே வழி இருக்காது.  அதனால் கிதாரை விட்டு விட்டு தில்லிக்குப் போய் விட்டேன்.  வீட்டில் கொஞ்சம் வசதியான சூழல் இருந்திருந்தால் இசைக் கலைஞனாக ஆகியிருப்பேன்.   ஆனால் எழுத்து என்பது எந்தப் பொருளாதார வசதியையும் கோராத கலையாக இருந்தது.  ஒரு காகிதமும் பேனாவும் இருந்தால் போதும்.  படிப்பதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைத்தன.  எழுத்தாளனாகி விட்டேன்.   


குறிப்பு:  கடந்த 29 வாரங்களாக அந்திமழையில் தொடர்ந்து வரும் அறம் பொருள் இன்பம் கேள்வி பதிலை இந்த முப்பதாவது வாரம் நிறுத்திக் கொள்கிறேன் - ஒரு சிறிய இடைவெளிக்காக - மீண்டும் சந்திக்கும் வரை காத்திருக்கவும்.  அனைவருக்கும் நன்றி.