அம்பலப்புழா கோயில் ஆனையின் பெயர் ஸ்ரீராமசந்திரன். நல்ல உயரமான கம்பீரமான யானை. ஆனால் கேரளாவின் உயரமான கோயில் யானை தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரம் தான்.ஆக்ரோஷமான யானை கூட.இதுவரை இரண்டு யானைகள் உட்பட 13 பேரைக் கொன்றிருக்கிறது.ஆகவே கோயில் விழாக்களில் பங்கு பெறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.கேரளத்தின் யானைத் திருவிழாவான திருச்சூர்ப் பூரத்தில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் கலந்துகொள்ளும். ஆனால் கேரளத்தின் மிகப் பிரபலமான யானை எனில் குருவாயூர் கேசவன் தான்.அது இயற்கை எய்தியபோது கேரளமே கணணீர் சிந்தியது. குருவாயூர் கேசவனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வந்தது. பரதன் இயக்கிய படம் அது.
கேரளத்தில் வேறு புகழ்பெற்ற சில கோவில் யானைகளின் பெயர்கள்: சிரக்கல் காளிதாசன்,திருக்கடவூர் சிவராஜூ,புதுப்பள்ளி கேசவன்,பாம்பாடி ராஜன்,மங்கலம்குன்னு அய்யப்பன்,திருவனந்தபுரம் அனந்தபத்ம நாபன்,ஶ்ரீவராகம் சிவக்குமார்...
இவற்றுள் பாம்பாடி ராஜன்,திருக்கடவூர் சிவராஜு போன்ற யானைகளுக்கு ஏராளமான ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உண்டு.இந்த ரசிகர் மன்றங்கள் தங்களுக்கிடையே அடித்துக்கொள்வதுஉண்டு.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல கேரளத்தில் திருச்சூர் பூரமும் குருவாயூர் ஆனை ஓட்டமும் மிகுந்த உணர்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களாகும். விலங்கு நல ஆர்வலர்கள் இந்த விழாக்களைத் தடை செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை. குருவாயூர் யானைக் கொட்டாரத்தில் அறுபதுக்கு மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை குறைந்த இடத்தில் அடைக் கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றன என்று ஒரு புகார் எழுந்தது. நான் இந்தக் கொட்டாரத்தைப் பார்த்திருக்கிறேன். இடப்பற்றாக்குறை பற்றிய புகார் மிகையானது என்று என்னால் சொல்ல முடியும். கேரளத்தின் ஆழ் மனதில் யானைகள் பற்றிய நினைவுகளும் கதைகளும் புதைந்துள்ளன.கேரளத் தொன்மங்களின் தொகுப்பான ஐதீக மாலை எழுதிய கொட்டாரம் சங்குண்ணியிலிருந்து வைக்கம் முகம்மது பஷீர் வரை (எங்கள் அப்பாவுக்கொரு யானை இருந்தது)யானைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள்.ஆனால் கேரளத்தின் சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவரான பால் சக்காரியா “உலகத்தில் எங்கே யானைகள் மிக மோசமாக நடத்தப்படுகின்றன என்று கேட்டால் கேரளா என்று தயக்கமின்றி சொல்லிவிடலாம்” என்கிறார். அவர்அவ்விதம்சொல்வதற்குஒருகாரணம்உண்டு.முன்பு கேரளாவில் இரண்டுவகையான பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இருந்தன.மரம் தூக்கும் யானைகள்,கோயில் யானைகள்.கோயில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது ஒரு கவுரவமாகவும் கட்டாயமாகவும் ஆனது கடந்த ஐம்பது வருடங்களாகதான்.திருவிழாக்கள் மிகப்பெரிய வணிகக் கூடுகைகளாகவும் ஆனபோது யானைகள் அதன் நட்சத்திரங்களாக மாறின. கோவில் திருவிழாக்களுக்கு புகழ்பெற்ற யானைகளின் ஒரு நாள் வாடகை லட்சக்கணக்கில் பெறப்படுகிறது.ஆகவே இப்போது மரம் தூக்கும் யானைகளைக் கூட கோயில் திரு விழாக்களுக்கு வாடகைக்கு விடும் வணிகம் பெருகியிருக்கிறது.இந்துக் கோவில்கள் மட்டுல்லாமல் சர்ச்சுகள்,மசூதிகளில் நடக்கும் திருவிழாக்களில் கூட யானைகள் கலந்துகொள்வதை ஒரு கவுரவமாக நினைக்கிறார்கள். விளைவாக யானைகள் நம்ப முடியாத அளவுக்கு பணி அழுத்தத்துக்கு உள்ளாகின்றன.ஒரு யானை குறைந்தது ஒரு வருடத்தில் 150 திருவிழாக்களிலாவது கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஒரே கோவிலில் அந்தக் கோவிலுக்கு மட்டுமே உடைமையாக இருக்கும் யானைகளின் நிலை பரவாயில்லை.தனியார்கள் வசமிருக்கும் யானைகளின் நிலை மிகமோசம். மேலும் யானைகளின் புலன்கள் மிக நுட்பமானவை,அவற்றின் அருகில் அதிக சத்தத்தோடு வெடி வெடிப்பதும் செண்டை,பஞ்ச வாத்தியம் போன்ற மேளங்களை முழக்குவதும் அவற்றைத் துன்புறுத்தும் என்று விலங்கு ஆர்வலர்கள் கருதுகிறார்கள், இதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
யானைகளின் நுட்ப உணர்வு பற்றிப் பேசும்போது விநாயக புராணத்திலிருந்து (முட்கல புராணம்)ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. தாந்திரீக சாதனையில் விநாயகர் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். மூலாதாரம் என்பதுதான் ஒருவரது அகங்காரம் உறையும் இடம். விநாயகரை வழிபடுவதன் மூலமாக ஒருவர் தன் அகங்காரத்தைக் கடந்து அடுத்த நிலைக்கு செல்லலாம்.மூலாதாரம் புலன்களில் வாசனை உணர்வோடு தொடர்புடையது. தான் எனும் அகங்காரத்தை வடமொழியில் மமகாரம் என்று அழைக்கிறார்கள். கணேசபுராணத்தில் மமகாசுரன் என்ற அசுரனின் அட்டகாசம் மிகும்போது விநாயகர் ஒரு தெய்வீகத் தாமரைப்பூவை அவன் மீது எறிகிறார்.அதன் வாசனை தாங்காமல் மமகாசுரன் மயங்கிச் சரணடைந்துவிடுகிறான்.
மே, 2023