தொடர்கள்

காதல் தி கோர்

இந்திய சினிமாவில் ஓர் இனிய வரவு!

இரா.பிரபாகர்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய சினிமாவில் புதிய பேசுபொருளாக இணைந்திருப்பது சுயபால் விருப்பாளர்கள் பற்றிய கதைகள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றுப்பாலினத்தவர் பற்றிய படங்கள் வரத்தொடங்கின.

திருநங்கையர், திருநம்பியரைப் பற்றிய கதைகள். Boys don't Cry (1999)  அமெரிக்க திருநம்பி ஒருவரின்  உண்மைக்கதையைப் பேசியது. மாற்றுப்பாலினத்தவர் பற்றிய படங்கள் அளவுக்கு சுயபால் விருப்பாளர்களின் உலகம் கண்டுகொள்ளப்படவில்லை. பாலினவேறுபாட்டுக்கும் பாலியல் விருப்பம் என்பதற்குமான வேறுபாடு பொதுவெளியில் புரிந்துகொள்ளப்படாமல் இருந்துவந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பாலினம் (gender) என்பது உடலியல் ரீதியானது. குரோமோசோம்களின் சேர்க்கையைப் பொறுத்தது. ஒருவகையில் இயற்கையானது என்ற புரிதலுக்குப்பின் மாற்றுப்பாலினத்தவரை அங்கீகரித்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பாலியல் விருப்பம் (Sexual preference) என்பது இயற்கையானதல்ல. அது இயல்புக்கு மாறானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைவே இயற்கையானது. அது தவிர்த்தவற்றை  அங்கீகரிப்பது சமூக ஒழுங்கைச் சீர்குலைத்துவிடும் என்பதான பொதுப்புரிதலில் இன்றைக்கும்கூட பெரும் மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. ஆக ஒருபால் ஈர்ப்பை நியாயப்படுத்தும் கதைக்களங்களைக் கையாள்வது இதுவரை சாத்தியமாகவில்லை. ஒரு ஆண் இன்னொரு ஆணால் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுவது இயற்கைக்கு மாறானது மட்டுமல்ல, அது ஒரு பிறழ்வு நடவடிக்கையாகவும் கருதப்பட்டதால் ஒருபால் ஈர்ப்பை நியாயப்படுத்துகின்ற கதைகளை உருவாக்க எந்த இயக்குநரும் முயற்சிக்கவில்லை. 2000த்திற்குப் பின் LGBTQ (லெஸ்பியன் - கே - பை செக்ஸ்சுவல் - டிரான்ஸ் ஜெண்டர் - குயிர்) எனும் குடையில் கீழ் உலகம் முழுமையும் தங்கள் பாலியல் இணையைத் தேர்வதும் தம் அடிப்படை உரிமை எனும் குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை பொதுச் சமூகம் கற்பனை செய்திருந்ததைவிட இத்தகைய ஒருபால் ஈர்ப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதை குடிமைச் சமூகம் உணரத்தொடங்கிவிட்டது.

 அந்த வகையில் இந்தித் திரையுலகில் இயக்குநர் தீபா மேத்தாவின் ‘Fire', 1996 ஆம் ஆண்டு வெளியானது. தயாரிப்பில் உள்ளபோதே சர்ச்சைக்குள்ளானது. இந்து அடிப்படைவாத அமைப்புகள் படப்பிடிப்பு நடந்த இடங்களில் புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து அந்தப் படத்திற்கு இலவச விளம்பரத்தைத் தேடித்தந்தார்கள். கடந்த 25 ஆண்டுகளில் இன்று உலகமயம் உருவாக்கிய திறந்த சந்தையும், நுகர்வு கலாச்சாரமும், ஊடகப் பரவலாக்கமும் அடிப்படைவாதிகளை அடக்கி வாசிக்கச் செய்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.  இதுதவிர, இணையவெளியில் கொட்டிக் கிடக்கும் உலகப்படங்களும் கைபேசிகளில் படங்களைப் பார்ப்பதற்கான வசதியும் திரைப்படங்களை பொதுவெளியிலில் நுகர்வதிலிருந்து தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக நுகர்வதற்கானதாக மாற்றியிருக்கிறது. ஒருகாலத்தில் நாம் பொதுவெளியில் பேசத்தயங்கிய விசயங்களையெல்லாம் இன்றைய தலைமுறையினர் பொது உரையாடலில் பேசத் தொடங்கிவிட்டனர். அதனாலேயே, கலாச்சார காவலர்களாகத் தங்களை காட்டிக்கொள்ளும் பி.ஜே.பி. அரசும் அதன் சகோதர அமைப்புகளும் சினிமாவில் வன்முறை மற்றும் மிதமிஞ்சிய பாலியல் காட்சிகளைக்கூட கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

இத்தகைய சூழலில் உலக சினிமாவில் 2000 - க்குப் பின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படங்கள் வந்தவண்ணம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கான எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் இந்திய/ தமிழ் சினிமாவில் அத்தகைய பாத்திரங்கள் ஆங்காங்கே தென்படுவதுண்டு. அப்படி இருந்தாலும் அந்த பாத்திரங்களை எதிர்மறைப்பாத்திரங்களாகவே காட்டமுற்படுவதுண்டு. வேட்டையாடு விளையாடு படத்தைப் போல். அவர்களின் மனவுணர்வுகளை புரிந்துகொள்ளும் யத்தனம் இருந்ததில்லை.

‘காதல் - தி கோர்' எனும் இந்தத் திரைப்படத்தில் இதுவரை எடுத்தாளப்படாத கோணத்தில் கதைக் களத்தை அணுகியிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா. திருமணமாகி கல்லூரியில் படிக்கும் மகளையும் உடைய தம்பதியர் மம்முட்டியும் ஜோதிகாவும். திரைப்படத்தில் மேத்யூ - ஓமனா. திருமணமாகி ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழிந்தபின்னான ஒருநாளில்  கணவனின் ஒருபால் ஈர்ப்பை வெளிஉலகத்திற்குத் தெரிவிக்கும் வகையில் விவாகரத்துகோரி வழக்குத் தொடுக்கிறாள் மனைவி. கணவனுக்கு அந்த

 சிற்றூரில் வசிக்கும் ஒருவருடன் இத்தகைய  உறவு இருப்பதை திருமணமான தொடக்கத்திலேயே அறிந்தும் அதைப் பொறுத்துக்கொண்ட மனைவி இதற்குமேலும் பொறுக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வருகிறாள் போலும். இந்த விசயத்தை மகள் புரிந்துகொள்ளும் காலத்திற்காகக் காத்திருந்தாள் ஓமனா என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரிந்தவுடன் மேத்யூ மகளைப் பார்க்கக் கல்லூரிக்கு தயக்கத்துடன்

செல்கிறான். அப்பா.. இதுக்காக நான் உங்கமேல வச்சிருக்கிற பாசம் ஒண்ணும் கொறையாது.. என பக்குவமாகப் பேசுகிறாள் மகள். ஓமனா வழக்குத் தொடுப்பதற்கு சில நாட்கள் முன்புதான் உள்ளூர் கவுன்சிலருக்கு நடக்கும் ஒரு இடைத்தேர்தலில் மேத்யூ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்திற்குத் தயாராகிறான். இந்த விசயத்தை எதிர்கட்சிக்காரர்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மேத்யூ, இந்த சூழலில் நான் தேர்தலில் நிற்பது சரியாக இருக்காது என்று தயங்க,   மேத்யூவின் இந்த ஒருபால் உறவு விவகாரம் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பதட்டம் இருந்தாலும் பின்வாங்க இயலாத சூழலாக இருக்கிறது.

வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இருவரும் வீட்டிலிருந்து ஒரே காரில் பயணிக்கிறார்கள். மேத்யூ  அதிர்ந்து பேசும் நபர் அல்ல. இருவரும் இயல்பாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். மேத்யூவின் வழக்கறிஞர் ‘மேத்யூ - ஓமனா இல்லற வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டு வேறு காரணங்களால் அபாண்டமாக இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்' என்று வாதிடுகிறார். நீதிபதி ‘உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி? உடல்ரீதியான உறவு உண்டுதானே? என்று ஓமனாவைக் கேட்கிறார். ஆம். நான்கு முறை என்கிறாள் ஓமனா. மேத்யூவின் வழக்கறிஞர் ‘ பார்த்தீர்களா.. மைலார்ட்... மாதத்திற்கு நான்கு முறை உறவு என்பது மிக இயல்பானதுதான்' என்கிறார். ஓமனா இடை மறித்து... திருமணமானதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் நான்கு முறைதான் என்கிறாள்.

நீதிபதி வேறு சாட்சிகள் தேவை என்கிறார். படத்தில் இதுவரை பேசாத மேத்யூவின் வயதான தந்தை கூண்டிலேறி, சிறு வயதுமுதலே என் மகன் ஒருபால் ஈர்ப்புடையவன் என்பது தனக்குத் தெரியும் என்றும் தன் வற்புறுத்தலாலேயே இந்தத் திருமணம் நடந்தது என்றும் மகனுக்கு எதிராக சாட்சி சொல்கிறார். நீதிபதி விவாகரத்து வழங்கிவிடுகிறார்.

வெறும் அதிர்ச்சி மதிப்பிற்காகவோ அல்லது இன்றைய தேதிக்கான சூடான கச்சாப் பொருள் என்பதற்காகவோ இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்தத் திரைக்கதையை பின்னியிருக்கிறார்கள். படத்தில் எதிர்க் கதாபாத்திரங்களே இல்லை எனலாம். மேத்யூ - ஓமனா - மேத்யூவின் தந்தை - மேத்யூவின் ஆண் தோழன் - மகள் , யாரும் உரத்துப் பேசிக்கொள்ளும், சச்சரவிடும் வாய்ப்புகளே இல்லை. நீதிமன்றத்தில் ஓமனா சாட்சிசொல்ல கூண்டிலேறும்போது அவளின் கைப்பையை ஆதரவாய் மேத்யூ வாங்கி வைத்துக் கொள்கிறான். ஓமனாவின் செயல்களில் பழிவாங்குதல் அவதூறு செய்தல் என்பது துளியும் இல்லை. மேத்யூவின் அப்பா தன் தவறை உணர்ந்து ஓமனாவின் விடுதலைக்குத் துணை நிற்கிறார். மேத்யூவும் அவர் தோழரும் ஒன்றாக இருக்கும் காட்சிகளோ அவர்களின் அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் காட்சிகளோ இல்லவே இல்லை. எல்லாவற்றையும்விட இந்த விசயம் வெளித் தெரிந்ததால் மேத்யூ தேர்தலில் தோற்றுவிடவும் இல்லை. பொதுச்சமூகமும் அதை ஏற்றுக்கொள்கிறது. இன்றைய தலைமுறையான மேத்யூவின் மகளும் இந்த உறவைப் புரிந்துகொள்கிறாள். ஓமனா மேத்யூவிடம் விடைபெறும் முன்  ‘உன் வாழ்க்கையை நான் பாழாக்கிவிட்டேன்' என்பதுபோல் ஏதோ சொல்கிறான். பதிலுக்கு ‘மேத்யூ... என்னோட சந்தோசத்துக்காக மட்டும் போகல.. உன்னோட சந்தோசத்துக்காகவும்தான்' என்று சொல்லிவிட்டு மேத்யூவின் தோள்களில் சாய்ந்துகொள்கிறாள். இவ்வளவுக்கும் பிறகான அந்த அரவணைப்பு சொல்லாமல் சொல்வதை ‘தூய்மையான அன்பு என்றோ பரஸ்பர நம்பிக்கை என்றோ மனிதர்களுக்குள் இருக்கவேண்டிய அடிப்படையான நேசம்' என்றோ புரிந்துகொள்ளலாம்.

இத்தகைய பாத்திரத்தை ஏற்று நடித்ததோடு இப்படத்தையும் தயாரிக்கும் மனத்துணிவு கேரளாவில் மட்டுமே சாத்தியமாகும். வணிகரீதியிலும் 14 கோடிகளைக் கடந்து வசூல் செய்திருக்கிறது இந்தப்படம். எந்த முஸ்தீபுகளுமில்லாமல் படத்தை ஜோ பேபி இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்' மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். கண்ணியமாக இதைப் பேசியதற்காக மலையாள

சினிமாவுக்கும் மம்முட்டி எனும் நடிகனுக்கும் நம் வந்தனங்களைத் தெரிவிக்கலாம்.