பி. சுசீலா 
தொடர்கள்

இசையரசி - 39

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

பி.ஜி.எஸ்.மணியன்

“சுசீலாம்மாவின் தாய் மொழி தெலுங்கு.  ஆனாலும் தமிழை அவர்களைப் போல அவ்வளவு அழகாக உச்சரித்துப் பாடுபவர்கள் யாருமே கிடையாது. சுசீலாமாவுக்கு நிகர் அவங்கதான்.  அவங்க பாட்டை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழுக்கும் அமுதென்று பேர், மாலைப்பொழுதின் மயக்கத்திலே.. இந்தப் பாட்டை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது. அவங்க பாட்டுக்கு பரம ரசிகை நான்.  ரசிகை என்று சொல்வதை விட அவங்க குரலுக்கு நான் அடிமை.  அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் அவர்களுக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்று மனமார நான் வேண்டிக்கொள்கிறேன் - நகைச்சுவை சக்கரவர்த்தினி நடிகை திருமதி. மனோரமா

ஒரு இசை அமைப்பாளராக “ரோஜா” படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்த ஏ. ஆர். ரஹ்மான் இன்றைய இளைய தலைமுறை இசையின் முன்னோடி என்றால் அது மிகையாகாது.

இவரது இசையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பாடி இருக்கிறார் பி. சுசீலா என்றாலும் உண்மையான உழைப்பின் பிரதிபலிப்பாக அமைந்த பாடல்கள் அவை.

“புதிய முகம்” – படத்திற்காக எதிலெல்லாம் அழகு நிறைந்திருக்கிறது என்பதைப் பட்டியலிட்டு கவிஞர் வைரமுத்து பாடலை அருமையாக வடித்தெடுத்து ஏ.ஆர். ரஹ்மானிடம் ஒரு நிபந்தனையுடன் கொடுத்தார்.

“இந்தப் பாடலைப் பி. சுசீலா அவர்களைத் தவிர வேறு யாரையும் பாடவைக்கக் கூடாது.” என்றார் வைரமுத்து.

“ஏன் அப்படி?” என்று கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

“தமிழுக்கே சிறப்பான “ழ” இந்தப் பாடலில் இருக்கிறது.  அந்த “ழ”வை சுசீலா அம்மையாரைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முடியாது. அதனால் தான் இந்தப் பாடலை பி. சுசீலா அவர்களையே பாடவைக்க வேண்டும்” என்றார் வைரமுத்து.

அதன்படியே ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும் பி. சுசீலாவையே பாடவைத்தார். 

“கண்ணுக்கு மை அழகு – கவிதைக்குப் பொய் அழகு

அவரைக்குப் பூ அழகு – அவருக்கு நான் அழகு..”  ஆரம்பிக்கும் பாடலில் வைரமுத்து அவர்கள் இன்னொரு வரியாக...

 “சுசீலாம்மா குரல் அழகு.” என்பதையும் அவர் சேர்த்திருக்கலாம்.!

இனிமையாக மனதை வருடி வசீகரிக்கத் தவறவில்லை பி. சுசீலாவின் குரல்.

இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத பாடலாக அமைந்திருக்கும் பாடல்.

அதனால் தான் தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம் சார்பாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப் பட்டபோது அவரது நீண்ட இசைப் பயணத்தை வெகுவாகச் சிலாகித்து தான் எழுதிய கவிதையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் அவர்:

“நீ கண்ணுக்கு மையழகு பாடவந்தபோது

சந்திரனும் சூரியனும் நட்சத்திரமும்

கூழாங்கல்லும் என் தமிழும் அழகாயின”

தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “இந்தியன்” (பாகம் 1) படத்தில் “கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு” என்ற பாடலை முழுவதுமாக பி. சுசீலா அருமையாகப் பாட பாடலும் பதிவானது.  ஆனால் படத்தின் கதாநாயகன் தானே பாடவேண்டும் என்று விரும்பிய காரணத்தால் பி. சுசீலா பாடிய பகுதிகள் முழுவதுமாக நீக்கப்பட்டு பல்லவி மட்டும் பி. சுசீலாவின் குரலில் ஒலித்தது.

**

1992-இல் இளையதலைமுறை இசை அமைப்பாளராக அறிமுகமான சிற்பி அவர்களது இசையில் விக்ரமன் இயக்கிய படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமைந்துவிட்டன.

“கோகுலம்” படத்தில் கவிஞர் பழனி பாரதி எழுதிய “செவ்வந்திப் பூவெடுத்தேன்” பாடலை உன்னி மேனனுடன் இணைந்து பாடி பானுப்ரியாவுக்காகப் பாடி இருந்தார் பி. சுசீலா. 

நடிகை மோகினிக்காக விக்ரமனின் “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்திற்காக “ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே” பாடலை (இதுவும் கவிஞர் பழனி பாரதியின் பாடல் தான்) பாடகர் மனோவுடன் இணைந்து பாடிக் கேட்பவர் மனங்களைத் தாலாட்டினார் பி. சுசீலா.

இதே போல இயக்குனர் விக்ரமனின் மாபெரும் வெற்றிப் படமான “புது வசந்தம்” படத்தில் உச்ச கட்டக் காட்சியில் சித்தாரா ஆரம்பித்து வைத்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடர்வார். “ஒரு பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” என்ற அந்தப் பாடலில் ஒரு சிறு பிட் தான் பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும்.  ஆனால் அந்தச் சிறு பிட்டே அவரது தனித்தன்மையை நிலைநாட்டி விடும்.

இதே போல படத்தை முடித்து வைப்பதும் அவர் குரலேதான்!

 “இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நினைக்கும் தாளம் போட்டு” என்று பி. சுசீலா பாடல் பாடல் பதிவுடன் படம் முடிந்துவிடும்.  இன்னும் கொஞ்சம் கூட இசை அரசியின் குரலில் பாடலைக் கேட்கமாட்டோமா என்று ஏங்கவைக்கும் பாடல் இது.

இவர்கள் மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதல் முதலாக இசை அமைத்த “கன்யாகுமரி” தெலுங்குப் படத்தில் பி. சுசீலாவைத்தான் பாடவைத்தார்.  எஸ்.பி. பி. இசை அமைத்த “மயூரி” மலையாளப் பதிப்பில் “ஈ பாதம் ஓம்கார ப்ரம்ம பாதம் ”என்று தொடங்கும் பாடலை ஹிந்தோள ராகத்தில் வெகு அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் பி.சுசீலா. Ee Paadham - Mayoori (youtube.com).

இதே படத்தில் கே.ஜே. ஜேசுதாசுடன் இணைந்து “மௌனம் கானம் மதுரம் மதுராக்ஷரம் ” என்ற பாடலையும் பி.சுசீலா பாடி இருக்கிறார். Mounam Ganam - Mayoori (youtube.com) கானகந்தர்வனுடன் இசை அரசியும் சேர்ந்து பாடும்போது இந்தப் பாடல் மனதை அள்ளாமல் போகுமா என்ன?

ஒரு கால கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த நேரத்தில் அதுவும் தமிழில் இளையராஜா – மெல்லிசை மன்னர்  : தெலுங்கில் – கே.வி. மகாதேவன்- சக்ரவர்த்தியின் காலகட்டத்தில் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பி. சுசீலா – எஸ். ஜானகி இருவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் பணியாற்றி வந்தனர்

எஸ்.பி.பி. - பி.சுசீலா

அந்த நேரத்தில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை எஸ்.பி.பி – பி. சுசீலா இருவரும் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சம்பவம் பி. சுசீலாவின் பொறுமைக்கும், பெருந்தன்மைக்கும் மிகப் பெரிய உதாரணமாக விளங்குகிறது.

அந்தக் காலகட்டத்தில்  ஒரு நாளில் எக்கச்சக்க கால்ஷீட்களை சந்திக்க நேர்வதில் பாடகர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை இருந்தது.   இசைப் பொறுப்பாளர்களைப் பொறுத்தவரை பாடகர்களின் கால்ஷீட் வாங்குவதோடு அவர்கள் வேலை முடிந்தது. “சுசீலாம்மா கால்ஷீட் கிடைத்ததா?  கிடைத்தது. பாலுவின் கால்ஷீட் வாங்கினாயா? வாங்கிவிட்டேன்.- இதோடு அவர்கள் வேலை முடிந்தது.

தகுந்த நேரத்தில் பாடல் பதிவு முடியாவிட்டால் தாமதத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அவர்கள் வேலை இல்லையே:  அதெல்லாம் பாடக பாடகியரின் பாடுதானே!

மெல்லிசை மன்னரிடம் இசைப் பொறுப்பாளராக திரு.நாராயணன் அவர்கள் கே. பாலச்சந்தரின் “மன்மத லீலை” படத்திற்காக எஸ்.பி.பி – பி. சுசீலா இணைந்து பாடவேண்டிய பாடலுக்காக இருவரையும் கால்ஷீட்டுக்காக அவரை அணுகினார் அவர். 

அதே நாளில் ஏற்கெனவே இளையராஜாவின் இசையில் பாடுவதற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பி. சுசீலாவும் நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.

அதனைச் சொல்லியும் கேட்காமல் “ஒரே ஒரு பாட்டுத்தான். வந்து பாடிட்டு இங்கே வந்துவிடலாம்” என்றார் நாராயணன்.

எவ்வளவோ நிலைமையை இருவரும் விளக்கிச் சொல்லியும் கேட்காமல் இருந்த அவரை ஒரு வழியாகச் எடுத்துச் சொல்லி “ஏற்கெனவே ஒத்துக்கொண்ட பாடல் பதிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டு நாங்கள் வந்துவிடுகிறோம். இதை எம்.எஸ்.வி. சாரிடம் மறக்காமல் சொல்லிடுங்க.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.  ஆனால் அவர் மெல்லிசை மன்னரிடம் இதனைக் கூறாமல் பொத்தாம் பொதுவாக “எல்லாம் வந்துடுவோம்னு சொல்லிட்டாங்க”என்று மழுப்பலாக கூறித் தப்பித்துக் கொண்டுவிட்டார்.

பி.சுசீலா ஆரம்பத்திலேயே “ஒரு பாட்டுத்தானே பாலு.  நாம பாடி முடிச்சிட்டு இங்கே வந்துடலாம்.  அப்புறம் நேரமாகிடும்.  எம்.எஸ்.வி. சார் கோபித்துக் கொள்வார். நாம முதல்லே அங்கே பாடிட்டு வந்திடுவோம் .” என்று தன்மையான குரலில் சொல்லவும் செய்தார்.  ஆனால் “ஏற்கெனவே ஒத்துகொண்ட பாடல் பதிவை முடித்துவிட்டு நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் போயிடலாம்.” என்று அவரைச் சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் எஸ்.பி.பி.

ஆனால் அன்று பார்த்து நிறைய முறை ரீ-டேக் அவர்கள் நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

இங்கோ எம்.எஸ்.வி.யின் பிரஷர் ஏறிக்கொண்டிருந்தது.  வாத்திய கோஷ்டி எல்லாம் பக்காவாக ஒத்திகை முடித்துவிட்டு தயாராக இருந்தார்கள். 

எம்.எஸ்.வி.யின் கணக்குப்படி காலை பத்தரை மணிக்கு ஒலிப்பதிவு.  ஆனால் நாராயணன் மழுப்பி விட்ட காரணத்தால் பி.சுசீலா – எஸ்.பி.பி. இருவரையும் தவறாக நினைக்க வேண்டியதாகிவிட்டது.

மதியம் இரண்டு மணி.  வாத்திய கோஷ்டியினர் சாப்பிடக்கூட போகாமல் பசியோடு காத்திருந்த நேரத்தில் ஏ.வி.எம். ரெக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் கார் வந்து நின்றது.

“பாலு. அவரு ரொம்ப கோவமா இருப்பாரு. நீ முதல்ல இறங்கிப் போ.  நான் பின்னாலே வரேன்” என்று பி. சுசீலா சொல்ல காரிலிருந்து இறங்கி வாசலில் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்த மெல்லிசை மன்னரை நோக்கி நடந்தார் எஸ்.பி.பி.

அவரைப் பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த கோவம் வார்த்தைகளாக வெடித்துக் கிளம்பியது மெல்லிசை மன்னரிடமிருந்து.

‘வாங்க சார். எங்களை எல்லாம் பார்த்தால்  உங்களுக்கு மியூசிக் டைரக்டராத் தெரியலையா?”

அவர் விளையாடுகிறார் என்று நினைத்த பாலசுப்ரமணியம் “ஏன் சார். இப்படிக் கேக்கறீங்க?” என்றார்.

“மணி என்ன இப்ப?’”

“ரெண்டரை சார்?”

“ரெக்கார்டிங் எப்பன்னு சொல்லி இருக்கு?”

“காலையிலே ஒன்பதரையில இருந்து பத்தரை மணிக்குள்ள?”

”இப்படித்தான் லேட்டா வருவீங்களோ நீங்க.  அவ்வளவு பெரிய மனுஷன் ஆயிட்டியா நீ?”

“சார். இஞ்சார்ஜ் கிட்டே சொல்லி...” என்று ஆரம்பித்த எஸ்.பி.பியை முடிக்கவிடாமல் “பேசாதே. என்ன பெரிய இன்சார்ஜ். நான் மியூசிக் டைரக்டரா இல்ல இன்சார்ஜா?” என்று படபடவெனப் பொரிந்து தள்ளிவிட்டார் எம்.எஸ்.வி.

அந்த நேரத்தில் காரிலிருந்து இறங்கிய பி. சுசீலாவைப் பார்த்ததும் அவரது கோபம் முழுக்க அவரிடம் திரும்பியது.

“சுசீலா! எப்போதிலிருந்து உனக்கு இந்தப் பழக்கம்/.  இவனை மாதிரியே நீயும் மாறிட்டியா? உன்னோட டிசிப்ளின் எல்லாம் எங்கே போச்சு? இந்த ஒழுங்கீனத்தை எல்லாம் நீயும் கத்துகிட்டியா? ரொம்பத் தப்பும்மா ரொம்பத் தப்பு.”  - ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அனைவரும் பார்க்க மெல்லிசை மன்னரிடமிருந்து வெளிவந்த கடுமையான வார்த்தைகள் பி. சுசீலாவைக் கண்கலங்க வைத்து விட்டது.

ஒரு வார்த்தை கூடப் பதில் பேசாமல் பொறுமையுடன் திட்டை வாங்கிக்கொண்டு இருந்தார் அவர்.

“சரி சரி. உள்ளே வாங்க ரெண்டு பேரும்.” என்று உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற எம்.எஸ். வி. இருவருக்கும் பாட்டைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

சுகம் தானா சொல்லு கண்ணே – அந்நியன் போல் நான் கேட்கிறேன்”

அடுத்த அரை மணி நேரத்திற்குள் இருவரும் பாடலைக் கற்றுக்கொண்டு விட ஒரு முறை ஒத்திகை முடிந்து பாடல் பதிவிற்காக வாய்ஸ் ரூமுக்குள் சென்றதும் ஒலிவாங்கியின் முன் நின்றபோது “எல்லாரும் பசியோட இருக்காங்க. ப்ரேக் அப். சாப்பிட்டுவிட்டு வந்ததும் தான் ரெக்கார்டிங்”என்று எம்.எஸ்.வி. சொல்லி நிறுத்திவிட்டு வெளியேற அனைவரும் சாப்பாட்டுக்காக வெளியே சென்றார்கள்.  ஆனால் பி.சுசீலாவும் – எஸ்.பி.பி.யும் சாப்பிடப் போகாமல் அந்த சின்னஞ்சிறிய ரெக்கார்டிங் அறைக்குள் பாடலை மீண்டும் மீண்டும் பாடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சாரிம்மா. என்னால தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமும்” என்று நெகிழ்ச்சியுடன் எஸ்.பி.பி. சொன்னபோது, “பரவாயில்லே பாலு.  நாம கரெக்டாப் பாடிட்டா எல்லாம் சரியாப்போயிடும். கவலைப்படாதே.” என்று அவருக்கு சமாதானம் சொல்லி ப்ராக்டிசைத் தொடர்ந்தார் பி. சுசீலா.

நான்கு மணி அளவில் அனைவரும் திரும்பி வந்தபோது இருவரும் ரெக்கார்டிங் ரூமிலேயே இருப்பதைப் பார்த்த எம்.எஸ்.வி. “நீங்க ரெண்டுபேரும் சாப்பிடப் போகவில்லையா/” என்று கேட்க “பரவாயில்லே சார். நாங்க ரிகர்சல் பார்த்துக்கொண்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம்.” என்று பி.சுசீலா சொல்ல, “அட. என்னம்மா நீ? ஏதாவது  சாப்பிட்டு இருக்கலாமில்லே” என்று உரிமையுடன் கடிந்துகொண்டார் எம்.எஸ்.வி.  இப்போது அவரது கோபம் பெருமளவு குறைந்திருந்தது.

அந்தப் பாடல் பதிவு முடிய மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. அதுவரை சாப்பிடக்கூடப்  போகாமல் இருந்து பதிவை பி.சுசீலாவும் – எஸ்.பி. பாலசுப்ரமணியமும் முடித்துக் கொடுத்துவிட்டு  அனைவரும் கிளம்பிச் சென்றதும் எம்.எஸ்.வி. யை நெருங்கி தங்கள் பக்கத்தில் தவறேதும் இல்லை என்று விளக்கிச் சொன்னதும், “அட அவன் இதை எல்லாம் ஒண்ணுமே சொல்லலேப்பா.  ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் எம்.எஸ்.வி.

“அன்னிக்கு சுசீலாம்மா மட்டும் “எனக்கு ஒண்ணுமே தெரியாது. ஆரம்பத்துலேயே நான் சொன்னேன்: பாலு கேட்கவில்லை ” என்று சொல்லியிருந்தாரென்றால் அவர் தப்பித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் பொறுமையோடு அத்தனை திட்டையும் எனக்காகத் தானும் வாங்கிக்கொண்டு இருந்தாரே. அந்தப் பெருந்தன்மையை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்.” என்று இந்தச் சம்பவம் குறித்து தனது யூடியூப் பதிவில் விவரமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..

1977-1788-இல் முதல் முறையாக அமெரிக்காவிற்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பு பி.சுசீலா – எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில் தெலுங்கில் சக்கரவர்த்தி அவர்கள் மிகப் பிசியாக இருந்த நேரம்.

போவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே அதற்கேற்றபடி திட்டமிட்டுக் கொள்ளும்படி அனைத்து இசை அமைப்பாளர்களிடமும் சொல்லிவிட்டார்கள்.

ஆனால் ஊருக்குச் செல்வதற்கு முதல் நாள் வரை இருபது பாடல்களுக்கு மேல் பாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் பி. சுசீலா. அதில் கிட்டத்தட்ட பதினான்கு பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடவேண்டும்.

“காலையில் ஏழுமணிக்கு ஆரம்பித்தோம். எங்கே காபி குடிக்கிறோம்: எங்கே சாப்பிடப்போகிறோம் என்றே தெரியாது. ஒரு ஸ்டூடியோவில் இருந்து இன்னொரு ஸ்டூடியோவுக்கு என்று அலைந்து அலைந்து பத்தொன்பது பாடல் வரைக்கும் பாடிவிட்டோம். கடைசி பாடல் பிரகாஷ் ஸ்டூடியோவில் சத்யம் சாரின் இசையில் பாடி முடிக்கும்போது நேரம் நள்ளிரவு இரண்டு மணியை எட்டிவிட்டிருந்தது.” என்று விவரிக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அந்தப் பத்தொன்பதாவது பாடலைப் பாடி முடிக்கும் போது கூட கொஞ்சம் கூட முகத்தில் மலர்ச்சி மாறாமல் இருந்திருந்தார் பி. சுசீலா.

ஒரு காலகட்டத்தில் தெலுங்கில் சக்ரவர்த்தி அவர்கள் மிகவும் பிசியாக இருந்த காலகட்டத்தில் காலை ஆறு  மணி முதல் ஒன்பது மணி வரை கால்ஷீட். அந்த ஒன்பது மணிக்குள் முடித்துவிட்டு ஸ்டூடியோவை அடுத்த ஒலிப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.  சக்ரவர்த்தி அவர்கள் இசையில் அதிகமாக பாடியவர்கள் பி.சுசீலா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவர் தான். அப்போதும் கொஞ்சமும் தளர்ச்சியைக் காட்டாமல் “பரவாயில்லே பாலு. ஒரு பாட்டுத்தானே கூட. பாடிடலாம்” என்று அவருக்கும் உற்சாகமூட்டி பாடவைப்பார் பி. சுசீலா.

அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அவர் சந்தித்த பிரச்சினைகளோ வேறு விதம்.

சுவாரஸ்யமான அந்தச் சம்பவங்கள்...

(அடுத்த இடுகையில் முடியும்.)