பி. சுசீலா 
தொடர்கள்

இசையரசி - 37

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

பி.ஜி.எஸ்.மணியன்

“இசை சரஸ்வதி பி. சுசீலாம்மா அவர்களுடன் இணைந்து பாடும் பாக்கியம் முதல் முதலாக  என்னுடைய பன்னிரண்டாவது வயதில் “திருமால் பெருமை” படத்தில் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்து பெரியவனான பிறகு அவர்களுடன் இணைந்து “நாயகன்” படத்தில் டூயட் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இப்படிப்பட்ட அபூர்வமான வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. எனது தகப்பனாருடன் இணைந்து அவர் பாடியிருக்கும் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. வானத்தில் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன் தான். அதே போல இசை வானத்தில் என்றும் ஒரே ஒரு சுசீலாம்மா தான். - பின்னணிப் பாடகர் திரு. டி. எல். மகராஜன்.

வருடம் 1976.

இசை உலகில் ஒரு புதிய சகாப்தம் படைக்க திரை உலகில் இளையராஜாவின் பிரவேசம் “அன்னக்கிளி” படத்தின் மூலம் ஆரம்பமானது.

அதற்கு முன்பே ஒரு உதவியாளராக இளையராஜா ஜி.கே. வெங்கடேஷிடம் பணிபுரிந்த படங்களில் பி.சுசீலா பாடியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அப்படி இளையராஜா உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றிய முதல் பாடலே பி. சுசீலா பாடியதுதான்.

தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்த போது ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷ் மறுநாள் நடக்கவிருக்கும் பாடல் பதிவில் “ஆர்கன்” வாசிக்க மாஸ்டரை அழைத்திருக்கிறார்.

தான் மட்டும் போகாமல் மறுநாள் காலையில் இளையராஜாவையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார் பரணி ஸ்டூடியோவிற்குச் சென்றார் தன்ராஜ் மாஸ்டர்.

ஒன்பது மணிக்கு ஜி.கே.வெங்கடேஷ் வந்து பாடலில் ஆர்கன் வரவேண்டிய இடத்தைப்பற்றி தன்ராஜ் மாஸ்டருக்கு ஜி.கே. வெங்கடேஷ் விளக்க..  அவர் சொன்ன ஸ்வரங்களை இளையராஜா எழுதிக்கொள்ள..

இசை அமைக்கப்பட்டு முழுப்பாடலும் தயாராகிவிட பத்தரை மணிக்கு பி.சுசீலா வந்து பாடிக் கொடுக்க ஒலிப்பதிவு செய்யப்பட்டது.  அந்த வகையில் முதல் முதலாக ஒரு உதவியாளராக இளையராஜா பணியாற்றிய கன்னடப் படத்தின் பாடலைப் பாடியவர் பி. சுசீலாதான்.

தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இளையராஜா இணைந்த பணியாற்றிய முதல் படமான  ஸ்ரீதரின் “அவளுக்கென்று ஒரு மனம்” படத்தில் அவர் “காம்போ ஆர்கன்” வாசித்த முதல் பாடலான “மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி” பாடலைப் பாடியவர் பி.சுசீலா தான்.

அன்னக்கிளி படத்துக்கு முன்பே இளையராஜா இசை அமைப்பாளராக ஒப்பந்தமான ஒரு படத்திற்காக இசை அமைத்த முதல் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிக்கொடுத்தவரும் பி.சுசீலாவேதான்.

ஒரு இசை அமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்குவதற்கு பல காலம் முன்பே பி.சுசீலாவின் குரலினிமையினால் ஈர்க்கப்பட்டவர்தான் இளையராஜா.

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி” என்று பாக்யலக்ஷ்மி படத்தில் பி. சுசீலாவின் பாடல் இளையராஜாவின் “ஆல் டைம் ஃபேவரைட்” பாடல்.

அது மட்டுமல்ல திரை உலகுக்கு வருவதற்கு முன்பே பி. சுசீலாவின் புகைப்படத்தை ஃப்ரேம் செய்து தனது வீட்டில் மாட்டி வைத்தவர் இளையராஜா.

அவரது இசை அமைப்பில் வெளிவந்த “அன்னக்கிளி” படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களில் மூன்று பாடல்களை எஸ். ஜானகி பாட, ஒரே ஒரு பாடலை மட்டுமே பி.சுசீலா பாடினார்.

“சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ” என்று பி. சுசீலா பாடியிருக்கும்  பாடல் பாட்டுக்கு மெட்டு வகையைச் சேர்ந்த பாடல்.  ஆம். பஞ்சு அருணாசலம் பாடலை முதலில் எழுதிக் கொடுக்க “நாதநாமக்ரியா” ராகத்தின் ஸ்வரங்களைப் பயன்படுத்தி அருமையாக இளையராஜா அமைத்த பாடலை அற்புதமாக பாடியிருக்கிறார் இசை அரசி. Annakkili | Sonthamillai song (youtube.com)

இந்த ஒரு பாடலே போதும். பி.சுசீலா – இளையராஜா இருவரின் திறமையையும் பறை சாற்ற.

அதுவும் அந்த “அக்கக்கோ எனும் கீதம் அது தா...னே.. அதன் வேதம்” என்ற வரிகளை ஒவ்வொருமுறையும் பி. சுசீலா பாடும்போது கேட்கும் மனதை அப்படியே உருக்கி விடும்.

படம் வெளியான முதல் இருவாரங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வரவே இல்லை.  பேசாமல் படத்தைத் தூக்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த நேரத்தில் நிலைமை அப்படியே  தலை கீழாக – இல்லை இல்லை – மேலாக மாறிவிட ..  படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட ஆரம்பித்தது.

காரணம் இசையும் பாடல்களும் தான்.

அதிலும் பி. சுசீலா பாடிய இந்த “சொந்தமில்லை பந்தமில்லை” பாடலை மூன்று வாரங்களுக்குப் பிறகு தியேட்டர்களில் கத்தரித்து நீக்கி விட்டனர்.  அவ்வளவுதான்.  படம் பார்க்க வந்த ரசிகர்கள் செய்த ரகளையில் மீண்டும் பாடல் காட்சி இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

“இளையராஜா பி.சுசீலாவைப் புறக்கணித்து எஸ். ஜானகிக்கே முன்னுரிமை கொடுத்து சுசீலாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டார். அதற்கு ஒரு ஆரம்பம் அன்னக்கிளி ” என்ற ஒரு குற்றச்சாட்டும் தவறான கருத்தும் வைக்கப்படுகிறது. அன்னக்கிளியில் எஸ். ஜானகிக்கு மூன்று பாடல்கள்: சுசீலாம்மாவுக்கு ஒரே ஒரு பாடல். இதிலிருந்து ஆரம்பித்தது என்று அதற்காக சில பல சம்பவங்களையும் வதந்திகளாக உலவ விடுகிறார்கள்.

அப்படிப் பார்த்தால் இளைய ராஜா இசை அமைத்த நான்காவது படமான “பத்ரகாளி”யில் ஜானகிக்கு ஒரே ஒரு பாடல் தான்.  பி. சுசீலாவுக்கு இரண்டு பாடல்கள். அப்படி என்றால் இப்போது ஜானகியை பின்னுக்குத் தள்ளி விட்டார் இளையராஜா என்று எடுத்துக் கொள்ளலாமா?

என்ன அபத்தமான வாதம் இது?

அப்படி ஒருவர் வந்து ஏற்றி விட வேண்டிய நிலையில் தான் எஸ். ஜானகி இருந்திருக்கிறாரா?

இல்லை ஒருவர் வாய்ப்புக் கொடுக்காததால் பின்னுக்குச் செல்லவேண்டிய நிலையில் பி. சுசீலாதான் இருந்திருக்கிறாரா?.

இருவருமே திறமையினால் வளர்ந்தவர்கள். யாரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

அதுமட்டுமல்ல: இளையராஜாவின் வாழ்வில் முதல் முதலாக என்று எதெல்லாம் அமைந்ததோ  அவற்றில் எல்லாம் பி. சுசீலாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

இளையராஜா இசை அமைத்த முதல் கன்னடப் படம் “மாத்து தப்பத மக”. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில் “மறையத ஹரஷத” என்ற இனிமையான பாடலைப் பி.சுசீலா தான் பாடியிருக்கிறார்.  சரணங்களில் உச்சம் தொடும் இடங்களில் இனிமையும், நளினமும் பி. சுசீலாவின் குரலில் மிளிரும் அருமையான பாடல் இது. 1978 - Maathu Thappadha Maga - Mareyada Harashada - Video Song [TV Audio] (youtube.com)

இளையராஜாவின் இசை அமைப்பில் வெளிவந்த படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்து மொழிகளிலும் பிரபலமான பாடல்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இளையராஜாவுடன் பி. சுசீலா

அன்னக்கிளிக்கு அடுத்து வந்த “பாலூட்டி வளர்த்த கிளி” படத்தில் “வாடியம்மா பொன்மகளே வந்த இடம் நல்ல இடம்” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பி. சுசீலா பாடி இருக்கிறார்.  ஆனந்த பைரவி ராகத்தில் அருமையாக பாடலை அமைத்திருக்கிறார் இளையராஜா.  பி. சுசீலா இந்தப் பாடலை மனோரமாவுக்கும், அவரது மகளாக நடிக்கும் குமாரி ஷகிலாவிற்கும் (நாம் எங்க வீட்டுப் பிள்ளையில் பார்த்த அதே பேபி ஷகிலாதான். இந்தப் படத்தில் குமாரி ஷகிலாவாக அறிமுகம்) இருவருக்குமே பாடிக் கொடுத்து அசத்தி இருப்பது புருவத்தை உயர்த்த வைக்கிறது. Paalooti Valartha Kili Movie Songs | Ettuvagai Thirumangalamum Video Song | Vijayakumar | Sripriya (youtube.com)

இளையராஜாவின் இசையில் வெளிவந்த நான்காவது படமான “பத்ரகாளி” படம் இருபத்தைந்து வாரங்கள் ஓடி பெருவெற்றி கண்ட படம்.

இந்தப் படத்தில் தனது  மாறுபட்ட திறமைகள் பளிச்சிடும் வகையில் இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார் பி. சுசீலா.

அய்யராத்து பாஷையில் “கேட்டேளே அங்கே அதைப் பாத்தேளா இங்கே” என்று “வாங்கோன்னா” வில் செமையான குத்தாட்டப் பாடலைப் பின்னிப் பெடலெடுத்திருந்தார் பி.சுசீலா. Kettele Ange Bhadrakali (youtube.com)

இதற்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த பாடல்தான் “மோகனகல்யாணி” ராகத்தில் இளையராஜா அமைத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல்.  பி. சுசீலாவின் இனிய குரலில் ஆரம்பிக்கும் எடுப்பே மனதை கொள்ளை கொள்கிறது.  ஜேசுதாசுடன் சேர்ந்து இனிமையும் இளமையும் நளினமும் நிறைந்த தனது குரலால் இசைத்து வசீகரித்தார் பி. சுசீலா kannan oru kai kuzhanthai இசைஞானி இசையில் K.J.யேசுதாஸ் P.சுசீலா பாடிய பாடல் கண்ணன் ஒரு கைக்குழந்தை (youtube.com)

இதே “பத்ரகாளி” தெலுங்கில் தயாரானபோது அதுதான் இளையராஜாவின் முதல் தெலுங்குப் படம்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்களை பி. சுசீலா பாடி இருந்தார். தமிழில் பாடி இருந்த இரண்டு பாடல்களோடு தமிழில் உச்ச கட்டக் காட்சியில்  எம்.ஆர். விஜயா பாடி இருந்த கதாகாலட்சேபப் பாடலையும் பி.சுசீலாவே தெலுங்கில் பாடி இருந்தார்.

இளையராஜா சொந்தக்குரலில் முதல் முதலாகப் பாடிய டூயட் பாடலை பி. சுசீலாவுடன் தான் பாடி இருந்தார்.  “தென்னை மரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக்கிளியே” என்ற இந்தப் பாடல் “லட்சுமி” படத்தில் இடம் பெற்ற பாடல். Thenna Marathula (youtube.com)

இப்படி இளையராஜாவின் அனைத்து “முதல்” பெருமைகளும் பி. சுசீலாவின் இனிமையும் குளுமையும் நிறைந்த குரலிலேயே அமைந்தன.

நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான பல பாடல்களை இளையராஜாவின் இசையில் பி. சுசீலா பாடி இருந்தார்.

“துணை இருப்பாள் மீனாட்சி” -  புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த “சம்சாரம்” படத்தின் ரீமேக் இது. 

இந்தப் படத்தைப் பற்றி “காலங்கள் மாறினாலும் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகள் மாறவில்லை என்று இந்தப் படத்தின் வெற்றிகரமான ஓட்டம் காட்டியது. வெள்ளிவிழா கண்ட “அன்னக்கிளி”க்குப் பிறகு நானும் சுஜாதாவும் நடித்து வெளிவந்ததால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது” என்று மதிப்பீடு செய்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் பி.சுசீலா பாடிய “சுகமோ ஆயிரம் உறவோ காவியம்” என்ற பாடலை அப்படியே இனிமையில் தோய்த்தெடுத்துப் பாடி இருந்தார் பி. சுசீலா. Sugamo Aayiram|சுகமோ ஆயிரம்|Thunai iruppal Meenatchi a beautiful song by Susheelamma (youtube.com)

இதே படத்தில் “வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா” என்ற பாடலும் அதே ரகம்தான். இந்தப் பாடலில் அவர் உதிர்க்கும் அந்த “அம்மம்மா” என்ற வார்த்தைப் பிரயோகமும்.. அதை வெளிப்படுத்தும் அழகும்.. சரணங்களில் நிராதரவான ஒரு பெண்ணின் நிலையை அப்படியே உணரவைக்கிறார்.  இறுதியில் அவர் இழுத்து நிறுத்தும்  அந்த “ம்” காரமும் அதோடு அப்படியே ஒன்றி இணையும் அந்தக் குழலோசையும்.. மனதை உருக்கத் தவறாது.  இளையராஜாவின் இசையும் பி. சுசீலாவின் குரலும் ஒரே நேர்க்கோடில் இணையும் போது உள்ளத்தை அப்படியே உருக்கும் ஒரு சுகானுபவம் ஏற்படும்.  அதனை இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மால் உணரமுடியும். (642) Vaarthai Illamal oru Kavi - YouTube

சின்னப்பா தேவர் உயிரோடு இருந்தவரை அவரது தண்டாயுதபாணி பிலிம்ஸ் நிறுவனப் படங்களுக்கு சங்கர் கணேஷ் தான் ஆஸ்தான இசை அமைப்பாளர்கள்.

எழுபதுகளின் இறுதிவரை இந்த இணை நீடித்தது.  வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாக் குழந்தை, சொர்க்கம் நரகம், தாய் மீது சத்தியம்  ஆகிய படங்களில் இவர்கள் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடிய பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

தேவரின் மறைவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட “அன்னை ஓர் ஆலயம்” இளையராஜாவுக்கு தேவர் பிலிம்ஸில் முதல் படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் பி.சுசீலாவும் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பாடிய “நதியோரம் நாணல் ஒன்று” பாடலில் சுசீலாம்மாவின் குரல் தேனில் ஊறிய பலாச்சுளையாகத் தித்தித்த அருமையான மெலடி. Nadhiyoram Audio Song | Annai Ore Aalayam | Rajinikanth | P. Susheela, S.P. Balasubrahmanyam Hits (youtube.com)

“அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே” பாடலில் பி. சுசீலா வெளிப்படுத்திய சங்கதிகளில் இளமையும், இனிமையும், புதுமையும் நிறைந்திருந்தன.

அன்புக்கு நான் அடிமை – படத்தில் இரண்டு கதாநாயகிகள். ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா. இருவருக்குமே பி. சுசீலா தான் பாடியிருந்தார்.

“காத்தோடு பூ உரச” என்ற டூயட் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – பி. சுசீலா இருவருமே மனதை நிறைத்தனர். Kaaththodu Poovurasa | காத்தோடு பூவுரச | S. P. Balasubrahmanyam, P. Susheela | B4K Music (youtube.com)

சுஜாதாவுக்காக பாடிய “ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு” பாடல் வேற லெவல். படமாக்கப்பட்டபோது அசரீரிப் பாடலாக காட்சிப்படுத்தப்பட்டாலும் வானொலியில் கேட்கும்போது சுஜாதா தான் மனக்கண்ணில் தோன்றுவார்.  இந்தப் பாடல் பி.சுசீலாவுக்கும் சரி நடிகை சுஜாதாவுக்கும் சரி ஒரு மிகப்பெரிய சாதனைப் பாடல் என்றே சொல்லவேண்டும்.  வாயசைக்காமலேயே முகபாவங்களால் பி.சுசீலாவின் குரலுக்கு உயிரோட்டமான நடிப்பைக் கொடுத்திருந்தார் சுஜாதா. Anbukku Naan Adimai - Ondrodu Ondraanom Song (youtube.com)

1983க்குப் பிறகு தேவர் பிலிம்ஸ் நிறுவனம் எடுத்த படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியைத் தழுவி பலத்த பொருளாதார சிக்கலை ஏற்படுத்திய நேரத்தில் நடிகர்  ரஜினிகாந்த் அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க “தர்மத்தின் தலைவன்” படத்தில் நடித்துக் கொடுக்க முன்வந்தார் அவர். இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக எஸ்.பி. முத்துராமன் இயக்கினார்.  இளையராஜாவின் இசையில் பி.சுசீலா – எஸ். பி.பாலசுப்ரமணியம் – மலேசியா வாசுதேவன் மூவர் கூட்டணியில் “தென்மதுரை வைகை நதி”  இனிமைத்தேனாக மனதை நனைத்தது.

சின்னக்குயில் சித்ரா தனது இசைப் பயணத்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. என்றாலும் தனக்கான இடம் யாராலும் நிரப்ப முடியாத ஒன்று என்பதை இந்தப் பாடலில் குறைந்த சங்கதிகளாக இருந்த போதிலும் நிரூபித்தார் பி. சுசீலா.

(இசையின் பயணம் தொடரும்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram