பி. சுசீலா 
தொடர்கள்

இசையரசி - 16

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்

Staff Writer

பிற மொழிகளிலும் சொந்த மொழியிலும்

கனிவுடன் பாடும் இசைக் குயில்

சுரங்கள் ஏழும் மயில் நடனம் புரிய இனிமை மழை

பொழியும் அமுத முகில்!

சீரும் சிறப்புமாக கலைவானில் திகழ்ந்து புகழொளி

வீசும் மதி

லாலனம் (தாலாட்டு) செய்யும், பாவம் ததும்பிட

வெள்ளமாய்ப் பொங்கும் ராக நதி.

- முதலெழுத்துக்களைச் சேர்த்தால் “பி. சுசீலா” என்று அவருடைய பெயர் வரும் வகையில் பின்னணிப் பாடகர் திரு. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் எழுதிய பாராட்டுக் கவிதை.

பி. சுசீலா அவர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டமான அறுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரை தமிழ் திரைப்பட இசை மட்டும் என்று அல்லாமல் தென்னிந்திய திரை இசையின் பொற்காலம் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

மெல்லிசை மன்னர்கள், திரை இசைத் திலகம் ஆகிய இருவரும் மூன்றில் இரு பங்கை ஆக்கிரமிக்க மற்ற இசை அமைப்பாளர்கள் தத்தம் திறமைகளை கிடைத்த வாய்ப்புகளில் வெளிப்படுத்த...

இவர்கள் அனைவருக்குமே ஒரு அட்சய பாத்திரமாக பி. சுசீலா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இருந்தார் என்றால் அது மிகை அல்ல.

ஆனால்..பி. சுசீலாவின் இந்த மாபெரும் வெற்றியை நினைத்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

மிகவும் மென்மையான குணம் பொருந்திய அதிர்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு பெண்மணி எந்த ஒரு வம்பு தும்பிலும் சிக்கிக்கொள்ளாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து கனவுத் தொழிற்சாலையான திரைப்பட உலகத்தில்  உச்ச நிலையை அடைவதோ அதனைத் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தக்கவைத்துக் கொள்வதோ சாதாரண விஷயம் அல்ல.

அதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் மத்தியில் அவரது குரலுக்கு இருந்த பேராதரவும், அவருக்கு இருந்த பெருமதிப்பும்தான்.

அதே நேரத்தில் அவரது உழைப்பும் பொறுமையும்  இருக்கிறதே.  அவற்றைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் வார்த்தைகள் போதாது.

காலை ஏழு மணி முதல் பின்னிரவு இரண்டு மணி வரை சர்வ சாதாரணமாக அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் என்று அல்ல - தினமும் -  எண்பதுகளின் இறுதிவரை – உழைத்திருக்கிறார் பி.சுசீலா.

அறுபதுகளில் எல்லாம் குறைந்த பட்சம் ஒரு படத்தில் சராசரியாக எட்டுப் பாடல்கள் என்று வைத்துக்கொண்டால் – ஒரு பாடல் காட்சிக்கு மூன்று  அல்லது நான்கு நிமிடங்கள் என்று கணக்கிட்டால் மொத்தமாக இருபத்து நான்கு நிமிடங்கள் தான் பாடக/ பாடகியரின் பங்களிப்பு இருக்கும்.

ஆனால் அந்த இருபத்து நான்கு நிமிடப் பாடல்களுக்காக அவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டு உழைப்பார்கள் என்றால் அதை  நம்ப முடிகிறதா?

உண்மையும் அதுதான்.

பி. சுசீலா-வுடன் டி.எம்.எஸ்.

பி. சுசீலா அவர்களைப் பொறுத்தவரை காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார் அவர்.

முதல் ஒலிப்பதிவு கே.வி. மகாதேவன் இசையில் என்றால் பிரச்சினை அவ்வளவாக இருக்காது.  ஒன்றிரண்டு டேக்குகளிலேயே பாடல் பதிவு முடிந்துவிடும்.

அது எப்படி என்று பி. சுசீலா அவர்களே டி.எம்.எஸ். அவர்களுக்கு அளித்த நேர்காணலில் (பாடகர் கண்ட பாடகி – பொம்மை மாத இதழ்) இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:

“பாட்டைப் பதிவு செய்யறதுக்கு முன்னாலேயே, நான் பாடப்போற பாட்டோட அர்த்தம், பாட்டு வரும் காட்சி என்ன; பாட்டுக்கு வாயசைக்கப் போற நடிகைகள் யாரு; எந்த உணர்ச்சியோட அதுக்கு நடிக்கப் போறாங்க.. இப்படி எல்லா விவரங்களையும் இசையமைப்பாளர்கள் என்கிட்டே சொல்லிட்டு  பாட்டோட நெளிவு, சுளிவுகளை அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. நான் அதை அப்படியே பாடிடுவேன்.”

இதனால் பி. சுசீலா அவர்களைப் பொறுத்தவரை பாடல் பதிவில் அவரால் எந்தச் சிரமமும் வேலை வாங்கும் இசை அமைப்பாளருக்கு இருக்காது.

தவிரவும் கே.வி.மகாதேவன் அவர்கள் ஒன்றிரண்டு சங்கதிகள் விட்டுப் போனால் கூட, “பரவாயில்லடா அப்பு. இதெல்லாம் யாரு கவனிக்க போறா? மூணு நிமிஷப் பாட்டு. கேக்க இனிமையா சுருதி சுத்தமா இருக்கு. உச்சரிப்பு நல்லா இருக்கு.  அது போறும்டா.” என்று ஒலிப்பதிவை முடித்துக் கொண்டு விடுவார்.

அதே மெல்லிசை மன்னர் என்றால் மனிதர் வேட்டியை மடித்துக்கட்டுக்கொண்டு டிரில் வாங்கி விடுவார்.

பாடல் பதிவு நடந்து கொண்டிருக்கும்.  திடீரென்று இணைப்பிசையில் புதிதாக ஒரு சங்கதியைச் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று தோன்றும்.  அந்தச் சங்கதியைச் சேர்த்துப் பாடலுக்கு இன்னும் மெருகைக் கூட்டுவார்.

ஆகவே மறுபடி ரீடேக்.

அதில் இருபத்தைந்து வயலின்களின் இணைந்த வாசிப்பில் பின்பகுதியில் இருக்கும் ஒருவர் செய்யும் சிறு தவறு எப்படித்தான் அந்த மேதையின் கவனத்தில் விழுமோ..

உடனே தவறு செய்த வயலினிஸ்ட்டை  வார்த்தைகளால் வெளுத்து வாங்கி விடுவார்.

மீண்டும் ரீ-டேக்.

அப்படிப் பாடும்போது முதலில் இருந்த அதே பாவத்தில் அதே உணர்ச்சியில் மீண்டும் பாடவேண்டும்.

இதில் கூடப்பாடும் நமது டி.எம். சௌந்தரராஜன் இருக்கிறாரே!

அவர் நல்ல மூடில் இருந்தால் ஒரே டேக்கில் பாடிவிடுவார்.  அவருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இடையில் அபிப்பிராய பேதம் வேறு நடக்கும். இவர் ஒன்று சொல்ல அவர் அதை மறுக்க..

“கோவில்லே சுண்டலுக்குப் பாடினாலும் பாடுவேனே தவிர உன் இசை அமைப்பிலே பாடமாட்டேன்” என்று டி.எம். எஸ். முறுக்கிக்கொண்டு எம்.எஸ்.வி.யிடம் சண்டை போட்ட நிகழ்வுகளும் உண்டு.

விளைவு மீண்டும் ரீ-டேக்.

“தானுண்டு தன் வேலை உண்டு” என்று இருக்கும் ஒரு பெண்மணிக்கு இவை எல்லாம் சகித்துக்கொள்ளவேண்டிய நிகழ்வுகள்.

“என்னமோ தெரியலே. நான் பாட்டுக்கு ரீ-டேக் வாங்கிட்டேன். பாவம் அந்தச் சின்னப்பொண்ணு.  அவங்க  பாட்டுக்கு ஒண்ணுமே பேசாம ஒரு ஓரமா உட்கார்ந்துகிட்டுத்  தன்னோட போர்ஷனை மறுபடி பாடிப் பார்த்துப் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.” என்று டி.எம். எஸ்.அவர்களே பி. சுசீலாவிடம் அனுதாபம் காட்டிக் கூறியதும் உண்டு.

பி. சுசீலா-வுடன் டி.எம்.எஸ்., எம்.எஸ்.வி.

அதே நேரத்தில் அடுத்து காத்திருக்கும் தெலுங்குப் படத்தின் ஒலிப்பதிவிற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை மனம் அறிவுறுத்த படபடப்பு கூடிவிடும்.

இத்தனையும் ஒரு பாடலுக்கே.  கிட்டத்தட்ட இரண்டு மணி வரை நீண்டு விடும் ஒலிப்பதிவு.

அதை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த உணவை அவசர அவசரமாக முழுங்கிவிட்டு கோல்டன் ஸ்டூடியோவில் இருந்து நேராக இசை அமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் அவர்களின் வீட்டில் பாடலுக்கான ரிகர்சல்.

அது ஒரு இரண்டு மணி நேரம். அதை முடித்துவிட்டு அங்கிருந்து மெஜஸ்டிக் ஸ்டூடியோ.

அங்கு போனால் ..காலையில் சரோஜாதேவிக்காக டூயட் என்றால் இப்போது அஞ்சலி தேவிக்கோ அல்லது சாவித்திரிக்கோ ஒரு சோலோ. ஒன்று காதல் வயப்பட்ட கற்பனையாகவோ அல்லது சோகமான சூழ்நிலைப் பாடலாகவோ இருக்கும்.

பாடல் காட்சியில் சம்பந்தப் பட்ட நடிகைக்குப் பொருந்தும் அளவிற்கும் அதே நேரம் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவகையிலும், காட்சிக்கான சூழ்நிலைக்குப் பொருத்தமாக இசை அமைப்பாளர் அமைத்திருக்கும் மெட்டை உள்வாங்கிக்கொண்டு மறுபடி தனது பகுதியை வார்த்தைகளின் உச்சரிப்புக் கெடாமல் கவனமாக ஒரு முறைக்கு இரு முறை பாடிப்பார்த்து ... மீண்டும்.. பிறரின் சொதப்பல்கள், அதுகாரணமாக எழும் ரீடேக்குகள் ஆகியவற்றை எதிர் கொண்டு -  அதே படத்திற்கான மற்ற சூழ்நிலைகளுக்கான பாடல்களையும் பாடி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் போது நேரம் சர்வ சாதாரணமாக இரவு இரண்டை எட்டிவிடும்.

இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒலிப்பதிவுகள் நடக்கும் என்பதை ஒரு கணம் நினைவில் கொண்டு வந்து கற்பனை செய்து பாருங்கள்.

காலையில் பாடியபோது எப்படி இருந்ததோ அப்படியே இரவு இரண்டு மணிக்கும் குரலை வைத்துப் பாடியாக வேண்டும்.

அது மட்டுமல்ல.  ஒரு ஒலிப்பதிவு முடிந்துவிட்டால் அதன் பிறகு அனாவசியமாக ஒரு நிமிடம் கூட அங்கு இருக்கமாட்டார் பி. சுசீலா. கிடைக்கும் இடைவெளிகளில் (BRAKE) கூட மற்றவருடன் சிரித்துப் பேசி அரட்டை அடிப்பது.. என்பதெல்லாம் கிடையவே கிடையாது.  அந்த நேரத்தில் தனது பகுதியைத் திரும்பப் பாடி ப்ராக்டிஸ் செய்து கொண்டிருப்பார் அவர்.  இந்த விஷயத்தில் அவரது கணவரும் கொஞ்சம் கண்டிப்பானவர்தான். பொதுவாகவே பி. சுசீலாவிற்கு இவை எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது என்பதால் கணவரின் கண்டிப்பு அவருக்குக் கொஞ்சம் கூட மனவருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.

பி. சுசீலா ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருகிறார் என்றால் அங்கு இருக்கும் சக கலைஞர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள் என்றால் செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து அதற்கேற்ற மரியாதையைக் கொடுத்து அதில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி வாழ்ந்து வந்த அவரது குணத்திற்கு கிடைத்த மரியாதை அது.

இப்படி எல்லாம் சிரமப்பட்டுப்  பாடிவிட்டு தயாரிப்பாளர் கவரில் போட்டுக் கொடுக்கும் ஊதியத்தை எண்ணிக்கூடப் பார்க்காமல் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வந்து கணவரிடம் கொடுத்தால்..

பேசிய தொகைக்கு நூறு இருநூறு குறைவாக இருக்கும்.

“ஒருத்தர் கொடுக்குற பணத்தை அவங்க முகத்துக்கு  நேரா எப்படி எண்ணிப் பார்க்கிறது? அது அவ்வளவு நல்லா இருக்காதே.” என்று இருந்ததன் விளைவு இது.

இப்படி எல்லாம் பட்ட சிரமங்களை எல்லாம் படம் வெளிவந்து பாடலுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களும், ரசிகர்/ரசிகைகளின் தொலைபேசி அழைப்புகளும் அப்படியே மறக்கடித்துவிடும்.

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் சொந்தமாகத் தொடங்கிய படத் தயாரிப்பு நிறுவனம் “சித்ராலயா”.

இந்தப் படத்தின் முதல் தயாரிப்பு முழுமுழுக்க வெளிப்புறத்திலேயே – அதுவும் காஷ்மீரிலேயே தயாரிக்கப்பட்ட படமான “தேன் நிலவு”.

ஏ.எம். ராஜாவின் இனிய இசையில் இந்தப் படத்தில் வைஜயந்தி மாலாவுக்காகப் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே வெற்றிப் பாடல்களாகி விட்டன.

கவியரசு கண்ணதாசன் ஸ்ரீதருடன் கைகோர்த்த படம் இது.

அதிலும் இந்தச் “சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்” பாடல் இருக்கிறதே. 

மோகன ராகத்தில் ஏ.எம். ராஜா இசை அமைத்த பி. சுசீலாவின் குரலில் மழலையின் இனிமை தூக்கலாக அமைந்த பாடல் இது.

காதலின் பிரிவை வெளிப்படுத்தும் பாடல் “மலரே மலரே தெரியாதோ” என்றால் “நிலவும் மலரும் ஆடுது” பாடல் ஒரு அருமையான மெலடி நிறைந்த டூயட்.  இந்தப் பாடலில் “என் நினைவில் தென்றல் வீசுது” என்ற வார்த்தைகளைப் பாடும்போது “என்” என்ற ஒற்றை வார்த்தையை சற்று லேசாக நீட்டிப் பாடி இருப்பார் பி. சுசீலா.

“தேன்நிலவு” படம்  வெளியாகி ஓரளவு சுமாரான வெற்றியைத் தான் பெற்றது.

“தேன் நிலவு – வீண் செலவு” என்று கிண்டலாக விமரிசித்தது குமுதம்.

**

பி. சுசீலாவின் சாதனைப் பாடல்களில் கண்டிப்பாக “பாக்ய லக்ஷ்மி” படத்திற்கு ஒரு இடம் உண்டு.

பால்ய விவாகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சௌகார் ஜானகி, ஈ.வி. சரோஜா என்று இரு கதாநாயகியர்.

இருவருக்குமே பி. சுசீலா தான் பின்னணிப் பாடி இருந்தார்.

கவியரசரின் காவிய வரிகளுக்கு அற்புதமான மெட்டுக்களை மெல்லிசை மன்னர்கள் அமைத்துக் கொடுக்க அந்த மெட்டுக்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்து நமது மனக்கண் முன் உலவ வைத்தார் பி. சுசீலா.

“காதலெனும் வடிவம் கண்டேன்” Kathalenum Vadivam P.சுசீலா பாடிய பாடல் காதலெனும் வடிவம் கண்டேன் கலரில் (youtube.com)

“காணவந்த காட்சி என்ன வெள்ளிநிலவே” ஆகிய பாடல்களை ஈ.வி. சரோஜாவிற்காகப் பாடியவர், சௌகார் ஜானகிக்காகப் பாடி காலத்தால் அழிக்க முடியாத புகழ் பெற்ற பாடல் தான்

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஓர் கனவு கண்டேன் தோழி..”

மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் | Maalai Pozhuthin Mayakkathile song | P. Susheela . (youtube.com)

சந்திர கெளன்ஸ் ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் அமைத்த பாடல்.

“மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி.. காரணம் ஏன் தோழி..” என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து அவர் கொடுக்கும் சிறு ஹம்மிங்  ..அது முடியும்போது ஆரம்ப வரிகளைத் தொட்டு முடிக்கும் அழகு..நம்மையும் அறியாமல் தலையசைத்து ரசிக்கவைக்கும் இடம் அல்லவா இது?

“மணமுடித்தவர் போல் அருகினிலே ஒரு வடிவு கண்டேன் தோழி..”என்று தாழ்ந்த ஸ்ருதியில் ஆரம்பித்து “மங்கையின் நெற்றியில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி” என்று சமதளத்தில் பயணிக்கும் வார்த்தைகள் முடிந்ததும் தொடரும் ஷெனாயின் இணைப்பிசைக்குப் பிறகு “வழி மறந்தேனோ வந்தவர்  நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி” என்று உச்சத்தை எட்டிய குரல் அடுத்த வரிகளில் “அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே பறந்துவிட்டார் தோழி” என்று சீராக பயணிக்கும் அழகு.. ஓடுபாதையில் டேக் ஆப் செய்து ஆகயாத்தைத் தொட்ட  விமானம் சீரான வேகத்தில் பயணம் செய்யும் உணர்வைக் கொடுக்கும் சுகம் இந்தப் பாடலுக்கு உண்டு.

இன்றளவும் பி. சுசீலா அவர்களின் ஆகச் சிறந்த பத்துப் பாடல்களைப் பட்டியலிட்டால் (அதுவே கடினம்!) அதில் கண்டிப்பாக இந்தப் பாடலுக்கும் ஒரு இடம் உண்டு.

**

1961ஆம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் இசைச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதனின் இசையில் “காற்று வெளியிடை கண்ணம்மா” என்று பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து “பஹாடி” ராகத்தில் காதல் கீதத்தை நடிகையர் திலகம் சாவித்திரிக்காக இசைத்தார் பி. சுசீலா.

ஆனால் படம் வெளியான தீபாவளி அன்று – மதியக் காட்சிக்கே மொத்தம் பன்னிரண்டே பேர்தான் படம் வெளியான “பாரகன்”திரை அரங்கில் இருந்தனர்.  சென்னை நகரிலேயே இந்த நிலை என்றால்...

அதற்கு நேர்மாறாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் “தாய் சொல்லைத் தட்டாதே” படம் வெளியான அரங்குகள் எல்லாமே மக்கள் வெள்ளத்தில் திணறிக்கொண்டிருந்தன.

கே.வி.மகாதேவனின் இசையில் டி.எம். எஸ் அவர்களுடன் இணைந்து “சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்” – என்ற பாடலை இசைத்த விதத்திலேயே மக்கள் மனங்களை இனிமைச் சிறையிலிட்டு விட்டார்  நமது இசை அரசி.

(இசையின் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

இசையரசி - 6

இசையரசி - 7

இசையரசி - 8

இசையரசி - 9

இசையரசி - 10

இசையரசி -11

இசையரசி -12

இசையரசி-13

இசையரசி -14

இசையரசி -15