தொடர்கள்

தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?

இரா.பிரபாகர்

தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது. ஆகவே இந்தப்படத்தைப் புறக்கணிப்போம்’ என்பதுபோன்ற எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. ரஞ்சித் படங்களிலேயே அதிகமும் பாராட்டுகளையும் எதிர்ப்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறது. எப்படியிருப்பினும் படக்குழுவினர் வெற்றிவிழாவையும் கொண்டிடாடி முடித்துவிட்டனர்.

பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களை நம் சனங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது வழக்கம். ஆனந்தவிகடனில் ஐம்பது மதிப்பெண்கள் போட்டுவிட்டார்கள் என்பதற்காகவோ, இந்த விமர்சகர் பாராட்டிவிட்டார் என்பதற்காகவோ அரங்குகளில் அலைமோதுவதில்லை. சமூக ஊடகங்களின் வருகையால் அவரவர் அதீத சார்புகளையும் வன்மங்களையும் கொட்டித் தீர்ப்பதைக் காணமுடிகிறது. அதிலும் தலித்திய அரசியல் பேசும் படங்கள் குறிப்பாக இயக்குநர் ரஞ்சித்தின் வருகைக்குப் பின் படங்களைப் விமர்சிப்பதும் பாராட்டுவதும் கூட அரசியலாகப் பார்க்கப்படுவதையும் காணமுடிகிறது.

தங்கலான் பற்றிய அபாண்டமான எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றாலும் சில அடிப்படையான கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுந்ததை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. குறிப்பாக படத்தின் அடிப்படையான தொன்மக் கதை. இந்தக் கதை தெரியாதவர்களுக்கு அந்த உலகத்திற்குள் செல்வதில் இடர்பாடு இருந்ததை மறுக்கமுடியாது. ஏனெனில் இந்தத் தொன்மம் நம்மூரில் புழங்குகின்ற இராமயண மகாபாரத மற்றைய புராணங்களில் அல்லது நம் நாட்டுப்புற வழக்காறுகளில் உள்ள தொன்மங்களைப் போன்று பொதுவெளிகளில் உலவுகின்ற தொன்மம் அல்ல. அறிந்திராத தொன்மம். இது பௌத்த தொன்மத்திலிருந்து எடுத்தாளப்பட்டதாகத் தெரிகிறது.

எளிமையாகச் சொல்லப்போனால் வானுலகு, பூவுலகு மற்றும் பாதாள உலகு ஆகிய மூவுலகங்களில் பாதாள லோகத்தில் நாகர்கள் எனும் இனத்தவர் வாழ்கிறார்கள். அவர்களின் குலச்சின்னம் நாகங்கள். நாகர்கள் புத்தமத்தைப் பின்பற்றுபவர்களாதலின் அவர்கள் பொன்னாசையைத் துறந்தவர்கள். ஆகவே பொன்னாசை மனிதர்களைப் பேராசைமிக்கவர்களாக்கும் என்பதால், அதை பூமிக்குள் மறைத்து இருக்குமிடம் தெரியாமல் நாகங்கள் காத்துவருகின்றன. நாகர்களின் கடவுள்களே ஆரனும் ஆரத்தியும்.

இந்த தொன்மப் பின்புலத்தில் படத்துக்குள் நுழையும்போது ‘படம் புரியவில்லை’ என்ற பிரச்னை இருக்கப்போவதில்லை. மற்றபடி பொதுப் பார்வையாளர்கள் ‘புரியவில்லை’ என்று சொல்வதை உள்நோக்கமுடையதாகக் கருதமுடியாது. ஏனெனில் ‘தொன்மம்’, ‘மாஜிக்கல் ரியலிசம்’ என்பவைகளையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஒரு பார்வையாளன் படம்பார்க்க வருவான் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? இந்த பாதாளம், நாகர்கள், ஆரன் ஆர்த்தி வகையறாக்களைத் தெரிந்து கொண்டபின்னரே தங்கலான் பற்றிய என் குழப்பங்கள் சில தீர்ந்தன. இந்த தொன்மச் சூழலை படத்தின் தொடக்கத்தில் குரல் பதிவாகச் சொல்லியிருந்தால்கூட படத்திற்குள் செல்வது எளிதாக இருந்திருக்கும்.

இந்த பௌத்தத் தொன்மக் கதை காலகாலமாக பத்திரமாக இருக்கிறது. இங்கே இந்தியாவில் காலனிய ஆட்சிக்காலத்தில் சகலத்தையும் சுரண்டிப் பழக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள் ஆற்றுநீரில் தங்க உதிரிகளை மக்கள் சலித்தெடுப்பதைப் பார்த்து அந்தப்பகுதியில் தங்கம் இருப்பதை உறுதி செய்கின்றனர். வட ஆற்காடு பகுதியிலிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை கோலார் தங்கச்சுரங்கத் தோண்டுதலுக்காக அழைத்துச் செல்கின்றனர். அதற்குப்பின்பான கோலார் தங்கவயலின் உருவாக்கமும் அங்கு தொடங்கிய புதிய வாழ்வியலும் சுரண்டலும் அனைவரும் அறிந்த வரலாறு.

இந்தப் பின்புலத்தை வைத்துக்கொண்டு ரஞ்சித் ஒரு கதையைப் புனைகிறார். அல்லது இன்னொரு தொன்மத்தை உருவாக்குகிறார். அதாவது வட தமிழகத்திலிருந்து காலனிய ஆட்சியாளர்களால் அழைத்துச்செல்லப்பட்ட மக்களின் மூதாதையர் கோலார் நிலப்பகுதியில் தங்கத்தைப் பாதுகாத்து வந்த நாகர் குடியைச் சார்ந்தவர்கள். இது ஒரு சுவாரஸ்யமான கற்பனை. படைப்பாளிகள் எப்படியும் கற்பனை செய்யலாம்தான்.

 இதற்கு இணையாக நவீன சினிமாவில் இப்படியொரு கற்பனை வரலாற்றை உருவாக்கியவர் டொராண்டினோ. தன்னுடைய ‘இங்லோரியஸ் பாஸ்ட்டர்ட்’ எனும் படத்தில் உலகமே அறிந்த ஒரு வரலாற்றுக்கு மாறாக ஒரு நிகழ்வைக் கற்பனை செய்திருப்பார். ஹிட்லர் காலத்தில் நாஜி ராணுவத்திற்குப் பயந்து நீண்ட நாட்களாகப் பதுங்கி வாழும் ஒரு யூதக் குடும்பம் வேட்டையாடப் படுகிறது. அதில் ஒரு இளம்பெண் மட்டும் தப்பித்து ஓடிவிடுகிறாள். பின்னாளில் அவள் வளர்ந்து பெரியவளாகி ஒரு திட்டம் தீட்டுகிறாள். ஒரு திரையரங்கிற்கு ஒரு குறிப்பிட்ட பட சிறப்புக்காட்சிக்கு ஹிட்லர் உட்பட்ட நாஜி ராணுவ அதிகாரிகளை அழைக்கிறாள்.

அனைவரும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையரங்கை வெடிவைத்துத் தகர்த்து அனைவரையும் கொன்று பழிதீர்த்துக்கொள்கிறாள். அனைவரும் அறியத்தக்க நவீன வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவில்லை என்றாலும், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்வதற்கு ஒரு படைப்பளிக்கு உரிமை இருக்கிறதுதானே. ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்ட இந்தப்படம் உலக சினிமாவில் முக்கியமான படமாகவும் கருதப்படுகிறது. யாவரும் அறிந்த வரலாற்றையே மாற்றி எழுதிப்பார்க்கும்போது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்தை கற்பனை செய்வது இயல்பானதே. ஒப்பீட்டு வசதிக்காக இந்தப்படத்தை பேசுகிறோமேதவிர தங்கலான் ரஞ்சித்தின் சுயமான கற்பனைதான்.

தன் குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்வதும் கதை காட்சிகளாய் விரிவதும் அருமையான திரை அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் நவீன காலத்தில் கூலித் தொழிலாளிகளாய் காலனியவாதிகளால் பல்வேறு பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போலவே கோலார் தங்க வயலுக்கும் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதும் அதுபற்றிய வரலாறும் அனைவரும் அறிந்தவையே. அந்த வரலாற்றுக்குள் ஒரு போராளியை, மக்கள் தலைவனை உருவாக்க முடியும். அது ஏற்றுக்கொள்ளத் தக்கதும் கூட. ஆனால் முன்னொரு காலத்தில் நடந்த அதே தொன்மச் சம்பவங்கள் நவீன காலத்தில் மீண்டும் நிகழ்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதோடு முதல் பாதியில் பார்த்த அதே நிகழ்வுகளைப் பார்ப்பது சலிப்பை உண்டாக்குகிறது. போதாக்குறைக்கு அதே ஆரன், ஆரத்தி... அதே தங்கலான் அதே நாகங்கள். இது திரைக்கதையின் பெரும் சறுக்கல். இந்தப் பகுதியைத்தான் மாஜிக்கல் ரியலிசம் என்று கூறத் தலைப்படுகிறார்கள். மாஜிக்கல் ரியலிசப் புனைவுகள் இலக்கியமாக எழுதப்படும்போது அதன் பெரும்பகுதி வாசகனால் கற்பனை செய்யப்படுகிறது.

யதார்த்த நிகழ்வுகளையும் மிகுபுனைவுலத்திற்குமான இடைவெளிகளை மங்கலாக்கி மாய யதார்த்தமாக மாற்றுகின்ற எழுத்து வகை இலக்கிய உலகிலேயேகூட பெரும்பான்மையான வாசகர்களுக்கானதல்ல. காட்சிக்கலையில் அது இன்னும் சவால் நிறைந்ததாகிறது. திரைப்படங்களில் பார்வையாளன் செய்யவேண்டிய கற்பனையை ஏற்கனவே இயக்குநர்தான் செய்துகொண்டிருக்கிறார். யதார்த்த வாழ்விற்குள் மாயாஜாலங்கள் நிகழ்வதைத்தான் ஹாரி்பாட்டர் போன்ற படங்கள் வெற்றிகரமாகக் காட்சிப்படுத்தின. அங்கு யதார்த்தம- மாயம் என இருவிசயங்களை இணைக்க முயற்சித்தனர். இங்கு ரஞ்சித் தொன்மம் - நவீன வரலாறு - யதார்த்தம் - மாய யதார்த்தம் அனைத்தையும் இணைக்கும் பெரும் சவாலை முயற்சித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் தன்னுடைய விடுதலைக் கருத்தியலையும் சேர்த்துக்கொள்ளும்போது அது குழப்பத்தை மிகுதிப்படுத்துகிறது.

ஆண்டைகள் அடித்தட்டு மக்களின் நிலங்களை அபகரித்துச் சுரண்டும் ஒரு வரலாற்றுக் காலத்துக்குள் இருப்பவனை நாகங்கள் தங்கத்தைக் காவல் காக்கும் தொன்ம உலகிற்குள் தூக்கிப் போடுகிறார். அந்த மாயாஜாலத்திற்குள் மகிழ்ந்திருப்பவனை வெள்ளைக்கார ஆண்டைகளின் நவீன காலத்திற்குள் பிடித்துத் தள்ளுகிறார். சரி பூலோகத்திற்கு வந்துவிட்டோம் என்று ஆறுதல் கொள்ளும்போது மீண்டும் நாகங்களும் ஆரத்தியும் மேலெழுந்து வருகிறார்கள். மீண்டும் அதே பெரும்புனைவுக்குள் பயணித்து மீளும்போது கோலார் வயலின் யதார்த்த உலகிற்குள் நம்மை நிறுத்துகிறார். ஒரு திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு இத்தனை மெனக்கிட வைத்த பெருமை தங்கலானுக்கே சாரும். ஒரு வகையில் தமிழ் சினிமா தன் கழுத்தில் இன்னொரு தங்க மாலையை அணிந்துகொண்டிருக்கிறது. என்ன… செய்கூலியும் சேதாரமும் கொஞ்சம் அதிகம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram