திமிங்கலங்களும் சுறாக்களும் சுற்றிவருகிற பெருங்கடலில் அயிலையும் சாளையும் நடமாடுவதுபோல தமிழ்த் திரையுலகம் அகில இந்திய சந்தையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் கொட்டுக்காளி எனும் எளிய திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகநாயகன் கமலும் தென்னிந்திய திரையுலகின் வசூல் மன்னன் இயக்குநர் சங்கரும் இந்தியன் தாத்தாவைப் புதைப்பதா, எரிப்பதா என்று நிலை தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில் பத்து நடிகர்களையும் ஒரு ஆட்டோவையும் ஒரு சேவலையும் வைத்து ஒரு படத்தை எடுத்து, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல மொத்த ஊடக உலகத்தையும் தன்பக்கம் திருப்பிய இயக்குநர் வினோத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத வறுமையில், மதுரை பூ மார்க்கெட்டில் தலைச்சுமையாய் சுமந்து, பல்வேறு உதிரிப் பணிகளைச் செய்து சென்னையில் சுயமாக உலகப்படங்களைப் பார்த்து சினிமாவைக் கற்றுக்கொண்டு, இரண்டு படங்களை இயக்கி, உலகப்படவிழாக்களுச் செல்லும் தகுதிபெற்றுள்ள வினோத்ராஜின் சாதனை எளிதானது மட்டுமல்ல, சுயாதீனப் படங்களின்பால் ஆர்வமுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதுமாகும்.
வினோத்தின் கூழாங்கல் இணையத்திலும் கொட்டுக்காளி திரையரங்குகளிலும் வெளியான நிலையில் இப்படங்கள் சிலவிதமான எதிரும் புதிருமான எதிர்வினைகளைப் பெற்றிருக்கின்றன. இவர் முயன்றுள்ள திரைமொழியும் பட உருவாக்க முறையும் ஒரு போக்காக பின்பற்றப்படத் தக்கதா? அல்லது பரிச்சார்த்தமாக அவருடனே முடிந்துவிடக்கூடியதா? இந்த வகைமையான படங்களுக்கான முன்கதை ஏதும் உள்ளதா? என்பதை அலசிப்பார்க்கவே நாம் முயல்கிறோம்.
இத்தகைய யதார்த்தவாத படங்களுக்கான ஒரு சிறிய முன் கதை உண்டு. 1942 தொடங்கி 1953 வரை ஒரு பத்து ஆண்டுகள் இத்தாலியில் நியோ ரியலிசம் என்றொரு திரைப்பட அலை உருவானது. பை சைக்கிள் தீவ்ஸ் (சைக்கிள் திருடன்) எனும் புகழ்பெற்ற திரைப்படம் உட்பட சில படங்கள் புதுவிதமான திரை அழகியலை சாத்தியப்படுத்தின. தொழில்முறை அல்லாத நடிகர்கள், நேரடியான கதைக்களங்கள் என்பன அவற்றின் அடிப்படைகளாக அமைந்தன. பெயரில் உள்ளது போன்றே ‘யதார்த்தத்திற்கு’ முக்கியத்துவம் அளிக்கும் சினிமா வகைமையாக அது இருந்தது.
1948இல் லண்டன் சென்றிருந்த சத்யஜித் ராய் ‘சைக்கிள் திருடன்’ உட்பட்ட இந்த நியோ ரியலிச சினிமாக்களைப் பார்க்கிறார். எழுத்தாளரும் ஓவியருமான ராயின் மேல் பெரும் தாக்கத்தை இப்படங்கள் ஏற்படுத்துகின்றன. இந்தியாவிற்கு வந்தபின் 1955 இல் பதேர் பாஞ்சாலி எனும் படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிடுகிறார். கறுப்பு வெள்ளையிலான அந்தப்படம் மேற்குலகில் பெருத்த வரவேற்பைப் பெறுகிறது. அதன்பின் 30 படங்களுக்கும்மேல் இயக்கிய ராய், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதை பெற்ற ஒரே இந்திய இயக்குநர் எனும் பெருமைக்குரியவரானார். சத்யஜித்ராயின் படங்களில் காணப்பட்ட யதார்த்தத்தை நான் ‘கவித்துவ யதார்த்தம்’ (poetic realism) என்றே அழைப்பேன். அதுவே அவருக்கான தனிப்பட்ட அடையாளமாக இருந்தது.
தமிழ் திரையுலகில் 1970களின் இறுதியில் பாரதிராஜா ஒரு வகையான யதார்த்த சினிமாவை அறிமுகம் செய்தார். பாரதிராஜாவின் தனித்தன்மை என்பது அவர் வெகுசன ரசனையை உள்ளடக்கிய விதத்தில் அவருடைய யதார்த்த அணுகுமுறையை மட்டுப்படுத்திக்கொண்டார். அவருடைய யதார்த்தத்தை புனைவு கலந்த யதார்த்தம் (romantic realism) என்றே கொள்ள முடியும். அவரைத் தொடர்ந்த மகேந்திரனின் இரண்டு படங்கள் (உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே) உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்தன. கதைக்கள யதார்த்தத்தைப்(surface reality) பொருட்படுத்தாத மகேந்திரன், கதை மாந்தர்களின் சித்திரிப்பில் நுட்பங்களை வெளிப்படுத்தினார். அருமையான அண்மைக்காட்சிகளால் (close-up) நகர்வது அவருடைய சினிமா. இந்த இருவரின் திரைமொழியே அடுத்த பத்தாண்டுகளில் வெவ்வேறு விகிதங்களில் தமிழ் சினிமாவில் வெளிப்பட்டது.
இடையில் 1970களில் துரையின் பசி, ஜெயபாரதியின் ‘குடிசை’ போன்றவை ஒரு யதார்த்த கலைப்பட முயற்சியாக சொல்லப்பட்டன. அதே காலத்தில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) இரு படங்களும் அறிவுஜீவிகளுக்கான ஒரு மாற்று சினிமாவாகக் கொள்ளத்தக்கதானது. 1980களில் பாலுமகேந்திரா வீடு (1988), சந்தியா ராகம் (1989) ஆகிய இரண்டு படங்களையும் யதார்த்தவகைப் படங்களாக மாற்றியிருந்தார். இரண்டுபடங்களுமே சோர்வளிக்கும் படங்களாக சொற்பமான தீவிர சினிமா ரசிகர்களாலும் முற்போக்காளர்களாலும் பேசப்பட்டது. அதே ஆண்டில் வெளியான கங்கை அமரனின் கரகாட்டக்காரன் யதார்த்தமான கிராமச்சூழல், பாத்திரங்களாலும் எளிமையான திரைக்கதையாலும் இளையராஜாவின் அபாரமான பாடல்களாலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து கிராமியப் படங்களின் வரிசை தொடர்ந்தது. அதில் குறிப்பாக 1991இல் வெளியான கஸ்தூரிராசாவின் என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரன் நல்லிஎலும்பைக் கடைவாயில் வைத்துக் கடிக்கத் தொடங்கியதிலிருந்து யாதார்த்தத்திற்கு கூடுதல் நெருக்கமான படங்கள் வரத் தொடங்கின. இச்சூழலில் புத்தாயிரத்தை ஒட்டி உலக சினிமாவில் உருவான நான் - லீனியர் மற்றும் குரூர யதார்த்தப்படங்கள் தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. 2002 இல் விருமாண்டியும், 2007இல் பருத்திவீரனும் குரூர யாதார்த்த சினிமாவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தின. யதார்த்தத்தைத் தொட்டுவிட முயன்ற படங்களின் பட்டியல் முழுமையானதல்ல.
தமிழ்த் திரைப்படங்களின் ஐம்பதாண்டுகால யதார்த்த சினிமாக்களின் பட்டியலில் பல்வேறு வகைகளில் யதார்த்தத்தின் அருகாமையில் செல்ல முயன்ற படைப்பாளிகள் இருக்கவே செய்திருக்கிறார்கள். ஏனெனில் 60களுக்குப் பின் உலகசினிமாவின் தாக்கத்தில் யதார்த்த சினிமாக்களே கலைப்படங்கள் எனும் கருத்தாக்கம் அறிவுஜீவிகளால் முன்னிறுத்தப்பட்டது. இந்தியா முழுமையும் பெரு நகரங்களில் திரைப்படச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. இத்தகைய திரைப்படச் சங்கங்களில் உறுப்பினராக இருப்பதென்பது அறிவுஜீவிகளுக்கான கூடுதல் தகுதியாகவும் பார்க்கப்பட்டது. இடதுசாரிகள், சிறுபத்திரிகைகாரர்கள் ஜோல்னா பைகளுடன் புரியாத படங்களைப் பார்த்து மேலும் புரிந்துகொள்ள முடியாத விளக்கங்களைக் கூறி மிரட்டிய காலமாக அது இருந்தது. ஆனால் சினிமா எப்போதும் பெரும் மூலதனம் சார்ந்து இயங்கியதால் அது மலினமான ரசனைகளைத் தூண்டக்கூடிய உத்திகளால் எளிய மக்களையே சார்ந்திருந்தது. மேலும் 90களுக்குப் பின் உலகசினிமாவிலும் கலைப்படம் வணிகப்படம் எனும் இருமை எதிர்வுகளுக்கிடையிலான கோடு மங்கலாகிவிட்டது. ஒரு வணிகப் பெருந்திரள் மக்கள்கூட்டம் பார்க்கக்கூடிய தரமான படங்களின் சாத்தியங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. இன்று உலகம் முழுமையும் விரும்பப்படக்கூடிய ஸ்பீல் பெர்க், பெர்ட்லூச்சி, டொராண்டினோ, நோலன், குப்ரிக், ஸ்கார்சிஸ், கப்பல்லோ, அலக்சாந்த்ரோ கொன்சாலஸ், பால் ஹக்கீஸ், பால் தாமஸ் ஆண்டர்சன் ஆகிய இயக்குநர்கள் கலை - வணிகம் என்ற எல்லைகளை ஏறத்தாழ தகர்த்தெறிந்துவிட்டனர் என்றே சொல்லலாம்.
எப்படியிருந்தாலும் எந்தக் கலையாலும் யதார்த்தத்தை முழுமையாகத் தொட்டுவிடமுடியாதல்லவா? உண்மையான யதார்த்தம் என்பதும் கலைக்கான / சினிமாவுக்கான யதார்த்தம் (filmic reality) என்பதும் வேறு வேறுதான். உண்மையில் யதார்த்த வாழ்க்கை சோர்வளிக்கக் கூடியது என்பதால்தான் ‘வணிகப் படங்களின்’ செயற்கையான திருப்பங்கள் பார்வையாளர்களைக் கிளர்ச்சியூட்டுகின்றன. யதார்த்தத்தை மீண்டும் காட்சிப்படுத்துவதைவிட, யதார்த்த வாழ்வை எப்படி விளக்கப்படுத்துவது என்பதே முக்கியமானதாகிறது.
ஆனால் வினோத்ராஜின் இரண்டு படங்களைப் பற்றியும் இரண்டுவிதமான பார்வைகளை முன்வைக்க முடியும். ஒன்று இது முற்றிலும் புதிய திரைமொழியாக இருக்கிறது. அவருடைய நீண்ட ஷாட்டுகள், பேச்சு மொழி தவிர்க்கப்பட்ட, எல்லாவற்றையும் பார்வையாளர் வசம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் தன்மை. இரண்டாவது இதொன்றும் புதியதல்ல ஏற்கனவே புழக்கத்திலிருந்து கைவிடப்பட்ட ஒரு திரை மொழிதான் என்பது. திரைமொழி என்பது காலந்தோறும் திரைமேதைகளால் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட ஒன்று. கால மாற்றத்திற்கேற்பவே இன்றைய நான் -லீனியர் (நேர்கோட்டுத் தன்மையற்ற) கதை கூறல் முறையை, கால, இட ஒழுங்கைக் குலைக்கும் ஒரு மொழியைப் பெற்றிருக்கிறது. மேலும் பார்வையாளனின் கவனக்குவிப்பும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆகவே இந்தத் திரைமொழி பார்வையாளனை உள்ளிழுத்துக்கொள்வதற்குப் பதிலாக அவனை வெளித் தள்ளிவிடுகிறது என்ற பார்வைக்கும் இடமிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாகவே திரையரங்குகளில் இப்படத்தை பார்த்த பார்வையாளர்களின் எதிர்வினை இருந்தது. ஆனால் இப்படத்தைப் பார்த்த தமிழின் முன்னணி இயக்குநர்கள் வெகுவாகப் புகழ்ந்துரைத்தனர்.
மிகவும் ஆதரவான கருத்துக்களைக் கூறினர். மேலும் வினோத் ராஜின் இரண்டு படங்களுமே சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றிருக்கின்றன. எலிகளை வேட்டையாடிச் சுட்டுச் சாப்பிடுவதாகட்டும், வினோத்தின் படங்களில் வரும் நிலவெளி, அப்பட்டமான கதை மாந்தர்கள் எல்லாம் ஒரு மேற்கத்திய பார்வையாளனை ஈர்க்கக் கூடிய அதிர்ச்சியடையச் செய்யக்கூடியவை. இந்தியாவில் இத்தகைய பழங்குடிக் கலாச்சாரம் இருப்பதான மனப்பதிவை அளிக்கக் கூடியவை. யதார்த்தம் என்ற பெயரில் இந்தியாவின் ஏழ்மையை சத்யஜித்ராய் விற்கிறார் என்று சொல்லப்பட்டதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். இதுவா இன்றைய தமிழகம்? ஆம் இதுவும்தான். ஒரு கலைஞன் எதைச் சொல்லவேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என நிர்ப்பந்திக்கும் உரிமை யாருக்கும் இல்லைதான். ஆனால் பார்வையாளனை உடனழைத்துச் செல்லாத எந்த உத்தியும் நீண்டு நிலைக்க முடியாது. பார்வையாளர்கள் ஒரு வகையான செயற்கையான திரைமொழிக்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். அதை என்னுடைய படங்களால் மாற்றுவேன் என்கிறார் வினோத்ராஜ். தமிழ்ப் பார்வையாளர்களை அவர் மாற்றுகிறாரா? பார்வையாளர்கள் அவரை மாற்றுகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.