வசந்தபாலன் 
சினிமா காணொளிகள்

அந்த எழுத்தாளரை அணுக பயம்!- இயக்குநர் வசந்தபாலன் Open Talk

Staff Writer

வெயில், அங்காடித்தெரு, அரவான், அநீதி போன்ற சிறந்த படங்களை இயக்கிய வசந்தபாலுடன் நடிகரும், எழுத்தாளருமான ஷாஜி நடத்திய நேர்காணலின் சிறு பகுதி:

“விதவிதமான உணவுகளைத் தேடிப் போய் சாப்பிடக் கூடியவன் நான். வெயில் படத்தின் படத்தொகுப்பு நடந்து கொண்டிருந்த இடத்துக்குப் பின்னாடி ஒரு தொரு. அங்கிருந்த கடைக்கு, ஒருநாள் நைட் பதினோரு மணிக்கு மேல் சாப்பிடச் சென்றேன். அங்குதான் ஜவுளி கடையில் வேலை செய்பவர்களை பார்க்கிறேன். வேலை முடிந்து திரும்பி போகிற ஆண்களையும் பெண்களையும் பார்த்ததும் எனக்கொரு ‘இமேஜ்’ தோன்றியது. இதை கதையாக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், என்னிடம் இந்த ’இமேஜ்’ மட்டும்தான் இருந்தது. ரங்கநாதன் தெருவைப் பற்றி எதுவுமே தெரியாது.

நாங்குநேரி மாதிரியான பகுதியில் தொடங்குவது மாதிரியான கதை. முதலில் பிரான்சிஸ் கிருபாதான் இந்த கதையை எழுதுவதாக இருந்தது. அவரை ஒழுங்குக்குள் அடைக்க முடியாது. ஒழுங்கை மீறி செயல்படுகிற கலைஞன். அடுத்து, வண்ணதாசனை அணுகலாமா என்று தோன்றியது. ஆனால், அவரை அணுகுவதில் ஒருவித பயம். ஒரு மாதத்துக்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஜெயமோகனிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அவரிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன்.

”சார் நீங்க நாகர்கோவில் வட்டார வழக்கு பேசக் கூடியவர், உங்களால் திருநெல்வேலி வட்டார வழக்கு எழுத முடியுமா” என்று கேட்டேன்.

”அது எழுதிடலாம் பா” என்றார் ஜெயமோகன்.” – அங்காடித் தெரு திரைப்படம் உருவான அனுபவத்தை வசந்தபாலன் அழகாகப் பகிர்ந்து கொண்டார்.