சிறப்புப்பகுதி

பெண்ணுடல் மீதான வன்முறை : ஷாகிதா சாக வேண்டியள் அல்ல

டாக்டர் சுனிதா கிருஷ்ணன்

என்னுடைய தனி வாழ்க்கையிலும் தொழில்முறையிலும் மிக மோசமானவர்கள் முதல் மிக உன்னதமானவர்கள் வரையான ஆட்களைச் சந்திக்கும் நல் வாய்ப்பு எனக்கு கிடைத்த கௌரவம். பாலியல் அடிமைத்தனத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களையும் சிறுமிகளையும் மீட்டிருக்கிறேன். அப்போது ஆண்களின் கொடூரம் பற்றிய லட்சக் கணக்கான கதைகளைக் கேட்டிருக்கிறேன். முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் காசு கொடுத்து உடலுறவு வைத்துக் கொள்வது அபரிமிதமான சுதந்திரத்தை அளிக்கிறது. சாடிஸ்ட் மனங்களுக்கு தங்களுடைய வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ளும்சுதந்திரத்தை அளிக்கிறது. யோனியில் மிளகாய்ப் பொடியைக் கொட்டுவது, சிகரெட்டாலும் சுருட்டாலும் சுட்டு வைப்பது, கட்டிலுடன் கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது - இப்படி எதுவும் காசுக்கு வாங்கிய செக்ஸில் சாத்தியம். திருமணத்திலும் அல்லது காதல் உறவிலும் கட்டுப்பாடுகள் இருப்பதாக எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அதுவும் ஆட்டங் கண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் ஒரு ‘டேட்டிங்’ கற்பழிப்பு வழக்குத் தொடர்பான செயல்களில் ஈடுபட்டிருந்தேன். டேட்டிங் வைத்துக் கொண்ட இளைஞன் பெண்ணை வல்லுறவு செய்ததில் அவளுடைய பிறப்புறுப்பு (தையல் போட வேண்டிய அளவுக்கு) முழுவதுமாகச் சிதைந்திருந்தது. அவளுக்கு ஓயாத ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் எட்டு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூர விளைவு என் உயிரை எதுவும் செய்யவில்லை. ஆனால் உடலை பாதித்திருந்தது.

இன்னொரு பக்கம் சிறந்த மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய அப்பா ஒரு தொடக்கம். என்னுடைய இளம் பருவத்திலும் பதின் பருவத்திலும் அவர்தான் என்னுடைய வலிமையாக இருந்தார். நான் அவருடைய செல்லப் பெண். அவருடைய கனவுகளை நிறைவேற்றும் தகுதியும் எனக்கு இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய சொந்தக் கனவுகள் எதையுமே என்மேல் திணிக்கவில்லை. என்னுடைய மனதை நான் பின் தொடர்ந்து செல்லவே ஆதரவு அளித்தார். எனது இருபது வயதுக ளின் தொடக்கத்தில் என்னுடைய வழிகாட்டியான சகோதரர். ஜோசைச் சந்தித்தேன். ’பிரஜ்வாலா’ அமைப்பை ஆரம்பிப்பதில் வழிகாட்டும் கருவியாக இருந்தவர் அவர். எல்லா ஆண்களும் மோசடிப் பேர்வழிகளல்ல என்று மீட்கப்பட்ட பெண்கள் நம்பிக்கை கொள்ள அவரே முன் உதாரணம். பின்னர் நான் எனது உயிர்த் தோழனும் கணவருமான ராஜேஷைச் சந்தித்தேன். தனது மனைவியின் முன்னேற்றத்தையே தன்னுடைய பெரும் மகிழ்ச்சியாகப் பார்க்கும் பாதுகாப்பான மனிதர். எனது செயல்-பாடுகளையும் இடையீடுகளையும் வலுப்படுத்த ராஜேஷ் வகிக்கும் பங்கைச் சொல்ல வார்த்தைகள் போதாது. ஒருநாள் தொலைபேசியில் தொடர்ச்சியாக எனக்கு வந்து கொண்டிருந்த மிரட்டல்களால் நான் சோர்ந்து போயிருந்தேன். நான் ராஜேஷிடம் “இந்த ஆட்-களால் நான் கொல்லப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் “ஒரு குழந்தையை மீட்கும் முயற்சியில் நீ கொல்லப்பட்டால் அதை எனக்குக் கிடைத்த கௌரவமாகத்தான் எடுத்துக் கொள்வேன்”.

நல்லதையும் கெட்டதையும் பார்த்த பிறகு, புரிந்து கொண்ட பிறகு, தீமையைக் குறைப்பதை விட அதை முற்றிலும் அழித்தொழிக்க நன்மைகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டவேண்டும் என்றும் ஓர் எதிர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் மேலும் மேலும் உணர்கிறேன்.

சாலையில் நான் கடவுளைப் பார்த்தால் அவரை/ அவளை என் வெறும் கைகளாலேயே கொல்ல வேண்டும் என்று யோசித்த நாட்களும் என் வாழ்க்கையில் இருந்தன. தங்களுடையது அல்லாத தவறுகளுக்காக நூற்றுக் கணக்கான குழந்தைகளின் வாழ்வு அகால மரணத்தில் முடிவதைச் சாட்சியாக நின்று பார்த்திருக்கிறேன். தங்களது நல்லியல்புகளையும் - களங்கமற்ற தன்மையையும் சில ஆண்களும் பெண்களும் சீரழிப்பதை எதிர்த்து அவர்கள் போராடுவதையும் பார்த்திருக்கிறேன். அப்பொதெல்லாம் நான் ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் பொங்கியிருக்கிறேன்.

பாலியல் துன்புறுத்தலுக்கும் வல்லுறவுக்கும் உள்ளான ஒரு குழந்தையைப் பார்த்ததும் இந்தக் கொடுமைக்கு ஆட்பட்டது அவர்கள் வெட்கப்பட வேண்டிய செயலல்ல என்று அவர்களுக்குப் புரிய வைக்க உறுதியெடுத்தேன். அவர்களுடைய கோபம் வலி, ஆக்ரோஷம் , சகிக்க முடியாத ஏமாற்ற உணர்வு ஆகியவை நீக்கப்பட்டதும் அவர்கள் வாழ்நாள் சுமையிலிருந்து விடுபட்டார்கள். நிபந்தனையற்ற அன்பும் பரிவும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமும் தங்களுக்குள்ளே இருக்கும் நேர்த்தியான ஆளுமையைக் காணச் செய்தன. அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றபோது ஒரு குழந்தையால் படிப்படியாகத் தனது கௌரவத்தையும் பிரச்சனைகளை வென்றெடுக்கும் ஆன்ம உறுதியையும் பெற முடிந்தது. சுயத்தை வெளிப்படுத்த முடிந்தது.

இந்தப் பயணத்தில் கடவுள் என்பது சாலையில் சந்திக்கக் கூடிய அவனோ/ அவளோ அல்ல என்றும் புரிந்து கொண்டேன். கடவுள் எனக்குள்ளேயும் என்னைச் சுற்றியும் என்னுடனும் இருக்கிறார். நொறுங்கிய குழந்தையின் ஆன்மாவை மட்டுமல்ல எனது ஆக்ரோஷமான ஆன்மாவையும் தொட்டு அறியும் தெய்வீக அனுபவத்தை நான் இந்தப் பயணத்தில் உணரத் தொடங்கினேன்.

ஷாகிதாவைப் பற்றி யோசிக்கும்போது ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் உற்சாகமும் துள்ளலும் நிரம்பிய குழந்தைதான் நினைவுக்கு வருவாள். அவளுடைய மாமா அவளை விற்றபோது ஒன்பது வயது. விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவளுடைய அம்மா அதற்கு மௌன சாட்சியாக இருந்தாள். அந்தக் தகவல் எங்களுக்கு மிகத் தாமதமாகத்தான் எட்டியது. ஆனாலும் நாங்கள் விரைந்து அவளை மீட்டோம். அடுத்த இலக்கு அவளுடைய தங்கை சஹாராவாக இருக்கலாம் என்ற யூகத்தில் முன்னெச்சரிக்கையாக அவளையும் மீட்டோம்.

ஷாகிதாவைப் பொறுத்தவரை அவளுடைய அசாதாரணமான மீளும் ஆற்றலைச் சொல்ல வேண்டும். மூன்றோ நான்கோ முறைமட்டுமே அவளுக்குக் கவுன்சிலிங் கொடுத்ததைத் தவிர அவளுடன் அதிக நேரம் செலவிட்டதாக நினைவில்லை. பாதிப்புக்குள்ளான மற்ற குழந்தைகளுக்கு சீக்கிரமே அவள் ரோல் மாடல் ஆனாள். படிப்பிலும் மற்ற ஆர்வங்களிலும் முன்வரிசையில் இடம் பிடிக்க அவள் காட்டிய ஈடுபாடு அவளைச் சாதனைப் பெண் ஆக்கியது. இதற்கிடையில் அவளுடைய அம்மாவும் மெல்ல மெல்ல பாலியல் தொழிலை விட்டுவிட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தாள். ஏழு ஆண்டுகள் ஷாகிதா எங்களுடைய பாதுகாப்பில் இருந்தாள். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அம்மாவிடம் திரும்பிப் போக வேண்டுமா என்று விசாரித்தேன். ஷாகிதாவும் சஹாராவும் அம்மாவிடம் திரும்பிப் போக ஆசைப்பட்டார்கள். குழந்தைகளின் படிப்பை நிறுத்தக் கூடாது, தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு அவர்களைத் தாயுடம் செல்ல அனுமதித்தோம். முதல் இரண்டு ஆண்டுகள் அவர்களை முறையாகக் கண்காணித்தோம். அதன் பிறகு தொடர்பு அறுந்து போனது..

நேற்று மாலை ஷாகிதா இறந்து விட்டதாகத் தொலைபேசி அழைப்புத் தெரிவித்தது. இதில் கொடுமை என்னவென்றால் அவள் ஒரு தர்கா வாசலில் செத்துக் கிடந்ததுதான். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தர்காவில் முன்னாலேயே நேற்றைக்கு முன் தினம் இறந்து கிடந்திருக்கிறாள். ஷாகிதா ஒரு எயிட்ஸ் நோயாளி. எங்களுடன் இருந்த ஏழு ஆண்டுகளில் அவள் எல்லாக் குழந்தைகளையும்போல சாதாரணக் குழந்தையாகத்தான் இருந்தாள். எங்கள் காப்பகத்திலிருந்து சென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருக்கிறது. அவளுடைய அம்மா சமூகப் புறக்கணிப்புக்குப் பயந்து எந்த மருத்துவ மனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. பதிலுக்கு ஒவ்வொரு தர்காவாகக் கொண்டு சென்றிருக்கிறாள். கடைசியாக மூன்று வாரங்களுக்கு முன்பு நோய் முற்றிய நிலையில் அவளை ஒரு தர்கா வாசலில் விட்டு விட்டுப் போயிருக்கிறாள். இதை விட வேதனையான, இதை விட மனிதாபிமானமில்லாத மரணம் இருக்க முடியுமா?

இன்று என் மனம் குற்ற உணர்வாலும் வேதனையாலும் நிரம்பியிருக்கிறது. இந்தக் குழந்தையை அவள் அம்மாவிடம் திருப்பி அனுப்பியது சரியா? அவள் எயிட்ஸ் நோயாளி என்று தெரிந்த நான் இன்னும் அதிக அக்கறை காட்டியிருக்க வேண்டுமா? சமூகம் சார்ந்த பராமரிப்புதான் முதன்மையானது; அமைப்புச் சார்ந்த பராமரிப்பு இறுதியானது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்மைச் சுற்றி-யுள்ள சமூகம் நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லாதபோது அவர்களை எங்கே அனுப்புவது? நான் தொடர்ந்து ஃபாலோ அப் செய்யாமல் விட்டு விட்டேனா? அப்படியானால் நாம் எவ்வளவு காலம் அதைச் செய்வது? சமூக அமைப்புகள் என்ற நிலையில் இந்தத் தொடர் நடவடிக்கைக்கான திட்டங்கள் நம்மிடம் இருக்கின்றனவா? மகளை ஏன் என் பாதுகாப்பில் விட்டுச் செல்லவில்லை என்று அந்த அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேனே? இந்தக் கேள்விகளுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ஷாகிதாவின் முகம் என்னை வேட்டையாடுகிறது. அவள் அப்படிச் சாக வேண்டியவளா?

(டாக்டர் சுனிதா கிருஷ்ணன், ப்ரஜ்வாலா தொண்டு நிறுவனத்தின் தலைவர். மனநல ஆலோசகரான இவர் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் சிறுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஸ்திரீ சக்தி புரஸ்கார் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவர் தன் வலைப்பூவில் (sunithakrishnan.blogspot.in) ஆங்கிலத்தில் எழுதியது அவரது அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது)

ஜனவரி, 2013.