சிறப்புப்பகுதி

பெண்ணுடல் மீதான வன்முறை : சமூகத்தில் இருக்கக்கூடாதா நச்சு

மருத்துவர் ருத்ரன்

ஓடும் பேருந்தில் கதறக்கதற ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள்; வண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் இறுதியாக ஆடையின்றி தெருவில் வீசப்படுகிறாள். மிருகவெறியுடன் அவளைக் கொடுமைப்படுத்திய அந்த பொறுக்கிகளை என்னவென்று புரிந்து கொள்வது? எதற்காக புரிந்து கொள்ள வேண்டும்? அவர்களெல்லாம் போதையில் இருந்ததால் இது நேர்ந்தது என்று எடுத்துக்கொள்ள முடியாது. வண்டி ஓட்டி, வன்புணர்வில் ஈடுபட்டு, தடயங்-கள் அழிக்கவும் முயன்றவனது போதை எந்த அளவு அவனது அறிவை மழுங்கடித்திருக்கும்? அவனும் அவனுடன் இருந்தவர்களும் அன்றிரவு மது இல்லாமலேயே வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்கள்..

அப்படிச் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக நியதிகள், நெறிகள் எல்லாமே தண்ட-னை-யின் அச்சத்தி னால் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியங்கள் மட்டுமே. அவர்களது நியாயங்கள்  அவர்களது தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்-மான-மாகின்றன.  வாய்ப்பு கிடைத்தால் வக்கிரத்திற்கு வடிகால் தேடுவதே அவர்களது வாழ்க்கைமுறை. படிப்பறிவோ பணமோ இத்தகைய இழிசெயல் தூண்டும் மனநிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்கள் இயல்பு அது. வேறெப்படியும் அவர்கள் சிந்திக்க முடியாது. சகமானுடத்தின் வலி உணரமுடியாதவர்கள் அவர்கள். அவர்களைப் போன்றவர்கள் பலர் இருக்-கிறார்கள்-  குழந்தைகளை, இளம் சிறுமிகளை குறி வைத்து வாய்ப்பு கிடைத்தவுடன் சுயசுகத்துக்காக பலாத்காரம் செய்பவர்களும் இத்தகையவர்கள்தான். இவர்கள் ஏதோ எங்கோ இருப்பதில்லை, இயங்குவதில்லை. மாதா பிதா குரு என்றெல்லாம் இவர்களுக்கு சமுதாய அடையாளங்களும் இருக்கும், படிப்பும் இருக்கும் பணமும் இருக்கும் பண்பானதாய் ஒரு நடிப்பும் இருக்கும். வாய்ப்பும் வசதியும் வாய்க்கும்போது தான் அவர்களது சமூக முகமூடி கழன்று வெறிவிகாரம் வெளிப்படும். இவர்களில் யாரும் திருந்தியதாய் எங்கும் படித்ததில்லை.

அந்த நேரம் அந்த வெறியன் மனம் எப்படி இருந்திருக்கும் என்பது ஓர் அனுமானம்தான்.-  அவளைப் பார்த்தவுடன் காமம் தூண்டப்பட்டிருக்கும். தனிமை, சொந்த இடம் போல ஒரு சௌகரியம், கூட ஒத்த எண்ணமுடைய நண்பர் குழாம். இதுவே அவனது காம எண்ணத்தை காமவெறியாக்கி உடனே இச்சை பூர்த்தி செய்ய உத்வேகம் கொடுத்திருக்கும். அவன் இப்படிப்பட்ட பெண்களின் உடலழகில் மோகித்திருந்து ஒன்றும் முடியாமல் தேக்கிவைத்த வெறித்தனம் எல்லாம் அந்த நேரம் பீரிட்டெழுந்திருக்கும்.

இப்படிப்பட்ட சிலருக்கு அந்தப் பெண்ணின் பலவீனமும் பரிதாபமான கதறலும் கூட ஒரு போதைவெறி கூட்டியிருக்கும்.

உடலுறவு அந்தரங்கத்தின் பகிர்-தல். அதைப் பகிரங்கமாய் கூட கூட்டாளிகள் இருக்க வைத்துக்--கொள்பவனுக்கு அடிப்-படை வெட்கம் சமூக-அச்சம் குறைந்த-பட்ச நாகரிகம் இருக்-காது. அவன் அந்த நேரத்தில் அப்படி கூட்டாளிகளோடு சேர்ந்து உறவு கொள்ள முடிகிற--தென்றால் அவனுக்கு எப்போதுமே தன் இச்சை தணிதலே முக்கியம் என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்டவனுக்கு வெட்கம் வராது, வெட்கப்படாதவனுக்கு குற்ற உணர்வும் இருக்காது. இவன் வக்கிரமானவன் சமூகத்தில் இருக்க கூடாத ஒரு நச்சு. இவன்போல் பலரும் உண்டு இன்னும் வெளியே மாட்டிக்கொள்ளாமல்..

அந்த இரவில் டெல்லியில் தன் நண்பனுடன் பேருந்தில் பயணப்பட யத்தனித்திலிருந்தே அந்த இளைஞர்களின் பொருளாதார பின்னணி புரியும். அவர்கள் ஆடையின்றி அடிபட்டு தெருவில் கிடக்க, அவர்களைத்தாண்டி சென்ற ஆடம்பர கார்கள் எத்தனை இருக்கும்? சகமானுட வலி உணராதவர்கள் அந்தப் பொறுக்கிகள், அவர்களது குணமே அப்படித்தான். ஆனால் சமுக அக்கறை என்பதையே ஒப்பனையாக்கிக்கொண்டு க்ளப் நடவடிக்கையாக கொஞ்சம் தானம் கொஞ்சம் பேச்சு என்று புகைப்-படத்-திற்காகவே அலையும் எத்தனை ஜன்மங்கள் அன்று தெருவில் அவர்கள் கிடக்கையில் வண்டி நிறுத்தி உதவச் சென்றிருப்பார்கள்? பிறர் நலம் பிழை எனும் போலி மானுடம் ஒரு சமூகநிலை-யாக உருவாகிவருவதால்தான் வெறியர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.

(மருத்துவர் ருத்ரன் சென்னையில் இயங்கும் பிரபல மனநல மருத்துவர்)

ஜனவரி, 2014.