சிறப்புப்பகுதி

பெண்ணுடல் மீதான வன்முறை : இது பெண்களின் பிரச்சனை மட்டுமல்ல

இந்திரா

பெண்கள் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தனது தனித்திறமை, கடும் உழைப்பு ஆகியவற்றின் வழியே தனது அழுத்தமான முத்திரையைப் பதித்து வருகிற இந்த தொழில்நுட்ப யுகத்தில் பெண்களுக்கு எதிராகப் பெருகி வருகிற உடல், மனரீதியான வன்முறையோடு அதிகரித்து வரும் ஃபத்வாக்கள் அதிர்ச்சியளிக்கிறது.

டெல்லியில்  நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்திருப்பதோடு ,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியி ருக்கிறது. பாதிக்கப் பட்ட பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது அவர் ஏன் இரவில் அதுவும் ஆண் நண்பரோடு பயணம் செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் இரக்கமற்றதும், அபத்தமானதும் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. ஆண் நண்பரோடு, இரவில் பயணம் செய்த காரணத்தாலேயே இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணையும் பொறுப்பாளியாக்க முயல்வதைப் போன்ற அபத்தம் எதுவுமில்லை.

நாகரிகமான உடை என்று நம்பப்படுகிற சேலை, சுடிதார் அணிந்த பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதே இல்லையா? வன்முறைக்கு பெண்கள் மட்டுமல்ல சின்னஞ்சிறு சிறுமிகள் கூட ஆளாகிறார்களே இதற்கெல்லாம் என்ன எதிர்வினையாற்றப் போகிறோம்? பிரச்சனை பெண்களின் உடையிலோ, நடையிலோ இல்லை. பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் வெறும் உடலாகப் பார்க்கிற வக்கிர மனோபாவமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம்.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் சில கிராமங்களில் பெண்கள் கைபேசி வைத்துக் கொள்ளவும், சந்தைக்கு வருவதற்கும் உள்ளூர் காப் பஞ்சாயத்து தடைவிதித்தது. இவையெல்லாம் பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டே செய்யப்படுகிறது என்று இதற்கு நியாயம்வேறு கற்பிக்கப் பட்டது. யாரிடமிருந்து பாதுகாப்பு? ஆண்களிடமிருந்து தான் என்று புரிந்துகொள்ள ஏழாவது அறிவு ஒன்றும் வேண்டியதில்லை. அது தான் காரணமென்றால் ஏன் ஆண்களுக்கு இந்த தடையை விதிக்கக் கூடாது என்ற கேள்விக்குப் பதிலில்லை.

அதிகம் கல்வி கற்காத ,பிற்போக்கான கடந்த காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்கள் தான் இப்படியென்றால் வெளிநாடுகளில் கல்வி பயின்ற இந்த தொழில்நுட்ப யுகத்தின் பிரதிநிதிகளான, நவீன இளைய தலைமுறைத் தலைவர்கள் சிலரின் எதிர்-வினை ஃபத்வாவைவிட மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உத்தரபிரதேசத்தின் முதலைமைச்சர்,இந்தியாவின் இளைய முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களிடமிருந்து ஒரு சிறு கண்டனம் கூட வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சவுத்ரி இன்னும் ஒருபடி மேலே போய் ஃபத்வாவை நியாயப் படுத்தவேறு செய்தார். ஹரியானாவில் நிலைமை இன்னும் மோசம். இங்கே ஆதரவுக் குரல் இன்னொரு இளம் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டாலுடையது.

இதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சி முற்போக்கான தமிழகத்தில் பெண்களை பேண்ட் , சர்ட் போட்டவர்களின் பின்னே போகிறவர்களாக சித்தரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மலிவான கருத்து. இதைவிடவும் அந்தச் சகோதரிகளை யாரும் அவமானப் படுத்திவிட முடியாது.

இதற்குப் பின் இருந்து இயங்குவது வெறும் ஆணாதிக்கச் சிந்தனைகள் மட்டுமல்ல மிக நுட்பமான வாக்கு வங்கி அரசியலும் கூட. இன்றும் பெண்களைத் தன்னிச்சையாக, சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பவர்களாகப் பார்க்க மறுக்கும் அரசியல் சூழல் ஆண்களையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. ஆண்களின் நீட்சியாகவே பெண்களைப் பார்ப்பதும் , ஆண்கள் சொல்பவர்களுக்குத் தான் பெண்கள் வாக்களிக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் தான் , பெண்களை அடிமைப் படுத்துகிற அநாகரிகமான, சட்டத்திற்குப் புறம்பான முயற்சிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்புகிறது.

இதற்கு எதிர்வினையாற்ற பெண்கள் சாதி,மதம்,வர்க்கம் அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு பெண்களாக ஒருங்கிணைவதும் தங்கள் சுயத்தை பொதுவெளியில் அழுத்தமாகப் பதிவுசெய்வதும், அதற்கு ஆண்கள் பெண்களை சகமனுஷியாகக் கருதி ஆதரவளிப்பதும் முக்கியமானது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்களுடைய தனிப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல.அதற்கு தீர்வு காண்கிற பொறுப்பும் பெண்களுடையதாக மட்டுமே இருக்கமுடியாது. அது ஒரு சமூகத்தின் பிரச்சனை. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.

பெண்களை சரிசமமாக நடத்துகிற, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக எதிர்கொள்கிற சமூகமே நாகரிகமான, வளர்ச்சியடைந்த சமூகமாக இருக்கமுடியும். அப்படியொரு சமூகம் தான் நமது கனவு என்றால் அதன் கண்களாக பெண்களே இருப்பார்கள்!

(இந்திரா என்ற பெயரில் எழுதும் ஜோதிமணி இளைஞர் காங்கிரசில் தேசிய செயலாளர்களில் ஒருவர்)

ஜனவரி, 2013.