சிறப்புப்பகுதி

டிக் டாக் பஞ்சாயத்து

Staff Writer

டிக்டாக் செயலியை இந்தியாவில்தான் தடை செய்து வைத்துள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சீன செயலிக்கு தடைஇல்லை. போர்ப்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியின் படி, டிக்டாக் செயலியின் சீன நிர்வாகம், டிக்டாக் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் இருப்பிடத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே கண்டறியப் பயன்படுத்துகிறதாம். இது பயனாளர்களின் சுதந்தரத்தில் தலையிடுவது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதுக்குத்தான் நாம மொத்தமா தடை போட்டுட்டோம் என்கிறீர்களா?

படுகொலை நினைவுகள்

தன் மூத்த மகனை அழைத்துக்கொண்டு 1919-இல் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த ஒரு காங்கிரஸ் கூட்டத்துக்குப் போனார் கியான் சிங். வெள்ளையர்கள் சுட்டதில் மகனுடைய நெஞ்சில், மார்பில் குண்டுகள் பாய்ந்தன. இருநாட்கள் கழித்து மகனுடைய உடலை எரியூட்ட அரசு அனுமதித்தபோது, பயத்தில் சொந்தக்காரர்கள் யாருமே வரவில்லையாம். இதுபோல் ஜாலியன் வாலாபாக் தொடர்பான பலரின் நினைவுகளைத் தொகுத்து நூலாகவும் கொண்டுவந்துள்ளார், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சர்மிஸ்தா.  இந்த சம்பவத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். வங்கக் கவிஞர் தாகூர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு வழங்கப்பட்டிருந்த நைட் பட்டத்தை திருப்பி அளித்துவிட்டார். இதுபோன்ற நிகழ்வுகளை நினைவூட்டும் கண்காட்சி ஒன்றைத்தான் சர்மிஸ்தா முதலில் உருவாக்கினார். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் இது நடக்கவில்லை. எனவே தொகுத்த தகவல்களை வங்கமொழியில் நூலாக்கி விட்டார். ஒரு கொடூரமான நிகழ்வு, இன்று வெறும் நினைவுகளாக மட்டும் இந்தியர்கள் மனதில் தங்கி இருக்கிறது. அந்த நினைவுக்கு செய்யப்பட்ட மறுநினைவூட்டல் இந்த புத்தகம் எனலாம்.

இப்படியுமா?

உத்தரபிரதேசத்தில் தன் மனைவியின் தற்கொலை  முயற்சியை கணவன் தடுக்க முயலாமல் வீடியோ எடுத்தது விமர்சனத்துக்கு உள்ளாகியது.  மின் விசிறியில் தூக்குப் போட்டு தொங்கும் மனைவி முதல் முயற்சியில் கீழே விழுவதும் அடுத்த முயற்சியில் மரணம் அடைவதையும் அந்த கொடூர கணவன் வீடியோ எடுத்துள்ளான். இறந்தபிறகு மனைவியின் பெற்றோரிடம் அந்த வீடியோவைக் காட்டினானாம் அவன். காவல்துறை விசாரித்துக்கொண்டு இருக்கிறது! மனுசங்க இப்படியும் இருப்பாங்களா?

பாதுகாவலரின் சம்பளம்

மும்பையின் உச்சபட்ச நட்சத்திர ஜோடி அனுஷ்கா சர்மா- கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த ஜோடி வெளியே செல்லும்போது தங்கள் பாதுகாப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அனுஷ்கா சர்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இருக்கிறார். அவர் பெயர் சோனு என்கிற பிரகாஷ் சிங். விராட்டுடன் திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே அவர் அனுஷ்காவின் பாதுகாவலராக இருக்கிறார். சரி... இப்போ என்ன? சோனுவுக்கு ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1.2கோடி ரூபாயாம்! இவர்தான் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் ‘பாடி கார்ட்‘. கோலியின் மனைவி என்றால் சும்மாவா?

நவம்பர், 2022