சிறப்புப்பகுதி

முன்னாள் கணவன் இந்நாள் விருந்தினர்

Staff Writer

சென்னையில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு அது. கணவனும் மனைவியும் பிரிந்துவிட்டனர். ஆனால் அதே குடியிருப்பில் வெவ்வேறு வீடுகளில் வசிக்கின்றனர். அம்மாவுடன் பத்து வயதுக் குழந்தை. கணவன் தன் குழந்தையைப் பார்ப்பதற்கும் இணைந்து வளர்ப்பதற்கும் உரிமை கோருகிறார். மனைவி மறுக்கவே நீதிமன்றப் படியேறினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி விசாரித்து தீர்ப்பு வழங்கினார். ‘வெள்ளி, சனிக்கிழமைகளில் தந்தை, குழந்தையின் தாய்வீட்டுக்குச் சென்று குழந்தையைப் பார்க்கலாம். அப்போது அவருக்கு சாப்பிட எதாவது கொடுத்து உபசரிக்க வேண்டும். குழந்தையின் முன்னால் சண்டையிடக்கூடாது' என்பது தீர்ப்பின் சாரம். முன்னாள் கணவனை மரியாதைக்குரிய விருந்தினராக, ‘அதிதி தேவோ பவ' என்ற கூற்றின் அடிப்படையில் நடத்தவேண்டும். குழந்தைகளிடம் அப்பாவைப் பற்றி தவறாகவோ அம்மாவைப் பற்றித் தவறாகவோ சொல்வது குழந்தைகள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து தீர்ப்புகளுக்குப் பின் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தந்தையைக் குழந்தையைப் பார்க்க அனுமதிக்காத தாய்மார்கள் நிறைய பேர் இருப்பதாக பலர் புலம்பி வரும் நிலையில், நீதிபதி ராமசாமியின் தீர்ப்பில்

சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மிக அவசியமானவை. நமக்குப் பிடிக்கவில்லை பிரிந்துவிட்டோம். ஏன் குழந்தையின் மனதை விஷமாக்க வேண்டும்? குழந்தையைப் பார்க்க வரும் தந்தைக்கோ தாய்க்கோ ஒரு காபி கொடுத்து ஒரு விருந்தினரைப் போல் நடத்துவதில் என்ன குறைந்துவிடப்போகிறது?

ஆம் ஆத்மியின் குழப்படி!

வங்கதேசத்தைச் சேர்ந்த அறிஞர் மௌலானா மகமது ஹசனைப் பற்றி நாம் யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். ஆம் ஆத்மி கட்சிக்காரர்களும்  அப்படித்தான். ஆனால் டெல்லியில் அவர்கள்

சுதந்தரபோராட்ட வீரர்கள் நினைவாக வைத்த நீரூற்று ஒன்றின் அருகே அமைத்த போஸ்டரில் இவரது படம் மகாத்மா காந்தி, அபுல்கலாம் ஆசாத் போன்ற சுதந்தரப் போராட்ட வீரர்களுடன் எப்படியோ இடம்  பெற்றுவிட்டது. ஒரு மாதம் கழித்து இந்தியா டுடே காரர்களுக்கு இந்த ஆள் வங்கதேசத்து  மனிதர் எனத்தெரிய வந்து அதை செய்தி ஆக்க, இரவோடு இரவாக ஆம் ஆத்மி பிரமுகர்கள் அந்த போஸ்டரை அகற்றிவிட்டனர். கடைசியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலையில்தானே எல்லாம் விடியும்? என்ன சி.எம். இதுகூட தெரியாதா? என பாஜக, காங்கிரஸ்காரர்கள் அவரை மொத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எருமை விஐபி

கர்நாடகாவில் பாலேஹோசூர் என்ற கிராமத்து மக்கள் மாநில அரசுக்கு வெட்கம் வரும்படி ஒரு பாடத்தைப் புகட்டி உள்ளனர். அவர்கள் ஊரில் பேருந்து நிலையம் இடிந்துவிட்டது. எனவே அதைக் கட்டித்தருமாறு பத்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். செவிடன் காதில் ஊதிய சங்காக அல்லது ம்யூட் செய்யப்பட்ட செல்போன் அழைப்பாக பயனில்லாமல் போய்விட்டது. எனவே ஊர்மக்களே காசு வசூலித்து பேருந்து நிலையத்தைக் கட்டினர். இதற்கு திறப்பு விழா செய்யவேண்டுமே? எம்.எல்.ஏ. அல்லது எம்பியை கூப்பிடுவதா? எதற்குக் கூப்பிடவேண்டும்? அவர்களா கட்டிக்கொடுத்தார்கள்? ஊர்மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு கடைசியில் ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து வந்தனர். அதே ஊரைச் சேர்ந்த நல்ல கரிய நிறத்தில் ஆன எருமைதான் அந்த விருந்தினர். எருமை விஐபி வந்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து புல்லைக் கடித்து சாணியைப் போட்டு திறந்துவைத்துவிட்டுப் போய்விட்டார்! எருமை விஐபி பற்றிதான் இப்போது எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! இந்த நிகழ்வின் மூலம் அரசுக்குப் பாடம் கற்பித்துள்ளனர் ஊர் மக்கள். ஆனால் இதுவும் எருமையின் மீது பெய்த மழைபோல்  போய்விட்டால்?

கஞ்சா வேணுமாம்

நாட்டுல ரொம்ப குற்றம் அதிகரிச்சிடுச்சு. இதற்கெல்லாம் காரணம் மக்கள்

சாராயம் குடிக்கிறது தான். இதுக்குப் பதிலா எல்லாம் கஞ்சா அடியுங்க. குற்றங்கள் குறைந்துவிடும்... இப்படி பேசி அதிர வைத்துள்ளார் சத்திஸ்கர் எம்.எல்.ஏ வான கிருஷ்ணமூர்த்தி பந்தி. சார் எந்த கட்சிக்காரர்னு கேக்கறீங்களா? பாஜக. நாட்டில் சட்டப்படி கஞ்சா பிரயோகம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவரது கருத்து  காங்கிரஸ் காரர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

சத்திஸ்கரை ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வரான பூபேஷ் பாகேல், ‘ இவரு கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் எனக் கருதினால் மத்திய அரசிடம் கேட்கட்டுமே?‘ என வாரி விட்டுள்ளார்.

அப்படித்தான் அடிப்போம்!

தன் வீட்டுச் சுற்றுச்சுவரில் மூன்று பேர்  நிம்மதியாக  உச்சா அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த வீட்டு உரிமையாளர் சேட்டன், கடுப்பாகி, இங்கேல்லாம் அடிக்கக் கூடாதுப்பா என்றிருக்கிறார்.  நீயாருடா சொல்ல.. அப்படித்தான் அடிப்போம் என்றதோடு இல்லாமல் சேட்டனையும் அடித்து வெளுத்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கிளிமானூர் என்ற இடத்தில் நடந்த சம்பவம் இது. இதில் என்ன விசேடம் என்றால்  ‘அடித்த' மூன்று பேரும் காவல்துறையினர்.  உச்சா அடித்ததும் இல்லாமல் வீட்டு உரிமையாளரையும் அடித்ததால் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு இப்போது இடை நீக்கம் செய்யப்-பட்டுள்ளனர். இப்போது அடிவாங்கிய சேட்டனிடம் புகாரை திரும்பப்பெறுமாறு இந்த மூன்று பேரும்  கெஞ்சிக்கொண்டிருக்கி றார்களாம். சேட்டன் மாட்டேன் என்று  சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட், 2022