சிறப்புப்பகுதி

சென்னையில் பனி மழை

மதிமலர்

சென்னையில் வெப்பச்சலனத்தால் மழை பெய்துகொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் அண்ணாநகரில் உள்ள வீட்டில் பிரதீப்ஜானைச் சந்தித்தோம். இவர் தமிழ்நாடு வெதர்மேன் என்ற முகநூல் பக்கம் வழியாக மழைக் கணிப்புகளை வெளியிடுகிறவர்.

அரசின் வானிலை அறிவிப்பைவிட இவரது வானிலை அறிவிப்பையே பலர் தங்களுக்கு நெருக்கமாக உணர்கிறார்கள்.  இரண்டே முக்கால் லட்சம் பேர் இவரது பக்கத்தைப் பின் தொடருகிறார்கள். சினிமா, அரசியல் தவிர்த்து நம் ஆட்கள் அதிகமாகப் பின்தொடரும் பக்கங்களில் இவருடையதும் ஒன்று. 2015 டிசம்பரில் சென்னை மூழ்கியபோது, மிக பலத்த மழை பெய்யும் என்று இவர் செய்த அறிவிப்பு இவருக்கு பெரும் அளவில் கவனிப்பை உருவாக்கியது. அதே சமயம் உடனடியாக இன்னொரு பெருமழை வரும் என்று பிபிசி அறிவிக்க, அப்படி எதுவும் வராது என்று உறுதியாக மறுத்துப் பலரை அமைதிப்படுத்தினார். கடந்த ஆண்டு வந்த வார்தா புயலின்போது இவரது கணிப்புகள் மிகத்துல்லியமாக வழிகாட்டின.

” நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மழையைக் கவனித்துவருகிறேன். 1984-ல் சென்னையில் ஏற்பட்ட புயல்மழையைத் தொடர்ந்து எனக்கு அதன்மீது ஆர்வம் ஏற்பட்டது. இவ்வளவு ஆண்டாகக் கவனித்துவருவதால்தான் துல்லியமாகச் சொல்லமுடிகிறது” என்கிறவர் மடிக்கணினியைத் திறந்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும் மழை மேகங்களின் இயக்கத்தைக் காண்பிக்கும் படத்தைச் சுட்டிக்காட்டினார்.  அப்போது மேகங்கள் பெங்களூரு பக்கமிருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தன “வேகமாக வருகின்றன, இன்னும் மூன்று  மணிநேரத்தின் சென்னைக்கு மேலே வந்து சடசடவென்று கொட்டி விட்டுச் சென்றுவிடும்,” என்றார்.

“ உலகில் யாருமே வானத்தைப் பார்த்து இங்கே உறுதியாக மழை பெய்யும் என்றெல்லாம் இப்போது சொல்வது இல்லை. கணினிகள் சொல்லும் மாதிரிகளைக் கொண்டுதான் கணிக்கிறார்கள். அதை வைத்துத்தான் நானும் சொல்கிறேன். எல்லா கணிப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்குச் சில ஆண்டுகள் நீங்கள் மழைப்பொழிவைக் கவனித்திருக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் மழைப்பொழிவின் போக்குகளும் தெரிந்திருக்கவேண்டும். அதைவைத்து இதுபோல் இருந்தால் சென்னையிலோ கோவையிலோ மழை பொழியும் என்று கணித்துச் சொல்லலாம். காற்றழுத்தப்பகுதி ஒரிசா பகுதியில் இருந்தால் இங்கே எப்படி மழை பெய்யும், தென் மேற்குப் பருவக்காற்று அரபிக்கடலில் வலுவானால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் எப்படி மழை பெய்யும் போன்ற வழக்கமான நிகழ்வுகள் தெரியவேண்டும். இந்திய இணைய தளங்கள் மட்டுமல்ல உலகின் வேறு இணைய தளங்களையும் நான் தகவல் அறியப் பயன்படுத்துகிறேன். இந்தக் கணிப்பை ஒரு மாதம் முன்பும் செய்யலாம், 15 நாட்கள் முன்பும் செய்யலாம், ஒரு வாரம் முன்பும் செய்யலாம் இவற்றை long rage, mid range, short range forecast என்று சொல்வார்கள். இரண்டு மணி நேரம் முன்பாகவும் சொல்லலாம். இது ணணிதீ ஞிச்ண்tடிணஞ்.  ரேடார் அனுப்பும் படங்களைப் பார்த்து இதைச்    சொல்லமுடியும்.

சென்னையில் ஒரு டாப்ளர் வெதர் ரேடார் உள்ளது. இதைப் பார்த்து எங்கே பெய்யும்? மேகங்களின் வேகம், ஆலங்கட்டி மழை பெய்யுமா? போன்றதெல்லாம் சொல்லலாம். நமது மழை பெரும்பாலும் வெப்பச்சலன மழை. இதை ரேடார் வைத்து உறுதியாகச் சொல்லலாம்.”

நியூமெரிக்கல் மாடல் வைத்துத்தான் உலகில் எல்லோருமே கணிக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் துல்லியமாகச் சொல்வதுபோல் இங்கே சொல்லமுடியாததற்கு உள்நாட்டில் நிலவும் பிராந்திய மாறுதல்களே காரணம் என்கிறார் இவர்.

“ 25 ஆண்டுகளாகவே ஆர்வம். ஹிந்து பேப்பரில் வருவதை வெட்டி வைத்திருப்பேன். இணையம் வந்தபின் என்னைப்போல் பலர் இந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிந்து அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. 2014ல் இருந்து கணிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்குமுன் எங்கெங்கே எவ்வளவு மழை என்று பதிவு செய்துகொண்டிருந்தேன். ஆரம்பத்தில் யாரும் ஆர்வம் காண்பிக்கவில்லை. 2015-ல்தான் பெரிய அளவில் கவனம் கிடைத்தது. மக்களுக்குப் புரிகிறதுபோல் உடனடி மழை, நாளைக்கு மழை போன்ற விஷயங் களைச் சொல்வேன். சாதாரண மழை பற்றிச் சொல்வதில் மக்களுக்குப் பயன் இல்லை. முக்கியமாகப் பெருமழை பற்றி முன்கூட்டியே                              சொன்னால்தான் உதவும். அப்படித் தமிழ்நாடு முழுக்க மழைப்பொழிவு பற்றிச் சொல்ல விரும்பினேன். 2015 டிசம்பர் 1 ஆம் தேதி பெருவெள்ளத்தின்போது இன்று யாரும் அலுவலகம் போகவேண்டாம். பெரும் மழை வரப்போகிறது என்று குறிப்பிட்டேன். குறிப்பாகத்  தாம்பரம் பகுதியில் பெருமழை பெய்யும் என்று       சொன்னேன். 2016ல் வர்தா புயல் வரும் என்று  உறுதியாகத் தெரிந்தபோது ஒரு நாள் முன்னமே எச்சரிக்கை விடுத்தேன். என்றைக்கெல்லாம் இதுபோல் பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்று உறுதியாகத் தெரிகிறபோது நான் இப்படி கணிப்புகளைத் தெரிவிப்பேன்!அதுதான் மக்களுக்கு உதவியாக இருக்கும்” என்று பகிர்ந்துகொண்டவரிடம் இப்போதைய சென்னை மழை பற்றிப் பேசினோம்.

“ஜூனிலிருந்து செப்டம்பர் வரை சென்னையில் அலுலகம் போகும்போது மழையே இருக்காது. ஆனால் மாலையில் வீடு திரும்பும்போதும், இரவிலும் மழையில் மாட்டிக்கொள்வோம். அதுதான் வழக்கம். இப்போது பெய்யும் மழை வெப்பச்சலன மழை. நல்லா வெயில் அடிக்கும். கடல்காற்று உள்ளே வந்ததும் சென்னை நகரத்துக்கு மேலேயே உருவான மழை மேகங்களைக் குளிர்வித்து சடசடவென்று மழை பெய்துவிட்டுப் போய்விடும். அதன் பின்னர் இரவு ஆக ஆக, மேற்கிலிருந்து வரும் காற்றால் வேலூர் திருவண்ணாமலைப் பகுதியில் உருவாகும் மேகம் நகர்ந்து சென்னைக்கு மேலே குவிந்து மழை பொழியும். கடல் பக்கம் இருப்பதால் இங்கே ஈரப்பதம் அதிகம் இருக்கும் அதுவும் மழைக்கு உதவும்.”

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கப்போகிறது? போன ஆண்டுபோல் பொய்க்குமா? அதற்கு முந்தய ஆண்டுபோல் பெருவெள்ளமா?

”வடகிழக்குப் பருவமழை பற்றி எப்பவுமே சரியாக முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய கணிப்புகளை கடந்த 25 ஆண்டுகளை எடுத்துப் பாருங்கள். உங்களுக்குப் புரியும். 2015 ஆம் ஆண்டுபோன்ற எல் நினோ ஆண்டுகளைப் பற்றி முன்கூட்டியே துல்லியமாகச் சொல்லலாம். இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மழை பொழியும் என்று. அதேபோல் 2015 போன்ற எல் நினோ ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டும் அதிகமாக புயல்கள் வரும் என்று சொல்லலாம். போன ஆண்டு புயல்கள் ஏற்பட்டன. மற்றபடி சாதாரண ஆண்டுகளைத் துல்லியமாக முன்கூட்டியே சொல்ல முடியாது. அக்டோபர் 15-ல் உருவாகி டிசம்பர் முதல்வாரம் முடிகிற குறுகிய காலம் அது. அதைத் துல்லியமாக இப்போதே யாராலும் கணிக்கமுடியாது.”

தமிழ்நாட்டில் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் அதிகம் மழைபொழியும் இடம். அங்கே சென்று மழைப்பொழிவைக் கண்காணித்திருக்கும் இவர் நீலகிரி மாவட்டத்தில் தேவாரா என்ற இன்னொரு இடமும் அதிக மழை பெறும் இடம் என்று குறிப்பிடுகிறார். அவரிடம் சென்னையில் மிகமோசமான வானிலை எப்போது நிலவியது என்று கேட்டோம்.

“ 1815-ல்  தாய்லாந்தில் ஒரு எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் 6 டிகிரிக்கும் குறைவாக வெப்பம் பதிவாகி இருந்தது. அப்போது பனிப்பொழிவும் இருந்திருக்கவேண்டும்!”

செப்டெம்பர், 2017.