குடியைப் பற்றி நமக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் இருக்கிறது; குறிப்பாக குடிப்பவர்களுக்கு. குறைவாக குடித்தால் உடம்புக்கு நல்லது, பியர் குடியே கிடையாது அதில் மிகக் கொஞ்சமே ஆல்கஹால் உள்ளது, ரெட் வைன் உடம்புக்கு நல்லது, மிதமாக குடித்தால் நல்ல தூக்கம் வரும் இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.
இதைப்பற்றி பேசும் ஆவணப்படம் தான் The truth about alcohol (ஆல்கஹாலைப் பற்றிய உண்மைகள்). 2016 இல் இங்கிலாந்தின் மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கு என்ற அளவைக் குறைத்து 14 யூனிட்டுக்கு அதிகமாக மது அருந்தினால் உடல் நிலை பாதிக்கப்படும், புற்று நோய் வர வாய்ப்புள்ளது என்று அறிவிக்கின்றனர். நம்மூர் அளவுப்படி ஒரு வாரத்துக்கு ஏழு லெகர் பியர் என்று வைத்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவர் டேவிட் அப்ஷமோனிம் (David abdelmoneim) மது பற்றிய மக்களின் எண்ணங்களையும் அதன் உண்மைத்தன்மையையும் அறிவியல் பூர்வமாகக் கண்டறிய கிளம்புவதுதான் இந்த நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம். இங்கிலாந்தில் ஏறக்குறைய ஒன்றேகால் கோடி பேர் இந்த அளவைவிட அதிகமாக குடிக்கிறார்கள் என்கிறது இந்த ஆவணப்படம்.
முதலில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான மதுவிலேயே போதை ஏறிவிடுகிறது என்பது தவறானது என்கிறார்கள். அவன் ரெண்டு பெக் அடிச்சாலே கவுந்துடுவான் என்றும், நான் குவாட்டர் அடிச்சிட்டு தெளிவா நடப்பேன் என்று சொல்வதையும் எப்படி கணக்கிடுவது? மது போதை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுவது அவர்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பொறுத்தே என்று கணக்கிட்டு காட்டுகிறார்கள். உடலில் அதிக அளவு நீர் இருப்பவர்களுக்கு போதை ஏற அதிக மது தேவைப்படுகிறது. ஆனால் இதில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லை.
ஒரு வாரத்தில் 20 யூனிட் வரை குடித்ததற்கே மருத்துவர் டேவிட்டின் ஈரல் வழக்கமான அளவைவிட சற்று வீங்கி காணப்படுகிறது. மது ஈரலை நேரடியாக பாதிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதானே? குடிக்கும் மதுவின் அளவோடு, உடல் பருமன், வயது, உணவு முறை, மரபணு போன்ற பல காரணிகள் ஈரல் பாதிப்போடு தொடர்புடையது.
பேடக் டெஸ்ட் என்ற செயல்முறையில் மது நம்முடைய மூளையின் செயல்பாட்டை எப்படி பாதிக்கிறது என்று கண்டறிகிறார்கள். மது அருந்திய பிறகு தெளிவாக இருப்பதாக தோற்றமளிப்பவர்கள் கூட இந்த செயல்முறையில் பரிதாபகரமாக தோற்கிறார்கள். மூளையின் செயல்பாட்டை மது தடுக்கிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், மது அருந்திய உடன் உடல் வெப்பமாவதை உணர்வார்கள்; சிலருக்கு வியர்க்கும். இதற்கு காரணம், மது வெப்பமான இரத்தத்தை தோலுக்கு அருகில் அதிகரிக்கிறது, இதனால் உண்மையில் உடலின் சக்தியை இழக்கவைக்கிறது. ஆனால் உடலின் சக்தி அதிகரிப்பதுபோல பொய்யான தோற்றத்தை உண்டாக்குகிறது.
மது அருந்துபவர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு வகையான பானங்களைத் தருகிறார்கள். இரண்டு பிரிவினருக்கும் ஒரே அளவிலான கொறிக்கும் உணவுகளைக் கொடுக்கிறார்கள். உண்மையில் ஒரு பிரிவுக்கு ஆல்கஹால் பானத்தையும், மற்றொரு பிரிவுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்தையும் தருகிறார்கள். ஆல்கஹால் பானத்தை அருந்தியவர்கள் அதிக அளவில் கொறிக்கும் உணவு வகையை உண்பது கண்டறியப்படுகிறது. உடல் பருமனுக்கான ஆல்கஹாலின் தொடர்பினை இதன் மூலம் உணரலாம். ( ஆனால் குடிப்பவர்களைவிட அவர்களுக்கு கம்பெனி கொடுக்க உட்கார்கிறவர்கள் அதிகம் சைட் டிஷ்களை வெட்டுவதும் நம்மூரில் நிஜம்!)
மது அருந்துவதற்கு முன்பாக நன்றாக சாப்பிடுவது நல்லதா? இந்த கேள்வி நம்மூரிலேயே பல்லாண்டுகளாக கேட்கப்படுவது. ஆல்கஹால் சிறு குடலில்தான் உறிஞ்சப்படுகிறது. நன்றாக சாப்பிட்டுவிட்டு மது அருந்தும் போது அது சிறுகுடலை வந்தடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு குறைவாகச் சென்று குறைந்த நேரமே நீடிக்கிறது. கட்டாயம் மது அருந்தியே ஆக வேண்டுமென்றால் நல்ல உணவு உண்ட பிறகு அருந்துவதால் பாதிப்பு குறைவு என்கிறார்கள்.
குறைவான அளவில் சிவப்பு வைன் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. அதற்கான ஆராய்ச்சியில் இறங்குகிறார் மருத்துவர் டேவிட். சிவப்பு வைன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்வது உண்மைதான். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது, அதற்கான காரணம் அதிலுள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள். பல வைன் பாட்டில்களை சோதனை செய்து அதில் பாலிஃபீனால்களை கணக்கிடுகையில் வைனின் நிறம் குறைய குறைய பாலிஃபீனால்களின் அளவு குறைகிறது. ஆனால் அதே சமயத்தில் இன்னொரு சோதனையில் மதுவின் நிறம் அதிகமாகும்போது அதில் நொதிப்பதால் ஏற்படும் கன்ஜீனர் என்னும் வேதிப்பொருள் உடலை பாதிப்படையச் செய்கிறது என்கிறார்கள்.
கொஞ்சமாவது சரக்கு சாப்பிட்டால்தான் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது என்பவரா நீங்கள்? அடுத்து வரும் சோதனை உங்களுக்கானது தான். எப்போதுமே எவ்வளவு நேரம் நாம் தூங்குகிறோம் என்பதைவிட எவ்வளவு நேரம் ஆழ்ந்து தூங்குகிறோம் என்பது முக்கியமானது. மது அருந்திவிட்டு தூக்கத்திற்கான பரிசோதனையை மேற்கொள்கிறார் டாக்டர் டேவிட். அதில் முதலில் மது தூக்கத்தை வரவழைக்கிறது, ஆனால் பிற்பகுதியில் ஆழ் நிலை தூக்கத்தை மது தடுக்கிறது என்ற முடிவு வருகிறது. மது ஆழ் நிலை தூக்கத்திற்கான எதிரி என்பது உறுதியாகிறது.
ஹேங் ஓவர் வருவதற்கான முக்கியமான காரணி கன்ஜீனர் என்னும் நொதி வேதிப்பொருள். இது மது நிறத்தின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகிறது. மதுவோடு சேர்ந்து தலைவலி, உடல் சோர்வு போன்ற பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறது.
இதில் இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் சாலி தரும் தகவல்கள் முக்கியமானது. மது ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது. புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதை ஆராய்சி தரவுகளோடு விளக்குகிறார்.
குடிக்காமல் இருப்பது நல்லது. அப்படி குடித்தே ஆக வேண்டுமென்றால் உணவு உண்ட பிறகு, கொறிக்கும் உணவுகளை குறைத்துக் கொண்டு, பாலிஃபீனால் அதிகமுள்ள சரக்கை தேர்ந்தெடுத்து, அதில் கன்ஜீனர் குறைவாக உள்ளதா எனப்பார்த்து மிதமாக குடிப்பது உடல் பாதிப்புகளை குறைக்கும் என்கிறது இந்த ஆவணப்படம்.
போய்யா... இதுக்கு நான் குடிக்காமலே இருந்துவிடுவேன் என்கிறீர்களா?
நல்லது!
பிப்ரவரி, 2021