சிறப்புப்பகுதி

குட் பை, மிஸ்டர் மோர்ஸ்

மனக்கணக்கு

சுகுமாரன்

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதியோடு இந்தியாவின் முதலாவது அறிவியல் தகவல் பரிமாற்றச் சாதனமான தந்திச் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. அதி நவீன தொடர்புச் சாதனங்களான கைப்பேசியும் மின் அஞ்சலும் தந்தி என்ற 150 ஆண்டுக்காலப் புராதன சமாச்சாரத்தை செலாவணியில்லாத ஒன்றாக மாற்றி விட்டன. மக்கள் தொகையின் பெரும்பான்மையினரும் நவீன உபகரணங் களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தந்தி முறையைத் தொடர்வது காலத்துக்கு ஒவ்வாதது என்றும் வரலாற்றுப் பெருமைக்குரிய அற்புதம் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பராமரிப்பது கூட வீண் செலவு என்று அரசு நினைத்ததும் தந்திக்கு விடை கொடுத்திருக் கிறது. நவீன தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை விற்பனை செய்யும்உள் நாட்டு, பன்னாட்டுக் குத்தகை நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவே தந்தி சேவை நஷ்டத்தில் இயங்குவதாக அரசு சொல்லி, குழி தோண்டிப் புதைத்து விட்டது என்றுதொழிற் சங்கங்கள் குறை கூறுகின்றன. தனியார் மயத்தை ஊக்குவிக்க பொதுத் துறை நிறுவனங்களைத் துண்டு போட்டுப் பிய்த்து விற்றுக் கொண்டிருக்கும் அரசின் செயலைக் கவனித்தால் இந்தக் குற்றச் சாட்டு பொய்யல்ல என்றும் தோன்றுகிறது. காரணம். எதுவாக இருந்தபோதும், மக்களுடன் நெருக்கமான மானுட உறவைப் பேணி வந்த தகவல் பரிமாற்ற அமைப்பு இனி இல்லை.

1836 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க ஓவியரான சாமுவேல் மோர்ஸ் , அமெரிக்க இயற்பியலாளர் ஜோசப் ஹென்றியுடனும் ஆல்பிரட் வைலுடனும் இணைந்து உருவாக்கிய எலக்டிரிகல் டெலிகிராப் கண்டு பிடிக்கப்பட்ட சொற்ப ஆண்டுகளிலேயே இந்தியாவிலும் அறிமுகமாயிற்று. 1857 இல் நடந்த சிப்பாய்க் கலகத்தை முறியடித்தது தந்திதான். கலவரம் நடக்கும் இடங்களைப் பற்றிய தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தந்தி மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டதுதான் கலவரத்தை அடக்க உதவியது. அதே தந்தி முறை பொது மக்களின் சுக துக்கங்களிலும் பங்கு பெற்றதுதான் அறிவியல் விந்தை. ஒரு தகவல் பரிமாற்றச் சாதனமாக மட்டும் தந்தி இருக்கவில்லை.  சரியாக யோசித்தால்  மோர் சின் சங்கேத மொழிதான் எல்லாருக்கும் பொதுவான மொழியாக இருந்திருக்கிறது. உலக மொழியாக இருந்திருக்கிறது. கூடவே வேகத்தின் மொழியாகவும். மொழியில் சில பிரயோகப் பங்களிப்புகளையும் தந்திச் சேவை செய்திருக்கிறது. ‘இந்தக் கடிதத்தைத் தந்திபோல பாவித்து உடனே புறப்படவும்’ போன்ற வாக்கியங்களை இனி வழக்கொழிந்த பிரயோகமாகக் கருதலாம்.

*

வாசித்துக் காட்டிய முதல் தந்தி, எனக்கே எனக்கு என்று வந்த முதல் தந்திகளின் வாசகங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வாசித்துக் காட்டிய முதல் தந்தி வாசகம்: ‘மதர் எக்ஸ்பைர்ட். ஸ்டார்ட் இமீடியட்லி’ என்று இருந்தது. பக்கத்து வீட்டு பாஸ்கரன் நாயரின் மனைவி கமலாட்சி அம்மாவுக்கு வந்த தந்தி அது.  தந்தி என்ற வார்த்தையைக்  கேட்டதும் அந்த அம்மையார் மயங்கி விழுந்து விட்டார். இத்தனைக்கும் கணவர் பாஸ்கரன் நாயர் ராணுவ அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவர் மயங்கி விழுந்து விட்ட களேபரம் காரணமாக கையெழுத்துப் போட்டு தந்தியை வாங்கும் கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. பட்டுவாடா ரசீதில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததும் தந்திச் சேவகர் இடத்தைக் காலி செய்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் கமலாட்சியம்மாள் அதை வாசிக்க ஆளைத் தேடினார். அன்று துரதிருஷ்டமான நாள்போல. வாசித்துக் காட்ட யாரும் இருக்கவில்லை.

‘நீதான் ஸ்கூலில் இங்கிலீஷ் படிக்கிறியே, நீயே என்னான்னு படிச்சுச் சொல்லு’ என்றார். அவருக்கு வந்த மயக்கம் எனக்குத் தொற்றிக் கொண்டது. நான்காம் வகுப்பு ஆங்கிலத்தால் எழுத்துக்களையும் வார்த்தைகளையும் இனம் காண முடிந்தது. ஆனால் எக்ஸ்பைர்ட் என்ற வார்த்தையின் பொருள் விளங்கவில்லை. ‘அம்மா -----.சீக்கிரம் புறப்படு’ என்று அர்த்தம் சொன்னேன். ‘அம்மாவுக்கு என்ன ஆச்சுடா?’ என்று கேட்டபோது முழிக்கத்தான் முடிந்தது. எக்ஸ்பைர் என்றால்...யோசித்தேன். மூளையைக் குடைந்தபோது பெரியவர்கள் மருந்துக் குப்பியைப் பார்த்து எக்ஸ்பைரி டேட் என்று சொல்லுவதன் அர்த்தத்தைக் கண்டுபிடித்தேன். ‘அம்மா காலாவதி யாயிட்டாங்க’ என்றேன்.  கமலாட்சி அம்மாள் அந்த இடுக்கணிலும் நகுன்றார். ‘ஔராதடா, அம்மா எப்படிக் காலாவதியாகும்?’ என்றார். நல்ல நேரத்துக்கு அந்த வழியாக வந்த பரமேஸ்வரி டீச்சர் குறுக்கிட்டு என் புலமையைக் காப்பாற்றினார். தந்தியை வாங்கி வாசிக்கத் தொடங்கியதும் முகத்தைச் சோகமாக்கிக் கொண்டார். கமலாட்சி அம்மாவிடம். ‘உங்க அம்மா காலமாயிட்டாங்க. உங்களை உடனே புறப்படச் சொல்லி உங்க தம்பிதான் தந்தியடிச்சிருக்கு’ என்றார். மருந்து காலாவதியாகும். மனிதர்கள் காலமாவார்கள் என்ற ஞானத்தை உருப்போட்டுக் கொண்டு நின்றிருந்தேன்.

எனக்கு வந்த தந்த முதல் தந்தி உத்தியோக நிமித்தமானது. ‘ரெஃப் யுவர் அப்ளிகேஷன். அட்டெண்ட் இன்டர்வியூ’ என்று இடம் தேதி முகவரி போட்ட தந்தி. ஊதா நிற டெலிபிரிண்டர் எழுத்துக் கள் பதிந்த காகித நாடா ஒட்டப்பட்ட வெள்ளை நிற உறையைக் கையில் வைத்துக் கொண்டு சென்னை சென்டிரல் ரயில் முன்னால் பஸ் ஏறி கண்டக்டரிடம் முகவரியைக் காட்டி விசாரித்தேன். டிக்கெட்டைக் கிழித்துக் கையில் திணித்து விட்டு ‘மவுண்ட் ரோடுதான எடம் வந்ததும் சொல்றேன்’ என்றார். பஸ் நகர்ந்து ஓடியது. சாந்தி தியேட்டரைத் தாண்டி எல்ஐசி யை நெருங்கியதும் கண்டக்டர் ‘தோ, ப்பா மவுன்றோடு எறங்கிக்க’ என்றார். இறங்கினேன். ஆனால் நான் போக வேண்டிய நிறுவனம் அங்கில்லை.

சைக்கிளோட்டி ஒருவரிடம் தந்தியைக் காட்டி விசாரித்தேன். ‘அய்ய, அது இங்கேல்ல. நீ இன்னாத்துக்கு இங்கெ எறங்குன?’ என்று கேள்வி கேட்டார். ‘மவுண்ட் ரோடு இதான, அதான் எறங்கிட்டேன்’ என்றேன். ‘இங்கேர்ந்து தாமஸ் மவுண்ட் வரிக்கும் மவுண்ட் ரோடுதான். அதான் தந்திலே ஷுகுரா அடிச்சிருக்கே, நியர் சபையர் தேட்டர்னு. நீ இன்னா பண்ற அடுத்ததா வர்ற பஸ்ல ஏறி சபையர் ஸ்டாப்புன்னு டிக்கிட்டு வாங்கி எறங்கு. எறங்குன எடத்தாண்ட ஒரு சப்வே இருக்கு அதுள்ள பூந்து ஏறுனா நீ கேட்ட எடம்’ என்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த வந்த பஸ்ஸில் ஏறி சஃபையர் தியேட்டர் நிறுத்ததில் இறங்கி சுரங்கப் பாதை நுழைவை நெருங்கியபோது பின்னாலிருந்து யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். அதே சைக்கிளோட்டி. வேகமாக வண்டியை மிதித்து வந்ததில் வியர்வையில் ஊறியிருந்தார். ‘இன்னா ஆளுப்பா, ஒன்னோட தந்திய என் கைலயே உட்டுனு வந்துட்டே’ என்று அதை நீட்டினார். நன்றி சொல்லி வாங்கி வைத்துக் கொண்டேன். ஊரில் எல்லாரும் பயமுறுத்தியதைபோல சென்னை ஏமாற்றுக்காரர்களின் நகரமல்ல; மனிதர்களின் பட்டணம்தான் என்பதற்கு அந்தச் சம்பவம் சாட்சியாக இருந்தது. முதல் முத்தத்தை  ஞாபகத்தில் பத்திரமாக வைத்திருப்பதுபோல முதல் தந்தியை வெகுகாலம் ஏதோ ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கிடையில் பாதுகாத்து வைத்திருந்தேன். என்றோ காணாமல் போன அந்தப் புத்தகத்துடன் அந்தத் தந்தியும் காணாமற் போனது.

*

தந்திக்கு இலக்கியத்தில் இடம் இருக்கிறது. ஆல்பெர் காம்யூவின் பிரபலமான நாவல்  தந்தி வாசகத்துடன் தான் தொடங்குகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை எழுதப்பட்ட உள் நாட்டு வெளிநாட்டு இலக்கியங்களில் தந்தி இடம் பெற்றிருக்கிறது. நிகழ்காலத் தன்மையுள்ள ஒரு அடையாளமாக அவற்றில் இடம் பெற்றிருக்கிறது. இனியும் தந்தி இலக்கியத்தில் இடம் பெறக் கூடும். ஆனால் இறந்த காலத்தின் சின்னமாக.

தமிழில் தந்தியை இலக்கியப் பரிமாற்றச் சாதனமாக மாற்றியவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி என்று எண்ணுகிறேன். தான் படித்த நல்லபுத்தகங்களின் ஆசிரியருக்கு உடனடியாக மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கத் தந்தியைப் பயன்படுத்தினார். சில சமயம் தனது படைப்புகளைப் பற்றி பத்திரிகையாசிரியர்களிடமோ நண்பர்களிடமோ கருத்தைப் பரிமாறிக் கொள்ளவும் தந்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது பாதிப்பில் ஓரிரு முறை தந்தியை இலக்கியத் தொடர்பு சாதனமாக உபயோகிக்கப் பார்த்திருக்கிறேன்.

முந்நூறு பிரதிகள் அச்சடித்து முப்பது பேர் மட்டும் படிக்கும் சிறு பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரையை அனுப்பி விட்டு ‘கட்டுரை ஆறு பக்கம். பதின் மூன்று பத்திகள். பத்தியொன்றுக்கு எட்டு வாக்கியங்கள். மொத்தம் இருநூற்று முப்பது வார்த்தைகள்’ என்று தந்தி அடித்தது நினைவிருக்கிறது. அந்த செயற்கரிய செயல் எவ்வளவு அசட்டுத்தனமானது என்று இப்போது யோசிக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

தந்தி என்னுடைய பிம்பத்தை மேம்படுத்தியதும் உண்டு. திருமணத்தின் போது பெண் வீட்டாருக்கு நான் எழுதுகிறவன் என்றோ இலக்கிய ஆர்வமுடையவன் என்றோ தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்க நியாயமுமில்லை. ஏதோ நடுத்தரக் குடும்பத்து சராசரிப் பையன் என்றுதான் அபிப்பிராயமிருந்திருக்கிறது. திருமணத்துக்கு வந்த இரண்டு வாழ்த்துத் தந்திகள்தாம் அந்த எண்ணத்தை மாற்றின. ஒன்று சுந்தர ராமசாமி அனுப்பியது. மற்றது, அன்று ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நண்பர் துரை அனுப்பியது. சுந்தரராமசாமியை அவர்களுத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நக்கீரன் பத்திரிகையைத் தெரிந்திருந்தது. ஒரு பத்திரிகையின் ஆசிரியர் வாழ்த்துத் தந்தி அனுப்புவதாக இருந்தால் மாப்பிள்ளை கொஞ்சம் முறுக்கானவர்தான் என்று நினைத்திருப்பார்கள்போல. மற்ற வாழ்த்துத் தந்திகளையெல்லாம் காகிதத் துண்டுகளாக நினைத்து நீட்டியவர்கள் இந்தத் தந்தியை மட்டும் பவ்வியமாகச் சமர்ப்பித்தார்கள். அந்த நொடியில் தந்தியில் இருந்த ரெடிமேட் வாசகம் உலகத்திலேயே மிகச் சிறந்த கவிதையின் வரியாகத் தோன்றியது.

*

என் நண்பர் ஜோசப் தயாளன் ஓவியர் முப்பத்து வயதுக்கு மேல் சென்னை கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயின்றவர், சிற்றிதழ்களில் ஓவியம் வரைந்திருக்கிறார். இலக்கிய ஆர்வலர் - புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் சக்கரியாவின் கதை ஒன்றை மொழிபெயர்த்திருக்கிறார்; ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்; இரண்டு நூல் மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்; ‘சதுரம்’ என்ற பெயரில் ஒரு சிறு பத்திரிகையையும் நடத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் அவருக்குத் தோன்றாத் துணை தந்தியின் தந்தையான சாமுவேல்  மோர்ஸ்.  ஏனெனில் ஜோ ஒரு தந்தித் துறை ஊழியர். அவர் சொன்ன தந்திக் கதைகளில் ஒன்று அந்த்ச் சேவையின் மனிதாபிமானப் பக்கத்தைக் காட்டுகிறது.

‘முந்தியெல்லாம் தந்தி சேவை இருபத்து நாலு மணி நேரமும் இருந்தது. தொண்ணூறுகளில் அரசின் சீர்திருத்த நடவடிக் கைப்படி காலை ஆறு முதல் இரவு ஒன்பது மணிவரையாகச் சுருக்கப்பட்டது. அந்த நாளில் இரவு எட்டே முக்காலுக்கு ஒரு தந்தி வந்தது. ஒருவருடைய தாயார் மறைந்து போன சேதியைச் சொல்லும் தந்தி. எட்டே முக்காலுக்கே கடைசித் தந்தியுடன் சேவகர் கிளம்பிப் போய்விட்டார். இந்தத் தந்தியை மறுநாள் தான் பட்டுவாடா செய்ய முடியும். அதுவும் அலுவலகம் திறந்து செயல்பட ஆரம்பித்த பின்பு தந்தியைக் கொண்டு சேர்க்க எப்படியும் எட்டு மணி ஆகி விடும். மரணச் செய்தி என்பதனால் அப்போதே தெரிவிப்பது நல்லது என்று பட்டது. தந்தி ஊழியரான நான் என் இடத்தைவிட்டு நகரக் கூடாது. தந்தி அரசாங்கச் சொத்து என்பதால் கையோடு எடுத்துச் செல்லவும் முடியாது. யோசித்துப் பார்த்து விட்டு அந்தத் தந்தி வாசகங்களையும் எங்கிருந்து வந்தது யார் அனுப்பியது போன்ற விவரங்களியும் ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு அலுவலகம் முடிந்த பின்பு சக ஊழியருடன் அந்த இரவில் அந்த முகவரியைத் தேடிப் போனேன். முகவரிதாரரிடம் விவரத்தைச் சொன்னேன். முதலில் அவர் நம்பவில்லை. விரிவாக எடுத்துச் சொன்னதும் உடைந்து போய் உட்கார்ந்து விட்டார். கொஞ்சம் கழித்து என் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘நான் நாளைக்கு வெளி நாடு போகவிருந்தவன். விடியற்காலையில் எனக்கு விமானம். நீங்கள் மட்டும் இப்போது இந்தத் தகவலைக் கொண்டு வந்து சேர்க்காமலிருந்தால் என் அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பே கிடைக் காமல் போயிருக்கும்’ என்றார்.

சம்பவத்தை ஜோ சொல்லி முடித்தபோது பார்த்தேயிராத அந்த அம்மாவும் மகனும் மனதுக்குள் தெரிந்தார்கள்.

*

கடவுளின் சார்பாக, அதுவும் பெண் கடவுளின் சார்பாக அனுப்பப்பட்ட தந்தியைப் பலமுறை பெறும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது. தொலைக்காட்சி செய்தி ஆசிரியனாக நான் கையெழுத்துப் போட்டு வாங்கிய தந்திகள்தாம் வாழ்நாளில் இதுவரை எனக்குக் கிடைத்தவற்றில் அதிக எண்ணிக்கை கொண்டவை.  ஆலப்புழை மாவட்டம் செங்கன்னூர் பகவதி ஆலயத்திலிருந்து அவ்வப்போது ஒரு தந்தி வரும். ‘செங்கன்னூர் பகவதி திருப்பூத்து ஆறாட்டாயி’ என்று மங்கலீஷில் (மலையாளம் + இங்கிலீஷ்) தந்தி வாசகம் இருக்கும். செங்கன்னூர் மகாதேவ ஆலயத்தில் உடனுறையும் பகவதியின்  மாத விலக்கு நீராடலைக் குறிக்கும் தந்தி அது. அந்தத் தந்தி வரும்போது ஒரு நாத்திகக் கேலியும் ஒரு ஆத்திகப் பரவசமும் ஒரே சமயத்தில் தோன்றும்.

கற்சிலைக்குக்கு மாதவிலக்கு வருமா? என்ற பகுத்தறிவு எழுப்பும் கேலி. அதை மீறி தீட்டு என்று விலக்கப்படும் ஒரு இயற்கை உபாதை புனிதமாகக் கருதப்படுவதால் எழும் பரவசம். அந்தத் தந்தி வாசகத்தைப் படிக்கும்போதெல்லாம் செங்கன்னூர் பகவதியில் முகத்தில் மானுட வலியின்  சமிக்ஞைகள் புரள்வதாகக் கற்பனை செய்வதைத் தவிர்க்க முடிந்ததில்லை. மோர்ஸ் சங்கேதக் குறியீடுகள் வார்த்தைகளாக மாறி வந்த அந்தத் தந்திகள் பின்னர் மின் அஞ்சல் தகவலாக மாறியபோது அந்தப் பரவசம் காணாமல் போயிற்று.

*

எனக்கு வந்த கடைசித் தந்தி நானாக அடிக்கச் சொல்லிப் பெற்றுக் கொண்டதுதான். கடந்த ஜூலையுடன் தந்திச் சேவை காலாவதியாகி விடும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஞாபகார்த்தமாகப் பத்திரப்படுத்திக் கொள்ள அடிக்கச் சொன்ன தந்தி. நண்பர் ஜோ அனுப்பிய தந்தி ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அளித்தது. அடிக்கப்பட்டு நாலு நாள் தாமதமாகக் கைக்குக் கிடைத்தது. தந்தி என்றால் வேகம் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கியது. தந்தியைப் பற்றி இவ்வளவு அந்தரங்க நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போதும் ஒரு விஷயம் இன்னும் மனதுக்கு உற்சாகமளிக்கிறது. இவ்வளவு காலத்தில் நூற்றுக்கு உட்பட்ட தந்திகளையாவது வாசித்திருப்பேன். அதில் பாதி அளவாவது எனக்கும் வந்திருக்கும். அதில் மரணச் சேதியைத் தெரிவித்த தந்தி ஒன்று கூட இல்லை.

அதற்காகத் ‘தாங்க் யூ, மிஸ்டர். மோர்ஸ்’.

செப்டம்பர், 2013