சிறப்புப்பகுதி

குடிசை எழுப்பும் உளியின் ஓசை

முத்துமாறன்

திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் கீழ ஆம்பூரில் இறங்கி நடந்தால் வந்துவிடுகிறது பாபநாசம் குடிசை அறக்கட்டளை இயங்கும் ஆசிரமம். அழகான மரங்கள் அடர்ந்த அறுபது ஏக்கர் நிலப்பரப்பு. மயில்கள் இரண்டு நம்மைக் கடந்து செல்கின்றன. குருவிகள் ஏதோ பேசிக்கொண்டிருக்க, மரம் இழைக்கப்படும் சப்தம் தூரத்தில் கேட்கிறது. அது பாபநாசம் குடிசை அறக்கட்டளையின் நுண்கலைப் பயிற்சி மையம். வெண்ணிற வேட்டி சட்டையில் இளைஞர்கள் மரவேலைகளைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்.

1990-ல் பாபநாசம் சுவாமிகள் என்று அழைப்பட்ட துறவி ஒருவரால் உருவாக்கப்பட்ட மையம் இது. இங்கு எட்டாவது வரை படித்துள்ள இளம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மரவேலைப்பாடுகள் செய்யக் கற்றுத் தரப்படுகிறது.  தங்குமிடம், உணவு இலவசம். கட்டணம் ஏதுமில்லை. ஈராண்டு மரவேலைப்பாடு படிப்பு முடிந்ததும் அவர்கள் அங்கேயே தொடர்ந்து சம்பளத்துக்கு வேலை செய்யலாம். அல்லது வெளியே தனியாக மரவேலைகளைச் செய்து சம்பாதிக்கலாம்.

டார்லஸ் இங்குள்ள ஓர் ஆசிரியர். ‘’நானும் இங்கேதான் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இங்கேயே ஆசிரியராக வந்துவிட்டேன்” என்கிறார். ‘’முதலில் ஓரிலை, ஈரிலை, மூவிலை என வடிவமைப்புப் பயிற்சி கற்றுத்தருகிறோம். அவற்றை ஓவியமாக வரையும் பயிற்சி உண்டு. பின்னர் மரச்சட்டங்களை வழவழப்பாகத் தேய்க்கும் பயிற்சி, பின்னர் தச்சுவேலை என்று பாடப்பிரிவுகள் உள்ளன.  பயிற்சி முடியும் தருவாயில் மாணவர்கள் சொந்தமாகவே டிசைன்களை உருவாக்கி மரவேலைப்பாடுகளைச் செய்யும் திறமை பெற்றுவிடுவார்கள்” என்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

நமது பாரம்பரியமான கலைகளை இயற்கையுடன் இணைந்த பார்வையுடன் புதுப்பித்துச் செய்வதுதான் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம். இதனுடன் பழங்கால தச்சுக் கருவிகளையும் மீட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். பழங்கால குருகுல முறையில் மாணவர்கள் இங்கேயே தங்கி இக்கலைகளைப் பயில்கிறார்கள்.

இன்று தானியங்கிக் கருவிகள் மூலம் பல வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் ஒரு கலைஞன் தன் கையால் செய்யும் பொருட்களுக்கென்று தனி அழகும் மதிப்பும் இருக்கிறது. அதுபோன்ற பல கலை அம்சம் கொண்ட பொருட்களும் இந்த மையத்தில் உருவாக்கப்படுகின்றன. நினைத்துப் பார்க்க முடியாத நுணுக்கமான தாமரை இதழ், பப்பாளிப் பூவின் இதழ் போன்ற பல இயற்கையான விஷயங்களில் இருந்து பெறப்பட்ட டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும் நாற்காலிகள், கதவுகள் ஆகியவை அங்கு செய்யப்படுவதைப் பார்த்தோம். வேலைப்பாடுகளுடன் கூடிய கற்தூண்களும் செய்து கிடத்தப் பட்டிருக்கின்றன. உலோகச் சிற்பங்கள், மெட்டல் ஷீட் கலைப்பொருட்கள் போன்றவையும் இங்கு செய்யப்படுகின்றன.

இக்குடிசை அறக்கட்டளையை நிறுவியவரான பாபநாசம் சுவாமிகள் மிகுந்த கலை ஆர்வம் உடையவர். அவர் மறைந்துவிட்டார். அவரது மூத்த சீடரான குமரன் சுவாமி இப்போது இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். இவரும் ஒரு முக்கியமான சிற்ப, ஓவியக்கலை வல்லுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் முன்பாக பழங்கால கலை நுட்பங்கள் அடங்கிய நூல்களை ஆராய்ந்தோம். அதை அறிந்த கலைஞர்களையும் சந்தித்து விவாதித்தோம். அதன் பின்னரே பாடத்திட்டம் இறுதிசெய்யப்பட்டது. அத்துடன் இங்கே ஓர் ஆர்க்கிடெக்சர் கல்லூரியும் கொண்டுவர எண்ணம் இருக்கிறது” என்கிறார் குமரன் சுவாமி “பொதுவாக தச்சுக்கலையைப் பின்னணியாகக் கொண்ட மாணவர்களுக்கு இந்த மரவேலைப்பாட்டுப் பயிற்சி மேற்கொள்வது எளிது. சேர விரும்பும் மாணவர்களை நுழைவுத்தேர்வு வைத்து அவர்களின் திறமையைப் பரிசோதித்த பின்னரே எடுத்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் சிறப்பான நிலைகளில் உள்ளனர்.” என்கிறார் சுவாமி.

ஒரு மாட்டுப்பண்ணை, பெரிய குளம், வயல்கள், பனை, தென்னை, நெல்லி, மா போன்ற மரங்கள் என்று தற்சார்புடையதாக இந்த ஆசிரமம் உள்ளது. மாணவர்களைத் தவிர்த்து இங்கு பல கலைஞர்களும் தினமும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். அதன் அழகான கலைப்பொருட்கள் உலகின் பல இடங்களுக்கும் வீடுகளுக்கும் ஆண்டுதோறும் சென்று கொண்டே இருக்கின்றன.

டிசம்பர், 2013