சிறப்புப்பகுதி

என்னோட வலி இருந்தாலும் உம்மோட வாலி இருப்பான்!

அஞ்சலி

கவிஞர் நெல்லை ஜெயந்தா

கோடிக்கணக்கான சினிமா, இலக்கிய ரசிகர்களின் உள்ளங்களைத் திருடிய “அழகர் மலைக் கள்ளன்” இவ்வளவு சீக்கிரம் எமனிடம் அகப்படுவான் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

 வாலி!இந்த ஈரெழுத்துக் கவிஞனுக்குத்தான் எவ்வளவு ஈர்ப்பு. அவருடைய வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமெனில் சர்வமும் கற்ற அவர் கர்வத்தை மட்டும் கல்லாததே காரணம்.

கையில் கிடைக்கும் பத்திரிகை எதுவாயினும் சரி; வரி விடாமல் வாசித்துவிடுவதுதான் அவர் வழக்கம். ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டதுதான் வாலி என்கிற ஞானிக்கு அமைந்த ஏணி. நான் அவரிடம் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததெல்லாம் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள்தான். அதற்கு முன்பு ஒரு நாள் கவிஞர் பழனி பாரதியுடன் அவர் வீட்டுக்குச் சென்று வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். பழனி பாரதியிடன் கேட்டேன்.

“வாலி எப்படிண்ணே புதுப்புது வார்த்தைகளைப் பாட்டில் போட்டு அசத்துறாரு? நிறைய படிப்பாரோ?”

“ஆமா... நிறைய வாசிப்பாரு.. ”என்று பழனிபாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாடியில் இருந்து இறங்கி வரவேற்பறைக்குள் வருகிறார் வாலி. உட்கார்ந்ததும் பழனிபாரதியிடம்,“ ஜெயந்தா தினந்தந்தியில உலகம் பிறந்தது உனக்காகன்னு ஒரு தொடர் எழுதுறாரய்யா! அதுல வாரா வாரம் சின்ன இசைப்படகு மாதிரி ஒரு கவித எழுதுராரு பிரமாதம்யா..” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “போனவாரம் எழுதியிருந்தீரே.. உனை நீ தாழ்வாய்ப் பார்ப்பதா- அட உன்னிடம் நீ தோற்பதா? ன்னு... உன்னிடம் நீயே தோற்பதாங்கறது அருமையான வார்த்தை” என்றதும் மெய் சிலிர்த்தது எனக்கு. திரும்பி வரும்போது பழனிபாரதி சொன்னது ஞாபகம் இருக்கிறது இன்னும்.

“ஜெயந்தா உங்க தொடரை ரெண்டு வாரம் மட்டும்தான் நான் படிச்சேன். வாலி வாரா வாரம் படிக்கிறாரு... இப்ப புரியுதா.. அவர் நிறைய படிக்கிறாருன்னு” என்றார். அதுதான் வாலி.

வாலியின் மாபெரும் வெற்றிக்கு இன்னொரு காரணம் எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்தி வைக்காமல் உழைத்ததுதான். செம்மொழி மாநாட்டில் வாலியின் தலைமையில் கவியரங்கம் என்று முடிவான இரண்டு மூன்று நாட்களுக்குள் உடனே தலைமைக் கவிதையைத் தயார் செய்து என்னையும் பழனிபாரதியையும் அழைத்து வாசித்துக்காட்டினார். கவியரங்கில் பாட இருந்த நாங்களோ ஒரு வரி கூட எழுதாமல் அதற்குள் என்ன அவசரம் என்று நினைத்திருந்தோம். அதுதான் வாலி.

கண்ணதாசன் பாடலைச் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதுவார். ஆனால் வாலிக்கு தன் கைப்பட தானே எழுதவேண்டும். எந்தவொரு விஷயமானாலும் அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புவார். திடீரென்று ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். “ஆமாய்யா.. புதிய ஏற்பாட்டுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் என்னய்யா வித்தியாசம்?”

“அய்யா.. இப்பவே என்னுடைய கிறிஸ்துவ நண்பர் ஒருத்தரை உங்களிடம் பேசச் சொல்றேன்” என்று பேசச் செய்தேன்.

பைபிள் பற்றி நீண்ட நேரம் உரையாடினாராம் அவரிடம்.

எங்க மதத்தில் இருக்கும் நண்பர்கள் கூட இவ்வளவு தெளிவா சந்தேகம் கேட்டதில்லை. அவ்வளவு ஆழமா கேட்கிறாரு.. என்று வியந்தார் அந்த நண்பர். அதுதான் வாலி.

என் குடும்ப விழா ஒன்றுக்கு கவிஞரை அழைத்ததற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு முதுகில் அடிபட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இது நடந்தது சென்ற ஆண்டு ஆரம்பத்தில்.

எல்லா நிகழ்ச்சிகளையும் இலங்கை கம்பன் கழகக் கவியரங்கம் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி நூல் வெளியீடு என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டார். ஆனால் வலியைப் பொருத்துக் கொண்டு எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

புறப்படும்போது சொன்னார். “உம்மரு நிகழ்ச்சிக்கு நான் வரப்போறேன்னு சொந்தக்காரங்க கிட்டல்லாம் சொல்லிருப்பீரு. நா வரலேன்னா வாலி எனக்கு நண்பர் நண்பர்ன்னு இவனா சொல்லிட்டு திரியறான் உம்மரப் பத்தி திருநெல்வேலில போய் சொல்லுவாய்ங்க. வேலில இப்படிப் பேசக்கூடாதுன்னுதான் வாலி வந்துட்டேன் தெரியுதா... என்னோட வலி இருந்தாலும் உம்மோட வாலி இருப்பான்” என்றார். அதுதான் வாலி.

வலி இருக்கிறது இன்று எனக்கு; காரணம் வாலி இல்லையே நமக்கு!

ஆகஸ்ட், 2013.