சிறப்புப்பகுதி

இந்த வார்த்தையை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்!

அந்திமழை இளங்கோவன்

ஆண்களைவிட பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள் என்ற நம்பிக்கை, நீண்ட காலமாக உள்ளது. The female Brain என்ற புத்தகத்தை எழுதிய லோவான் ப்ரிசெண்டைன் என்பவர், ஒரு நாளில் பெண்கள் 20,000 வார்த்தைகள் பேசுகிறார்கள் என்றும் ஆண்கள் 7000 வார்த்தைகள் தான் பேசுகிறார்கள் எனவும் 2006-இல் கொளுத்திப்போட்டார்.

இந்தத் தகவல் எவ்வளவு சரியானது? என்று சந்தேகப்பட்ட அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மனோவியலாளர் மத்தியாஸ் மெஹல் முன்னிலையில் ஒரு குழு ஆய்வு செய்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உடலில் தானியங்கி ஒலிப்பதிவுக் கருவி பொருத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள்.

இவர்களில் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 16000 த்துக்குக் கொஞ்சம் கூடுதலான வார்த்தைகளைப் பேசுவதாகவும் ஆண்கள் 16,000த்துக்குச் சற்றுக் குறைவான வார்த்தைகளைப் பேசுவதாகவும் முடிவுகள் வந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் மூவர் ஒரு நாளில் அதிகப்படியாக 47,000 வார்த்தைகளைப் பேசியதாகப் பதிவாகியது. இப்படி முதலிடம் பெற்ற மூவரும் ஆண்களே.

ஓலைப்பாயில் நாய் மோளுவது போல் என அதிகமாகப் பேசுகிறவர்களைக் குறிக்கும் சொல்லாடல் தென் தமிழகத்தில் உண்டு.

மாதம் முழுவதும் பெரிய குழு ஒன்றின் உழைப்பில் வெளிவரும் அந்திமழை மாத இதழில் தோராயமாக 14,750 இலிருந்து 14,900 சொற்கள்தான் உள்ளன. இது, மேற்சொன்ன ஆய்வில் ஒரு மனிதன் ஒரு நாளில் பேசிய சொற்களை விடக் குறைவு.

‘தெருவுக்குச் சென்று அங்கே கடந்து செல்கிறவர்களை கவனியுங்கள். என்ன நடக்கிறது என கவனமாகக் கவனியுங்கள். அவர்களின் சொற்களைச் செவிமெடுக்காதீர்கள். அச்சொற்கள் ஏமாற்றுபவையாக, தந்திரமானவையாக மாறிவிட்டன. சொற்களின் அர்த்தத்தை கவனியுங்கள்!'

- புத்தரின் இந்த வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. இன்றைக்கான வார்த்தைகள் போல் புதிதாக உள்ளன.

 நாம் பேசும் வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளும் முக்கியமானவை. எல்லோரது எண்ணங்களும் வார்த்தைகளால் ஆனவையே. தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையான வார்த்தைகள், எண்ணங்களாக மாறும்; உங்கள் செயலில் மாறுதல் தென்படும்.

சொல்வன்மை பற்றி வள்ளுவர் எழுதிய அதிகாரத்தில்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது

(குறள் 647)

என்கிறார். சொல்வன்மையை வெற்றிக்கு முக்கியமானதாக முன்னிலைப்படுத்துகிறார்.

சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

(குறள் 645)

இந்தக் குறளுக்கு ‘தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக' என்று, சாலமன் பாப்பையா விளக்கம் தருகிறார்.

மனிதர்களில் பலர் பல நேரங்களில் வெறும் சொற்களைக் கட்டி அழுது வீணாய்ப் போகிறோம்.

செயல்கள் மூலம் ஒருவர் மற்றொருவருக்கு நன்மை செய்திருந்தாலும் அசாதாரணமான ஒரு சூழலில் வந்து விழும் சொல்லைப் பிடித்துக் கொண்டு உறவுகளை, நட்புகளை இழக்கிறோம். ‘‘இந்த வார்த்தையை ஜென்மத்திற்கும் மறக்கமாட்டேன்'' என்று அநேகர் ஏதோ ஒரு வார்த்தையைக் கடந்து போக மறுக்கிறோம்!

கணவன் மனைவி / காதலன் காதலி உறவில் வில்லனாக வந்து நிற்பது வார்த்தைகள் தான். வார்த்தை வில்லனை எப்படி வெல்வது?

‘சொற்கள் தேவைக்கு அதிகமாக வெளிவரும்போது பேச்சை நிறுத்த இயற்கை உருவாக்கி இருக்கும் அருமையான தந்திரம், முத்தம் தருவது' என்று இயக்குநர் இன்கிரிட் பெர்க்மேன் அறிவுரை கூறி இருக்கிறார். அதை முயற்சி செய்யலாம்.

ஆங்கிலத்தில் மிகவும் பயங்கரமான வார்த்தைகள் எது?

‘‘The Most terrifying words in the English Language are: I'am from the government and I'am from the Government and I'am here to help" என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் சொற்களைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்.

‘இன்று அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் நம்முன் வந்து விழும் சொற்கள் கற்பனை, பொய், திசைதிருப்பும் நோக்கம் மற்றும் உண்மை ஆகியவற்றின் கலவையாக இருக்கிறதே.. என்ன செய்வது?' என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘‘ஒரு செய்தியை மாற்று சார்புள்ள இரண்டுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் எப்படிப் பதிவு செய்கின்றன என்று கவனிக்கும் போது உண்மையை இனங்காண முடியும்'' என்பது பதிலானது.

தொடர்ந்து ஒரே சார்புடைய ஊடகத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர் மூளைசலவைச் செய்யப்பட்டவராகவோ, கற்பனை கலந்த உண்மையை நம்புவராகவோ மாறிப் போக வாய்ப்புள்ளது.

ஒரு அரசியல்வாதியோ / ஆட்சியாளரோ நல்லவரா கெட்டவரா என்று எப்படி அடையாளம் காண்பது?

‘செயல்களே பேசுகையில் வாய்ச்சொற்கள் அர்த்தம் இழக்கின்றன'  என்ற பிரெஞ்சு தத்துவவியலாளர் பியரி ஜோசப் ப்ரௌதானின் வார்த்தைகள் பின்பற்ற தக்கன.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சொற்களால் திசை திருப்புவார்கள்; பொய்யை உண்மை என்று நம்ப வைப்பார்கள். ஆனால் அவர்களது செயலைப் பார்த்தால் சாயம் வெளுத்துவிடும். நண்பர்கள், உறவுகள், அரசியல்வாதிகள் போன்ற எல்லோருடைய வார்த்தைகளையும் அவர்களது செயல்களுடன் பொருத்திப் பாருங்கள். சொற்கள் ஏமாற்றலாம். ஆனால் செயல்கள் உண்மையின் உரைகல்.

உங்கள் சொற்கள் மற்றவரை குணப்படுத்தலாம் அல்லது காயப்படுத்தலாம்; ஊக்குவிக்கலாம் அல்லது வீணாக்கலாம்; வழிகாட்டலாம் அல்லது திசை திருப்பலாம்.

சொற்கள் பலம் பொருந்தியவை. ஒருவருடைய வெற்றி அவர் உள்ளும் புறமும் எப்படிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொருத்தது.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

செப்டம்பர், 2021 அந்திமழை இதழ்