சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை ஆரியர்கள் எனப்படுவோர் மத்திய ஆசியாவில் இருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று மரபியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறியது. ஆரியர்கள் வருகை என்பது இந்திய வரலாற்றில் மிகவும் விவாதத் துக்கும் சர்ச்சைக்கும் உரிய விஷயமாகும். அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தின் வீழ்ச்சி ஆரம்பித்த சமயமே ஆரியர் வருகை நடந்த சமயம் என்று அக்கட்டுரை குறிப்பிட்டு, மரபியல் ஆய்வுகளை முன்வைத்தது. இது தொடர்பாகப் புகழ்பெற்ற மூத்த மரபியல் துறை அறிஞரும் இந்தியாவில் மரபணுக்களை ஆய்வுக்குட் படுத்தி வருபவருமாகிய டாக்டர் பிச்சப்பனிடம் பேசினோம்.
“மனிதகுலம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அங்கிருந்து அவர்கள் வெளியேறி இந்தியாவுக்குள் அவர்களின் முதல்வருகை நிகழ்ந்தது சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பாக. குரங்குக் கூட்டங்களைப் போல அவர்கள் வந்தார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியக் கிழக்கு வழியாக கடற்கரை ஓரமாகவே இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். வந்தவர்கள் தென்னிந்தியாவிற்குள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தங்கினர். அவர்களின் மரபுக்கூறு இன்னமும் பிரமலைக்கள்ளர்கள் போன்ற தென்னிந்திய மக்களிடம் காணப்படுகிறது. விருமாண்டி என்கிற ஒருவரிடம் அதைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தோம். அது பழைய செய்தி. இந்தியாவுக்கு வந்தவர்கள் கடற்கரை வழியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா என்று சென்றடைந்தனர். அடுத்து ஒரு இடப்பெயர்வு ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்பட்டது. அது எகிப்து வழியாக இந்தியா நோக்கி வந்தது. மத்தியக் கிழக்கு ஆசியப்பகுதி அவ்வளவு வாழத்தகுதி இல்லாத இடம் என்பதால் அங்கிருந்து நகர்ந்தார்கள். இங்கு நடந்த ஒரு மரபணு மாறுதலால் உருவான மரபணு அடையாளம் எப் ஸ்டார் (F) என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்துதான் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் கிளைத்துப் பெருகினார்கள். இந்தியாவில் எஃப் ஸ்டார் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. அதன் பின்னர் மத்திய ஆசியாவிலிருந்தும் கிழக்கு ஆசியாவிலிருந்தும் மனிதர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். ஒரிசாவில் உள்ள முண்டா பழங்குடிகளை ஆராய்ந்து, அவர்களின் ஆண்களின் மரபணுவின் மூலம் அவர்களின் முன்னோர்கள் கிழக்கே லாவோஸில் இருந்து வந்தவர்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறோம்.
ஆப்பிரிக்காவை ஒரு மரத்தின் அடித்தூர் பாகம் என்று வைத்துக்கொண்டால் அதிலிருந்து கிளைத்து எழுந்த கிளைகளாக நாம் உலகிலுள்ள மற்ற மக்கள் தொகையினரைக் கூறலாம். பல்வேறு கிளைகள். உலகில் அந்த மரத்தின் முதல்கிளையினர்
(விருமாண்டி மரபணு) 5 சதவீதம் தான் இப்போது இருக்கிறார்கள்.
அடுத்த கிளை எஃப் ஸ்டார். அதிலிருந்து பிரிந்து ஹெச் என்கிற ஆண் மரபணுக்கு குழு வம்சா வளிகள் உருவாயின. அவர்களிருந்து ஹெச்1ஓ எனப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த சமயத்தில் உருவானது எல்1 என்ற மரபணுக்குழுவின் வம்சா வளியினர். 25000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கிளை உருவாகி இருக்க வேண்டும். இவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர். அவர்களே திராவிட மொழிக் குடும்பத்தினர், பழந்தமிழர்கள்.
ஒரு செடியின் விதை அதன் அடியில் விழுந்தால் நன்றாக முளைத்துச் செழித்துப் பூக்கள் தராது. சற்று விலகி விழுந்தால் நன்றாக முளைவிடும். மரபியலிலும் அப்படியே. ஒரு மரபணு மாற்றம் நிகழ்ந்தபின் அந்த மாற்றத்தைக் கொண்டிருக்கும் குழுக்கள் சற்றுத்தள்ளி இடப்பெயர்வு மேற்கொண்டு, தங்களுக்கு உகந்த இடமாக அது இருப்பின் செழித்து வளர்வர். தென்னிந்தியர்களையும், வடஇந்தியர்களையும் அப்படி வளர்ந்த குழுவாகச் சொல்லலாம். உலகத்தில் இருக்கும் எல்லாக் குழுக்களும் இது போன்றதே.
ஆரம்பத்தில் பெண்ணிடம் இருந்து மகளுக்கு வந்துசேரும் ட்tஈNஅ வைத்து ஆய்வுகள் நடந்தன. பின்னர் ஆணின் ஒய் குரோமோசோமை வைத்து நடத்திய ஆய்வுகள் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளன. ஆண் மையம் கொண்டதாக மனித சமூகம் மாறிய பின்னர் ஆண்களே பெரிதும் இடம் பெயர்ந்தனர். எனவே அவர்களின் வம்சாவளியை ஆராய ஒய் குரோமோசோமே சிறந்ததாக உள்ளது. அனைத்து மரபணுக்களும் இதே போலிருக்கின்றன.
இன்றைக்கு 15000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவில் R1 என்னும் மரபணு அடையாளம் கொண்ட ஆண்வம்சாவளியினர் தோன்றி, பல்கிப் பெருகத் தொடங்கினர். சக்கரம், விலங்குகளைப் பழக்குதல், விவசாயம் போன்றவை அவர்களிடம் தொடங்கின. பெரிய அளவில் இடப்பெயர்ச்சியும் ஏற்பட்டது. அவர்கள் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் நகர்ந்தார்கள். மேற்கு நோக்கிச் சென்றவர்கள் ஐரோப்பியர் ஆனார்கள்(R1b ). கிழக்கு நோக்கி வந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். இவர்களின் அடையாளமாகக் குறிப்பிடப்பதுதான் ஆர்1 ஏ (R1a) என்கிற மரபணு மாற்றக் குறியீடு. இது உள்ள வம்சாவளியினர் இந்தியாவில் 17% இருப்பதாக ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. இது மேற்கு ஐரோப்பாவிலும் காணப்படுகிறது.
ஐரோப்பாவிலும் வட இந்தியாவிலும் உள்ள வெள்ளைத் தோல் உள்ள மக்களின் தோலின் நிறத்துக்குக் காரணமான மரபணுக்களும், பாலில் உள்ள புரதத்தைச் செரிக்க வைக்கக் காரணமான மரபணுக்களும் ஒரே இடத்தில்தான் உருவாகி இருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவ்விரு குழுக்களும் ஒரே செடியில் பூத்த இரு மலர்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் இருக்கும் மற்றவர்களை விட மேன்மையானவர்களா என்பது காலம்காலமாகக் கேட்கப்பட்ட கேள்வி.
இந்த இடப்பெயர்ச்சியை வைத்துத்தான் ‘ஆரியர்’கள் (புதிதானவர்கள்) இந்தியாவுக்கு வந்தது உறுதி ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆரியர்கள் என்பவர்கள் யார்? வட இந்தியர்களா? அவர்கள் தங்களை மேன் மக்களாகக் கருதிக்கொள்கிறார்களா? கல்விக்கும் ஞானத்துக்கும் வேதபாடங்கள் வழியாக பிராமணர்கள் முக்கியத்துவம் கொடுத்தது உண்மை. வேதகால பிராமணர்கள் என்பவர்கள் இந்துகுஷ் மலைப்பகுதியில் தோன்றி, வெண்கலக் காலத்தில் (Bronze Age) வசித்தவர்கள். தர்ப்பைப்புல் எனப்படும் எபிஹெட்ரா என்ற புல்லைப் பயன்படுத்தியவர்கள். வில் வித்தையிலும் வேதத்திலும் தேர்ந்தவர்கள். இவர்களும் ஒரு கட்டத்தில் தற்கால இந்தியாவுக்குள்ளே வருகிறார்கள். அவர்களும், கங்கைக்கரையில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். அந்த விவசாய நுட்பத்தை அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்களிடம் கற்றுக்கொண்டிருக்கலாம். உ.பியில், பிஹாரில் பிராமணர்கள் எனப்படுவோர் எல்லா பணிகளிலும் இருப்பர். இங்குதான் ஆண்குரோமோசோமில் R1a மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. பிராமணர்கள் அல்லாத வேளாளர் போன்ற மற்றோரிடமும், இந்தியா முழுவதும் காணப்படுகிறது: இது 50 விழுக்காடு. இவர்களிலும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த அதே R1a காணப்படுகிறது. அதனால் அவர்கள் அனைவரையும் ஆரியர்கள் என்று அழைப்போமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் செய்த மரபணு சோதனையில் ஒரு கிளையினரிடம் ஆர்1ஏ மரபணு அடையாளங்களை நாங்கள் கண்டறிந்தோம். அதைக்கொண்டு அவர்களை ‘ஆரியர்கள்’ எனலாமா? இவ்விஞ்ஞான யுகத்தில் நமது பாரம்பரியத்தையும், எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு, இச்சச்சரவுகளை விட்டொழிப்பது அவசியம்.
மனிதன் ஏன் இடம் பெயர்கிறான்?
இட நெருக்கடி, பஞ்சம், மோதல்கள் ஆகியவற்றின் போது மனித இனத்தின் இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு கோணமும் உள்ளது. மத்திய ஆசியாவுக்கு இந்தியாவில் இருந்தும்கூட இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன (e.g. Roma gypsies of Europe). உலகின் வேறு சில இடங்களுக்கும் இந்திய மரபணுக்கூறுகளுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன. R1a மக்கள் ஸ்டெப்பி புல்வெளிகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்ததாகச் சொல்கிறார்கள். அதே சமயம் மத்தியத்தரைக்கடல் பகுதி தொடர்பாக ஒரு மரபணு அடையாளம் உண்டு (J ). அதுவும் இந்தியாவுக்குள் கணிசமாகக் காணப்படுகிறது.
இவையெல்லாம் பழங்காலத்தில் நடந்து முடிந்த இடப்பெயற்சிகள். எல்லாருமே இடம்பெயர்ந்து வந்து சேர்ந்து இதமான சூழலில் வசித்துப் பெருகிய வம்சாவளிகள். ஒரு அரசமரம் அல்லது ஆலமரத்தில், பொதுவாக எல்லா மரங்களிலுமே வெவ்வேறு திசைகளில் கிளைகள் செழித்து வளருகின்றன. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு திசையில் சென்று பல்கிய குழுக்களுக்கு ஒப்பிடலாம்! ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், பிரெஞ்சு, அரபுக்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் போன்ற குழுக்கள் பன்னெடுங்காலமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இப்போதைக்கு வருகின்ற மரபணு ஆய்வுகளை ரசித்து ஏற்றுக்கொள்வோம். இது நமது சரித்திரம். அரசியலுக்கு அவற்றைப் பயன்படுத்தவேண்டாம் என்பது என் கருத்து. நாம் அனைவரும் “ஆரியர்களே”. அதாவது இந்தியாவுக்குப் ‘புதிதானவர்களே’. இதுவே மரபியல் சொல்லும் உண்மை. மரபியல் பொய் சொல்லாது. மனிதன்?
ஜூலை, 2017.